பயிர்களை மேயும் வேலிகள்!


மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறிகளையும், சமூக விழுமியங்களையும் பின்பற்றும் மக்கள் வாழும்
இந்நாட்டில், சகல மத வழிபாட்டுத்தளங்களிலும், பாடசாலைகளிலும், ஆலோசனை நிலையங்களிலும் தினசரி நற்போதனைகள் இடம்பெறுகின்றன.


பாவச் செயல்களிலிருந்து எண்ணங்களைப் பாதுகாத்து எவ்வாறு பரிசுத்தமாக வாழ்வது என்ற போதனைகள்;, நல்வாழ்வுக்கான ஆலோசனைகள் மதகுருமாரினாலும், ஆசிரியர்களினாலும், உள ஆற்றுப்படுத்துனர்களினாலும் அவரவர்களுக்குரிய நிலையங்களிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இதில் துரஷ்டவசம் என்னவென்றனால், இவ்வாறு வழிப்படுத்துகின்றவர்களில், வேலியாக இருக்கின்றவர்களில் சிலர் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வழிதவறி பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களின் இத்தகைய இழிசெயல்களினால் அப்பாவிச் சிறுவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.


மதகுருமாரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்கள், ஆரியர்களினால்; பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் மாணவர்கள், வைத்தியரினால் பாலியல் இம்சைக்குக்கு உள்ளாகும் நோயாளிச் சிறுவர்கள், தந்தையினால் வன்புணர்வுக்கு ஆளாகும் மகள், அண்ணனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் தங்கை, மாமாவினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மருமகள் சித்தப்பாவினால் வன்புணர்வுக்காலாகும் மகள், அம்மப்பா, அப்பப்பாக்களினால் வன்கொடுமைக்காளகும் பேர்த்திகள் என பாதுகாப்பு வேலிகளாக இருக்க வேண்டியவர்களினால் பயிர்களான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் அங்கங்கே நடந்தேறுவதை ஊடகச் செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது.


உறவுமுறைக்காரர்கள் மற்றும் சமூகத்தால் மதிக்கப்படுகின்றவர்களில்  ஒரு சிலரின் இத்தகைய பாலியல் கொடுமைகள், துஷ்பிரயோக நடவடிக்கைகள் ஏனையவர்களுக்கு தலைக்குனிமை ஏற்படுத்துகிறது. பயிர்களை மேயும் வேலிகள் என்ற நிலையை உருவாக்கி வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அண்மைகாலமாக அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளதோடு இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.


இவற்றுக்கு உதாரணமாக அண்மையில் ஹாலி-எல பிரதேச பாடசாலையொன்றில் அப்பாடசாலையில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் அதே பாடசாலையைச் சேர்ந்த 13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றஞ்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது மாத்திரமின்றி ஆசிரியத்துவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


புனிதமிக்க பணியாகக் கருதப்படும் ஆசிரியத்துவம் சமகாலத்தில் அப்பணியைச் சுமந்த சிலரினால் புரியப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் ஆசிரியத்துவத்துக்கான சமூக கௌரவத்தையும், மதிப்பையும் மதிப்பிழக்கச் செய்து வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வேலிகளாக இருந்து மாணவர்களை பாதுகாக்கவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் கடமைப்பட்டவர்கள் புரிகின்ற படுமோசமான செயற்பாடுகள் குறித்து பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அக்கறைகொள்வது அவசியமாகும். மேலதிக வகுப்புக்கள் என்ற போர்வையில் ஆசிரியத்துவத்தைச் சுமந்த  ஒரு சில மனிதாபிமானமற்றவர்களினால் மாணவர்களின் காலங்கள் மாத்திரமின்றி பணங்களும் கொள்ளையிடப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்ற.


