"பெண் காதி நியமனமும் இஸ்லாத்தின் காதி முறை அதிகாரமும். மாற்றத்துக்கான ஒரு ஆலோசனை. "


இலங்கை போன்ற நாடுகளில் காதி நீதிபதி என்பதன் புரிதல் என்ன? அதன் அதிகார எல்லை எது?
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் நியமனம் பெரும் ஒரு காதி என்பவருக்கு இது ஈடாகும் பதவிதானா? அல்லது நிருவாகவியலுடன் தொடர்பான ஒரு பதவியா என்ற கேள்விகள் ஊடாகவே இந்த விடையத்தை அணுக வேண்டியுள்ளது .

இன்னுமொரு பக்கம் பெண்களும் காதி நீதிபதியாக நியமனம் பெற வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன. இது புதிதாக எழுந்த வாதம் அல்ல. பல நாடுகளில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று பேசப்பட்ட நாடுகளில் பெண் நீதிபதி என்ற கோஷமும் ஒன்று. இறுதியில் சட்ட ரீதியாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின் அத்துறையில் பங்கெடுத்தவர்கள் மிகவும் குறைவு. பெண்கள் அத்துறையில் வருவதில்லை என்று அந்த துறையே மூடப்பட்ட வரலாறும் சில நாடுகளில் நடந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று கோஷங்கள் எழுந்தளவு அவர்களின் கள நடவடிக்கைகள் இருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனாலும் எம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை இலங்கை போன்ற நாடுகளில் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்த பதிவில் பேசியுள்ளேன்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நியமனத்தின்படி காதி நீதிபதி என்பது மிகப்பெரும் பதவியாகும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த காதி நீதிபதிகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவர்கள் எல்லோரும் மிகப்பெரும் அறிவு மேதைகளாக, புத்திஜீவிகளாக, எழுத்தாளர்களாக, ஆய்வாளர்களாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைவிட மிகப்பெரும் அறிஞர்களாகவும், தகுதியிலும் அதிகாரத்திலும் பலம் பொருந்தியவர்களாகவும் காதி நீதிபதிகள் இருப்பார்கள். இமாம் இயாஸ் பின் முஆவியா, இமாம் அபூ யூசுப், இமாம் காதி இயாழ், இமாம் அஹ்மத் பின் பதீல் போன்ற இன்னோரன்ன நீதிபதிகளின் வரலாறுகளை எடுத்து வாசிப்பவர்களுக்கு அதன் பரப்பும், அதிகார எல்லையும் தெரியாமல் இருக்கப்போவதில்லை.

இந்த நிலையில் இலங்கையில் காதி நீதிபதிகளாக பெண்களை நியமனம் செய்தல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதன் பின்னால் உள்ள அரசியல், இனவாத சிந்தனைகளை தாண்டி பொதுவாக இது தொடர்பான இஸ்லாமிய பார்வை என்ன என்பதை நாம் தெரிந்து வைக்க கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் காதி நீதிமன்றம் என்பது விவாகம், விவகாரத்துடன்தான் அதிகம் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகிறது. இதன் அதிகாரம், அதன் பின்னால் உள்ள நிருவாக முறைகளை கவனத்தில் எடுக்கும்போது இஸ்லாமிய காதி நீதி மன்ற அதிகாரத்துக்கு எந்தளவிலும் அது தொடர்புபடவில்லை என்றே சொல்ல முடிகிறது.

இஸ்லாமிய காதி நீதிமன்றம் என்பது விவாகம், விவகாரத்துடன் மட்டும் தொடர்பானது அல்ல, அது குற்றவியல், சமூகவியல், அரசு தொடர்பான பரந்த ஆழமான பகுதியும் பதவியுமாகும். அங்கு விவாகம், விவாகரத்து என்பதுகூட பலமான அதிகாரம் கொண்ட பகுதி. இலங்கை காதி நீதிமன்ற அதிகாரங்களை எல்லாம் அது தாண்டியது.
இஸ்லாமிய காதி நீதி மன்றத்துக்கும், இலங்கை காதி நீதி மன்ற முறைக்கும் பல அடிப்படை வேறுபாடுகள் உள்ள நிலையில் இதனை இஸ்லாமிய நீதி மன்ற முறையில் நின்று அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இஸ்லாமிய காதி நீதி மன்ற பகுதியின் ஆழ அகலம், அதன் முக்கியத்துவம், அதன் பாரதூரம் என்பனவற்றைக் கவனித்தால் பெண்கள் அந்த பதவிக்கு பொருத்தமில்லை என்று சொல்வதில் நியாயங்கள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

