கரங்காவில் காவியாட்டமா?




இலங்கை நாட்டில் முஸ்லிம்களை நோக்கிய பேரினவாதிகளின் நகர்வுகள் தொடர் தேர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றன. அண்மையில் பாரிய இனக்கலவரங்களை கூட முஸ்லிம்கள் சந்தித்து விட்டனர். இப்போது பேரினவாதிகளின் நகர்வுகள் அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் இதயமான அம்பாறை நோக்கியதாகவே அமைந்துள்ளன எனக் கூறினாலும் தவறில்லை. அங்கிருந்த பல அரச அலுவலகங்கள் படிப்படியாக அம்பாறை நகரை நோக்கி நகர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் தொடர் வரிசையில் கல்முனையில் அமையப்பெற்றிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தை இடமாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று முடிந்த நிலையில், முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையீடுகள் காரணமாக, அவ் அலுவலக இடமாற்ற முயற்சி தடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் எப்போது அதற்கான முயற்சி நடைபெறும் என்பதை உறுதிபட கூற முடியாது. அவ் இடமாற்றத்துக்கான கடிதம் முறைப்படி அனுப்பப்பட்டிருந்தும், அவ் இடமாற்றத்தை இரத்து செய்யும் முறையான கடிதம் இன்னும் அனுப்பப்படவில்லை. இப்படித் தான், கல்முனையில் அமையப்பெற்றிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம் இடமாற்றப்படாதென குறித்த அமைச்சர் உறுதி வழங்கியிருந்தும், அவ் அலுவலக்ம் எங்கள் கையை விட்டு நழுவிய விவகாரம் நாமறிந்ததே. 

இப்படி அம்பாறை நகரை ஒரு முக்கிய தளமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளை, மாயக்கல்லியில் புத்தர் சிலையை வைத்தது மாத்திரமன்றி, அங்கொரு பன்சலையை நிறுவி முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள், அவர்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் காணிகளை தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானதாகவும், பாதுகாப்பட்ட வன எல்லையாகவும் பிரகடனப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை குறைக்கும் செயல்களும்  நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனவாத தொடர் வரிசையில் தான், வளத்தாப்புட்டி கரங்கா வட்டையை நோக்கிய பேரின வாதிகளின் செயல்களையும் நோக்க வேண்டியுள்ளது. 2013ம் ஆண்டு காலப்பகுதியில், பாதுகாப்பு படை முகாம் நிறுவலுக்காக முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 63 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டிருந்தன. தற்போது  இதில் சுமார் 58 ஏக்கர் காணிகளில்  பேரினவாதிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் வேளாண்மை செய்து வந்த காணிகள் 2013ம் ஆண்டு அம்பாறை நகரில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு வாகனம் தரிப்பதற்காக தற்காலிகமாக எடுக்கப்பட்டிருந்தது. இதனை அவர்கள் தற்காலிகமாக பயன்படுத்தினார்கள் என்பதை விட, அன்றே அவர்கள் அடாத்தாக பிடித்தார்கள் என்பதே உண்மை. முஸ்லிம் விவசாயிகள் இயந்திரங்களோடு, தங்களது விவசாய நடவடிக்கைகளுக்காக  சென்ற போது, அவர்களின் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது என கூறி பாதுகாப்பு படையினரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். தேசத்துக்கு மகுடம் கண் காட்சி அவசியமானது. அதற்கு குறித்த காணிகள் தேவை என்றால், அதனை உரிய முறைப்பிரகாரம் அணுகி இருக்க வேண்டும். அதனை விடுத்து, விவசாயம் செய்ய சென்ற விவசாயிகளை விரசி, இடம் எடுப்பது முறையானதல்ல. அதனை அண்மித்த சூழலில் சிங்கள மக்களின் காணிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, விவசாயம் என்பது ஒரு குறித்த காலப்பகுதியினுள் செய்து முடிக்க வேண்டிய ஒன்று. காலம் பிந்திந்தினால், விவசாயிகள் தண்ணீர் பிரச்சினையை  எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிரந்தமாகவே அக் காணிகளை பிடிக்கும் சிந்தனையுள்ளவர்களுக்கு இவ்வாறான சிந்தனை எங்கே எழப்போகிறது. அதாவது அன்றே ஒரு வன்முறை பாணியில் தான் முஸ்லிம்களின் காணிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை இவற்றை நோக்குவதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

