தப்பிப் பிழைத்தவரின் அடுத்த இலக்கு.


ஏப்ரல் 4 ஆம் திகதி இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
மீதான வாதம் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல.

 வாக்கெடுப்பின்போது பக்ஸய், விருதய்,அப்ஸன்ட் என்றவாறான மூன்று விதமான துலங்கல்கள் வெளிக்காட்டப்பட்டன

. இவ்வாக்கெடுப்பின் பின்னர் அப்ஸன்ட் என்ற வார்த்தையும் சிங்கள அகராதியில் இணைக்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை.


சமுகமளிக்காதிருத்தல் என்பது தமது சமகால அரசியல் நிலைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு மாற்று வடிவமாக அமைந்துள்ளது. அதற்கும் மேலாக சொல்லப் போனால் இடரிலிருந்து தந்திரமாக தப்பித்துக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியான வழிமுறை என்றும் பொருள் கொள்ளலாம். 


எதிர்கால அரசியல் வியூகங்களை அரசியல்வாதிகள் எவ்வாறு வகுக்கின்றார்கள் என்பது பற்றிய போதிய அறிவின்மையே பாமர மக்கள் கொண்டுள்ள பிரச்சினையாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் தாம் எங்கே இருந்தோம் என்பது பற்றியோ எங்கே இருக்கப் போகிறோம் என்பது பற்றியோ அதிக சிரத்தை கொள்வதில்லை.
அரசியல் சாணக்கியத்துடன் நோக்கும் ஒருவருக்கு, ஏப்ரல் 4 இடம்பெற்ற வாக்கெடுப்பில் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் எஸ்.பி. திசாநாயக்க ஆகியோரின் உட்கிடக்கைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

மாற்றங்களை நோக்கிய பயணம்

தத்துவவியலாளர்கள் உலக மேம்பாட்டுக்கு பலவாறான கொள்கை சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். “உலகில் மாற்றங்களை ஏற்படுத்துவதே மேம்பாடு”  என்கிறார் காரல் மார்க்ஸ். அவ்வாறான மாற்றங்களை வரவேற்கும் நபர்களில் மாதுலுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவராக விளங்குகிறார். தனது மாற்றங்களை நோக்கிய பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆதரவாகத் திகழ்வார்கள் என்பதில் தன்னந்தனியாக இயங்கி வந்த சோபித தேரர் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.


எனினும், அவ்விருவரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் சுயாதீனமாக பயணிப்பவர்களாக இருக்கவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், தாராளவாத கொள்கையை பிரதமர் ரணில் அவர்களும் தம்முடன் சுமந்து செல்பவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களது கொள்கைகளினால் சிலபோது சாதங்கங்களும் ஏற்படவே செய்கின்றன. இதேவேளை மஹிந்த ராஜபக்ச சுயாதீனமான இயக்கத்தை கொண்டிருப்பினும் அவரது பயணமோ மாற்றுத்திசை நோக்கியே அமைந்துள்ளது. 


மாற்றத்தை நோக்கிய இயக்கமாக இருந்த நல்லாட்சிக் கோட்பாடு மூன்று வருடங்களில் அரசியல் வியாபாரமாக மாறிப் போயுள்ளது. மீளவும் அதனை மாற்றத்தை நோக்கிய இயக்கமாக மாற்றுவதற்கு இன்னும் எமக்கு 18 மாதங்களே மீதமிருக்கின்றன. அதனை செய்யத் தவறின், மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்களாக மாறி விடுவோம்.

நடைமுறையும் நன்னெறியும்

அரசியல்வாதிகள் என்போர் செயலில் குறியாய் இருக்கும் நடைமுறைவாதிகளே தவிர நன்னெறியில் சிறந்து விளங்கும் நியாயவான்கள் அல்ல. சாமான்ய மக்களாகிய நாம் மனசாட்சியை மீறிய ஒரு செயலை புரியும் பட்சத்தில், அது உறங்கவிடாது நெருடும் இடராக உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். அரசியல் வியாபாரத்தில் இருக்கும் ஒருவரின் நிலைப்பாடு அவ்வாறானதல்ல. குற்றம் புரிந்திருந்தாலும் துரோகம் இழைத்திருந்தாலும் அரசியல் வியாபாரிகளுக்கு நிம்மதியான உறக்கம் இமை தழுவும். அவ்வாறான ஆழ்ந்த துயிலை ஏப்ரல் 4 ஆம் திகதியும் அவர்களது விழிகள் அனுபவித்திருக்கும்.


