இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்


  • பியாஸ் முஹம்மத்
இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு விலங்கிடுவதற்கான முயற்சிகள்
நடந்தேறும் தருணத்தில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இம்முறை கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் வருடங்கள் தொன்மையான இலங்கையின் வரலாற்றில் ஒரு இனமாக முஸ்லிம்கள் இவ்வளவு தூரம் ஒடுக்கப்படவில்லை என்பதும், இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவை என்பதும்தான் இந்தச் சுதந்திர தினத்தின் போதான செய்தியாக விருக்கிறது. இந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்துக்கான முஸ்லிம்களின் தியாகங்களும் அர்ப்பணங்களும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் 443 வருடங்கள் ஐரோப்பியரின் காலனித் துவத்தின் கீழ் இருந்திருக்கிறது. அதற்கு முன்னர் தென்னிந்தியப் படையெடுப்புக் களால் இலங்கை பல தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இலங்கை மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தக் காலப்பகுதி முஸ்லிம்கள் உலகை ஆண்ட காலப்பகுதி. 
முதலாம் புவனேகபாகு மன்னன் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக எகிப்துக்கு அனுப்பிய தூதுக் குழுவினரிடம் அனுப்பிய கடிதத்தில் எகிப்து தான் இலங்கை, இலங்கை தான் எகிப்து எனக் கூறி இலங்கையில் இருக் கின்ற ஏற்றுமதி வாய்ப்புக்கள் தொடர்பில் ஒரு பட்டியலையே சமர்ப்பித்திருக்கின் றார். அதுபோல அவருடைய காலத்தில் யெமனுக்கும் இது போன்றதொரு தூதுக் குழு சென்றிருப்பதாக வரலாறு சொல்கி றது. இதேபோல இலங்கையில் மன்னர்கள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களுக்கு முஸ்லிம் நாடுகளில் இருந்து சிறந்த மருத்துவர்களை அழைத்து வைத்தியம் செய்வதற்கு இங்குள்ள முஸ்லிம்கள் உதவி செய்திருக்கிறார்கள். 
1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயக் கடலோடி லோரன்ஸ் டி அல்மேதாவின் படகு காற்றில் திசை மாறி இலங்கை வந்தடைகிறது. இலங்கையில் கொட்டிக் கிடக்கின்ற வளங்களை அல்மேதா கண்டதன் பின்னர் தான் இலங்கை மீது போர்த்துக்கேயர் படை எடுக்கின்றனர். அப்போது இலங்கையில் சர்வதேச வர்த்தகம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. கொழும்புத் துறைமுகம் முஸ்லிம்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. இலங்கையின் வளங்களைச் சூறையாடுவதற்காக இங்கு வந்த போர்த்துக்கேயரின் முயற்சிக்கு முஸ்லிம்கள் தடையாக இருந்தனர். இதனால் அவர்கள் முஸ்லிம்களைக் கொழும்பில் இருந்து விரட்டியடித்தனர். 
இது தான் முஸ்லிம்கள் நாட்டின் உட்புறப் பகுதிகளில் குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக முஸ்லிம்கள் நாட்டுக்கு ஈட்டிக் கொடுத்த வெளிநாட்டு வருமானத்தை நாடு இழந்தது. இலங்கையின் வளங்களைச் சூறையாடும் நோக்கில் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். 
1803 இல் ஆங்கிலேயரின் காலனித்துவம் தொடங்கியதில் இருந்து அவர்கள் நாட்டின் உள்ளே தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் கண்டிய அரசைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்தனர். இதற் கெதிரான போராட்டம் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்டபோது கிழக்கில் இருந்த முஸ்லிம்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர். இதனால் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றுவது தாமதமாகியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட் டத்தின் ஒந்தாச்சி மடம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மேற்கொண்ட போராட்டங் கள் ஆங்கிலேயரின் கோபத்தைத் தூண்டியது. இவர்களைச் சரணையுடைமாறு ஆங்கில அரசு வேண்டிக் கொண்டது. 
