பிறை விவகாரத்தில் ஏன் சவூதியை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள்?


ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) புத்தளம் மாவட்டம் மதவாக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

 சன்மார்க்கத் துறையில் ஆழ்ந்த புலமையும், நீண்ட கால அனுபவமும் உள்ள இவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இணைந்து பிறைக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது. இலங்கை ஷாதுலியா தரீக்காவின் தலைவராக செயற்பட்டு வருகின்ற ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்கள் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபு மத்ரஸாவின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள்பார்வை பத்திரிகைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

பிறை பார்க்கும் ஒழுங்குகளை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் கலாசார அமைச்சு, மேமன் பள்ளிச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து, ஓர் அமைப்பாக செயற்பட்டு, இதுநாள் வரைக்கும் பிறையை பார்த்து வருகின்றது. எமது இந்தக் குழுவே பிறை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கிறது.

இலங்கையில் அதிகாரபூர்வமாக பிறை முடிவை வெளியிடும் உரிமை யாருக்கு உள்ளது?

இதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும், மேமன் பள்ளிச் சங்கமும், முஸ்லிம் கலாசார அமைச்சும் பிறை தீர்மானிக்கின்ற போது பெரிய பள்ளிவாசலுக்கு வந்தாலும் பிறை முடிவை வெளியிடுகின்ற உரிமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கே உள்ளது. ஆரம்ப காலம் முதல் இன்று வரை கொழும்பு பெரிய பள்ளிவாசலே இந்த விடயத்தை கையில் எடுத்துச் செய்து வருகின்றது.

பிறை பார்க்கும் நடைமுறை எப்படி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கீழ் வந்தது?

பிறை தீர்மானிக்கும் விடயத்தில் எனக்கு சுமார் 40 வருட கால அனுபமுள்ளது. அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 55 வருடங்களாகின்றன. மேமன் பள்ளிகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு போன்றவையும் 50 வருடங்களுக்குள் தோற்றம் பெற்றவையாகும். கொழும்பு பெரிய பள்ளிவாசல் சுமார் 200 வருடங்களாக இலங்கையில் பிறை பார்க்கும் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆரம்பகால உலமாக்களான காம ஹஸரத், அபுல் ஹஸன் காயிதி, அப்துஸ் ஸமத் ஆலிம், உஸ்தாத் ஜமாலி போன்றவர்கள் இந்தப் பணியில் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள்.

வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகாத அன்றைய காலத்திலும் கூட பிறை பார்த்து அறிவிக்கும் ஒழுங்கை முன்னைய உலமாக்கள் பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து முன்னெடுத்து வந்துள்ளனர். பிறை தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் பெரிய பள்ளிவாசலின் முன்பாக பாரிய வெடிச்சத்தத்தின் மூலம் கொழும்பு பிரதேசத்திற்கு அறிவிக்கப்படும். இந்தச் சத்தத்தை வைத்து பிறை தென்பட்டுள்ளதாக மக்கள் அறிந்துகொள்வார்கள். இதேநேரம் பிறை பார்க்கும் மாநாடு நடைபெறும் தினத்தன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள கதீப்கள் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருவார்கள்.

எனவே இவர்களும் பிறை தென்பட்டதா? இல்லையா? என்கின்ற முடிவை தொலைபேசி வாயிலாகவோ அல்லது தகவல் அனுப்பியோ அந்தந்தப் பகுதி மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஆரம்பகாலத்தில் மக்களுக்கு தாமதாக தகவல் கிடைத்து முதல் நாள் நோன்பை விட்ட வரலாறுகளும் உள்ளன.

பிறை தீர்மானிப்பது மாத்திரமா உங்களது பணி? தொழுகை நேரங்களை தீர்மானிக்கும் பணிகளை செய்வது யார்?

சமீபத்தில் ஏற்பட்ட தொழுகை நேரங்களது சுசி தயாரிக்கும் பணியை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொறுப்பேற்கவில்லை. பிறை சுசி பார்த்த அப்துஸ்ஸமத் ஆலிம் போன்றவர்கள் முன்னனியில் நின்று இலங்கையில் நாலா பகுதிகளிலும் இதைப் பின்பற்றுமாறு கட்டளையிட்டார்கள். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வந்ததன் பின்பே தொழுகை நேரசூசி தயாரிக்கப்பட்டது. உலமா சபை இந்த நேரசூசியை முழு இலங்கைக்குமாக அமுல்படுத்தியது. இந்த விடயத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இணையவில்லை.

