எம்மவர்கள் மீதான விமரிசனங்கள் சரியானவை தானா?


தற்போது உலகலாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொரோ னோ  வைரஸ் தாக்கம் எமது நாட்டையும்
அச்சுறுத் தத்  தொடங்கியுள்ள நிலையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முகநூல் வழியே முண்டியடித்துக் கொண்டிருப்பதனைக் காணக்கிடைக்கின்றன.

பொதுமக்களுடைய செயற்பாடுகளை பல்வேறு கோணங்களில் சில சகோதரர்கள் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இன ரீதியாக அடையாளப்படுத்துகின்றனர். சிலர் பிரதேசவாரியாக அடையாளப்படுத்துகின்றனர். சிலர் பொதுமக்களை முட்டாள்கள் என்கிறார்கள். சிலர் மாட்டுக் கூட்டம் என்கிறார்கள். இன்னும் சிலர் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்கள் என்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் விமர்சித்துத் தள்ளும் அவர்களே கொரோனாவின் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் இந்தக் கூட்டம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும் எழுதுகிறார்கள்.

ஆம், அவர்கள் புரிந்துகொள்ளவில்லைதான் என்றே வைத்துக்கொள்ளுவோம். அறியாமைக் கூட்டம் என்றே வைத்துக்கொள்ளுவோம். என்னைப் பொறுத்த வரைக்கும் அறியாமை என்பது அதட்டலுக்குரியதல்ல. மாறாக அனுதாபத்திற்குரியது. சமூகத்தை வழிநடாத்தல் என்பதனை சீர்திருத்தக் காரர்கள் குழந்தை வளர்ப்பைப் போன்று  அனுகவேண்டுமே தவிர அடித்து நொறுக்குதல் பாங்கில் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு விடயத்தை விமரிசிக்கும் முன்னர் அதன் பின்னணியைக் கூர்ந்து அவதானித்தல் மாற்றம் காணத் துடிக்கும் உண்மையான உள்ளங்களுக்கு வெற்றியைத் தரவல்லது. மாறாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விமர்சிப்பது எதிர்பார்க்கும் மாற்றத்தை உண்டுபண்ணுவதைக் காட்டிலும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட உளவியல் உண்மை.

தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலையின் பின்னணி என்ன?
01. கொரோனோ தொற்று என்பது இதுவரை காலமும் மக்கள் எதிர்கொண்டிராத ஒரு சவால். அதனால் மக்களுக்கு அதன் தாத்பரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

02. ஏற்கெனவே நாம் பழக்கப்பட்ட ஊரடங்கு நிலைமையும் தற்போது எதிர்கொள்ளும் ஊரடங்கு நிலைமையும் முற்றிலும் வேறுபட்டவைகள்.

ஊரடங்கு சட்டம் பிறப்பித்தும் ஏன் வெளியே உலாவுகின்றனர்?

இத்தகைய நீண்ட ஊரடங்கு நிலைக்கு மக்கள் பழக்கப்படவில்லை. அதிலும் குறிப்பிட்ட சிலரே அவ்வாறு வெளியே உலாவினர். பெரும்பாலானவர்கள் சட்டத்தை மதித்து வீட்டினுள் அடங்கியிருந்தனர். வெளியான சிசிடீவி காணொளிகளே அதற்கு சாட்சி.

எல்லோருமே வேண்டுமென்றே சட்டத்தை மீறியிருக்கவுமில்லை. மாறாக அத்தியவசியத்திற்காக வெளியே வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எந்த நிலையிலும் அவ்வாறு வெளியேற நேரிடும் என்பதை அறிந்துதான் இத்தகைய ஊரடங்கு நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் வழமையாக கடமையிலமர்த்தப்படுகிறார்கள். அது எல்லா சமூகத்திலும் ஏன், எல்லா நாடுகளிலும் இயல்பானதே. பாதுகாப்புத் தரப்பினரின் எதிர் நடவடிக்கைகளால் அது இயல்பாகவே ஒழுங்குபடுத்தப்பட்டுவிடும். சட்டத்தைப்போட்டவுடன் அதற்கு நூறு வீதம் ஒத்துழைப்புக் கிடைக்க மனிதர்களொன்றும் ரோபோக்கள் அல்ல என்பதை யும்  உலகமே அறியும்.


ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஏன் ஒழுங்கு பேணவில்லை?

