மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது.

கொழும்பில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பேருந்துகளில் மாறுவேடத்தில் பயணித்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடும் குறித்த நபர் 5200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்து லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இருபது கைத்தொலைபேசிகள் திருடப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பேரூந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போவது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிலியந்தலை பொலிஸ் குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி கடந்த 6 மாதங்களாக அவதானம் செலுத்தியுள்ளார்.
சந்தேகநபரின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட பொலிஸார் பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
வாதுவ பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிலியந்தலை பிரதேசத்திற்கு வந்தமை தொடர்பில் தெளிவான தகவல்களை வெளியிட தவறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சந்தேகநபரால் திருடப்பட்ட பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கல்கிசை மற்றும் புறக்கோட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்ஜோன்டிலரி தோட்டத்தில் இருந்து நியூவெளியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பொலிஸாரை அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் மற்றும் இறைச்சி பாவினை சம்பந்தமாகவும் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
மாடுகள் அறுக்கின்ற போது பிரதேச சபை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும்
அக்கறையுடன் செயற்படுவதனால் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய தேவையில்லை.இதே வேளை உத்தியோகபூர்வமற்ற ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் அவைகள் ஏனைய நாடுகளில் பிரதேசங்களில் நடந்தவற்றை திரிவு படுத்தி வருகின்றன.ஆனால் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுக்கப்படுகின்ற மாட்டு இறைச்சியை நுகர்வதனால் எவ்வித நோய்களும் ஏற்பட போவதில்லை.மாடுகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோயினை மையமாக கொண்டு பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்விடயத்தை மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக விலங்கறுமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றது .
அதுமாத்திரமன்றி நிந்நவூர் பகுதியில் உள்ள வளர்ப்பு மாடுகள் கூட எவ்வாறான நிலைமைகளில் உள்ளது என்பதை கண்டறிவதற்கும் ஆராயப்படுகின்றது.இவ்வாறான மாடுகளில் நோய் நிலைமையில் உள்ள மாடுகள் இனங்காணப்பட்டிருக்கின்றது.அவ்வாறு இனங்காணப்பட்ட மாடுகள் வேறாக்கி அவற்றை அறுக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.அதனை நாம் கண்காணித்து கொண்டு இருக்கின்றோம்.அத்துடன் விலங்கறுமனைகள் கூட பிரதேச சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.அது முறையாக பராமரிக்க படுகின்றது.
அதே போன்று எமது பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் மாடுகள் அறுக்க படுவதற்கு முன்னர் அங்கு சென்று கண்காணிக்கின்றார்கள்.அது மாத்திரமன்றி அன்றைய நாள் அறுபட தயாராக இருக்கின்ற மாடுகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றது.இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடுகள் உட்பட இறைச்சிக்கடை உரிமையாளர் ஆகியொரை பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர் புகைப்படம் எடுத்து சுகாதார வைத்திய அதிகாரியாகிய எனக்கும் நிறுவன தொலைபேசிக்கும் அனுப்பி வைக்கின்றார்.இவ்வாறான கடும் நிபந்தனைக்கு பின்னர் தான் இந்த மாடு அறுக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.மேலும் மாடு அறுக்கப்பட்ட பின்னரும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோக பூர்வ முத்திரையை மாட்டின் ஒரு பகுதியில் பதிவு செய்கின்றோம்.
அது மாத்திரமன்றி நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள சகல இறைச்சி கடைகளுக்கும் நாமும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் கள விஜயம் செய்து ஆராய்கின்றோம்.இந்த ஆராய்வின் போது எமது முத்திரை பொறிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இறைச்சிகளை மனித நுகர்விற்கு பொருத்தமற்றது என கூறி அந்த இடத்தில் அழிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.இச்செயற்பாடு நாளாந்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.விலங்கறுமனையில் மாடுகள் அறுக்கப்படாமல் தனியார் வளவு வெளிஇடங்களில் அறுக்கப்பட்டு இறைச்சி கடைகளில் விற்பனை செய்யப்படுமாயின் அந்த இறைச்சியில் எமது முத்திரை பொறிக்கப்பட்டிருக்காது.அவ்வாறான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறான இறைச்சிகளை விற்பதற்கு அனுமதி நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்.
