போரிலும், போராட்டத்திலும் முஸ்லிம்களின் வகிபாகம் .


ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லப்படுகின்ற போதிலும் இன ஐக்கியம் பற்றிப் பேசப்படுகின்ற
போதிலும், சில போதுகளில் தென்னிலங்கையில் ஒரு உணர்வும் வடக்கில் வேறு விதமான உணர்வும் மேலிடக் காண்கின்றோம்.
ஒரு பக்கத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மறுபக்கம் நினைவேந்தலும் கண்ணீர் அஞ்சலியுமாகவே, கடந்த 11 வருடங்களாக மே 18ஆம் திகதிகளை நாம் கடந்து வந்து கொண்டிருக்கின்றோம்.


இந்தத் திகதி, அரசாங்கங்களுக்கும் கணிசமான நாட்டு மக்களுக்கும் யுத்தம் என்ற பெரிய துன்பம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு தங்களது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட தினமாகவும் இருக்ககின்றது எனலாம். ஆனால் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக அது அழுது வடிக்கும் நாளாகவே இருந்து வருகின்றது.


இந்தத் தருணத்தில், 22 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகமானது தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் அதேபோன்று பயங்கரவாதத்திற்கு எதிரான அரச யுத்தத்திலும் என்ன வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றி குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
யுத்த வெற்றி என்பது தனியே சிங்கள மக்களுக்குரியது என்பது போலவும் அதில் முஸ்லிம்கள் பெரிய பங்களிப்புக்களைச் செய்யவில்லை என்ற அடிப்படையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதுண்டு. மறுபுறத்தில், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பெரியளவுக்கு பங்காற்றவில்லை, உதவிபுரியவில்லை என்ற தொனியில் அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் காண முடிகின்றது.
ஆகவேதான் முப்பது வருடங்களுக்கும் மேலாக தீவிரமான இனப் பிரச்சினையும் அதன் பிறகு யுத்த மேகமும் சூழ்ந்திருந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் பயங்கரவாத ஒழிப்புக்கு பூரண பங்களிப்பை வழங்கிய சமகாலத்தில் தமிழ் சகோதர இனத்தின் உரிமைப் போராட்டத்திலும்   தார்மீக ரீதியான வகிபாகத்தை கொண்டிருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது. அதனை ஆழமாக அன்றி, மேலோட்டமாக எழுதிச் செல்வதற்கே இக் கட்டுரை விளைகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவு

இலங்கை தேசத்தில் முஸ்லிம்களின் வரலாறும் ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய சமூகம் வழங்கிய அனுசரணைகளும் மூடிமறைக்கப்பட்டிருந்தாலும், நிஜத்தில் இந்நாட்டின் இறைமைக்காக, விடுதலைக்காக அளப்பெரிய சேவைகளை முஸ்லிம்கள் செய்திருக்கின்றார்கள்.  அரசர்கள் காலம் தொட்டு ஆட்சியில் முஸ்லிம்கள் உயரிய பதவிகள் பலவற்றை வகித்து வந்திருக்கின்றார்கள்.
2ஆம் இராஜசிங்க மன்னனை காப்பாற்றுவதற்காக பங்கரகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் தாய் தனது உயிரைத் தியாகம் செய்தமையும் அதனால் அந்த மன்னன் 'மா ரெக்க லே' (என்னைக் காத்த இரத்தமே) என்று நன்றிகூறியமை போன்ற பல முஸ்லிம் சமூகத்தின் தியாகங்கள் சிங்கள வரலாற்றாசிரியர்களால் பெரும்பாலும் மறக்கடிக்கப்பட்டன.


வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் களத்தில் நின்று போரிட்டார்கள். இவ்வாறு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்களில் 7 பேரை 1804 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவவாதிகள் தேசத் துரோகிகளாக அறிவித்தனர். இன்னும் இவர்கள் போர் வீரர்களாக அறிவிக்கப்படவில்லை.


