காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த எனது மகனை ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.


கடந்த நோன்பு பெருநாளன்று தொழுகைக்கு அழைத்துச் சென்ற எனது மகனை மறுநாளே அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.

ஏறாவூர், மக்காமடி குறுக்கு வீதியில், அலிகார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் தனது வீட்டோடு சேர்த்து "அல்தாப் பேக்கரி"யையும் நடாத்தி வரும் சலீம், மஜ்மூனா தம்பதியர்களின் மூன்று மகன்களில் இரண்டாவது பிறந்தவர்தான் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷன்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அல் அஸ்ஹர் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கற்று ஆறாம் ஆண்டுக்கு அலிகார் தேசிய பாடசாலைக்கு சென்று.. மூன்று மாதங்களில், தனது தந்தையிடம் அச்சத்துடன் விடயமொன்றை தெரிவித்திருக்கிறார்.

அதாவது, "என்னால் தொடர்ந்து பாடசாலைக் கல்வியை கற்க முடியாது, நான் "குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாஹி, காரியாக வரவேண்டும்" என்ற ஆசையே எனக்குள் இருக்கிறது வாப்பா "என்று சொல்லியிருக்கிறார்.

தந்தையும் மகனின் ஆசைக்கு தடைவிதிக்காது ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள (மர்கஸ்) அல் பாக்கியதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மகனின் ஆசைப்படியே 13 வயதில் ஹிப்ழு வகுப்பில் இணைத்து விடுகிறார்.

காலம் உருண்டோடுகிறது.மூன்று வருடமாகிய போதும் மகன் 15 ஜுஸ் களை மாத்திரமே மனப்பாடம் செய்திருந்ததால், அரபுக் கல்லூரி நிர்வாகம் தந்தையை அழைத்து, மூன்று வருடத்துக்குள் உங்க மகன் முழு குர்ஆனையும் மனனமிடாததால், கல்லூரி விதிமுறைகளின் படி உங்கள் மகனை தொடர்ந்து ஹிப்ழு வகுப்பில் வைத்துக்கொள்ளாது, கிதாப் வகுப்பில் சேர்க்கப்போகிறோம் என்று சொன்னதும், மகனிடம் விடயத்தை தெரிவித்தபோது, "என்னால் தற்போதைக்கு கிதாப் வகுப்புக்கு செல்ல முடியாது, எப்படியோ நான் ஹாபிஸாகி காரியாகுவேன் வாப்பா" என்றதும் வாப்பாவுக்கும் மத்ரஸாவுக்குமிடையில் வேதனையுடன் மசூராக்கள் பகிரப்பட்ட வேளை, கல்லூரியின் விதிமுறைகள் அப்படித்தான் இருந்தாலும், இவரது மகன் முஹம்மது அஹ்ஷனை என்னிடம் பாரம் தாருங்கள், குர்ஆனை முழுமையாக மனனமாக்கி கொடுக்க நான் முயற்சிக்கிறேன் என அங்கிருந்த லௌ ஹாபிழ் அப்துல் றஊப் மௌலவி என்பவர் சொல்ல , சபை ஏகமானதாக முடிவெடுத்து அம் மௌலவியிடமே மகனை பாரப்படுத்தியது.

மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எனது மகனுக்கு இம் மௌலவியின் செயற்பாடு மகிழ்வை கொடுத்ததால் நானும் அவ்வாறே சம்மதித்து, அம் மௌலவியிடம் வாக்குறுதியொன்றும் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

அதாவது, "எனது மகன் ஹாபிஸானதும் மகனையும் உங்களையும் உம்ராவுக்கு அழைத்துச் செல்வேன் " என்பதே அந்த வாக்குறுதியாகும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்திலேயே எனது மகன் குர்ஆன் முழுவதும் மனனமிட்டு ஹாபிஸானார்.அப்போதும் எனது மகன், நான் காரியாகுவேன் வாப்பா என்று சொல்லி என்னை மேலும் சந்தோசப்படுத்தினார்.

எனது மகன் பெற்றோர் சொல்லை மதிக்கக் கூடியவராகவே இருந்ததோடு மாத்திரமல்லாமல் பெற்றோர் விரும்பி எடுத்துக் கொடுக்கும் ஆடைகளையே விரும்பி அணிபவராகவும் இருந்தார்.ஒரு நாளும் அவரது விருப்பத்திற்கு பெருநாள் தினங்களில் கூட புத்தாடை வாங்க செல்லமாட்டார்.

