கிண்ணியாவின் பிரதான பாலங்கள் இடிந்து வீழ்ந்தமைக்கு யார் காரணம்?


கிண்ணியாவில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பாலங்களில் இவை இரண்டும் முக்கியமானதாகும்.
இரண்டு பாலங்களும் உடைந்த பின்னர் மக்களை பாவனைக்கு உட்படுத்தவிடாமல் குட்டிக்கராச்சி பாலத்தை அரசாங்கம் சீர் செய்தது. ஆனால் குறிஞ்சாக்கேணி பாலத்திற்காக இன்னமும் பதாதைகளை ஏந்திக் கொண்டு அழைந்து திரிகின்றோம்.

தற்போது குறிஞ்சாக்கேணி பாலமும் இடிந்து விழுகின்ற நிலையில் காணப்பட்ட போதிலும் மக்கள் பாவனைக்காக தற்காலிகம் என்று ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட தற்காலிக பால அமைப்பு நிரந்தரமாக மாறிக் கொண்டிருக்கிறது. போதாததற்கு பாலத்தின் இந்தப் பக்கமாக ஒரு பிரச்சினை இருக்க அடுத்த பக்கமாக பாலம் ஒரு பக்கமாக இடிந்து வீழ்ந்து கிடக்கிறது. தற்காலிகமாக வைக்கப்பட்ட இரும்பு பாலத்துக்கும் கைகால்கள் முறிந்து வயிறு பிதுங்கிய கணக்காக பிரசவ விடுமுறையோ, கட்டாய விடுமுறையோ இதுவரை வழங்காமல் பணியிலிருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே உடைந்து விழுந்த பாலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா வந்த போது உடைந்த பாலத்தை கட்டித் தருவதாக வாக்குறுதி தந்தாலும் குறித்த பாலம் இடிந்ததன் பின்னணியில் சில விஷமச் செயற்பாடுகளும், சுயநலங்களும் இருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

குறிஞ்சாக்கேணி பாலம் புஹாரியடியையும் குறிஞ்சாக்ணியை இணைப்பதற்கும், குட்டிக்கராச்சி பாலம் குட்டிக்கராச்சி மற்றும் முனைச்சேனையை இணைப்பதற்கும் அமைக்கப்பட்டவையாகும்.

காலப் போக்கில் அத்துமீறி காணிகளை பிடிக்கும் நோக்கில் கரையோரப் பகுதிகளில் உள்ள கன்னா மரங்களையும் ஏனைய சில மரங்களையும் வெட்டி இல்லாமலாக்கி நீர் நிரம்பியிருக்க வேண்டிய இடங்களில் டிப்பர் நிறைய எண்ணிக்கையில்லா அளவில் கிரவல் மண்களையும், குப்பைகளையும் கொட்டி ஒரு சில தனி நபர்களும், சில இஸ்லாமிய அமைப்புக்களும் அத்து மீறி குடியேறின என்பதற்கு கிண்ணியாவில் வாழ்கின்ற பொதுநலம் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனும் சாட்சி. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியோ (SLJI) , அந்த அமைப்பின் கிண்ணியா கிளையோ இதற்கு பொறுப்புக் கூறட்டும். ஏனெனில் அது தொடர்பில் அவர்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

ஆனாலும், எதுவுமே தெரியாதது போல "கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் உடைந்துள்ளது. கவனத்திற் கொள்ளுமா அரசாங்கம்"  என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு தமது அமைப்பின் பெயரால் வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டால் மாத்திரம் எல்லாம் சரியாகி விடுமா? இதில் என்ன நியாயம் இருக்கிறது.

குட்டித்தீவு தொடங்கி குறிஞ்சாக்கேணி வரை இவ்விடயம் ஒரு சங்கிலித் தொடராய் நீண்டு செல்கிறது. யாருக்காவது நேரம் கிடைக்குமாக இருந்தால் அந்தப் பகுதியை சுற்றி ஒரு தடவை வலம் வாருங்கள். எல்லாம் புரியும். அங்கு சென்று நீங்கள் நின்ற இடத்திலிருந்து வினாக்களை தேடுங்கள். விடைகள் தானாகவே கிடைக்கும்.