பிறை பார்க்கும் போது வெற்றுக்கண்களால் மாத்திரம் தான் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளதா? அல்லது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிறையை பார்க்க முடியாதா?

தற்போதைய பிறைக்குழுவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் கொழும்பு பெரிய பள்ளிவாசலும் வெற்றுக்கண்களால் தான் பிறையை பார்க்க வேண்டும் என்ற ஏகோபித்த தீர்மானத்திற்கமைய செயற்பட்டு வருகின்றது. நவீன தொழில்நுட்பங்களால் அல்லது வேறு ஒழுங்கமைப்பின் படி பிறை பார்க்கும் நடைமுறையை இதுவரையில் நாம் அமுல்படுத்தியது கிடையாது.

இலங்கையில் பிறைக் கலண்டர் ஒன்றை தயாரிக்கும் சாத்தியங்கள் எப்படி உள்ளன?

தற்பொழுது நாம் பிறைக் கலண்டர் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்திக்கொண்டுள்ளோம். கொழும்பு பெரிய பள்ளிவாசலும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும், முஸ்லிம் கலாசார அமைச்சும் இணைந்து ஒரு கலண்டரை தயாரித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களது பெயரும் கலண்டரின் மேற்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கலண்டர் அமுலில் உள்ளது. எல்லாப் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்க்கின்ற பிறை ஒழுங்கின் பிரகாரமே அந்தக் கலண்டர் அமையப்பெற்றுள்ளது.

பிறைக் குழுவின் தீர்மானத்தின் படி முழு இலங்கையும் நடந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் எவ்வாறுள்ளது?

கடந்த ரமழானுக்கு முன்பு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும், பெரிய பள்ளிசாலும் இணைந்து கிண்ணியா, மூதூர், நிலாவெளி, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு சுமார் 5 நாட்களாக பயணித்து அப்பகுதிகளில் பிறைக்குழுக்களை நியமித்தோம். எல்லோரும் கூறுகின்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, யாராவது பிறை கண்டால் இந்தக் குழுவையே அனுக வேண்டும் என்றும் இந்தக் குழுவின் தீர்மானமே தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தோம். நாம் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று பிறைக்குழுக்களை நியமித்துள்ளோம். இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை, காலி போன்ற பிரதேசங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

கடந்த வருடம் நோன்புக்கு பிறை தென்பட்டதாக எமக்கு செய்தி வந்தது. நாம் உடனடியாக இந்தப் பிறைக்குழுக்களுக்கு அறிவித்து தீர்மானங்களை எடுக்கும் படி கூறினோம். அவர்களின் தீர்மானங்களின் படி பிறை தென்பட்டதாக கூறினார்கள். இதே போன்று கடந்த நோன்புப் பெருநாள் பிறையின் போதும் பிரச்சினை வந்தது. பிறை தென்பட்டதாக சிலர் எமக்கு அறிவித்தார்கள். ஆனாலும் பிரதேசப் பிறைக் குழுக்கள் பிறை தென்படவில்லை என்றும் வெள்ளியினுடைய வெளிச்சத்தை கண்டே பிறை தென்பட்டதாக குறிப்பிடுகிறார்கள் என்றும் அதைப் பார்வையிட்டவர்கள் எம்முடன் உள்ளார்கள் என்றும், அவர்கள் பிறை தென்பட்டதாக குறிப்பிடும் நேரத்தில் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தார்கள். எனவே இந்தப் பிறைச் செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற விடயத்தை அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டார்கள். இதனால் கடந்த வருடம் நோன்பு 30 ஆக பூர்த்திசெய்யப்பட்டு பெருநாளை பிற்படுத்தியது நினைவிருக்கும்.

எனவே எல்லாப் பகுதிகளிலும் பிறைக்கென்றே படித்தவர்களை உள்ளடக்கிய பிறைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிறை விடயத்தில் எமது நாட்டில் தென்படுகின்ற பிறையை மாத்திரமா ஏற்றுக்கொள்ள வேண்டும்? சர்வதேச பிறையை ஏற்றுக்கொள்வது தொடர்பில் உங்களது கருத்தென்ன?

