இலங்கையின் கையிருப்பில் இருந்து 7 பில்லியன் டாலர் திடீரென குறைந்தது எப்படி ?நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் 7 பில்லியன் டொலர் இரு வருடங்களுக்குள்

திடீரென குறைவடைந்தன. அது தொடர்பில் எவரும் தேடிப்பார்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர உயர்நீதிமன்றில் நேற்று முன்தினம் ( 3) சுட்டிக்காட்டினார்.  


நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்துக்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாதங்களை முன்வைத்தார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் நேற்று முன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


 இரசாயன உரப் பாவனையை தடை செய்தமை, சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களை நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் அமல் செய்ய எத்தனித்தமை, எந்த வகையிலும் அடிப்படையற்ற வெறுமனே அரசியல் கொள்கை சார் தீர்மானங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார். இரு வருடங்களுக்குள், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் 7 பில்லியன் டொலர் குறைந்துள்ளதாகவும், இது 690 சதவீத குறைவு எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு திடீரென குறைந்தது  எப்படி என கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் எவரும் தேடிப் பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார் .தவறான நிதிப் பயன்பாடு, கடன் மறுசீரமைப்புக்கு செல்லாமை, சர்வதேச நாணய நிதியத்தை நாடாமை போன்ற பிரதிவாதிகளின் பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமான தீர்மானங்கள் காரணமாக நாடு வங்கரோத்து நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். இ


லங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ், கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதமராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபிள்யூ   டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டிருந்தனர். தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரதிவாதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.  கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புகளே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இலங்கையின் கையிருப்பில் இருந்து 7 பில்லியன் டாலர் திடீரென குறைந்தது எப்படி ? இலங்கையின்  கையிருப்பில் இருந்து 7 பில்லியன்  டாலர் திடீரென  குறைந்தது எப்படி ? Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.