அது ஹராமா, ஆகுமானதா என்பதை தாண்டி, அறிஞர்கள் மத்தியில் பேசப்பட்ட முரண்பட்ட உரையாடல்களை தாண்டி கள நிலவரத்தை புரிந்து செயல்படுகின்ற ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர் பெண்களை அப்பதவிக்கு நியமிப்பதை தவிர்க்கவே செய்வார். ஆனால் அதே காரணங்கள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள காதி நீதி மன்றங்களுக்கு பொருந்துமா என்பதையே இங்கு அலசப்பட வேண்டியுள்ளது.
உண்மையில் இஸ்லாமிய காதி நீதி மன்ற முறைமையை தெளிவாக அறிந்த ஒருவர் இலங்கை காதி நீதி மன்றத்துக்கு அதே "காதி நீதிபதி" என்ற பெயரை பொருத்தமாக கருத மாட்டார். இஸ்லாத்தின் காதி நீதி பதியின் அதிகாரத்தையும் , அதன் அதிகார எல்லையையும் கவனத்தில் எடுத்து பார்க்கும்போது இலங்கை காதி நீதி பதியின் அதிகாரம் என்பது ஒரு எழுதப்பட்ட நிருவாக ஒப்பந்தம் ஒன்றை வாசித்து முடிவெடுக்கும் சாதாரண ஒரு பதவி என்பதையே உணர முடியும்.

எனவே சாதாரண நிருவாக பொறுப்பொன்றை செயல்படுத்தும் பதவியை ஒத்த ஒரு பதவி என்பதையே உணர முடிகிறது. இங்கு சாதாரண பதவி என்பதன் அர்த்தம் உதாசீனம் செய்யப்படுமளவு முக்கியத்துவம் குறைந்த பதவி என்பதல்ல, மாறாக ஒரு கிராம சேவகர், ஒரு பாடசாலை அதிபர் என்பவர்களோடு ஒப்பிடும்போது இது சாதாரண நிருவாக பொறுப்பில் உள்ள பதவியாகவே கருத முடிகிறது.
ஒரு கிராம சேவகர்(GS) எதிர்கொள்ளும் பல சமூக பிரச்சினைகளில் ஒரு சிறு பகுதியைதான் இலங்கை காதி நீதிபதி எதிர்கொள்கிறார். ஒரு பாடசாலை அதிபரின் நிருவாக எல்லையைவிட குறைந்த பதவியைதான் ஒரு காதி நீதிபதி வகிக்கிறார்.

ஒரு மாவட்ட செயலாளரின்(DS) அதிகாரத்தில் ஒரு வீத அதிகாரம்கூட இலங்கை காதி நீதிபதிக்கு இல்லை. ஏலவே திருமண பந்தத்தில் அல்லது விவாகரத்தில் முடிவு எடுத்துவிட்டவர்களின் முடிவுகளை மாற்றும் அதிகாரம்கூட காதி நீதிபதிக்கு இல்லை. எழுதப்பட்ட முடிவுகளை வைத்து முடிவு கொடுக்கும் ஒரு நிருவாகி என்ற வகையில்தான் இலங்கை காதி நீதிபதியின் அதிகாரம் இருக்கும்.
இதை வைத்து பார்க்கும்போது இலங்கையில் காணப்படும் ஏனைய நிருவாக சேவைகளில் பெண்களின் வகிபாகத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டுள்ள இலங்கையின் பொதுப்புத்தி காதி நீதி பதவி விடையத்தில் அதனை வெறும் உணர்வு பூரவமாக யோசித்துள்ளதோ என்பதை உணர முடிகிறது.

"காதி நீதிபதி" என்ற பெயரில் உள்ள ஈர்ப்பையும் அதன் பிரமாண்ட பதவி நாமத்தையும் மனதில் ஏற்றிக்கொண்டு இலங்கை காதி நீதிபதி பதவியை உள்வாங்கும் ஒருவர் நிச்சயம் பெண்களை அந்தப் பதவிக்கு பொருத்தமாக ஏற்றுக்கொள்ள தயங்குவதை காணலாம். ஆனால் உண்மையில் இலங்கை காதி நீதிபதி பதவி என்பது பெயரளவில் பிரமாண்டமாக இருந்தாலும் அதன் வகிபாகம் ஒரு மாவட்ட செயலாளர் பதவிக்கு பல நூறு மடங்கு குறைந்த அதிகாரம் கொண்டதுதான். ஒரு பாடசாலை அதிபர் பதவியைவிட சிரமம் குறைந்த பகுதிதான். ஒரு கிராம சேவகர் பதவியைவிட குறைந்த நிர்வாக எல்லை கொண்டதுதான். இந்த பதவிகளில் எல்லாம் பெண்கள் வேலை செய்வதை கூடும் என்பவர்கள் காதி நீதி பதியாக பெண்களை நியமனம் செய்ய வேண்டாம் என்பது பொருத்தமில்லாத ஒரு முடிவு.