இந்த விடயத்தில் பொதுமக்களாகிய நீங்கள் பீதி அடைய வேண்டிய ஒரு காரணமும் கிடையாது.ஏனெனில் இது ஒரு வைரஸ் நோய்.இந்நோய் எல்லா மாடுகளுக்கும் பரவுவதில்லை.குறிப்பிட்ட மாடுகளுக்கு தான் பரவி இரக்கின்றது.அந்த குறிப்பிட்ட மாடுகளை வேறாக்கி வைத்துள்ளோம்.அவற்றை நாளாந்தம் உன்னிப்பாக பார்வையிடுகின்றோம்.அந்த மாடுகள் அறுக்கப்படும் எந்த ஒரு வாய்ப்பினையும் நாம் விட்டு வைக்கவில்லை.அந்த மாடுகள் வேறாக வைத்து கண்காணிக்கப்படுகின்றது.அந்த வகையில் நோய்கள் அற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றது.
அதுவும் விலங்கறுமனையில் மாத்திரம் தான் மாடுகள் யாவும் அறுக்கப்படுகின்றது.விலங்கறுமனைக்கு வெளியில் மாடுகளை அறுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்படுமிடத்து பொதுமக்களாகிய நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகள் வருகை தந்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளிக்கின்றேன்.பொதுமக்களாகிய நீங்கள் இறைச்சி சாப்பிட அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டார்.
இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர் பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி கதீஸ்வரன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை, சூாியவெவ மைதானத்தில் இடம்பெற்றது .
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா்.
இந்த ஒருநாள் கிாிக்கெட் தொடாில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்த நிலையில் ,
பதிலுக்கு துடுப்ப்டுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கட் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியை பெற்றது.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்களுக்கு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இருந்து நாடு திரும்பிய தாயும் அவரது குழந்தையும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2022 நவம்பரில் இலங்கை தமது முதல் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்களை உறுதிப்படுத்தியது.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் வங்கி பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினார்.
பின்பு வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்தும் அவர்களால் அதனை பிடிக்கும் முயற்சி கைகொடுக்காத போதும் இரவு 9 மணி வரை 5 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாம்பை பிடித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் .
ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
அரபிக்கடலில் தாழ் அமுக்கம் ஒன்று சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு வங்காளதேஷ் அரசினால் முன் மொழியப்பட்ட "விபர்ஜோய் " எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 75 - 80 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசுவதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இதேவேளை இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
ஆகையினால் மீனவர்கள், கடல் சார்ஊழியர்கள் மற்றும் நீண்ட நாட்களுக்கு கடலுக்கு செல்லும் மீனவர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார்.
புத்தளம் நகரத்தில் கள மேற்பார்வையை மேற்கொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இத்திட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;
இதற்கமைய மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணியாமல் செல்வோர், மூன்று பேரை ஏற்றிச் செல்வோர், சட்டத்துக்கு முரணாக வாகனத்தை செலுத்துவோர் போன்றோரின் படத்தை, நாலக டி சில்வாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றப்படும்.
அப்படத்தில் காணப்படும் வாகனத்துக்கு (வாகன இலக்கம் உரியமையாளருக்கு) எதிராக, பொலிஸ் வாகன போக்குவரத்துப் பிரிவால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களின் ஒத்துழைப்புடன் முறைகேடாக வாகனம் ஓட்டுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் வாகன, வீதி விபத்துகளை தவிர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போவதாக கூறியுள்ள சிலருக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றும் அவர்களை, மக்களே விரட்டியடிப்பார்கள் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சிவில் விமான சேவை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “மக்கள் கஷ்டத்தில் இருக்க வேண்டும். எரிபொருளுக்கான, எரிவாயுக்கான, பால்மாவுக்கான வரிசைகளில் மக்கள் நாள்கணக்காக காத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் தமது விருப்பத்துக்கேற்ப நாட்டை வைத்திருக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தான் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக சிலர் கூறியுள்ளனர். இவர்களுக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இந்த நிலைமையை கெடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால்தான் வீதிக்கிறங்கி சுற்றி வளைக்கப் போ கின்றனராம்.
ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக கூறியுள்ளவர்களை இராணுவமோ பொலிஸாரோ விரட்டத்தேவையில்லை. மக்களே விரட்டியடிப்பார்கள் .
நோயாளி ஒருவருக்கு ஏற்றப்பட்டுள்ள ‘சேலைன் ‘ போத்தலை பிடுங்கி எறிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது செய்ய முயன்றால் மக்களுக்கு கோபம் வரும். அவர்களை விரட்டியடிப்பார்கள். அதேவேளை சில நோய்களை குணமாக்க சில சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இவ்வாறான நோய்கள் உள்ளவர்களை குணமாக்க அந்த சிகிச்சை ஜனாதிபதி கையில் எடுக்க வேண்டும் .அதுதான் நோயைக் குணமாக்க ஒரே வழி” என தெரிவித்தார்.
ஹஸ்பர்_
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(06) கொழும்பில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளார்.
ஸகாத் வாஜிப் ஆகாதவர்களுக்கு ஹஜ் கடமையில்லை, அதனால் தான் அதனை இறுதிக் கடமை என்கிறோம்!
குடும்பத்தின், தங்கியிருப்போரின் அடிப்படைத் தேவைகளுக்கான வருவாய் மூலங்களை முதலீடுகளை ஹஜ்ஜுக்காக செலவிட முடியாது, கூடாது..!
ஹஜ் கடமையை முந்திய பொறுப்புக்களும் கடமைகளும் அல்லாஹ்விற்கான கடமைகள் தான்!
குடும்ப உறுப்பினர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பின் அவர்கள் மீதான செலவுகளும் தமக்கு கீழிருப்போர் மீதான செலவுகளாகும்!
வருடா வருடம் ஹஜ் செய்யும் வழக்கமுடைய அதிகமானோர் பல குடும்ப சமூகப் பொறுப்புக்களை மறந்து விடுகின்றனர்.
அதே போன்றே அதிகமான உம்ராக்களை செய்வோரும் மேற்படி முன்னுரிமைகளை கடமைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்!
ஹஜ் கடமையானவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தாலும் மக்கா மதீனா மற்றும் மினா அரபா முஸ்தலிபா இடவசதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ஒவ்வொரு நாட்டிற்கும் தரப்படும் கோட்டாவும் மார்க்க அடிப்படைகளை கொண்டவை!
ஹஜ் உம்ரா செய்ய வசதியற்றவர்களுக்கு பூரணமாக அவற்றை நிறைவேற்றிய இம்மை மறுமை பேறுகளை ஈட்டித் தரும் நற்கருமங்கள் பற்றி உலமாக்கள் சொல்லித்தர வேண்டும்!
ஒருவரிடம் ஒரு வீடு இருக்கிறது, ஒரு கடை இருக்கிறது, அல்லது அன்றாட செலவுகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள் இருக்கின்றன, அவை சிறுகச் சிறுகச் சேர்த்த அவரது உழைப்பின் பிரதிபலன்கள், சில சந்தர்ப்பங்களில் அவரது வருவாய் மூலங்கள் ஸகாத் கொடுக்கும் நிஸாபை எட்டி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஸகாத் கொடுத்தும் கொடுக்காதும் இருந்திருக்கலாம்!
வீடு அவரது குடும்பத்திற்கு வாழ்வதற்கு போதுமான சாதாரண வீடு ஆகும், வியாபாரம், விவசாயம், காலநடை வளர்ப்பு, கைத்தொழில் அவரது அன்றாட அடிப்படைச் செலவுகள் மற்றும் கடமைகள் பொறுப்புக்களை நிறைவேற்றப் போதுமானவை!
இவரது நிரந்தர வருமானம் அன்றாட செலவுகளுக்கும், கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருந்து மேலதிக வருவாய், சேமிப்பு இருப்பின் அவற்றிற்கு ஸகாத்தும் கொடுத்து தூய்மைப்படுத்தப் பட்ட செல்வம் ஆயின் அவருக்கு ஹஜ் கடமையாகிறது.
