பெண்கள் மீது கை வைத்தும் கண்டிக்க திராணியற்ற அரசியல் தலைமைகள்..!



பாகுபலி திரைப்படத்தில் " பெண்கள் மீது கை வைத்தால், வெட்ட வேண்டியது விரல்களையல்ல,
தலையை " என்றதோர் வசனம் வரும்.அவ் வசனத்தை முதலில் நினைவுபடுத்திக்கொள்வது இக் கட்டுரைக்கு மிகவும் பொருத்தமாக அமையும். 

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரி புத்தளத்துக்கு விஜயம் செய்வதையறிந்த புத்தள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு தயாராகியிருந்தனர். புத்தள சந்ததிகளின் எதிர்கால இருப்பை பல் வகையில் கேள்விக்குட்படுத்தும் குப்பை கொட்டும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் கணிசமான பங்கு இருப்பதால், அவரின் புத்தள வருகை யாராலுமே ஜீரணிக்க முடியாததொன்று. அவரது வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவது புத்தள மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையென்றாலும் தவறாகாது. அவர் எதற்காக வந்திருப்பினும் சரியே!

முக்காட்டால் வேலி போட்ட முஸ்லிம் பெண்கள் வீதியிலிறங்கி போராடுகிறார்கள் என்றால், அது சிறிதேனும் பொறுமை காக்க முடியாத ஒரு மிலேச்சத்தனமான செயலாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிராது. அந்த பெண்கள் மீது கை வைத்து, தனது வீரத்தை வெளிப்படுத்தி, தன் காரியத்தை சாதிக்க விளைகிறானென்றால், அவன் எதற்கும் துணிந்துவிட்டான் என்பதே பொருள். இன்னும் நாம் பராமுகமாக இருக்க முடியாது.

அரசியல் வாதிகளிடமிருந்து ஒரு விடயத்தை சாதித்துகொள்ள எதிர்ப்பை வெளிக்காட்டுதலும் ஒரு வழிமுறையே. அன்று புத்தளம் வருகை தந்த ஜனாதிபதி மாப்பிள்ளை போன்று அலங்காரங்களோடு வரவேற்கப்பட்டிருந்தால், " நான் புத்தளம் போனேன், அங்கே எந்த பிரச்சினையுமில்லை. இவனுகள் நாலு பேரு கொழப்புறானுகள். " என்ற சிந்தனை அவரது உள்ளத்தில் உதித்திருக்கும். இப்போது அவர் இவ்வாறு சிந்தனை கொள்வாரா.? இப்போது அவரது உள்ளத்து பதிவு எவ்வாறிருக்கும் தெரியுமா? " புத்தளம் போனேன். 70 வயது கிழவியும் வீதியிலிறங்கி போராடுகிறாள். இவ் விடயத்தை சற்று சிரத்தையோடு கையாள வேண்டும். " என்பதாக பதிவாகியிருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

இப்படி புத்தள கிழவியும் வீதியிலிறங்கி போராடுகையில் புத்தள நகர பிதா பாயிஸ் ஜனாதிபதி மைத்திரியோடு கை கோர்த்து திரிந்தார். அவரது தலைவர் அமைச்சர் ஹக்கீமும் இவ்விடயத்தில் சிறிதும் கவனம் செலுத்தாமலுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயம். இந் நிகழ்வை புத்தள நகர பிதா பாயிஸும் புறக்கணித்திருந்தால் ஜனாதிபதி மிகப் பெரும் அவமானத்தை சேர்த்திருக்கும். ஜனாதிபதி மைத்திரி மஹிந்தைக்கு எதிராக இருந்தால் ஏசுவார். மஹிந்தையோடு இருந்தால் கொஞ்சுவார். இது அவருடைய அரசியல் பண்பு. நான் இங்கே மு.காவை இகழ்வதனூடாக, ஏனைய கட்சிகள் களத்தில் நின்று வீரியத்தோடு போராடுகின்றது என கூற வரவில்லை.

தனது சந்ததியை பாதுகாக்கும் போராட்டத்தில் எமது பெண்கள், இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இதனை இன்றுள்ள முஸ்லிம் தாய் அரசியல் வாதியிலிருந்து குட்டி அரசியல் வாதி வரை, யாராவது ஒருவர் கண்டித்துள்ளார்களா? யாராவது ஒரு கவிஞர் மரணித்தால் அனுதாப அறிக்கை வெளியிடத்தான் இவர்கள் லாயக்கு. கண்டன அறிக்கைக்கெல்லாம் திராணியற்றவர்கள். இவர்கள் கண்டன அறிக்கைக்கு கூட தயங்குவதானது, மிகப் பெரும் சந்தேக பார்வையையும், இதன் பின்னால் உள்ள அரசியல் மாபியாவின் பலத்தையும் ஊகிக்கச் செய்கிறது.

எமது பெண்கள் மீது கை வைத்தும், சிறிதும் கணக்கெடுக்காமல் உள்ள அரசியல் தலைமைகள் எமக்கு இன்னும் வேண்டுமா? இவர்களால் இனியேது பயன்? சிந்திப்போம்.. செயல்படுவோம்..

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
பெண்கள் மீது கை வைத்தும் கண்டிக்க திராணியற்ற அரசியல் தலைமைகள்..! பெண்கள் மீது கை வைத்தும் கண்டிக்க திராணியற்ற அரசியல் தலைமைகள்..! Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.