ஆனாலும் இறுதி வரையிலும் போராடுவது என இவர்கள் தீர்மானித்திருந்ததனால் இவர்கள் சரணடையவில்லை. இதனால் கோபமடைந்த ஆங்கிலேய அரசு இவர்களை தேசத் துரோகிகளாக 1804 ஜூன் 04 இல் வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்தது. மட்டக்களப்பு ராய்முனையைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர், ஒசன் லெப்பை உதுமா லெப்பை, சம்மாந்துறையைச் சேர்ந்த அவ்வக்கர் ஈஸா முகாந்திரம், மருதமுனை அனீஸ் லெப்பை, தோப்பூர் சேகு தீதி, குச்சவெளி சாலம்பதி உடையார் மற்றும் பீர் முஹம்மது ஆகிய 07 பேரும் தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
ஆங்கிலேயர் 1815 இல் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக ஊவா வெல்லஸ்ஸவில் போராடிய கெப்பிட்டிபொல உட்பட்ட 19 பேர் இது போல 1818 இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசத் துரோகிகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டார்கள். ஊவா வெல்லஸ்ஸவில் போராடிய இந்தப் 19 பேரையும் ஜனாதிபதி சிரிசேன பதவிக்கு வந்தபின் 2016 டிசம்பர் 08 இல் வர்த்தமானி அறி வித்தல் மூலம் தேசிய வீரர்களாகப் பிரகட னப்படுத்தினார். இதேபோல ஒந்தாச்சி மடத்தில் போராடி ஆங்கிலேயரின் தேசத் துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 07 பேரையும் தேசிய வீரர் களாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என அப்போதைய அமைச்சராகவிருந்த தற் போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்திருந்த போதும் இதுவரை அவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வில்லை. இம்முறை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் போது இந்த முஸ்லிம் தேசிய வீரர்களையும் ஞாபகப்படுத்திக் கொள்வதும் இவர்களை அடுத்த சமூகங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
இலங்கைக்கான சுதந்திரம் கத்தியின்றி இரத்தமின்றிப் பெறப்பட்ட சுதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டாலும் எந்த முயற்சியும் இன்றி தானாகக் கிடைத்த சுதந்திரம் என இதனைக் கருத முடியாது. இந்திய சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்த போது 1885 இல் அதற்கென இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனையொட்டி இலங்கையிலும் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடைய முயற்சியால் Ceylon National Congress எனும் இலங்கைத் தேசிய காங்கிரஸ் 1919 இல் உருவாக்கப்பட்டது. இது தான் இலங்கையின் சுயாதீனம் தொடர்பில் ஆங்கிலேயருடன் தொடர்பு கொள்வதற்கான அமைப்பாக இருந்தது. சகல இனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இதன் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். காலப்போக்கில் இதில் இன உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின. 
பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கை இதுவென்றும் அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக தமிழ்ச் சமூகத்தின் சில அங்கத்தவர்களும் மலையகத் தலைவர்களும் இலங்கைத் தேசிய காங்கிரஸில் இருந்து விலகினார்கள். பின்னர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் தமிழ் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனாலும் முஸ்லிம்கள் இனத்துவ ரீதியாகப் பிரியாமல் தொடர்ந்தும் தேசியக் காங்கிரஸிலேயே இருந்து சுதந்திரத்துக்காக உழைத்தனர்.
1919 இல் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்படும் வேளையில் கலாநிதி டி.பி.ஜாயா, எஸ்.எல்.நைனா மரிக்கார், எம்.சி. இஸ்மாயில் ஆகியோர் இதன் முக்கிய அங்கத்தவர்களாக இருந்தனர். 1922 இல் காங்கிரஸின் நிறைவேற்றுக் குழுருவாக்கப்பட்ட போது அதன் அங்கத்தவர்களாக காஸிம் ஒமர், மக்தான் இஸ்மாயில், எஸ்.என்.இஸ்மாயில், டி.பி.ஜாயா, எல்.எம்.ஸபர், எம்.கே. ஸல்டின் ஆகியோர் தெரிவாகினர். இவர்கள் அனைவருமே சுதந்திரத்துக்கான தேசிய இயக்கத்தில் இருந்து  சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு வுழங்கினார்கள். இதேபோல இலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலரையும் உள்ளடக்கிய முஸ்லிம் அஸோஸியேஷன், படித்த முஸ்லிம் இளைஞர்களை உள்ளடக்கிய முஸ்லிம் யூத் லீக் என்பன 1924 ஆம் ஆண்டின் மனிங் யாப்புச் சீர்திருத்தத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள். 