மனசாட்சி என்பது சொற்ப அளவினரால் பயன்படுத்தப்படும் போலி ஆபரணம் என்கிறார் ஜேர்மனைச் சேர்ந்த சிந்தனையாளர் நீட்சே. திருகுதாளங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் மனசாட்சி என்பது மதிப்பற்றுத்தான் போயுள்ளது.
ஏப்ரல் 4 வாக்கெடுப்பு வெற்றியை வரலாற்று வெற்றியாக ரணில் கருதுவாராக இருந்தால், அவர் மாபெரும் வரலாற்றுத் தவறொன்றை இழைக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். முன்னரே ஒழுங்கமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட வெற்றியே அதுவாகும்.


அவரது வெற்றியை கொண்டாடும் வாணவேடிக்கைகளின் களிப்பில் அவர் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார் எனில், தனது எதிர்கால ஆபத்தையே கொண்டாடுகிறார் எனலாம்.


நவீன சந்தைப் பொருளாதாரத்தின் ஸ்தாபகரான அடம் ஸ்மித் குறிப்பிடுகையில், வெளிப்படையானதும் எளிமையானதுமான சுயாதீனமான சந்தையே திறந்த பொருளாதார கொள்கை என விவரிக்கிறார்.
சமூகத்தில் குறைந்த நலன்களை அனுபவித்து வந்த சமுதாய வகுப்பினருக்கு இப்பொருளாதார முறைமை பாரிய பங்களிக்கும். பேச்சுத் திறனும் நாவன்மையும் கொண்டவர்களால் இச்சமுதாய வகுப்பினரை இலகுவில் கவர்ந்திழுக்க முடியும். இவ்வகையில் குறித்த கொள்கைக்கு ஒன்றித்து பேசும் மக்களை இனங்காண்பதற்கும் கவர்வதற்கும் ரணிலுக்கு இன்னும் 18 மாதங்கள் கால அவகாசம் உள்ளது.

நெருக்கடி ஒத்திவைப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவுகள் பிரதமர் ரணிலுக்கு நிரந்தரமான ஒரு வெற்றியாகி விடாது. மாறாக, அவருக்குரிய பின்னடைவு சற்று தாமதிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.  2015 ஜனவரி 8 இல் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியின் யக்கம் செயலற்றுள்ளதே தவிர முறிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. நம்பகத்தன்மையான தலைமையொன்றின் மூலம் அது மீளவும் உயிர்த்தெழ அவகாசம் உள்ளது. தற்போதுள்ள அரசியல் வானில் அவ்வாறான நம்பிக்கை நட்சத்திரம் உதிப்பதாய் இல்லை. 


பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து எந்தவொரு முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருக்கவில்லை. ராஜபக்ச குழுவினர் மீளவும் அதிகாரத்துக்கு திரும்புவதில் சிறுபான்மை மக்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவு.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு எதிர்வரும் காலங்களிலும் தொடருமாக இருப்பின், கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்படக் கூடும். அந்நிலை ஆபத்துமிக்க மொட்டுக் கட்சிக்கு அரசியல் களத்தை தாரை வார்ப்பதாகவும் அமைந்து போகும் என்பதில் ஐயமில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவுகளின் பின்னரான இக்காலப்பகுதிகளில் இரு பிரதான கட்சி தலைமைகளுக்கும் இடையே தீர்க்கமான கலந்துரையாடல்களும் கொள்கை உறுதிகளும் நிலவாத பட்சத்தில் தேசிய அரசாங்கம் என்பது வெறும் கட்டுக்கதையாக சுருங்கிப் போகும் அபாயம் காணப்படுகின்றது.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சேர்ந்தவர்கள், பிரதமரினால் தலைமை தாங்கப்படும் அமைச்சரவையில் இனியும் அங்கம் வகிக்க வேண்டுமா என தீர்மானிப்பது  அவர்களுக்கு மிகவும் சிக்கல் வாய்ந்த விடயமாக மாறிப் போயுள்ளது.


நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பு வெற்றியானது பிரதமர் ரணிலுக்கோ அவரது கட்சிக்கோ நிரந்தமான வெற்றி என கருதிவிட முடியாது. கட்சியின் உள்ளக நெருக்கடிகளுக்கான நிரந்தர தீர்வாக இதனை அடையாளப்படுத்த முடியாது. பிரேரணை வாக்கெடுப்பு வெற்றியானது துரித நெருக்கடிகளுக்கான ஒத்திவைப்பு நிகழ்வேயாகும்.