மேலே குறிப்பிட்ட பதவிகளில் உள்ள ஆண்கள் பெண்கள் இருவரும் காணி, எல்லை,அபிவிருத்தி, மற்றும் சமூக பிரச்சினைகள் என ஏகப்பட்ட சவால்களை தினம் தோறும் எதிர்கொள்கின்றனர், அப்போது அவர்கள் சட்ட திட்டங்களை நிருவாக ரீதியாக கையாண்டுதான் சுமூகமான ஒரு முடிவுக்கு வருகின்றனர். அதுபோலவே விவாகம், விவாகரத்து பிரச்சினைகளையும் பெண்கள்கூட நிறுவகிக்க முடியும் என்ற உண்மையை உணர முடியும். இந்த பிரச்சினைகளில் அதிகம் பெண்கள் பாதிக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுக்கு இது போன்ற பெண் நியமனம் நிவர்த்தியாக இருக்க வாய்ப்புண்டு. முஸ்லிம்களை நோக்கி வைக்கப்படும் பிழையான புரிதலுக்கும் இது பதிலாக அமையும்.

இலங்கையில் காழி நீதிபதியாக பணியில் இருக்கும் ஆண்களைவிட பாடசாலை, அரபு கலாசாலை, பிரதேச செயலகம், நகரசபை, மாநகரசபை போன்ற நிறுவனங்களில் அதிபர்,ஆசிரியர், அதிகாரி போன்ற பதவிகளில் இருக்கும் பெண்களின் பணிகளும், பொறுப்புகளும் அதிகம் ஆகும். அந்த பதவிகளை வகிக்க அவர்கள் வைத்திருக்கும் தகமைகளும் அதிகமாகும். மிகவும் சுருங்கிய தகமை, மிகவும் சுருங்கிய கடமைகளை கொண்ட இந்த பதவிக்கு காழி நீதிபதி என்ற பெயரே பொருத்தமற்றது. விசாரணை அதிகாரி என்ற வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்றுதான் இந்த பதவி. ஒரு பெண் கிராம சேவகராக கடமை ஆற்ற முடியும், அரபு கலாசாலையில் அதிபராக கடமை வகிக்க முடியும், அரச, தனியார் பாடசாலைகளில் பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் காழி நீதிபதிகளாக கடமை ஆற்ற முடியாது? அவர்களின் பெயர் "காழி" என்று இருப்பதா ல்தான் அது கூடாது என்கின்றனர். நான் ஏற்கனவே சொன்னதுபோல வார்த்தைகளில் தொங்கிக்கொண்டு சட்டம் எடுப்பவர்கள் இவர்கள்தான். இஸ்லாமிய சட்டக்கலை மூலம் இந்த விடையத்தை அனுகும்போது மேலே கூறப்பட்ட பதவிகளைவிட மிகவும் குறைந்த கடமைகளை கொண்டதே இந்த காழி நீதிபதி கடமை.

ஒரு பெண் காதி நீதிபதியாக வருவதற்கு தடையாக கருதப்படும் பால் ரீதியான, உணர்வு ரீதியான சில காரணங்களும் தீர்வுகளும்
=================================

குற்றச்சாட்டு1: ஒரு பெண் இயல்பாக அவசரமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர், ஒரு பக்கம் சார்பான நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவர், அறிவைவிட உணர்வை முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்

தீர்வு: ஒரு மாவட்ட காதி நீதிபதியின் முடிவு தன்னிச்சையாக வருவதல்ல, மாறாக அவர் ஆலிம்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள், ஏனைய நீதிபதிகள், அனுபவசாலிகள் போன்றவர்களின் ஆலோசனைகளை பெற்றே முக்கியமான தீர்ப்புகளை கையாள நேரிடும். இந்த நிலைமையில் பெண் காதியாக வருவதில் அவரது தனிப்பட்ட கருத்துக்கும் உணர்வுக்கும் இடமிருக்காது என்பதை உணர முடியும்.