இலங்கைத் தேசிய காங்கிரஸில் நிறைவேற்றுக்குழு அங்கத்தவராக இருந்த கலாநிதி டி.பி.ஜாயா 1925 ஒக்டோபர் 14 இல் காங்கிரஸின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். ரியால் முஹம்மத் அவர்கள் அப்போது காங்கிரஸின் செயலாளராகச் செயற்பட்டார். இந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதப்படுகின்ற D.S.சேனாநாயக்க, S.W.R.D. பண்டாரநாயக்க, W.A.D. சில்வா, C.W.W. கன்னங்கர, A.E.குணசிங்க போன்றவர்களுடன் இணைத்துப் பேச முடியுமான தரத்தில் இவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கணிக்கப்பட வேண்டியவர்களே.
இந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் குறைத்து மதிப்பிட முடியாதது. களப் போராட்டத்திலும் சரி, அரசியல் போராட்டத்திலும் சரி அவர்களின் பங்களிப்பு சரிநிகராகப் பார்க்க வேண்டியளவுக்கு இருந்திருக்கிறது. முக்கியமாக சிங்களத் தலைவர்கள் முஸ்லிம்கள் மேல் வைத்த நம்பிக்கையும் அதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களும் அதனைச் சிறப்பாக நிறைவேற்றுவதில் முஸ்லிம்கள் செய்த அர்ப்பணமும் புதிய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும். 
இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவதற்காக 1945 நவம்பர் 09 இல் சோல்பரி பிரபு முன்வைத்த முன்மொழிவுகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது முஸ்லிம்கள் அனைவருமே அதனை ஆதரித்து வாக்களித்து சுதந்திரத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்தில் சிக்காமல் தமக்கென எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்காது சுதந்திரம் ஒன்றே உடனடித் தேவை எனக் கூறி தமக்கான பங்கெதனையும் பிரித்துக் கேட்காமல் முஸ்லிம்கள் தாராள மனதுடன் நடந்து கொண்டார்கள். 
நாங்கள் கோரிக்கைகள் எதனையும் முன்வைத்து அதனை நிவர்த்தி செய்வதில் சுதந்திரம் இழுத்தடிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எமக்குத் தேவை யானதை நாங்கள் எங்களது அண்ணன் மார்களுடன் பேசிப் பெற்றுக் கொள்கின்றோம் என கலாநிதி டி.பி.ஜாயா கூறிய வார்த்தைகள் தனது இனத்தை விட நாட்டை முற்படுத்திய முஸ்லிம்களின் நாட்டுப் பற்றுக்குப் போதுமான சான்றாக அமைகிறது. 
இதே விதமான கருத்தை சேர். ராஸிக் பரீத் அவர்களும் 1945 சட்ட சபையில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கிறார். “சிங்கள மக்கள் மகத்தானவர்கள். அவர்கள் தாராள மனம் படைத்தவர்கள். அவர்கள் மகத்தானவர்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்” என அவர் தெரிவித்திருந்தார். ஏனைய இனங்களுடனான உறவைப் பேணுவதில் முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் விரிந்த உள்ளத்துடன் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதனை இது காட்டுகிறது. 
அன்று போலவே இன்றும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசமாக நடந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. தமக்கும் தமது மதத்துக்கும் எவ்வளவெல்லாம் அச்சுறுத்தல்களும் சவால்களும் வந்த போதும் நாட்டில் குழப்ப நிலை ஒன்று ஏற்படக் கூடாது என்பதற்காக பங்கரகம் மன பாணியில் பொறுமை காத்தவர்கள் அவர்கள். தற்பொழுது நாட்டில் சில நஞ்சூட்டப்பட்ட சக்திகள் வெளிப்படுத்தும் செயற்பாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இருக்க முடியாது என்பதற்கு முஸ்லிம்களின் இத்தகைய வரலாறுகள் ஆதாரங்களாக அமைகின்றன. இந்த விடயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, தற்பொழுது முளைத் திருக்கின்ற கும்பல்களை முஸ்லிம் சமூகத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமாக முஸ்லிம்களது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். 
போலிகளை இனங்கண்டு அவைகளைத் தோலுரித்துக் காட்டி இந்த நாட்டில் சுதந்தி ரமாய் நடமாடும் தினமொன்றுக்காக உழைக்க வேண்டியது இந்த சுதந்திர தினத்திலிருந்து அனைவருக்கும் கடமையாகிறது.  
(1991 முதல் 1945 வரை தகவல்கள் ஜே.எம்.ரில்வானின் ஆய்வுக் குறிப்பில் இருந்து..)
இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம் இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம் Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.