முக்கியமாக ,கிழக்கில், இனப்பாகுபாடு இல்லாமல் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகள்  மகாவலி அதிகாரசபையினூடாக - பிரதேச செயலாளர்களூடாக பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படுகின்ற போது, அவை  இனப்பாகுபாடு இல்லாமல் உரிய முறையில் தேவையான  மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது  உறுதிசெய்யப்படவேண்டும்  என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


பாராளுமன்றத்தில் திங்கள் கிழமை (21) , விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுடைய சேவைப் பிரமாணக்குறிப்பு  இன்னும் நடைமுறைக்கு வராதது குறித்தும், அவர்களுக்கான கொடுப்பனவுகள்மற்றும் ஏனைய தேவைப்பாடுகள் குறித்தும் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மு.கா.தலைவர் ஹக்கீம் அங்குமேலும் கூறியதாவது,


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் நியமிக்கப்படவேண்டிய விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்  நியமிக்கப்படாமல், அவர்கள் கமநல சேவை நிலையம் இருக்கின்ற ஒவ்வொரு பிரதேசத்திற்குமாக நியமிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் , அங்கு பாரிய குறைபாடு நிலவுகின்றது. இது ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகின்ற போது மிகப் பெரிய குறைபாடாக இருக்கின்றது.

இந்த இடங்களில் அங்கு இருக்கின்ற விவசாயப் போதனாசிரியர்கள்தான் மாகாண சபையூடாக நியமிக்கப்பட்டு,அவர்கள்தான் இவர்களுடைய சேவைகளையும் சேர்த்து அந்த மாவட்டங்களில் செய்து கொண்டு வருகிறார்கள்.


இவ்வாறான குறைபாடுகள் நீக்கப்படவேண்டும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருப்பது போன்று ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிற்கும் நியமிக்கப்படுவது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் நடைபெறாமலிருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஏனென்றால் , அங்கு கமநல சேவை நிலையம் இருக்கின்ற ஒவ்வொரு நிலையத்திற்கு மாத்திரம் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


எனவே, இந்த குறைபாடு நீக்கப்படவேண்டும் எனச் சொல்லுகின்ற  அதே வேளையில், இவர்களுடைய சேவைகள் சரியாக,மாகாண ரீதியாகச்  சாகுபடி செய்யக்கூடிய என்ன விவசாய உற்பத்தியை அங்கு செய்யலாம் என்பது குறித்த அறிவுறுத்தல்களை செய்வதற்கும், என்னென்ன உள்ளீடுகளைச் செய்யவேண்டும், என்ன பசளையைப் பயன்படுத்த வேண்டும், எந்த சந்தர்ப்பத்தில் பசளையிடவேண்டிய அவசியம் இருக்கிறது, எவ்வாறு வெள்ளம் வருகின்ற காலத்தில்  அதை தவிர்ப்பதற்கான  நடவடிக்கைகளை   எடுக்கவேண்டும் என்றெல்லாம் எடுத்துக் கூறி பலவாறாக இவர்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது  இந்த வேலையையும் சேர்த்து விவசாய போதனாசிரியர்கள்தான் செய்து கொண்டு வருகிறார்கள். எனவே இந்த குறைபாடு குறித்து அமைச்சரின் கவனத்திற்கு இங்கு நான் கொண்டுவருகிறேன்.


அதே வேளையில் ,  ஜனாதிபதி  தன்னுடைய வரவு,செலவு திட்டத்தில்,குறிப்பாக மலையக பிரதேசங்களில் இருக்கின்ற தனியார் பெருந்தோட்ட கம்பெனிகள், அரசாங்க பெரும் தோட்ட கம்பெனிகள்  அதாவது JEDP, SLDC போன்ற கம்பெனிகள், LRC இடங்களையும் கூட இன்று மக்களுக்கு பகிர்ந்தளித்து விவசாய உற்பத்தியை கூட்டுவதற்கான முயற்சிக்கு  வித்திட்டிருக்கிறார்.


 அவ்வாறே,மகாவலி அதிகார சபையில் இருந்த காணிகளையும் இன்று பிரதேச செயலாளரூடாக விவசாய தேவைகளுக்காக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளும் செய்யப்படவிருக்கின்றன.


வெளிநாட்டு பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு இவற்றைக் கொடுப்பதை விடவும், எங்களுடைய நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்காக  இடப்பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு இவற்றைப் பகிர்தளித்து, அதன் மூலமாக  உணவுப்பற்றாக்குறை நிலவுகின்ற இந்தக் காலகட்டத்தில் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


அதே வேளையில்,குறிப்பாக கிழக்கை பொறுத்தமட்டில் இந்த மகாவலி அதிகாரசபையினூடாக, பிரதேச செயலாளர்களூடாக  அவை வழங்கப்படுகின்ற போது, எல்லா இனங்களுக்கும் சரியாக உரிய முறையில்  இனப்பாகுபாடு இல்லாமல் பகிர்ந்தளிக்கப்படுவது  உறுதிசெய்யப்படவேண்டும்  என்றும் இங்கு வலியுறுத்திக் கூறிக்கொள்கின்றேன் என்றார்.


- எம்.என்.எம்.யஸீர் அறபாத், ஓட்டமாவடி -

முக்கியமாக ,கிழக்கில், இனப்பாகுபாடு இல்லாமல் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம் முக்கியமாக ,கிழக்கில்,  இனப்பாகுபாடு இல்லாமல்   காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.