குற்றச்சாட்டு2: தனியார் சட்டங்கள் பற்றிய போதிய அறிவு பெண்களுக்கு இல்லாமை

தீர்வு: காதி நீதி மன்றங்களை தேடிவரும் வழக்குகள், பிணக்குகள் எல்லாமே ஏலவே தீர்வு சொல்லப்பட்ட சர்ச்சைகளில் ஒன்றாகவே 99.99 வீதம் இருக்கும். விதிவிலக்காக வருபவை மிகவும் குறைவு. எனவே எழுதிவைக்கப்பட்ட தீர்ப்பை சொல்லும் திறமை, நிருவாக அனுபவம், அழகிய உபதேசம், தேவையான இடங்களில் கடுமை என்பன போன்ற அனுபவங்களை காதி நீதிபதி பெற்றிருக்க வேண்டும். இதனை பெண்களும் பெற்றிருந்தால் ,போதுமானதே. இதேபோல விவாகம் விவாகரத்து போன்ற விடையங்களில் துறைசார் கல்வியை மத்ரஸாக்களில் இறுதிக்கட்ட மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். விரும்பியவர் இந்த துறையில் படிக்கலாம் என்ற வகையில் இறுதி வருட மாணவர்களுக்கு இப்பாடத்திட்டம் போதிக்கப்பட வேண்டும். காதி நீதிபதியாக மௌலவி அல்லது அல் ஆலிம் பட்டதாரியாக இருப்பது அவசியம் என்ற சட்டத்தை கொண்டுவருவதோடு அங்கு இந்த துறை பாடங்கள் படிப்பித்துக் கொடுக்கப்பட வேண்டும்.

குற்றச்சாட்டு3: பெண்கள் அதிகம் தவறு விடக்கூடியவர்கள், எனவே இதுபோன்ற உணர்வு பூரவமான விடையங்களில் அவர்கள் தீர்வுகள் அதிகம் தவறான முறையில் வர வாய்ப்புள்ளது

தீர்வு: இவ்வாறான பயம் என்பது எல்லா நிருவாக துறைக்கும் பொருந்தும், எனவே இதனை காதி நீதிமன்றத்துக்கு மட்டும் பொருத்திப் பார்ப்பது முறையல்ல, அதே நேரம் மாவட்ட காதி நீதிபதியின் தீர்ப்பே இறுதியானது அல்ல, அதனையும் தாண்டி மாவட்ட தீர்ப்பை எதிர்த்து மறுப்பானை அதிகாரம் கொண்ட மேல் முறையீடு செய்யும் காதி நீதிமன்றமும் உள்ளது. இது தவிர இறுதியில் தீர்மானம் பெறப்போவது சிவில் நீதி மன்றத்தில் என்பதால் இந்த பயம் பெண்களை இப்பதவிக்கு வருவதட்கு தடுக்கும் காரணமாக அமையாது.

குற்றச்சாட்டு4: குடும்ப அந்தரங்கங்கள் போன்ற விடையங்களை பெண்கள் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது, எனவே பெண்கள் பொருத்தமானவர்கள் அல்ல.

தீர்வு: பொதுவாக பல காதி நீதிபதிகள் கணவன் மனைவியை ஒன்றாக வைத்து விசாரிப்பதை தவிர்த்தே வருகின்றனர், அதை அவர்களுக்கு இடையில் பிரச்சினையை அதிகரிக்கிறது என்பது அவர்கள் சொல்லும் காரணம். எனவே தனித்தனியாகவே கணவன் மனைவி விசாரிக்கப்படுகின்றனர். பெண் காதியாக இருப்பவர் இதை எல்லாம் எதிர்கொள்ளும் தைரியம் இருப்பதால்தான் இந்த பதவிக்கு வரவே முடிவு எடுப்பர். அவர்களும் திரை மறைவில் நின்று விசாரிக்கவோ, வேறு துணை கொண்டு விசாரிக்கவோ முடியுமாக இருக்கும். எனவே இதுவே அவர்கள் காதி நீதிபதியாக வரக்கூடாது என்பதட்கு பொருத்தமான காரணம் அல்ல.

இனவாதிகள் சொல்லிவிட்டார்கள் என்பதட்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. நாம் எதிர்க்க வேண்டியதை எதிர்த்து விட்டுக்கொடுக்க வேண்டியதை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால் ஏற்று அநியாயம் இருந்தால் எதிர்த்து நிக்க வேண்டும். இதுதான் நீதி. அவர்கள் சொல்வது சரி என்றாலும் பிடிவாதம் பிடிக்க முடியாது. அப்போதுதான் நாம் எல்லாவற்றையும் வறட்டு பிடிவாதத்தில் மறுப்பவர்கள் அல்ல என்ற நிலைப்பாட்டை மற்றவர்கள் புரியவும் வாய்ப்பாக அமையும்.
AHAMEDSHA AHAMED JAMSATH ( AL AZHARI ) 

"பெண் காதி நியமனமும் இஸ்லாத்தின் காதி முறை அதிகாரமும். மாற்றத்துக்கான ஒரு ஆலோசனை. " "பெண் காதி நியமனமும் இஸ்லாத்தின் காதி முறை அதிகாரமும். மாற்றத்துக்கான ஒரு ஆலோசனை. " Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.