மக்காவில் அல்லது ஸவூதியில் வசிப்பவர்களாயின் ஸகாத் நிஸாபை அடையாத போதும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஹஜ் செய்வார்கள், ஆனால் தொழிலுக்காக அங்கு இருப்பவர்கள் தாய் நாட்டில் தமது அடிப்படை செலவுகள் கடன்கள் கடமைகள் பொறுப்புக்களையும் கவனத்தில் கொள்வார்கள்!
ஆக, தனது மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்க்கான நிரந்தர வருமானம் தரும் தொழில் வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் ஆகியவற்றை பாதிக்காத விதத்தில் அவர் தனது ஹஜ் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வார்.
மாறாக அவற்றில் உள்ள அடிப்படை முதலை, முதலீட்டை ஹஜ் பயணத்திற்காக செலவு செய்ய மாட்டார், செய்யவும் கூடாது அவ்வாறு மார்க்கம் அவரை பலவந்தப் படுத்துவதுமில்லை!
உதாரணமாக அவரது அடிப்படை வாழ்வாதார முதலீடு 20 இலட்சம் ஆக இருக்க ஹஜ்ஜுக்கான செலவும் 20 இலட்சமாக இருக்க தனது கையிருப்பில் மேலதிகமாக இருக்கும் ஒரு 5 இலட்சத்தை வைத்துக் கொண்டு ஹஜ் கடமையை செய்ய முயற்சித்தால் அது அறியாமையாகும்!
ஸகாத் கொடுப்பதாயினும் அடிப்படை தேவைகளுக்கான நிரந்தர வருவாய் மூலங்களை முதலீடுகளை பாதிக்கின்ற விதத்தில் கணிப்பீடுகள் செய்யப்படுவதில்லை, இவ்வாறான கரிசனைகள் கவனத்திற் கொள்ளப்பட்டுதான் அவற்றிற்குரிய கால எல்லை நிஸாபுகள் தீர்மானிக்கப் படுகின்றன.
ஆனால் அடிப்படைத் தேவைகள் கடமைகள் பொறுப்புக்கள் போக மேலதிகமான அல்லது ஆடம்பரமான வீடுகள், வளவுகள், வாகனங்கள், வியாபாரங்கள், சேமிப்புகள் இருப்பவர்கள் கடமையாகும் ஹஜ்ஜினை ஒரு தாமதப் படுத்துதல் கூடாது, அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யும் பொழுது தனது குடும்பம் சமூகம் சார்ந்த ஏனைய முன்னுரிமைகள் கடமைகள் பற்றிய சன்மார்க்க வழிகாட்டலை அறிந்து கொள்ள வேண்டும்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
தெல்தோட்டை நகரில் அமைந்திருக்கும் எமது வியாபார நிறுவனம் (ஜுமனாஸ் பேக்கர்ஸ்) #jumanas Bake House நேற்று இரவு ஏற்பட்ட சிறு அசம்பாவிதம் காரணாமாக முற்று முழுதாக சேதமடைந்து விட்டது...
இறைவன் அருளால் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்தான்...
அல் ஹம்துலில்லாஹ்...
இந்த விபத்து ஏற்பட்ட உடன் பாதிக்கப் பட்ட அனைவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், மேலும் 🔥 தீ பரவி கட்டிடம் சேதமடையாமல் இருக்கவும், தீயை கட்டுபடுத்தவும் அருகில் இருந்து இனம் மதம் மொழி பாராமல் பாடுபட்ட அனைத்து தெல்தோட்டை பிரதேச உறவுகளுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, விடயம் செவியுற்ற அடுத்த வினாடியே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..
இன்ஷா அல்லாஹ் இந்த துயரில் இருந்து மிகவும் அவசரமாக மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக... ஆமீன்
- Asm Nisthar
தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார்.
சுஜிவ தம்மிக மேலும் கருத்து தொிவிக்கையில்,
விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும்.
கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்பார்க்கிறார்கள்.
இன்னும் சில நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோருவர்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும்.
உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.
எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுக்குள் புதையல் தோண்டிய எட்டுப் பேர் ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கினர்.
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
நாகஞ்சசோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர், புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன், தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
முள்ளியவளை, கணுக்கேணி, பூதன்வயல், நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை மற்றும் தபுத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றும் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சிறப்பு அதிரடிப் படையினர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
முள்ளியவளை பொலிஸார், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.