முஸ்லிம் சமூகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் ; இக்பால் அத்தாஸ்



இக்பால் அத்தாஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புலனாய்வுத்துறை எழுத்தாளர். CNN, TIMES OF LONDON, JANE’S DEFENCE WEEKLY போன்ற ஊடகங்களில் பணியாற்றி வருபவர். இலங்கை பாதுகாப்புத் துறையின் ஆயுத ஊழல்களை அம்பலப்படுத்தியவர். பல்வேறுபட்ட ஊடக விருதுகளை வென்றுள்ள இவர் மாவனெல்லை விவகாரம், முஸ்லிம்களது பாதுகாப்பு விடயங்கள் குறித்து மீள்பார்வைக்கு வழங்கிய விஷேட நேர்காணல்,

தற்போதைய அரசாங்கத்தின் கீழும் ஆங்காங்கே இனவாதப் பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மாவனெல்லையிலும் சிலைகள் உடைக்கப்பட்டு மிகப்பெரும் பிரச்சினை உருவாக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று அது தணிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இது மிகவும் பயங்கரமான நிலை. நான் அதிகமான சிங்கள மக்களுடன் பழகுகிறேன். எமது ஆடைகள் தற்பொழுது வித்தியாசமாக உள்ளது. நாம் ஏனைய சமூகத்திலிருந்து எம்மை வேறுபடுத்திக் காட்டுகிறோம். முன்னர் எமது தாய்மார் சாரிகளை அணிந்தார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. சவூதி அரேபியாவிலிருந்து வரும் முதலீடுகளே இதற்குக் காரணம். அவர்கள் ஈரான், ஈராக்கை தாக்கும்போது எமது பள்ளிவாசல், நிறுவனங்களுக்கு பணம் அனுப்பி ஒவ்வொரு அமைப்புக்களை உருவாக்கினார்கள்.

மாவனெல்லை சம்பவத்தில் இதற்கு முன்னர் 11 குடும்பங்கள் ஐஸிஸில் இணைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையாகவும் இருக்க முடியும். பொய்யாகவும் இருக்க முடியும். இவ்வாறிருக்கும்போது தான் வண்ணாத்துவில்லு பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதில் குண்டுகளை தயாரிக்க முடியுமான பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமது சமூகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் மத்திய கிழக்கு நாடுகளுடன் அதிக தொடர்புகளைக் கொண்டுள்ளன. அதிக பணத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த சமநிலைத் தன்மையைப் பேண வேண்டியிருக்கிறது. எனவே எமது சமூகத்தை கல்வி ரீதியாக வழிகாட்ட வேண்டும். அறிவூட்ட வேண்டும்.

மாவனெல்லை சம்பவத்தின் பின்னால் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் தலைமை வகித்து இந்தச் செயலை அரங்கேற்றியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் யாராவது வருத்தத்தில் விழுந்தால் அவர்களைக் காப்பாற்றி பிரசித்தம் அடையப் பார்ப்பார்கள்.  இது அரசியல் இல்லை. இங்கு வெளிநாட்டு தலையீடு இருக்கிறதா என்கின்ற அச்சம் உள்ளது. அமெரிக்காவையும் விட ஐஸிஸின் உளவுத்துறை பலமாக உள்ளது. இதனாலேயே அவர்கள் அமெரிக்க படைகளின் முகாம்களைத் தாக்குகிறார்கள். இவர்களின் உளவுப் பிரிவு எவ்வளவு பலமானதென்றால் இலங்கையிலும் அதிக அமெரிக்கர்கள் வந்து போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். நேற்று முன்னைய தினம் அமெரிக்க கப்பலொன்று இங்கு வந்து விமான நிலையத்திலிருந்து எப்படிப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது? கொண்டுவரப்படுகிறது என்பது ஆராயப்பட்டது. இது எம்முடன் கொண்ட இரக்கத்திற்காக செய்யும் விடயங்களல்ல. ஏதாவதொரு நிலைமை உருவாகுமாயின் அவர்களது துருப்புக்கள் இங்கு வருவதாக ஒப்பந்தமிட்டே இவற்றைச் செய்கிறார்கள். சில விடயங்களை அரசாங்கம் மறைக்கிறது. இதுபோன்ற நிலையில் அவர்களுக்கு இங்கு ஒரு பலத்தை உருவாக்கிக் கொள்ள முடியுமாயின் அவர்கள் முயற்சிப்பார்கள். அப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. அப்படியான நிலை ஏற்படலாம்.

