கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல் என குற்றச்சாட்டு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல் என குற்றச்சாட்டு.


(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற
அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கல்முனையின் வடக்கு எல்லை சர்ச்சை தொடர்பில் பிரஸ்தாபித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

"நீண்ட காலமாக நிலவி வருகின்ற கல்முனை வடக்கு எல்லை சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகளை மாநகர மேயர் மேற்கொண்டு வருவதையிட்டு அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றோம்.

இது விடயமாக கடந்த 07ஆம் திகதி மாநகர சபையில் ஒரு விசேட கலந்துரையாடலை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் சிவில் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.

அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மேயர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்திருந்தோம். அவ்வாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்திப்பதற்கு மேயர் ஏற்பாடு செய்து வருகின்ற நிலையில், சில தினங்களுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம், எமது மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கோவில் வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. எனினும் முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக் கூறியதையடுத்து அந்த ஏற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் செயலகமும் எமது மாநகர சபை எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதனால் அப்பகுதிகளில் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படுகிறது.

ஆகையினால் இந்த எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளை எமது மாநகர மேயர் விரைவுபடுத்த வேண்டும்" என்றும் மாநகர சபை உறுப்பினர் குபேரன் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த மாநகர மேயர் ஏ.எம்.றகீப் அவர்கள்;

"இந்த எல்லைப் பிணக்கு சம்மந்தமாக சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, தெளிவுபடுத்தியிருந்தோம். அவர் இப்பிரச்சினையில் தலையிட்டு, நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். எமது பக்க நியாயங்களுக்குரிய ஆவணங்களையும் கோரியுள்ளார். அவ்வாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பது தொடர்பாக அவருடன் பேசியிருந்தேன். தற்போது பொதுத் தேர்தல் காலமாக இருப்பதனால் ஆகஸ்ட் 05ஆம் திகதிக்குப் பின்னர் சந்திப்பதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்" என்றார்.
கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல் என குற்றச்சாட்டு. கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல் என குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5