இஸ்லாமிய அமைப்புக்கென்றும், சமூக தொண்டு நிறுவனங்களுக்கென்றும் சிறிய பரப்பில் எடுக்கப்பட்ட காணிகள் இன்று வங்கியில் வட்டி வளர்ந்த கதையாக ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது என்பதுதான் காலக் கொடுமை.

ஜமாஅதே இஸ்லாமியினால் வெளியாகும் மாதாந்த சஞ்சிகையொன்றின் ஆசிரியர் ஜெம்ஸித் அஸீஸ் 2018.11.30 தினகரன் பத்திரிகையில் 'முஹம்மத் நபியவர்கள் மனித நேயத்தின் உறைவிடம்' என்ற தலைப்பில் நீண்ட கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம், சட்டத்தின் முன் எல்லோருக்குமான சமத்துவம், தனி மனித மற்றும் சமூக இருப்பின் மோசடியின் விளைவுகளும் தீர்வுகளும் என பல விடயங்களை அதில் உள்ளடக்கி தத்ரூபமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த போது அவை வெறுமனே வார்த்தைகளின் கோர்வைகளாக அன்றி சமூகத்தை துண்டாட நினைக்கின்ற சில இரண்டு கால் பிராணிகள் பார்த்து திருந்த சந்தர்ப்பமாக மாற்றும் திருகாணியாக அக்கட்டுரை எமது மனக் கண்ணில் காட்சியளித்தாலும் சுயநலமும் சொந்த இலாபமும் கொண்டு செயற்படுகின்ற எவனும் திருந்தி செயற்படும் மனோநிலைக்கும் மாறி வர மாட்டான் என்பதுதான் எம்மால் ஏற்க முடியாத விடயம்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் எழுத்துக்களோடு எனக்கும் அதீத ஈடுபாடு இருக்கிறது என்ற வகையில் ஒரு விடயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல கட்டுரைகள் உசாத்துணைகளுக்காக மட்டுமே பயன்படுகிறது தவிர திருந்தி வழிப்படுவதில் பத்து புள்ளிகளுக்கு கூட தேறாது. மேயாத மான் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "என்னதான் அன்னை தெரேஸா பற்றி ஆர்டிகல் எழுதினாலும் அட்டைப் படத்துக்கு கேதரின் தெரேஸாதான் (Actress) தேவைப் படுகிறது"

குட்டிக்கராச்சி மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்கள் உடைந்ததற்கு இதுவும் பிரதான காரணங்களில் ஒன்றாக நோக்கப்படல் வேண்டும். அதாவது கரையோர பிரதேசங்கள் சட்டவிரோதமாக மண்ணால் நிரப்பப்பட்டமையால் நீரின் மட்டம் உயர்ந்து செல்கிறது. அத்தோடு நீரின் விசையும் அதிகரிக்கிறது. இதனால் பாலங்களின் அடிப்பகுதி நீரில் மூழ்கி நிற்கையில் அப்பாலத்தின் வழியாக பாரமான வாகனங்கள் பயணிக்கையில் இலகுவாக பாலம் வெடிப்புக்குள்ளாகின்றன.

எனவே, இது குறித்த விடயங்களையும் அரசாங்கம் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை சுரண்டி மார்க்கம் வளர்க்க வேண்டுமென இஸ்லாத்தில் எந்தவொரு இடத்திலும் சொல்லப்படவில்லை. தயவு செய்து மக்களையும் இயற்கையையும் சுரண்டாதீர்கள்.

-நஸார் இஜாஸ் -
2018.11.30
கிண்ணியாவின் பிரதான பாலங்கள் இடிந்து வீழ்ந்தமைக்கு யார் காரணம்? கிண்ணியாவின் பிரதான பாலங்கள் இடிந்து வீழ்ந்தமைக்கு யார் காரணம்? Reviewed by Madawala News on December 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.