பாடசாலகளில் பாட அலகுகள் நிறைவு செய்யப்படாததன் காரணமாக எங்கு சென்றேனும் கற்று பரீட்சைகளில் சித்தியடைய வேண்டுமென்ற நோக்குடன் மேலதிக வகுப்புக்களுக்கு சென்றாலும் அங்கும் பாட அலகுகளை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் சில மாணவர்கள் அவ்வாறு பாட அலகுகள் நிறைவு செய்யப்படாமலே க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரப்பரீட்சைகளுக்குத் தோற்றும் துர்ப்பாக்கி நிலைமைகளும் ஒரு சில ஆசிரியர்களினால் தோற்றுவிக்கப்படுவதைக் கேள்யுற முடிகிறது. இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோரும் பாதுகாவலர்களும் பொறுப்பானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலைமைகள் கூட ஒரு வகையில் மாணவர்களின் நேரமும், பணமும் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தும் விடயங்களாகவே கருத வேண்டியுள்ளது. 



இந்நிலையில், துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழிமுறைகளும், சட்டதிட்டங்களும,; தண்டனைகளும் உருவாக்கப்பட்டுள்ளபோதிலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும்  சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்றால் இதற்கான காரணத்தை ஒவ்வொரு பெற்றோரும், பொறுப்புள்ள பாதுகாவலரும், சமூகத்தின் மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது மாத்திரமின்றி, அவற்றை தடுப்பதற்கான உரிய விழிப்புணர்வுகளைப் பெற்றுக்கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும்; இன்றியமையாததாகும்

சிறுவர் துஷ்பிரயோகமும் காரணங்களும்.


சிறுவர் துஷ்பிரயோகம் பல்வேறு காரணங்களினால் இடம்பெறுகின்றன. பாலியல் ரீதியாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குகின்றவர்கள் ஏதோவொரு வகை பாலியல் உளக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். உளக்கோளாறுகளுடன் நவீன தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள அதிகளவிலான வேண்டத்தகாத இணையத்தளப்பாவனையும்;, அநாகரியமிக்க, கவர்ச்சிகரமான ஆடையணிதலும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான முக்கிய காராணங்களாக அமைவதாகக் கருதப்படுகின்றன.



அத்தோடு, உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு சமூகங்களின் பொறுபற்ற தன்மை, சூழல் நெருக்கீடுகள், குடும்ப நெருக்கீடுகள் என்பன காரணமாக உள்ளன. பொருளாதாரச் சிக்கல்கள், வயதில் மிக நெருக்கமாகவுள்ள பிள்ளைகள், தனியான பெற்றோரின் பராமரிப்பு, திருமணப் பிரச்சினைகள், ஒரு சில ஆதரவுகளுடன் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை, ஊடகங்களின் தாக்கம் போன்ற குடும்ப, சமூக சூழல் காரணிகளும் தீராத ஆரோக்கிய பிரச்சினைகள், மது மற்றும் போதைவஸ்த்துப் பாவனை, கோபத்தை அடக்க முடியாத தாழ்வான சுய மதிப்புடைய வயது, கல்வி மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றுக்கு உட்படும் தரக்குறைவான திறன்கள், சிறுவர்களின் விருத்தி தொடர்பாக யதார்த்தமற்ற எதிர்ப்பார்ப்புகள் போன்றவற்றைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் நடத்தைகளும் சிறுவர் துஷ்பிரயோம் ஏற்படுவதற்குரிய காரணங்களாக விளங்குகின்றன.



இத்தகைய காரணங்களினால் அல்லது இவை தவிர்ந்த ஏனைய காரணங்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதைத் தடுக்க வேண்டுமாயின். இத்தடுப்பு நடவடிக்கைப் பணிகள் சமூகப் பணியாக கருதப்பட்டு சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இவை தொடர்பில் விழிப்புணர்வு பெறுவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதை தமது பொறுப்பாகவும் உணர வேண்டும். அப்போதுதான் இத்தகைய கயவர்களிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும்.



சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன அதிகாரிகளும், செயற்பாட்டாளர்களும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையையும் சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது. இதற்கான காரணமென்ன, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் எப்படிப்பட்டவர்கள். எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது. துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் அதற்கான முறையான பொறிமுறைகள் எவை போன்ற பூரண அறிவை பெறுவதும் அவசியமாகும்.



இவை குறித்த முறையான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளை முறையாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் ; பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிராமம் மற்றும் நகரம் தோரும் முன்னெடுக்கப்படுவது முக்கியமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு அவற்றைத் தடுப்பதற்காகச் செயற்படுகின்றவர்களுக்கு மாத்திரமின்றி ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமாகவுள்ளது. சிறுவர்கள் என்றால் யார்? அவர்களின் உரிமை என்ன? சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் எவை? துஷ்பிரயோகங்களிலிருந்து  எவ்வாறு சிறுவர்களைப் பாதுகாக்க முடியும். போன்ற அறிவுடன் கூடியதான விழிப்புணர்வு இன்று ஒவ்வொரு தனி நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.


ஏனெனில,; இன்று நமக்கு சொந்தமில்லாத ஒரு சிறுவனோ, சிறுமியோ துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட செய்தி நாளை நமது சொந்த உறவான பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட செய்தியாகக் கூட வரலாம். அந்த நிலையிலிருந்து நமது சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு தனிநபரும் இவ்விடயம் தொடர்பில் விழிப்படைவது அவசியமாகும்.
18 வயதிற்கு குறைந்த சகரும் சிறுவர்களாகக் கருதப்படுவர். சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பட்டயம் உருவாக்கப்பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



சிறுவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் அதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கைகள், விதிகளையும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
சிறுவர் உரிமைகளும் துஷ்பிரயோக வடிவங்களும்
பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும்  பெற்றுக்கொள்ளும் உரிமை, பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தாதிருப்பதற்கான உரிமை, வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை, தமது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை, போதிய கல்வி பெறும் உரிமை, சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை, ஓய்வெடுக்கவும் விளையாடவும் உரிமை, சித்திரவதை குரூரமான தண்டனைகளிலிருந்து  தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதாரண வழக்கு விசாரணைகளுக்குள்ள உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சிறுவர்களுக்குண்டு. இத்தகைய உரிமைகள் மறுக்கப்படுவதும் துஷ்பிரயோகமாகவே கருதப்படுகிறது.


பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் என பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு இழைக்கப்படின் அது உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. இதில் அடித்தல், காயப்படுத்தல், அங்கங்களைச் சிதைத்தல் போன்ற மட்டுப்படுத்தப்படாத தண்டனைகளும் அடங்குகின்றன. குறிப்பாக பெரும்பாலான உடலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் வீடுகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்கள், பாதுகாவலர்கள், வயது வந்த சகோதாரர்கள், சில ஆசிரியர்கள், கள்ளக் காதாலர்கள், காதலிகள், எஜமானர்கள் போன்றோரினால் சிறுவர்கள் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறான உடலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஒரு சில வெளிக் கொணரப்படுகின்றபோதிலும் பல சம்பவங்கள் வெளிக்கொணரப்படாமல் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.


பொதுவாக, சிறுவர்கள் சுயமாக விளையாடுதல், கற்றல், நாளாந்த கருமங்களைச் செய்தல், ஒளிவு மறைவின்றிப் பேசுதல், விருப்பங்களை வெளிப்படுத்துதல், அறியாத விடயங்களை அறிந்துகொள்ள முயலுதல், சுயமாகச் சிந்தித்தல், ஆராய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது அவை பலவந்தமாகத் தடுக்கப்படுமிடத்து, உளவியால் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகுவார்கள்.


இதனால் அவர்களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்ணறிவு, விவேகம் போன்ற உள நிலைகள் பாதிப்படையும். இவ்வாறு சிறுவர்களைப் பாதிப்படை செய்யும் செயற்பாடுகள் உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது.