1864ஆம் ஆண்டு மாவனல்லை பிரதேசத்தில் கடமையில் இருந்த போது முதலாவதாக உயிரிழந்த பொலிஸ் வீரரின் தியாகத்தை நினைவுகூர்வதற்காகவே இலங்கையில் தேசிய பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வீரரின் பெயர் துவான் ஷபான் என்பதாகும். ஆனால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த தியாகமாக பெருந்தேசியத்தால் இது நோக்கப்படுவது கிடையாது.

படைகளில் முஸ்லிம்கள்

இதேவேளை, யுத்த காலத்தில் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு மிகப் பெரிய ஆதரவை வழங்கினர். முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு அரசியல் பலத்தை வழங்கியதற்கு மேலதிகமாக, பொலிஸ் மற்றும் முப்படையிலும் முஸ்லிம் வீரர்கள் களத்தில் நின்று போராடினர், குறிப்பாக புலனாய்வு நடவடிக்கையில் முஸ்லிம் அதிகாரிகள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தனர். இன்றும் அவ்வாறான வீரர்கள் இருக்கின்றனர்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். 'யுத்தத்தை வெல்வதற்கு துணைநின்ற புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் அதிகளவில் காணப்பட்டனர்' என்று குறிப்பிட்ட அவர், 'எனது சேவைக் காலத்தில் மிகச் சிறந்த புலனாய்வு அதிகாரி என்றால் நான் (மறைந்த) நிசாம் முத்தலிப்பையே கூறுவேன் என்றும், அர்ப்பணிப்புள்ள அதிகாரியாக விசேட படையணியின் பசீல் லாபிரை குறிப்பிடுவேன் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இவ்வாறு, நாட்டின் பாதுகாப்புக்காக தியாகங்களைச் செய்த முஸ்லிம் வீரர்கள், அதிகாரிகளின் பட்டியல் நீளமானது. ஆனால், கமல் குணரத்ன போன்ற ஒருசிலரை தவிர இதுபற்றியெல்லாம், சிங்கள தேசப் பற்றாளர்களோ, கடும்போக்காளர்களோ பேசுவது கிடையாது. அவர்கள் இந்தத் தியாகங்களை எல்லாம் வசதியாக மறந்தும், மறைத்தும் விட்டிருக்கின்றார்கள்.
இந்திய அமைதிகாக்கும் படையினர், ஒட்டுக்குழுக்கள் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் பல்வேறுவிதமான நெருக்குவாரங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. சிலபோது படையினராலும் முஸ்லிம்கள் ஆங்காங்கே நெருக்கடிகளை அனுபவிக்க நேர்ந்தது. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் முஸ்லிம் வீரர்கள் குறைவாக இருப்பினும், இன்று வரை நாட்டின் பாதுகாப்புக்கான தமது பங்களிப்பை முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழர்களுக்கு துணை

மறுபுறத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஒரு கட்டம் வரை தார்மீக ஆதரவையும் முஸ்லிம்கள் வழங்கி வந்திருக்கின்றார்கள் என்பதை, வரலாறு பற்றிப் பேசுபவர்கள் மறந்து விடக்கூடாது.


பதியுதீன் மஹ்மூத், பாக்கீர் மாக்கார், ஏ.சி.எஸ்.ஹமீட், ரீ.பி.ஜாயா போன்றவர்கள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்த சமகாலத்திலேயே அதாவது 1956 இல் இருந்தே செனட்டர் மசூர் மௌலானா போன்ற ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சியுடனான பயணத்தை தொடங்கியிருந்தனர். இதில் பின்னாளில் எம்.எச்.எம்.அஷ்ரபும் இணைந்து கொண்டார்.
இதேவேளை, இனப் பிரச்சினைக்கான தீர்வு தேடும் படலத்தின் அடுத்த கட்டமாக உருவெடுத்த தமிழர் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றினார்கள். முஸ்லிம்களுக்கு தனிநாடு தேவைப்படவில்லை, ஆயுதம் ஏந்திப் போராடும் அளவுக்கு இந்த நாட்டில் அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கவும் இல்லை. ஆனாலும், சகோதர தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களுக்காக விடுதலைப் போராட்டத்தில் வரையறைக்குட்பட்டு, நியாயபூர்வமான பங்களிப்புக்களை வழங்கினர்.


