வாழ்வும் காயங்களும் !


நமது தேவைகளும் விருப்பங்களும் அல்லாஹ்வினை விட்டும் நம்மைத் திருப்பிவிடக்கூடாது.வாழ்க்கை
என்பது எமது எதிர்பார்ப்புகளுடன் அமைவதல்ல.அது அல்லாஹ்வால் விதிக்கப்பட்டது.அவை சில நேரம் சந்தோஷங்களாகவோ சங்கடங்களாகோ கூட இருக்கலாம்.

நாம் பிறந்தது முதல் இன்று வரை ஒவ்வொரு கட்டங்களிலும் இது வரை பல ஏமாற்றங்களைச் சந்தித்த பின்னரும் வலிகளைச் சுமந்து கொண்டே எதையோ எதிர்பார்க்கிறோம்.
சில வேளை அந்த இலக்கை நம்மால் அடைய முடியாது என நமக்குத் தெரிந்தும்.

ஆனால் நம்பிக்கை என்ற ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.மனிதன்   போன்ற அற்ப பிறவியிடம் அதனை எதிர்பார்ப்பது ஏமாற்றங்களையும் வலிகளையுமே பரிசளிக்கும் என்பது நிதர்சனம்.ஏனெனில் என்னதான் அவன் உணர்வுகளுடன் படைக்கப்பட்டாலும் மற்ற மனிதர்களது உணர்வுகளை அவனால் உணர  முடியாமலுள்ளமை ஆச்சரியமானதே.

ஒருவர் நம்மிடம் ஒன்றை  நம்பிக்கையாக சொல்கிறார்.அதனை நாம் துச்சமாக நினைக்கும் போது அவரை அது எந்தளவு தூரம் பாதிக்கும் என்பதை காலம் சொல்லும் வரை பொறுத்திருக்க வேண்டும்.நாம் இதனை சாதாரணமாகவே மனிதர்களிடம் காண்கிறோம்.மரத்தின் கனியைப்பறிக்க கல்லடித்தால் அந்த மரம் கனியைத்தான் உதிர்க்குமே தவிர நம்மீது கற்களை எறிந்ததில்லை.இயன்றவரை நாம் அந்த மரத்தைப் போல இருக்க வேண்டும்.எத்தனை  க(சொ)ல்லடிகள் நம்மீது எறியப்பட்டாலும் நமக்கென இறைவன் தந்த பொறுமை எனும் பரிசைத் தொலைத்துவிடக்கூடாது.நமது மௌனமே சில வேளை அவர்களுக்கான சிறந்த தண்டனையாக அமையக்கூடும்.


ஏமாறும் நோயும் பிறரை ஏமாற்றும்  நோயும்  மனிதனின் இரத்த நாளத்தில் ஊறிவிட்டது.அதனை யாராலும் இல்லாமல் செய்ய முடியாது.ஆனால் படைத்த அல்லாஹ்வைத்தவிர.நமது கவலைகளோ இழப்புகளோ பிறர் முன் காண்பிக்கப்படாவிட்டாலும் அவன் கண்களுக்கு மறைவானதல்ல.

கவலைகளும் மகிழ்ச்சியும் வாழ்க்கை வண்டியின் சில்லுகள் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.ஆனால் அதனை இயக்கும் அச்சாணி அல்லாஹ்வை மறந்ததன் விளைவையே அனுபவிக்கின்றோம்.

  ஒரு உண்மை இறை விசுவாசி உலகின் அற்ப இன்பங்களுக்காக மறுமை வீட்டை இழக்க எக்கணமும் பிரயத்தனம் எடுக்கமாட்டான்.அதற்கு அவன் வாழும் சூழலையும் காரணம் கூற மாட்டான்.தான் வாழும் சூழல் பழகும் மனிதர்கள் பல்தரப்பட்டவர்கள்தான்.அதில் ஒரு முன்மாதிரியாக ஏன் நம்மால் இருக்க முடியாது...?

காதுக்கு எட்டுவதையெல்லாம் நாம் நம் களங்கம் துடைக்க கரைசேர்க்க முயற்சிப்பது வீண். கணத்த இதயமும் சிரித்த முகமும் தான் உலகில் பலரது உண்மை முகவரி.ஊணும் உண்டு உடையும் உண்டுதான்.தாங்கும் உள்ளம் தான் இல்லை பலருக்கு.

எத்துன்பமும் வரட்டும்.எவரும் எம்மை ஏமாற்றட்டும்.எண்ணி எண்ணிக் கண்ணீர் விடுவதில் பயனில்லை. இறையச்சம் எனும் அம்பினில் துஆவைத் தொடுப்போம். இறைநம்பிக்கையுடன்  எய்வோம்.வெற்றி எனும் கனிகள் நம் முற்றம் தொடும் வரை.இன்ஷா அல்லாஹ்.!

____________________
✍Binth Fauzar
#SEUSL
வாழ்வும் காயங்களும் ! வாழ்வும் காயங்களும் ! Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.