முஆவியா ரழி அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஒரு சஹாபி சிரியாவில் பிறை தென்பட்டதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை பின்னேரம் மதீனாவுக்கு வந்து கூறினார். சரியாக வியாழக்கிழமை பின்னேரம் பிறை தென்பட்டதாக குறிப்பிட்டார். முஆவியா ரழி அவர்களும் பிறையை பார்த்தார், நாங்களும் பிறையைக் கண்டோம், இந்த சாட்சி உங்களுக்கு போதாதா? என்று அந்த சஹாபி இப்னு அப்பாஸிடம் குறிப்பிட்டார். அதற்கு இப்னு அப்பாஸ், இப்படியில்லை, அங்கு சிரியாவில் பிறை கண்டால் அந்தப் பகுதியில் அதை ஏற்றுக்கொள்வதே முறை. இங்கு பிறை கண்டால் இங்கு அதை ஏற்றுக்கொள்வதே முறை. இதுவே நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்றார்.

முஆவியா ரழி அவர்களின் காலத்தில் சிரியாவில் பிறை தென்பட்டதாக மதீனாவில் வந்து கூறியும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு நாள் பிந்தினாலும் கூட அது தொலைபேசித் தகவல் போன்றதொரு செய்தி. இந்தச் செய்தி கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது முஸ்லிம் கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதொரு ஹதீஸாகும்.

மற்றொரு விடயம் இங்கு நோக்கப்பட வேண்டும். அதாவது, இன்று எல்லோரும் சவூதி அறேபியாவில் பிறை காண வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏன் சவூதி அறேபியா இல்லாமல் அவுஸ்திரேலியா, அல்லது அதற்கு மேலுள்ள நாடுகளில் பிறை கண்டால் இந்த மக்கள் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? எந்த நாட்டில் பிறை கண்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே விடயம். பிறை விவகாரத்தில் ஏன் சவூதியை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் பிறை கண்ட படி செய்தி வந்தது. ஆனால் இந்நாட்டிலுள்ள சர்வதேச பிறையை அங்கீகரிப்பவர்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. சவூதியை மட்டும் ஏன் பின்பற்றுகிறார்கள். அவுஸ்திரேலியாவிலும் முஸ்லிம்கள் தான் பிறையை பார்த்து அறிவித்தார்கள்.

உள்நாட்டுப் பிறை, சர்வதேச பிறை என்பவற்றில் எதைப் பின்பற்றுவது என்பது குறித்த தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?

சர்வதேச பிறையை ஏற்றுக்கொள்வதா? அல்லது இந்த நாட்டில் தெரிகின்ற பிறையை மாத்திரமா ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பில் சில உலமாக்களை அழைத்து கடந்த மாதம் பெரிய பள்ளிவாசலில் மாநாடொன்றை நடாத்தினோம். சுமார் 500 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். 3 ஆண்டுகளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ரன்முது ஹோட்டலில் பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, இந்த நாட்டில் காணப்படுகின்ற பிறையை மாத்திரம் தான் ஏற்றுக்கொள்வது, வெளிநாடுகளில் காணப்படுகின்ற பிறையை ஏற்றுக்கொள்வதில்லை என்றொரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானமே பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற மாநாட்டிலும் முன்மொழியப்பட்டது. அதன்படியே எமது பிறைக்குழுவும் செயற்பட்டு வருகின்றது.

பிறைக் குழுவின் செயற்பாடுகளை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முன்னர் பிறை முடிவுகளை எடுக்கும் போது பல்வேறு சிக்கலான நிலைமைகள் காணப்பட்டன. தற்போது அப்படியான சிக்கல்கள் இல்லை. உதாரணமாக ஒரு ஊரில் பிறை தென்பட்டால் பிறையை பார்த்தவர் ஒரு சிறந்த மனிதர், இவரை ஏற்றுக்கொள்ளலாம் என அந்த ஊர் மக்கள் எங்களுக்கு அறிவித்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். மேலதிகமான நாம் அந்த விடயத்தை கிளறிக்கொண்டிருக்க மாட்டோம். அத்துடன் பிறைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களுள் நன்கு கற்ற, பிறை தொடர்பில் அறிவுள்ள ஐந்து பேர் உள்ளடங்கியுள்ளனர். பிறை பாரத்ததாக தெரிவிக்கும் விடயத்தை உறுதிப்படுத்தித் தருமாறு நாம் இவர்களையே முற்படுத்துகின்றோம். இவர்களின் முடிவை வைத்தும், பிறை பாரத்த ஊரில் உள்ள பிறைக்குழு எமக்கு தருகின்ற சரியான தகவல்களை வைத்துமே நாம் இறுதி முடிவை அறிவிக்கின்றோம். நாம் திடீரென முடிவுகளை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையை நாம் பின்பற்றி வருகின்றோம்.
பிறை விவகாரத்தில் ஏன் சவூதியை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள்? பிறை விவகாரத்தில் ஏன் சவூதியை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள்? Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.