யுத்த காலத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களில் தம்மை இணைத்துக் கொண்டதுடன், கிழக்கில் முஸ்லிம் சமூகம் தமிழ்க் குடும்பங்களுக்கு எந்தளவுக்கு ஆதரவும் அடைக்கலமும் வழங்கினார்கள் என்பதை தெரியாதவர்கள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.  இதுபற்றி இன்றும் சாதாரண தமிழ் மக்கள் நன்றியுணர்வுடன் பேசுவதுண்டு.


கேர்ணல் பாறூக், றாபி தொடக்கம் பசீர் மாஸ்டர் தொட்டு இன்னும் பெயர் வெளியில் வராத முஸ்லிம் இளைஞர்கள் பலரும் முஸ்லிம் சமூகத்திற்கு விடுதலை பெறுவதற்காக தமிழ் இயக்களில் இணைந்து செயற்படவில்லை. மாறாக, தமிழர்களின் கோரிக்கைக்காகவே தம்மை அர்ப்பணித்தனர். இவ்வாறு, சுமார் 35 தொடக்கம் 40 வரையான முஸ்லிம் மாவீரர்களின் பெயர்களை புலிகள் இயக்கம் பின்னர் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

விலகியதற்கான காரணங்கள்

இருப்பினும், முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததாகவும், சில இடங்களில் தவறிழைத்ததாகவும் தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுக்களும் இருக்கவே செய்கின்றன. எவ்வாறு, தமிழ் ஆயுதக் குழுக்கள் செய்த தவறுக்காக அப்பாவி தமிழ் மக்களை குற்றம் சொல்ல முடியாதோ அதுபோலவே, ஊர்ச் சண்டியர்கள் செய்த அக்கிரமங்களுக்காக சிவில் முஸ்லிம் சமூகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட முடியாது.


இவ்வாறு, தமிழ்த் தேசிய அரசியலோடும் தமிழர் விடுதலை முன்னெடுப்புடனும் தார்மீக அடிப்படையில் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் சமூகம் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஒரு கட்டத்தில், அவர்களை விட்டுப் பிரிந்து வேறு திசையில் பயணிக்க வேண்டியதாயிற்று.
பெருந்தேசிய அரசியலுடனோ அல்லது தமிழ்த் தேசிய அரசியலுடனோ இரண்டறக் கலந்து பயணிப்பதன் மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைய முடியாது என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணர்ந்தனர். அத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத வழியில் செல்வதைத் தடுத்து, சமூகத்தை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில், எம்.ஐ.எம்.மொஹிதீனில் சிந்தனையில் உருவாகி, எம்.எச்.சேகு இஸ்ஸதீனால் எடுத்துச் செல்லப்பட்ட தனித்துவ அடையாள அரசியலை மையமாக வைத்து எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.


சமகாலத்தில், அதாவது 80களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் ஆயுதங்கள் முன்கையெடுத்தன. அதே ஆயுதங்கள் பள்ளிவாசல்களிலும், வயல்களிலும், பயணம் செய்யும் வேளையிலும் முஸ்லிம்களை நோக்கி திருப்பப்பட்டன. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன், உயிர், உடமை இழப்புக்கள் என சற்றும் எதிர்பார்த்திராத பல கசப்பான  அனுபவங்களை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள நேரிட்டது.
இதனால், விடுதலைப் போராட்டம் அதன் தூய தன்மையை இழந்து வேறு திசையில் பயணிக்கின்றது என முஸ்லிம் சமூகம் கருதியமையால், அதற்குப் பிறகு அந்த தார்மீக ஆதரவை விலக்கிக் கொண்டது. அத்துடன், அரசாங்கத்திற்கான தமது ஒத்துழைப்பை முஸ்லிம்கள் மேலும் வலுப்படுத்திக் கொண்டனர் என்றும் கூறலாம்.

