பலஸ்தீனுக்கு மீண்டும் பைத்துல் முகத்தஸ் கிடைக்குமா?கலாபூஷணம் பரீட் இக்பால்

நேற்று பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினமாகும்.
(International Day of solidarity with Palestinian People)
பலஸ்தீனம் என்பது மிகவும் உயர்வான கலாசாரம் கொண்ட அருள்பாலிக்கப்பட்ட பூமியாகும். இப்பூமியில் அதிகமான நபிமார்கள், ரஸூல்மார்கள் பிறந்து வளர்ந்து இறப்பை அடைந்துள்ளனர். அந்தவகையில் பலஸ்தீனம் சிறப்புப் பெற்றது.

பலஸ்தீன பூமி நபிமார்கள் சுற்றித் திரிந்த ஒரு பிரதேசம். பலஸ்தீனத்தில் அமைந்த பைத்துல் முகத்தஸ் முக்கிய சிறப்பு பெற்றது. காரணம் நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை கடமையாக்கப்பட்டதிலிருந்து பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கியே தொழுது வந்தனர். எனவே, முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் சிறப்பு பெறுகிறது. நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று மஸ்ஜிதுகளில் இதுவும் ஒன்று. எனவே, பலஸ்தீனத்தில் அமைந்திருக்கும் பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித் முழு உலக முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது. ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் உலக முஸ்லிம்களின் மூன்று புனித தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் தற்போது இஸ்ரேல் வசம் சிக்கியிருப்பதே.

முழுக்க முழுக்க பலஸ்தீனர்கள் வாழ்ந்த பலஸ்தீன பூமியில் எவ்வாறு யூதர்கள் புகுந்து கொண்டனர் என்பதை பற்றி சற்று அலசுவோம். உலகில் தாயகம் இல்லாது அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானியா, ரஷ்யா இன்னும் பல நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். யூதர்கள் புத்திக் கூர்மையுடையவர்கள். எல்லா நாடுகளிலும் விஞ்ஞானிகளாகவும் பணக்காரர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் அந்தந்த நாட்டில் ஆட்சியில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். செல்வாக்காக இருந்தாலும் அந்தந்த நாட்டின் பெரும்பான்மையினருடன் பிரச்சினையுடனே வாழ்ந்து வந்தனர். இந்தக் கட்டத்தில்தான் யூதர்களின் முக்கியஸ்தர்கள் முக்கிய ஒரு முடிவு எடுத்தனர். உலகில் எங்கேயாவது ஓரிடத்தில் யூத ராஜ்ஜியம் அமைக்க முடிவெடுத்தனர். 1896 ஆம் ஆண்டளவில் ஹெர்ஸல் (Herzl) என்ற ஒஸ்திரிய யூதர் “யூத ராஜ்ஜியம்” என்ற நூலொன்றை வெளியிட்டார். அந்த நூலில் காணப்படுவது உலகில் யூதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரே வழி யூத ராஜ்ஜியம் ஒன்றை அமைப்பதுதான் என குறிப்பிடப்பட்டுள்ளது. பலஸ்தீனில் யூத ராஜ்ஜியம் ஏற்படுத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. யூதர்களின் முக்கியஸ்தர்கள் பலஸ்தீனத்தை ஏன் தெரிவு செய்தார்கள் என்பது பற்றி ஆராய்வோம்.

யூதர்களின் சமயம் தோன்றிய இடம் பலஸ்தீனம் என நம்புகின்றனர். எனவே, பலஸ்தீனத்திலே யூத ராஜ்ஜியத்தை உருவாக்க முடிவு செய்தனர். Moses அல்லது மூஸா என்கிற இறை தூதருக்கு இறைவனால் அருளப்பட்ட தவ்ராத் வேதத்தையும் பத்துக் கட்டளைகளையும் (10 commandments) அடிப்படையாகக் கொண்டு யூத சமயம் உருவானது. சமய போதனைகள் ஹிப்ரு மொழியிலேயே அமைந்திருந்தது. ஆனால், தற்போது இவர்களின் யூத சமயம் கலப்படமானது. அதாவது, தவ்ராத் வேதம் யூத சமயத்தின் அடிப்படை வேத நூலாக இருந்தபோதும் யூத மத அறிஞர்கள் வியாக்கியானங்களும் மேலதிக கருத்துக்களும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தவ்ராத் வேதம் தூய்மையானதாக இல்லை. காலத்திற்கு காலம் யூத மத அறிஞர்கள் இஷ்டம்போல் சில விடயங்களை யூத சமயத்தினுள் உட்புகுத்தி வருகின்றனர். இதனாலேதான் மோசஸிற்கு இறைவனால் அருளப்பட்ட தவ்ராத் வேதம் இன்று குறையுடன் காணப்படுகிறது.

பலஸ்தீனில் யூத ராஜ்ஜியம் அமைப்பதற்காக ஒஸ்திரிய யூதர் ஹெர்ஸல் துருக்கி நாட்டுக்கு சென்றார். பலஸ்தீன் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்தமையால் ஹெர்ஸல் அங்கு சென்று துருக்கி சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அதற்கு மன்னர் ஒத்துவரவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்களைப் பற்றி இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது பொருத்தமான விடயமல்ல என்று கூறி பேச்சுவார்த்தையை முறித்துவிட்டார்.