மகன் ஹாபிஸான மகிழ்வுடன் நோன்புக்கு முன்பாகவே உம்ராவுக்கு செல்ல ஆயத்தமாகி நானும் ,மகனும் ,மௌலவியுமாக புனித பயணத்தை 13/03/2024 அன்று ஆரம்பித்தோம்.

இங்கிருந்து செல்லும் போது மகனுக்கு சிறிது இருமல் இருந்தது.மக்கா சென்றதும் இருமல் அதிகரித்து தவாப் செய்யும் போதெல்லாம் வேகத்தை குறைத்தே நடந்து செல்வதை அவதானித்து கவலையடைந்தேன்.

இருமலுக்கான மருந்துகளை உபயோகித்தும் இருமல் குறைந்ததாகயில்லை.

இவ்வாறிருக்க மதீனாவுக்கு செல்ல ஆயத்தமான போது ,எனது மகனின் இருமலினால் ஏனையோருக்கு அசௌகரியம் வரக்கூடாது என நினைத்தும், மகனின் உடல்நிலை நலிவுற்று காணப்பட்டதாலும் சவூதியில் தொழில் செய்துவரும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அன்வர் என்பவரது வாகனத்தில் மதீனா சென்றோம்.
மதீனாவில் வைத்து எனது மகன் முதன்முதலில் ஆசைப்பட்டு ஜுப்பாவுக்கான துணியொன்றையும் பெற்றுக்கொண்டு அதனை பெருநாளைக்கு தைத்து போட வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டார்.

மதீனாவில் நின்ற நாட்களிலெல்லாம் மகனின் உடல் நிலையில் மாற்றம் காணப்படாததால் அல்லாஹ் உதவியால் 26/03/2024 அன்று நாடு திரும்பியதும் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற பின் மீண்டும் மத்ரஸாவுக்கு சென்றுவிட்டார். மூன்று நோன்பினை மத்ரஸாவில் வைத்து பிடித்த எனது மகனுக்கு, இருமலுடன் உடல் வலி அதிகரிப்பால் தொடர்ந்து நோன்பு நோற்க முடியாமல் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

நாளுக்கு நாள் மகனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, மகனின் சுவாசப்பைக்கு அருகில் வளர்ந்திருக்கும் கட்டியொன்றை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி முடிவினை அறிவிக்கிறோம் என சொன்னதும் சுமார் இருவாரம் கழித்து வீட்டுக்கு வந்தோம்.

நோன்பு பெருநாள் 10/04/2024 புதனன்று வந்ததும், பெருநாள் தொழுகைக்காக மர்கஸுக்கே அழைத்துச் செல்லுங்கள் வாப்பா, என்றதும் அவ்வாறே அழைத்துச் சென்று தொழுகை முடிந்து வீடு திரும்பியிருந்த வேளை, கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து எனது மகனின் வைத்திய பரிசீலனையின் முடிவு குறுந்தகவல் மூலம் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

அல்லாஹ் விடம் விடயத்தை பாரப்படுத்திவிட்டு ,பெருநாள் கழித்து சிகிச்சைகளை தொடர்வோம் என்றிருக்கையில் மறுநாளே (11/04) எனது மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

எனது மகனுக்கு ஏற்பட்டிருப்பது "குருதிப்புற்று நோய் "என அடையாளம் கண்டபின்பு மேலதிக சிகிச்சை பெறும் முன்பே தொடரான வேதனையை வழங்காமல் அல்லாஹ் அழைத்துக்கொண்டான் என விழிநீர் ததும்ப மர்கூம் ஹாபிஸ் அஹ்ஸனின் தந்தை தெரிவித்தார்.

ஜனாசா நல்லடக்கம் அன்றைய தினம் ளுகர் தொழுகையை தொடர்ந்து ஏறாவூர் நூறுஸ்ஸலாம் மஸ்ஜிதில் பெருந்திரளான உலமாக்கள், ஹாபிழ்கள், பொதுமக்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

13 வயதிலிருந்து மரணிக்கும் வரை நல் அமல்களுடன் மாத்திரமே தனது நேரகாலத்தை கழித்த ,
மர்ஹும் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷனின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு , மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் மன ஆறுதலை வழங்கவும் பிரார்த்திப்போம்.

(உம்ராவுக்கு செல்லும் போது மாபோளை பள்ளிவாசலில் வைத்து இஹ்ராம் ஆடையுடன் பிடிக்கப்பட்ட படங்களே இவைகள்)

(ஏறாவூர் நஸீர்)
காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.