மத்திய கிழக்கு நாடுகள் இவற்றுக்கு பின்னால் நின்று பணம் கொடுப்பதாக இருந்தால் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன?

இலங்கையும் எமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கிறது என்கின்ற பலம் அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்திய உளவுத்துறை மிகவும் பலம் பொருந்தியதாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு குழுக்கள் உள்ளன. சிலர் அல் கைதாவுடன் தொடர்பானவர்கள். இன்னும் சிலர் ஐஸிஸூடன் தொடர்பானவர்கள். அண்மையில் இலங்கையில் வைத்து ஐஸிஸூடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். எனவே இந்திய உளவுப்பிரிவு இப்படியானவர்களை இலகுவில் அடையாளம் கண்டுவிடுகிறது.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஐஸிஸிற்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லை என அறிவித்தல் விடுத்தி ருந்தது. இலங்கை முஸ்லிம் சமூகமும் ஐஸிஸை ஏற்றுக்கொள்வதில்லை. மாவனெல்லை சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்டவர்களும் அந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. மறுபுறத்தில் சிலையை உடைப்பதால் முஸ்லிம்களுக்கு எவ்வித இலாபங்களும் இல்லை. இப்படியிருக்கையில் இதைச் செய்தவர்களின் உண்மையான நோக்கம் எதுவாக இருக்கலாம்?

இப்படியான சூழ்நிலையில் அப்படியொன்று இல்லை என நம்புவதில் எவ்வித பிரயோசனங்களும் இல்லை. ஏனெனில் எம்மில் உள்ள ஒரு சில மதவாதிகள் இப்படிக் கூறுவதற்குக் கூட விருப்பமில்லை. அவர்களது மனதை நோகடிக் கும் செயலாக நோக்குகிறார்கள். இதனால் நாம் பார்க்கவில்லை என்கின்ற நிலையொன்று ஏற்படுகிறது. மறுபுறத்திலும் அரசியல் கட்சிகள் இது சமூகங்களுக்கிடையில் அமைதியை சீர்குலைக்க செய்யப்படும் திட்டம் என்ற நிலைப்பாட்டில் கருத்துக் கூறுகின்றனர். அதற்கப்பால் சென்று யோசிப்பதில்லை. இன்று பாதுகாப்பு அமைச்சின் தகவலின் படி சிறியதொரு தரப்பே ஐஸிஸில் தொடர்புற்றுள்ளனர் எனக் கூறுகிறது. அந்தச் சிறு தரப்பை தவறாக வழிநடத்தியவர்களை அழைத்து இதன் பாரதூரத்தை விளங்கப்படுத்தினால் அவர்களை நல்வழிக்குக் கொண்டு வர முடியும். எனவே நாம் அவர்களுக்கு சொல்லாமல், சிந்திக்காமல் இருந்தால் இதைவிட மிகப் பயங்கரமான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும். மாவனெல்லையில் சிலை உடைக்கப்பட்டது உண்மை தானே. ஒரு சிலையை உடைக்கும் போது பொலிஸாரே வந்து ஒருவரைக் கைதுசெய்தனர். சிலை உடைபடுவதற்குள்ள பின்னணி இதுதான். இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதனாலேயே சிங்களத் தீவிரப் போக்குடையவர்கள் பலம்பெறுகிறார்கள்.

பாதுகாப்புத் துறை தொடர்பில் ஆழ்ந்த புலமையுள்ள உங்களின் அவதானத்தின் படி, இலங்கையில் ஐஸிஸின் தாக்கம் எந்தளவுக்கு காணப்படுகிறது?