குறித்த கண் காட்சி நடைபெற்று முடிந்தவுடன், அக் காணிகளை பாதுகாப்பு படை முகாமுக்காக எல்லையிட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு படை முகாம் ஒன்றின் தேவை இருந்திருக்கவில்லை. அக் காணிகளின் தேவையை பாதுகாப்பு படையினர்  உணர்ந்திருந்தால், குறைந்தது அந்த மக்களுக்கு நஸ்டயீடு வழங்குவதற்குறிய முயற்சியையாவது எடுத்திருக்கலாம். படை முகாமுக்காக விவசாய  காணிகளை பிடித்தால், அதனை நம்பி விவசாயம் செய்த மக்கள் என்ன செய்வார்கள். இதனை அண்டிய பகுதிகளில் விவசாயம் செய்யாத எத்தனையோ காணிகள் உள்ளமையும், அரசுக்கு சொந்தமான காணிகள் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கக்து. கண் காட்சி என்ற பெயரில் காணியை பிடித்து, பாதுகாப்பு படை முகாமுக்கு எல்லையிட்ட செயற்பாடே, அவர்கள் வேறு ஒரு நோக்கில் தான், அக் காணிகளை பிடித்திருப்பதை துல்லியமாக்குகின்றது. நேரடியாக படை முகாமுக்கென காணிகளை பிடிக்க முனைந்திருந்தால், அது பாரிய விமர்சனங்களை தோற்றுவித்திருக்கும். தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு படை முகாம்கள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும்  நிலையில், எமது பகுதிகளில்  படை முகாம்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. அது தான் எமது அரசியல் தலமைகள் அரசியல் செய்யும் சீத்துவம். நாம் இவ்விடயங்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, முஸ்லிம்களின் இந்த காணிகள் மீது, தேசத்துக்கு மகுடம் கண் காட்சி இடம்பெற்ற காலப்பகுதியிலேயே பேரினவாதிகள் கண் குத்தியுள்ளனர் என்ற விடயத்தை அறிந்துகொள்ள முடிகிறது. 

1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், இக் காணிகள் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்டதாக இருந்த போதும், 2003ம் ஆண்டய வர்த்தமானி அறிவித்தல் மூலம், அம்பாறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்டதாக வர்த்தமானிப் படுத்தப்பட்டிருந்தது. இத் தகவலை வைத்து நாம் சிந்திக்கும் போது, இக் காணிகளை நோக்கிய பேரினவாதிகளின் திட்டங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்பே திட்டமிடப் பட்டுள்ளதாகவே சிந்திக்க தோன்றுகிறது. பேரினவாதிகளின் முஸ்லிம்களை நோக்கிய  திட்டங்கள், எந்தளவு ஆழமாக  திட்டமிடப்பட்டுள்ளன, எப்போது திட்டமிடப்பட்டுள்ளது என்ற விடயங்களை, முஸ்லிம்கள் குறித்த இவ் விடயங்களை நன்கு ஆராய்வதிலிருந்து  அறிந்துகொள்ள முடியும். குறித்த கண் காட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்திலும், குறித்த வர்த்தமானிப்படுத்தல் சதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் இடம்பெற்றிருந்தமையும்  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இனவாதிகள்  எப்போதோ  தீட்டிய திட்டங்கள், ஆட்சிகள் பல மாறிய போதும், இன்று எவ்வித சிறு உடைவுமின்றி அந்த இடத்திலிருந்து தொடரப்படுகிறது.

இவ்வாறு 2013ம் ஆண்டு படை முகாம் நிறுவல் எனும் பெயரில் கைப்பற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீட்கும் நோக்கில் பல வழக்குகளை குறித்த காணி உரிமையாளர்கள் தொடுத்திருந்தனர். ஒரு பாதுகாப்பு படை முகாமை அமைக்கும் விடயம் சாதாரணமாக முன்னெடுக்கப்படக் கூடிய ஒரு விடயமல்ல. பல்வேறு அனுமதிகளை பெற்ற பின்பே நிறுவப்படும். அது முஸ்லிம்களின் காணியில் தான் நிறுவப்படப் போகிறது என்ற விடயத்தை முக்கிய நபர்கள் யாவரும் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந் நிலையில் அங்குள்ள காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, வழக்கு தொடுத்து, வெற்றி பெற முடியும் என நம்புவது மலையை துரும்பால் அடித்து உடைக்கலாம் என நம்புவதற்கு ஈடாகும். இங்கு தான், நாம் எமது பார்வையை மிக ஆழமாக செலுத்தி, சிந்திக்க வேண்டும். இக் காணிகளானது வர்த்தமானி அறிவித்தல் மூலம் அம்பாறை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்ட போது, இக் காணிகளில் படை முகாம் அமைக்கப்பட்ட போதே, அது தொடர்பில் அன்றிருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள்,  அதனை மீட்க பலமானதும், தொடர்ச்சியானதுமான  பேச்சுக்களையும், போராட்டங்களையும்  மேற்கொண்டிருந்தால், இன்று சிங்கள மக்கள் அந்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்றிருக்க மாட்டார்கள். அவர்களுடைய பிரச்சினை “ முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பதா அல்லது தாம் தொடர்ந்தும் படை முகாம் என்ற பெயரில் வைத்திருப்பதா? ” என்பதாகவே அமைந்திருக்கும். 