அதன் பிறகு, புலிகளுடனேயே முஸ்லிம்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய காலமொன்று வந்தது. ஆனால், அப்பேச்சுக்களில் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்ற மனத்தாக்கல் இன்னும் இருக்கவே செய்கின்றது.
ஆயினும் இன்று வரையும் தமிழர்களின் உரிமை சார்ந்த, அபிலாஷை சார்ந்த விடயங்களுக்கோ இனப் பிரச்சினை தீர்வுக்கோ முஸ்லிம்கள் இதயபூர்வ ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆயுதக் குழுக்கள் தமக்கு செய்த அட்டூழியங்களை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லையே தவிர ஒருபோதும் தமிழ் சமூகத்தின் இழப்புக்களை (ஒரு சமூகம் என்ற வகையில்) கேலிக்குள்ளாக்கவில்லை.


அரசியல்வாதிகள் செய்கின்ற காரியங்களுக்கு சமூகங்கள் பொறுப்பாக மாட்டாது. அதுபோல சஹ்ரான் போன்ற வேறு நிகழ்ச்சி நிரல்களுக்காக வேலை செய்யும் முட்டாள் பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்காக அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டப்படுவதையும் சகிக்க முடியாது.


ஆகவே, நூற்றாண்டு காலமாக முஸ்லிம் சமூகம் இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்புக்கு பங்களித்து வருகின்றது. இருப்பினும் மற்றைய இனங்களின் உணர்வுகளை மதிக்கப் பழகிக் கொண்டுள்ளது. குறிப்பாக, சகோதர சிறுபான்மைத் தமிழர்களின் விடுதலை உணர்வை மதித்து தம்மாலான பங்களிப்புக்களை வழங்கியுள்ளது.


இது பற்றிய பல வாதப் பிரதிவாதங்களும், மாற்றுக் கருத்துக்களும் இருக்கின்றன. அதுபற்றி எல்லாம் இக்கட்டுரை விரிவாக ஆராய முற்படவில்லை. மாறாக, இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் அதேபோன்று பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும் முஸ்லிம் படை வீரர்கள், அதிகாரிகள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அளப்பெரிய பங்களிப்பை வழங்கி, போர் வெற்றியில் ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தை வகித்துள்ளது.


அதேநேரத்தில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள், உணர்வுகளை புரிந்து கொண்டு விடுதலை வேட்கைக்கு தார்மீக அடிப்படையில் முஸ்லிம் சமூகம் துணைநின்றது மட்டுமன்றி அது விடுதலைக்கான போராட்டம் என நம்பப்பட்ட வரைக்கும், முஸ்லிம் இளைஞர்கள் தமது பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.


முஸ்லிம் சமூகம், யுத்த வெற்றியில் பங்கு கேட்பதோ தமிழர்களின் முன்னெடுப்பில் தமது உதவிகளை சொல்லிக் காட்டுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, மேற்குறிப்பிட்ட  யதார்த்தத்தை சிங்கள சமூகமும் ஆட்சியாளர்களும் அதேபோன்று தமிழ் தேசியமும் மக்களும் விளங்கிக் கொள்ளும்படி அடிக்கோடிட்டுக்கு காட்டுவதே இந்த முயற்சியின் ஊக்கியாக இருந்தது.
வேறெந்தப் பொல்லாப்பும் இல்லை!

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 24.05.2020)
போரிலும், போராட்டத்திலும் முஸ்லிம்களின் வகிபாகம் . போரிலும், போராட்டத்திலும் முஸ்லிம்களின் வகிபாகம் . Reviewed by Madawala News on May 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.