நான் நினைக்கவில்லை அவர்களது மிகப் பெரிய அளவிலான நடமாட்டம் இங்கு இருக்கிறதென்று. ஆனால் இன்னும் 6 மாதங்களில் இந்நிலை இப்படியே இருக்குமா அல்லது அதை விட வெகுதூரம் சென்றுவிடுமா என்பதை கூற முடியாது. ஏனெனில் எல்டீடீஈயினர் 30 வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தாக்குதல் நடாத்தியே கையில் ஆயுதத்தை பெற்றுக்கொண்டனர். அதைப் பயன்படுத்தியே யுத்தம் செய்தார்கள். அதன் பிறகு தான் பணத்தை சேகரித்து ஆயுதம் எடுத்தார்கள்.

ஆனால் இங்கு ஐஸிஸ் பலம் பெறுமாக இருந்தால் எல்ரீரீஈ விட மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஏனெனில் ஐஸிஸிடம் ஆயுதம் உள்ளது. அமெரிக்க ஆயுதங்கள் கூட அவர்களிடம் உள்ளன. கேபி போன்று ஒவ்வொருவரிடம் பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. ஆயுதங்களை இங்கு எப்படி கொண்டு வருவது என்கின்ற பிரச்சினையே அவர்களுக்கு இருக்கும்.

மாவனெல்லை சம்பவத்தில் இப்றாஹீம் மௌலவியின் வீட்டிலிருந்து ஆயுதம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு எப்படி ஆயுதம் வந்தது. அவை பொலிஸாரின் ஆயதமில்லையா? ஆயுதங்கள் எப்படி அங்கு சென்றது? இவ்வாறு பல சந்தேகங்கள் நிலவுகின்றன? யாராவது ஆயுதங்களை அங்கு வைத்து விட்டு இவர்களை பிடித்திருக்க வாய்ப்பில்லையா?

இல்லை. இதற்கு முன்னர் 11 குடும்பங்கள் ஐஸிஸிற்கு சென்றன என்றால் பொலிஸாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது நிறையப் பேர் சென்றிருக்கிறார்கள் என்று. இதைத் தேடும் அளவிற்கு உளவுத்துறை மிகவும் பலவீனமாக உள்ளது. வண்ணாத்துவில்லுவில் கல்லுடைப்பதற்காக ஆயுதம் எடுத்தார்கள் எனக் கூறுகிறார்கள். அப்படியென்றால் அதை கிராம சேவகரினூடாக சட்டபூர்வமாக எடுத்திருக்க வேண்டும். அதுவே இங்கு பிரச்சினை.

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த உங்களுடைய அவதானங்கள் என்ன?

பாதுகாப்பு குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை. தீவிரப் போக்குடையவர்கள் மிகவும் சொற்ப அளவினரே உள்ளனர். ஆனால் ஒரு சிலர் அச்சமடைந்துள்ளனர். அசாத் சாலி ஞானசாரரை சந்தித்து சிறையிலிருந்து வெளியெடுக்கவா என்று கேட்ட விடயம் தொடர்பில் என்னிடம் ஒரு தேரர் நாம் உங்களுக்காக எவ்வளவோ போராடுகிறோம். ஆனால் உங்களுடைய ஆட்களே சென்று எம்மை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறினார்.

இப்படியான நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

தற்போதைய நிலை குறித்து மக்களை விழிப்பூட்ட வேண்டும். சமூகத்தில் இப்படியொரு விடயம் இடம்பெற்றிருக்கிறது. பொலிஸார் இப்படிக் கூறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தி தவறுகள் இடம்பெறுவதற்கான வழிகளை குறைக்க வேண்டும்.

கடந்த திகன, கிந்தொட்ட சம்பவங்களில் அரசாங்கம் பாதுகாப்பை கொடுக்க தவறியது என்ற ஒரு கருத்துள்ளது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். சம்பவத்திற்கு முன்னர் அல்ல. சம்பவத்திற்குப் பிறகே அவர்கள் தொடர்புற்றிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அளுத்கம சம்பவத்தில் ஒரு தேரரை தாக்கியதிலிருந்தே பிரச்சினை உருவாகியது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி,  முஜீபுர்ரஹ்மான்
முஸ்லிம் சமூகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் ; இக்பால் அத்தாஸ் முஸ்லிம் சமூகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் ; இக்பால் அத்தாஸ் Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.