யூதர்கள் உலகில் யூத சமய, கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. அவர்கள் அந்தந்த நாட்டுக்கேற்ப கிறிஸ்தவ கலாசாரத்தைப் பேணி மக்களைக் கவர்வர். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள் எனவும் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்தவர்கள் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவர்கள் அவ்வாறில்லை. இஸ்ரேல் நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரைவிலக்கணப்படி பரம்பரை யூத பெற்றோருக்கு அல்லது யூத மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்த ஒருவரே யூதராக கருதப்படுவார். இதன்படி யூத பெற்றோருக்கு பிறந்து வேறு சமயத்தை பின்பற்றினாலும் அவரும் யூதராகவே கணிக்கப்படுகிறார்.

இவர்கள் மிகவும் புத்திக் கூர்மையுடையவர்களாக இருப்பதனால் அந்தந்த நாட்டின் இரகசியங்களை இலகுவாக கண்டுபிடிக்கக் கூடியவர்களாக இருந்தனர். முதலாவது உலக மகா யுத்தத்தில் ஹிட்லர் படுதோல்வி அடைந்தமைக்கான காரணம் ஜெர்மன் இராணுவ இரகசியங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுபவர்களாக ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த யூதர்கள் ஒற்றர் வேலை பார்த்தனர். இதனால்தான் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் மூலைமுடுக்கெல்லாம் தேடி ஒரு யூதனையும் விட்டு வைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் யூதர்களை அழிக்கப் புறப்பட்டான் ஹிட்லர். சுமார் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தான். கொன்று குவித்த யூதர்களில் விஞ்ஞானிகள், உயர் அதிகாரிகள், பலர் அடங்கினர்.

முதலாவது உலகப் போரின்போது பலஸ்தீன் நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. யூதர்கள் தங்களுக்காக ஹிட்லருக்கு எதிராக ஒற்றர் வேலை பார்த்தமைக்காக நன்றிக்கடனாக யூதர்களுக்கு உதவ முன்வந்தது பிரிட்டிஷ். 1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளரான ஆதர் ஜே பல்போர் என்பவர் யூத மக்களுக்கான தாயகமொன்றை பலஸ்தீனில் அமைப்பதை அங்கீகரிக்கும் பிரகடனம் ஒன்றை கடிதம் மூலமாக பிரித்தானிய யூத தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆதர் ஜே பல்போரினால் ஏற்படுத்தப்பட்ட இந்த பிரகடனம்தான் இஸ்ரேல் எனும் நாடு உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த பிரகடனத்தின் பயனாக ஐரோப்பாவிலிருந்தும் உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் யூதர்கள் வந்து பலஸ்தீனில் குடியேறத் தொடங்கினர்.

பலஸ்தீனத்துக்கு உள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. தங்கள் பூமிக்குள் ஒரு கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பலஸ்தீன மக்கள் உணரத் தொடங்கினர். எனவே, 1920 ஆம் ஆண்டு முதன்முதலாக பலஸ்தீன மக்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

பிரித்தானியரின் ஆட்சி 1948 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. ஆனால், முதல் நாளே 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி நள்ளிரவுடன் யூதர்கள் இஸ்ரேல் தனிநாடு எனவும் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர். தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. தேவைப்படும்போது பலஸ்தீனர்களின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்துக்கொள்ளும் நாடு. இவர்கள் கொலை செய்வதற்கு தயங்காதவர்கள். பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்ட மாட்டார்கள்.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகிவிட்டார்.

பிரிட்டிஷ் ஆரம்பத்தில் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் நடந்து கொண்டார்கள். ஆனால், இன்றோ பிரிட்டிஷ், அமெரிக்க நாடுகள் உலக முஸ்லிம்களுக்கு பூச்சாண்டி காட்டுவதற்காக இஸ்ரவேலர்களை பயன்படுத்துகின்றனர்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேல் யுத்தத்தை தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலிய யூதர்களின் வசமானது. பைத்துல் முகத்தஸ் பறிபோய் 55 வருடங்கள் ஆகிவிட்டன. உலகில் 50 முஸ்லிம் நாடுகள், 197 கோடி முஸ்லிம்கள் இருந்தும் பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதை மீட்டெடுக்க முடியாத நிலையை எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது. கவலைப்பட வேண்டியுள்ளது.

ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினால்தான் சொந்த நாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பலஸ்தீனியர்கள் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டனர். யஸீர் அரபாத் என்ற தலைவன் மேலும் ஐம்பது ஆண்டு காலத்திற்கு இடைவிடாத போராட்டங்களை நடாத்தி வந்தார். இப்போது அவரது அத்தியாயமும் முடிந்து விட்டது. மீண்டும் பலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்த பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது.

பலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாக பிறந்து வளர்ந்து நடுவில் ஒரு தலைவனைப் பெற்று இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பலஸ்தீனியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவது என்றாலும் விரட்டியவர்களை அல்லவா பழிவாங்க வேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து வாழ இடம் கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படி ஒரு காரியம் செய்ய வேண்டும்?
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேல் யுத்தத்தின் போது இஸ்ரேல் அடாவடித்தனமாக பறித்தெடுத்த பலஸ்தீனர்களின் பைத்துல் முகத்தஸை ஒப்படைத்து அமைதியை உருவாக்க இஸ்ரேல் தயாராகுமா?


கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்
பலஸ்தீனுக்கு மீண்டும் பைத்துல் முகத்தஸ் கிடைக்குமா? பலஸ்தீனுக்கு  மீண்டும் பைத்துல் முகத்தஸ் கிடைக்குமா? Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.