ரவி - சஜித் மோதல் உக்கிரம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களுமான ரவி கருணாநாயக்க
மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகி, அந்தச் சண்டை இப்போது வீதிக்கு வந்துள்ளது. 

"எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. தேர்தலில் தனது தொகுதியை வெல்லத் தகுதியில்லாதவர்கள் எல்லாம் தலைமைக் கனவு காணக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. எனவே, வேறு எவரும் தலைமைப் பதவிக்கு முயற்சிக்கக் கூடாது. ஒற்றுமை கருதித்தான் பொறுமை காக்கின்றோம். ஆனால், பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது" என்று மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். 

ரவியின் இந்தக் கருத்துக்கு அம்பாந்தோட்டையில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாஸ.

"வங்கிக் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் வீராப்பு பேசுகின்றனர். அப்பாவை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, இலஞ்சம் வாங்கித்தான் அரசியல் செய்யக்கூடாது. மக்கள் யார் பக்கம் என்பதை விரைவில் நிரூபிப்பார்கள்" என்று சஜித் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித் திட்டங்களில் மைத்திரி அணியினரும், மஹிந்த அணியினரும் திரைமறைவில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே ரவி - சஜித் மோதல் உக்கிரமடைந்துள்ளது. 

இந்த மோதலால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளராக வரும் சாத்தியம் சஜித்துக்கு அறவே இல்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சஜித் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றது எனவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Aariyakumar Jaseeharan 

ரவி - சஜித் மோதல் உக்கிரம்! ரவி - சஜித் மோதல்  உக்கிரம்! Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5