பதவி நீக்கப்பட்ட முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் தக்க சமயம் பார்த்துக் களத்தை கைப்பற்ற உன்னிப்பான அவதானத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

டன்கிர்க் நிகழ்வும் ரணிலின் தப்பிப் பிழைத்தலும்


விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக ரணில் இருப்பார் எனில், தப்பிப் பிழைத்த தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இனிமேலும் மிக காத்திரமாக கையாள்வார் என நம்புகிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவத்தை ஒழித்தல், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் கரிசனை செலுத்தல், காத்திரமிக்க தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களை பிரதமர் ரணில் முன்னுரிமைப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.


பிரதமர் ரணிலின் குறித்த வெற்றியை டன்கிர்க் வரலாற்று வெற்றியுடன் ஒப்பிட முடியும். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக டன்கிர்க் நிகழ்வு அமைந்து போனது. டன்கிர்க் வரலாற்று நிகழ்வானது அனைத்தையும் இழந்த படுபாதாள நிலையில் தோன்றும் நம்பிக்கை கீற்று என அடையாளப்படுத்தப்படுகிறது.
நாசி படைகளிடம் சிக்கியிருந்த பாரிய பிரித்தானிய துருப்புக்கள் காப்பாற்றப்பட்ட நிகழ்வுக்கு அதிர்ஷ்டம் மற்றும் மனவுறுதியே காரணமாக திகழ்ந்தன.


நாசிகளிடம் மாட்டிக்கொண்டிருந்த பிரித்தானிய துருப்புக்கள் டன்கிர்க் துறைமுகம் வழியாக வெற்றிகரமாக தப்பிப் பிழைத்த நிகழ்வானது பிரித்தானிய படையினருக்கு மனதளவில் பெரும் உத்வேகத்தை அளித்திருந்தது. அதன் பின்னரே தமது தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நாசி படைகளை துவம்சம் செய்து வெற்றி வாகை சூடிக் கொண்டனர்.


ஏப்ரல் 4 ஆம் திகதி இரவு நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிகழ்வும் ஏதோ ஒரு விதத்தில் ரணிலுக்கு டன்கிர்க் தப்பிப் பிழைத்தலாக அமைந்து போனது. மறைமுக எதிரிகளை இனங்கண்டு கொள்வதற்கும் அவ்விரவு உதவியது எனலாம்.


அக்காலகட்டத்தில் பி.பி.சி. செய்தியாளராக பணியாற்றிய ஜே.பி. பிரீஸ்ட்லி டன்கிர்க் நிகழ்வை வர்ணிக்கையில், “பாதாளக் குழிக்குள் தவறி விழுந்து, துரதிர்ஷ்டங்களாலும் தவறான கணிப்புக்களாலும் பெரும் ஆபத்துக்குள் சிக்கியிருந்த படைகள் இறுதியில் மாபெரும் வரலாற்று வெற்றியை அடைந்து கொண்டனர்” என்கிறார். கடந்த மூன்றாண்டு கால நல்லாட்சிக்கான வர்ணிப்பாகவும் இதனை நாம் நியாயப்படுத்தலாம்.

நிதர்சன நிலைப்பாடுகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டது, பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பிலான கண்டனங்களின் அடிப்படையில் எழுந்தது,தேசிய அரசாங்கத்தின் கூட்டணிகளை பிளவுபடச் செய்வதற்கான முன் ஆயத்தமே இதுவாகும் போன்ற விடயங்கள் வெளிப்படை உண்மைகளாகும்.


நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போது ஜே.வி.பி. தலைவர் கூறிய விடயங்கள் பலரது அவதானத்தையும் சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்தது. முன்னைய அரசாங்கத்தின்போது இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியமை மற்றும் அவர்களை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டமை போன்ற காரணங்களின் அடிப்படையிலேயே தாம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

அவரது வாதத்தின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது பிரதமரையோ, ஐக்கிய தேசிய கட்சியையோ, தேசிய அரசாங்கத்தையோ மாத்திரம் இலக்கு வைத்ததாக அமையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த நல்லாட்சிக் கோட்பாட்டையே கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளது.

தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
ஆங்கிலத்தில்: சரத் டி அல்விஸ் (சண்டே ஒப்சேர்வர்)
நன்றி: எங்கள் தேசம்

தப்பிப் பிழைத்தவரின் அடுத்த இலக்கு. தப்பிப் பிழைத்தவரின் அடுத்த இலக்கு. Reviewed by Madawala News on April 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.