நாம் I M F இல் கடன் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமேயாகும்.



சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் முன்வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.


இன்று காலை 9.30க்கு ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் விசேட உரையாற்றும்போது ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை சபையில் வெளியிட்டார்.


இதன்போது ஜனாதிபதி தனது உரையில்,


சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும்.


கடன் வசதிகளின் 4 ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளதுடன், முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், ஏனைய நாடுகள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


பாராளுமன்றில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிலர் இந்த கடன் வசதியை இன்னொரு கடனாகவே கருதுவதாகவும், மேலும் சிலர் நாட்டின் மொத்த கடனை பெற்ற தொகையை கொண்டு செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர்.


இந்த அறிக்கைகள் அறியாமை அல்லது அரசியல் இலாபத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


இந்த கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வங்குரோத்தாகாமல் இருப்பதை உறுதிசெய்து, உள்நாட்டு வங்கிகள் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும்.


இது குறைந்த வட்டியில் கடனுக்கான வாய்ப்புகளை உருவாக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.


பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், சகலவிதமான அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டும், சம பலத்துடன் துன்பங்களை அனுபவித்தும் இந்நாட்டு மக்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


கடன் வசதியை அடைவதில் அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே, இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.


நாங்கள் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். செயல்முறை முழுவதும் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.


நமது வெற்றிக்கான அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இவற்றில் சில சீர்திருத்தங்கள் ஏற்கனவே 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டுத் திட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.


2025 ஆம் ஆண்டளவில் முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வருவாயை அதிகரிக்கவும் அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.


நிலையான வருமான வரி வீதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளன. உழைக்கும்போது செலுத்தும் வரி வீதம் 12% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் வரி விலக்கு வரம்பு 300 மில்லியன் ரூபாவிலிருந்து 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.


2025 ஆம் ஆண்டளவில் குறைந்தபட்ச வரி விலக்கு கொடுப்பனவுடன் தோட்ட வரியை (Estate duty) சொத்து வரியாக அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.


அத்துடன், பணவீக்க வீதத்தை 4-6% ஆக குறைத்து 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதீட்டுப் பற்றாக்குறையை குறைக்கவும், பணத்தை அச்சிடுவதை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அந்நிய செலாவணி சந்தை வரம்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தளர்த்தப்படும், அதே நேரத்தில் சந்தை அளவுகோல்கள் அதன் செயல்பாடுகளை தீர்மானிக்க அனுமதிப்படும்.


அந்நிய செலாவணி ஒதுக்கத்தை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு நாணயத்தை கொள்வனவு செய்ய மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.


எரிபொருள் விலைகள் 2018 ஆம் ஆண்டின் எரிபொருள் விலை சூத்திரத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அத்துடன் மின்சார கட்டணம் 6 மாதங்களுக்கு ஒருமுறை சரிசெய்யப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

நாம் I M F இல் கடன் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமேயாகும். நாம் I M F இல் கடன் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமேயாகும். Reviewed by Madawala News on March 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.