இவ் வழக்கை பாதிக்கப்பட்ட  கரங்கா காணிக் உரிமையாளர்கள்  மாத்திரமே தொடுத்திருந்தனர். முஸ்லிம் சமூகத்திடமிருந்தான உதவிகள் அவர்களுக்கு சிறிதும் கிடைக்கவில்லை. அக் குறித்த காணி உரிமையாளர்கள் பல வழிகளில் முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்தித்து பேச்சு நடத்திய போதும், அவர்கள் யாருமே குறித்த விடயத்தை ஒரு பொருட்டாக கவனத்தில் கொண்டு செயற்பட்டிருக்கவில்லை  என்ற உண்மையை காணி உரிமையாளர்களின் வாய்களில் இருந்து அவதானிக்க முடிகிறது. இது அவர்களுடைய பிரச்சினை மாத்திரமல்ல. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இருப்புக்கே வைக்கப்பட ஒரு கேள்விக்குறியாகும். குறித்த காணி உரிமையாளர்கள் முஸ்லிமல்லாது பேரினத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால், அவர்களின் காணிகளுக்கு இந் நிலை வந்திருக்காது. இதனை நன்கு சிந்தித்து, முஸ்லிம் சமூகத்திடமிருந்தான உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

இவ்வாறு படை முகாம் என்ற பெயரில் பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் காணிகளை இன்னும் சில வருடங்கள் அவர்கள் வைத்திருந்தால், அது முஸ்லிம்களின் காணிகள் தானா என்ற விடயம் யாருக்குமே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டிருக்கும். அதற்கு பிறகு, அக் காணிகளில் யார், என்ன செய்திருந்தாலும் முஸ்லிம்  சமூகம் கேள்விக்குட்படுத்தியிருக்காது. இன்னும் சம்மாந்துறை மக்களின் கைகளில் கொண்டவட்டான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல ஏக்கர் காணிகளுக்கான  உறுதி இருந்தும், காணி தெரியாத நிலை உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்விடயத்தில் பேரினவாதிகள், தங்களது திட்டங்களை அடைந்து கொள்ள சற்று அவசரப்பட்டு விட்டார்கள் எனலாம். ஓரிரு முஸ்லிம்களே  இக் காணி விடயத்தில் சிரத்தை எடுப்பதால், அவர்களை இலகுவாக வெற்றிக்கொள்ள முடியும் என அவசரப்பட்டார்களோ தெரியவில்லை. இவ்வாறானவற்றை சிந்திக்கும் போது, குறித்த காணி விடயத்தில் முஸ்லிம்கள் இந் நிலையை அடைய முஸ்லிம் சமூகத்தின், பொடு போக்கும்  போராட்டத்தின் இயலாத தன்மையும் பிரதான காரணம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சுமார் ஐந்து வருடமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்காத முஸ்லிம்களின் காணிகளை பேரினத்தை சேர்ந்தவர்கள்  விவசாய நடவடிக்கைகளுக்காக தயார் படுத்தி கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயம் அறிந்ததும், ஓரிரி காணிகளில் அவர்கள் கால் வைத்திருந்த போதே, குறித்த காணி உரிமையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவருக்கும்  அறியப்படுத்தி இருந்தனர். அப்போதே எமது அரசியல் தலமைகள் வேகமாக செயற்பட்டிருந்தால், அவர்களின் உழவு நடவடிக்கையை உடனே தடுத்திருக்கலாம்.  அந் நேரத்தில் குறித்த உழவு நடவடிக்கையை, அங்கு அமையப்பெற்றுள்ள பன்சலையின் விகாதிராதிபதி தலமையேற்று நடத்துகிறார் என்ற கதை இருந்ததால், அங்கு சென்று தடுக்கும் ஆற்றல் குறித்த காணி உரிமையாளர்களிடம் இருந்திருக்கவில்லை. இருந்தாலும், குறித்த காணி உரிமையாளர்கள் பொலிஸாரை நாடினார்கள். முஸ்லிம்கள், அது தங்களுடைய காணி தான் என்பதை உறுதிப்படுத்த, காணி உறுதி உட்பட பலமான ஆதாரங்களை வைத்திருந்தனர். அக் குறித்த காணிகளில் முஸ்லிம்கள் 1943ம் ஆண்டு தொடக்கம் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்ததற்கான ஆதரங்களை முன் வைத்தனர்.  அவர்கள் 1968ம் ஆண்டு காணிகளுக்கான அனுமதி பத்திரங்களை பெற்றிருந்ததோடு,  அவர்களுக்கு 1993ம் ஆண்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தால் காணி உறுதியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும் பொலிஸாரிடம் முன் காட்டினார். இப்படியான பலமான ஆதாரம் கொண்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரிய காணிகளை கையகப்படுத்தினால், அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அங்கு விவசாய தயார்படுத்தலை மேற்கொண்டவர்களும், நீதி சொல்ல வேண்டியவர்களும் அறிந்து கொண்டனர். குறித்த இரு சாராரையும் அழைத்து பேசிய பொலிஸார் உடனடியாக உழவு நடவடிக்கையை மேற்கொண்டவர்களை குறித்த காணிகளில் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என தடை விதித்திருந்தனர்.