இதுவரை காலமும் எதிர்கொண்டு பழக்கப்பட்டிராத ஊரடங்கு நிலைமையிலிருந்து குறித்த மணி நேரங்களே தளர்வு என அறிவிக்கப்பட்டதும் தமக்கான அத்தியவசியப் பொருட்களை வாங்குவதில் சற்று அவசரப்படுதல் என்பது "மாட்டுக் கூட்டம்" என்றும் "முட்டாள் கூட்டம்" என்றும் அழைப்பதற்குப் பொருத்தமானதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே எனது வாதம்.

இதில் பொதுமக்கள் சாராத சில விடயங்களின் ஒழுங்குபடுத்தல் தவறு இருக்கிறது. எந்தவொரு நிவாரண ஏற்பாடுகளுமின்றி விடப்பட்ட ஊரடங்கு எச்சரிக்கை, சனத்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான சதோசா நிறுவனங்களின்மை, தனியார் கடைகளில் உள்ள விலை வித்தியாசங்கள், ஆண்டாண்டு காலமாக ஒழுங்குபடுத்தப்படாத ATM இயந்திர அறைகள் மற்றும் அவை அமைந்துள்ள வீதிகள் என பல்வேறு விடயங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஏனைய சமூகத்தவர்கள் ஒழுங்கைப் பேணினார்களே...?

ஆம், வெளியான புகைப்படங்களில் சகோதர சமூகத்தவர்கள் ஒழுங்கைப் பேணியுள்ளமையை அவதானிக்க முடிந்தது. அது பாராட்டுக்குரியது. மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முன்மாதிரிகள் பாராட்டப்படவேண்டியவைதான். அந்தப் புகைப்படத்திலுள்ள சகோதரர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் இலங்கைத் திருநாட்டின் குடிமகன் என்ற வகையில் பெருமையடைகிறேன். ஆனால் நெரிசலான குடித்தொகையைக் கொண்ட பிரதேசங்களிலும் நான் மேற்சொன்ன போதிய இடவசதிகளற்ற பிரதேசங்களிலும் நாடுபூராகவும் ஒரே நிலைதான் என்பதை நான் கீழே இணைத்துள்ள புகைப்படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இவற்றைத் தாண்டி பக்கத்து வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டு நமது வீட்டுப் பிள்ளைகளை நச்சரித்துக்கொண்டே இருப்பது சிறந்த குழந்தைகளாக வளர்த்தெடுக்க ஒரு போதும் பங்களிப்புச் செய்யாது என்பதனையும்  நாம் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்றால் அடுத்த பிள்ளை அவ்வாறு இருக்கிறது என்பதற்காக நமது பிள்ளை அவ்வாறிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் உளவியலை விடவும் இயல்பாகவே நல்லதையே நாடுகின்ற பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வழிநடாத்துவதே சிறந்த பெற்றோர்கள் மீதான கடமையாகும்.

இதனையே நான் முன்னரே, சமூகத்தை வழிநடாத்தல் என்பதனை சீர்திருத்தக் காரர்கள் குழந்தை வளர்ப்பைப் போன்று  அனுகவேண்டுமே தவிர அடித்து நொறுக்குதல் பாங்கில் அல்ல  என்று குறிப்பிட்டேன்.

ஆகவே, சுயவிமர்சனம் என்ற பேரிலும் சீர்திருத்தம் என்ற பேரிலும் அடித்து நொறுக்கும் மனப்பாங்கில் முகநூல் வழியாக பதிவுகளிடுவதைத் தவிர்ந்து வழிநடாத்தவல்ல பதிவுகளை இடுவோம். இந்த அவசரகால ஒழுக்கங்களுக்கு இனமோ, மதமோ, சமூகமோ, பிரதேசமோ கிடையாது. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான் என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல எமது மக்களை வழிநடாத்தப்பழகுவோம். அதுவே எமக்கு நல்ல மாற்றத்தைப் பெற்றுத்தரும்.

உலகிலுள்ள எல்லா நாகரிகங்களும் கலாசாரங்களும் நீண்ட காலப் புரட்சி மற்றும் வழிநடாத்தலின் பின்னரானதுதான். மாறாக எதுவும் உடனே தோன்றி காய்த்துக் குலுங்கியவைகளல்ல.

ரா.ப.அரூஸ்
23.03.2020
எம்மவர்கள் மீதான விமரிசனங்கள் சரியானவை தானா? எம்மவர்கள் மீதான விமரிசனங்கள் சரியானவை தானா? Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.