இனிமேல் யாரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் ; றிசாத் பதியுதீன்



நூருல் ஹுதா உமர்
பொய்களை கூறி முழுமையாக இனவாதமாக செயற்பட்டுக்கொண்டு முஸ்லிம் மக்களின் மனங்களெல்லாம் நோகும்படியாக ஜனாசாக்களை எரித்தவர்கள் இன்று அரசியலில் அதிகாரமில்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் தலைகாட்ட முடியாமல், நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். எங்களின் பக்கம் நியாயமும், உண்மையும் இருந்தமையால் மக்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள்.

நாங்கள் நேர்மையின் பக்கம் மக்களை வழிநடத்தினோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களையும், மக்களையும் சந்திக்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை வெள்ளிக்கிழமை (17) மாலை கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் சகிதம் மேற்கொண்டிருந்த அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இனியும் நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. இந்த பிரதேசத்தில் வீதி பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு பிரச்சினைகள், ஏழைகளின் தொழிவாய்ப்பு போன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றை தீர்க்கும் எந்த பொறிமுறைகளும் இவ்வளவு காலமும் உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்தவர்களிடம் இல்லை. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்கள் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றுவார்கள்.

ஒரு தடவை அதிகாரத்தை எங்களிடம் தந்தால் நாங்கள் முன்மாதிரியான சபையாக இந்த சபைகளை மாற்றியமைப்போம்.

என்மீது அபாண்டம் சுமத்தி என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசினர் செய்தனர். எனக்கு சிறையில் இடம்பெற்ற அநீதிகளை அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியையும் வைத்துக்கொண்டு அவர்களுக்கு விளக்கினேன். இவ்வாறான சித்திரவதைகளை செய்யாமல் எனது மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்ய வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கேட்டேன்.


அப்போது அவர்களின் திட்டம் எனக்கு விளங்கியது. ஆனாலும் இறைவனின் நாட்டத்தினால் அடுத்த வாரமே நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது.

எனக்கு இவர்கள் செய்த அநீதிக்கு பயந்து நான் சமூகத்தை அடமானம் வைக்க ஒருபோதும் எண்ணவில்லை. அதனால் இறைவன் என்னை இப்போது கௌரவப்படுத்தி உள்ளான். பொய்யாக சோடிக்கப்பட்ட அத்தனை இனவாத அஜந்தாக்களும் தோற்று விட்டது. நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் செயலணிக்கு இனவாத முத்திரை குத்தப்பட்ட ஞனசாரவை தலைவராகவும் நியமித்தார்கள். ஆனால் இறுதியில் வென்றது சாத்தியமே. மக்களை ஏமாற்றி யாரும் அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது என்றார்.


இனிமேல் யாரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் ; றிசாத் பதியுதீன் இனிமேல் யாரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் ; றிசாத் பதியுதீன் Reviewed by Madawala News on March 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.