இது தொடர்பில் பொலிசாருடன் இரு தரப்பினரும் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை முஸ்லிம்களுக்கு ஓரளவு சாதகமான இருந்த போதிலும், குறித்த முஸ்லிம் காணி உரிமையாளர்கள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலுடன், குறித்த பகுதியில் அமையப்பெற்றுள்ள  பன்சாலைக்குள் சென்று, குறித்த விகாராதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர். முக்கிய அரசியல் தொடர்புகள், முக்கிய நபர்களுடனான தொடர்புகளுக்கு, சஹீலே குறித்த காணி உரிமையாளர்களுக்கு உதவியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அங்கு சென்ற முஸ்லிம்கள்  சிலர் பாதணிகளை அணிந்து கொண்டு பன்சாலைக்குள் நுழைந்ததான குற்றச் சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டதோடு, ஒரு சில முறையற்ற வார்த்தை பிரயோகங்களை செய்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. சில மாதங்கள் முன்பு தான், அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சி தான், திகனை கலவரம் என்பதெல்லாம் நாமறிந்தவைகள். இவ்வாறான நிலையில் அங்கு, வேறு ஏதேனும் காரணம் காட்டி, ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்திருந்தால், விளைவுகள் மிகக் கடுமையாக இருந்திருக்கும். இங்கு முறையான நகர்வுகள் நடந்தேறி இருக்க வேண்டும். 

சம்மாந்துறை ஊரானது நம்பிக்கையாளர் சபையின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஊர். இந்த பிரச்சினை சம்மாந்துறை மக்களின் முக்கிய பிரச்சினை என்பதால், இதனை முன் நின்று வழி நடாத்தும் செயலை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை செய்திருக்க வேண்டும். சம்மாந்துறை இரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஊர். அவர்களாவது குறித்த விவசாயிகளை முன்னின்று வழி நடாத்தி இருக்கலாம். அதற்காகத் தானே, இவர்கள் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டனர். சம்மாந்துறையின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய கரிசனை கொண்டிருக்க வில்லை. பா.உ மன்சூர் குறித்த விடயம் சம்பந்தமான மக்களின் பேச்சுக்களை என்ன, ஏது என்றாவது விசாரித்தார். பா.உ இஸ்மாயில் அது கூட செய்திருக்கவில்லை. உயர் அரச அதிகாரிகளின் தொடர்புகளானது பிரதேச சபை உறுப்பினர் சஹீல், அமைச்சர் றிஷாதின் மூலம் பெற்றுக்கொடுத்திருந்ததோடு, சம்மாந்துறை தவிசாளர் நௌசாதும் இவ்விடயத்தில் மிகவும் கரிசனை கொண்டிருந்தார். இவ்விடயம் முஸ்லிம்களுக்கு சாதகமான நிலையை எட்டிய நிலையில், பா.உ மன்சூர் குறித்த விவசாயிகளுடனான சந்திப்புக்கு, தான் நேரடியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளரினூடாக அழைப்பு விடுத்த போதிலும், அவரது அழைப்புக்கு குறித்த காணி உரிமையாளர்கள் யாருமே சென்றிருக்கவில்லை. இது குறித்த காணி உரிமையாளர்களின் விரக்தியின் உச்சத்தை எடுத்து காட்டுகிறது.

