ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தனது மகனை நாட்டின் ஜனாதிபதியாக்கவே மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.


ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை முடிவுக்குகொண்டு
வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை என்றால், சுயாதீன நீதிமன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும இருந்தும் அவர் தப்பிக்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நாட்டில் வாழும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மேலதிக பொருளாதார சுமை ஏற்படும். நாட்டில் வாழும் ஒரு நபருக்கு தினமும் 100 ரூபாய் மேலதிக சுமை ஏற்படும்.

இதனால், அரசியலமைப்பு மற்றும் சட்டத்துடன் ஆடும் விளையாட்டை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் ஜனாதிபதியே நாட்டில் இந்த நெருக்கடியை உருவாக்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் அவர் இந்த நெருக்கடியை உருவாக்கினார். இந்த நெருக்கடியை உருவாக்க பிரதானமாக மகிந்த ராஜபக்சவும் பங்களிப்பு செய்துள்ளார்.

குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரவும் அடுத்த பொதுத் தேர்தலில் பலமான பிரதமராகவும் வர வேண்டும் என்ற கனவிலும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தனது மகனை நாட்டின் ஜனாதிபதியாக்கும் எதிர்பார்ப்பிலும் மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோத நெருக்கடியானது ஜனாதிபதி மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் சொந்த தேவைக்காக ஏற்படுத்தப்பட்டது என்பது தெளிவானது.

இதன் மூலம் நாடு பாரதூரமான அரசியல் பாதிப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதுடன் சர்வதேச ரீதியிலும் தனிமைப்படுத்தப்படும் நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன் நாட்டில் நாளுக்கு நாள் சமூக ரீதியான நெருக்கடிகள் உருவாகி வருகின்றன.

கடந்த 14, 15, 16 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஜனாதிபதியும் ராஜபக்ச கோஷ்டி ஒரே மாதிரியான கருத்தை வெளியிட்டனர்.

அது சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் நாடாளுமன்ற கட்டளைச் சட்டங்களுக்கு எதிரானது எனக் கூறினர்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு மூலம் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவை நீக்கியது மற்றும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது என்பன முற்றிலும் சட்டவிரோதமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தனது மகனை நாட்டின் ஜனாதிபதியாக்கவே மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தனது மகனை நாட்டின் ஜனாதிபதியாக்கவே மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5