அநேக வீடுகளில் பிள்ளைகளின் சுதந்திரங்கள் பறிக்கப்படும் வகையில் தங்களது எண்ணங்களையும் ஆசைகளையும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இதனால், சிறுவயதில் ஏற்படுகின்ற உளத் தாக்கங்கள் அப்பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை அநேக பெற்றோர்கள் மறந்து செயற்படுவது அவர்களின் அறியாமையாகும்.


சிறுவர்களை ஏதாவது பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் போது சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் இச்சைக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமின்றி, சிறுவர்களைத் தொடுதல், வருடுதல், பொருத்தமற்ற பாலியல் சொற்களைப் பயன்படுத்துதல், பாலியல் நொந்தரவுகளைக் கொடுத்தல், பாலியல்  செயற்பாடுகளை பார்ப்பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்தகங்களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடச் செய்வதானது பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது.


சமகாலத்தில் சிறுவர்கள் மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுவர் இல்லங்களை நடாத்தி வருகின்ற பொறுப்புதாரிகள் மற்றும் மேலதி வகுப்புக்களை நடாத்தி வருகின்ற ஒரு சில ஆசிரிர்கள் மற்றும் கல்வி நிலைய நிருவாகிகள், உறவுமுறைக்காரர்கள் சிறுவர்களை பாலியல் பலாத்காரங்களுக்கு உட்டுத்தி வருகின்றனர்.


இவ்வாறு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுட்டுள்ளவர்கள் 'சேடிசம';, 'பிடோபீலியா', 'பெடிசிஷம';, 'மஸோசியம்,' போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என உளவியல் நுபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 


உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோமென்பது வெளிப்படையாகவே மறுத்து விலக்குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், பயமுறுத்தல், கெடுத்தல், சுரண்டிப்பிழைத்தல், உணர்ச்சி ரீதியான துலங்களை மறுத்தல் மற்றும் சூழலுடன் இடைத்தொடர்பை மேற்கொள்ளும் சிறுவர்களது பிரயத்தனங்களுக்கு தண்டணையளித்தல் போன்ற செயற்பாடுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இவ்வகையான துஷ்பிரயோகச் செயற்பாடுகளும் பெருவாரியாக இடம்பெற்றுத்தான் வருகின்றன.



ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றபோது அச்சிறுவன் புறக்கணிப்பு ரீயிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றான். அதுதவிர, சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் அதனால் ஏற்படுகின்ற இறுக்கமான செயற்பாடுகளும கூட சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களாகக் கருதப்படுகின்றன.


துஷ்பிரயோகம் பற்றிய உண்மையான தகவல்களை சிறுவர்களுக்கு கற்பித்தல் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தினால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்துவதற்கும் தேவையான திறன்களையும் பண்புகளையும் அவர்களில் விருத்தி செய்தல் அவசியமாகும். இந்த அவசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வளரும் பயிர்களான சிறுவர்கள் வேலிகளாகக் கருதப்படும் ஆசிரியர்கள் உட்பட  உறவு முறைக்காரர்களினாலும் ஏனையவர்களினாலும் துஷ்பிரயோகத்திற்குட்படாமல் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சமூக உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அசங்கத்தவர்கள் ஒவ்வொரு வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவது சமகாலத்தின் அவசியமாகவுள்ளத.



அத்தோடு, பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள், பாதுகாவர்கள் அலட்சியமாகச் செயற்பாடாது எந்தப்பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை குறைந்தபட்சம் அறிந்து துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய அறிவைப் பெற்று அதற்கேற்ப  செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அவ்வாறு செயற்படும்;போதுதான், வேலிகள் போல் நடிக்கும் காமப் பிசாசுகளிடமிருந்தும் ஏனைய கயவர்களிடமிருந்தும் வளரும் பயிர்களான பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.
- எம்.எம்.ஏ.ஸமட், விடிவெள்ளி -2019.09.05
பயிர்களை மேயும் வேலிகள்! பயிர்களை மேயும் வேலிகள்! Reviewed by Madawala News on September 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.