குறித்த விகாராதிபதியுடன் பேச்சுக்களை மேற்கொண்ட போது, அவர் முஸ்லிம்களின் பக்கமுள்ள நியாயத்தை அறிந்து பேசியுள்ளார். குறிப்பாக சம்மாந்துறையில் அமையப்பெற்றுள்ள வீரமுனை கோயிலுக்கு சொந்தமான சுமார் ஐம்பது ஏக்கர் காணிகளை யாருமே, தங்களிடம் வந்து கேட்காததான் காரணமாக, தாங்கள்  செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள ஓரிரு இளைஞர்கள் முயற்சித்த போதும், அவ்வாறானவர்களின் குழப்பங்களை கவனத்திற் கொள்ளாது செயற்படுமாறு குறித்த விகாராதிபதி பேச்சு வார்த்தை நடாத்த சென்ற முஸ்லிம்களிடம் குறிப்பிட்டு, தனது உயரிய பண்பை அவ் விடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் குறித்த காணிகளை வருமானத்தை முன்னிட்டும், யானை தொந்தரவை சமாளிக்கவும் செய்ததாகவே  கூறியுள்ளார்கள். இம்முறை குறித்த காணிகளில், தாங்கள் விவசாயம் செய்ய ஆசைப்படுவதாகவும், அதற்கு குறித்த காணி உரிமையாளர்களை ஒத்துழைக்கமாறும் கேட்டுள்ளார்கள். அங்கு வருகை தந்த சிலர், இந்த ஆட்சி எப்படி என்ற அரசியல் சம்பந்தமான வினாக்களை தொடுத்திருந்ததோடு, அங்கு ஐ.தே.கவின் நகர சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாகவும் அறிய முடிகிறது. இவ்விடயங்களை அவதானிக்கின்ற போது இவற்றின் பின்னால் ஒரு பலமான அரசியல் சக்தி உள்ளமையும் தெளிவாகிறது. மிக இளம் வயதினரே குறித்த விடயங்களை மேற்கொண்டதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. தற்போது மாகாண, உள்ளூராட்சி தேர்தலானது கலப்பு முறையில்  உள்ளதால், எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலும் இம்முறையில் வரலாம். கலப்பு முறை அல்லாது போனாலும், தொகுதி வாரி முறைத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. தொகுதிக்கான எல்லை  பிரித்து உறுப்பினர்களை தீர்மானிப்பதில் நில விஸ்தீரணமும் கவனத்தில் கொள்ளப்படும். இவற்றை கருத்திற் கொண்டு தான், முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி அம்பாறை இனவாதிகள் காய் நகர்த்துகின்றார்களோ தெரியவில்லை.

தற்போது குறித்த காணிகளில் முஸ்லிம் காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்வதற்குறிய சாதகமான நிலை தோன்றியுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட உழவு நடவடிக்கைக்குரிய செலவை அவர்களுக்கு வழங்கிவிட்டு, முஸ்லிம்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அவர்கள் உழவு நடவடிக்கை மேற்கொண்டதற்கு பணம் வழங்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லாது போனாலும், அதனை ஒரு பெரிய விவாதப்பொருளாக எடுத்து விவாதிக்காமல், ஒரு சிறு தொகை பணத்தை வழங்கி ( ஒரு ஏக்கருக்கு 3500/= பணம் கேட்கப்பட்டுள்ளது. குறித்த வேலைக்கு உரிய செலவு 2000/= என்பதும் குறிப்பிடத்தக்கது. ),  பிரச்சினையை சுமுகமாக முடிப்பதே சாதூரியம். எது, எவ்வாறு இருப்பினும், இனவாதிகளின் இச் செயற்பாடுகளின் மூலம், கடந்த ஐந்து வருட காலமாக விவசாயம் மேற்கொள்ள அனுமதிக்காத காணிகளில் முஸ்லிம்கள் விவசாயம் மேற்கொள்ளப்போகிறார்கள் என்ற நல்ல விடயம் நடந்தேறியுள்ளது. அங்கு அமையப்பெற்றுள்ள பாதுகாப்பு படை முகாம் அகற்றப்படுவதே நிரந்தர தீர்வாவதோடு எல்லை பிரச்சினை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்விடயத்தை குறித்த காணி உரிமையாளர்களின் பிரச்சினைகளாக பாராது, முஸ்லிம் சமூகத்தின் பூரண ஒத்துழைப்போடு, ஐ‌பி பிரச்சினை வெற்றி கொள்ளப் பட வேண்டும்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
கரங்காவில் காவியாட்டமா? கரங்காவில் காவியாட்டமா? Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.