VIDEO இணைப்பு : பையொன்றுடன் தேவாலயத்திற்குள் நுழையும் நபரை விட்டு விட்டு, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.(எம்.மனோசித்ரா)

பொரளை கிறிஸ்தவ  தேவாலயத்தில் கைகுண்டுகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பொலிஸாரின் அசமந்த செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இதனை தேவாலயங்களில் அச்சுறுத்தல் நிலைமையொன்றை தோற்றுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு சதியாககே கருதுவதாகவும் கூறினார்.

பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.


பொரளை - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கடந்த செவ்வாயன்று கைகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , தேவாலயத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் காலை முதல் பதிவாகிய சி.சி.டி.வி. காணொளியை நாம் கண்காணித்தோம். எனினும் பொலிஸார் அவற்றை கண்காணிப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை.

காலை முதல் கண்காணித்த சி.சி.டி.வி. காணொளிகளில் காலை 9.52 மணியளவில் நபரொருவர் பொலித்தீன் பையொன்றுடன் தேவாலயத்திற்குள் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தேவாலயத்திற்குள் நுழைந்ததன் பின்னர் செய்த வழிபாட்டு முறைகள் தவறாகக் காணப்பட்டன. அவற்றிலிருந்தே அவர் ஒரு கத்தோலிக்கர் அல்ல என்பது தெளிவாகிறது.

அதன் பின்னர் இறுதி ஆசனத்திற்குப் பின்னால் சென்று கீழே குனிந்து அவர் ஏதோ செய்து கொண்டிருக்கின்றார். பின்னர் தேவாலயத்தை தூய்மைப்படுத்தும் நபரொருவர் அவருக்கு அருகில் சென்றதும் , குறித்த நபர் கலவரமடைந்து அங்கிருந்து வேகமாக வெளியேறுகின்றார். இவ்வாறு பதிவாகிய காணொளி பொலிஸாரினால் கண்காணிக்கப்படவில்லை.

இதனையடுத்து பிற்பகல் 3 மணிக்கு பின்னர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காணொளியில் தேவாலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அங்கு நிலத்தில் காணப்பட்ட பொருளொன்றை மேசையின் மேற்பகுதியில் எடுத்து வைக்கின்றார்.

அதன் பின்னர் தான் குறித்த நபர் அந்தப் பொருள் குண்டு என்பதை அறிகிறார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்து அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , பின்னர் தேவாலயத்தில் உள்ள ஏனைய ஊழியர் ஒருவரிடமும் அருட்தந்தைகளிடமும் இது தொடர்பில் தெரிவிக்கின்றார்.

இந்த நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அந்த இடத்தில் கைகுண்டினை வைத்திருந்தால் அவர் எவ்வாறு அதனை கைகளால் எடுத்திருப்பார்? ஏன் அதனைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறார்? எதற்காக ஏனையோருக்கு அது தொடர்பில் அறிவித்தார்? பொலிஸார் இந்த காரணிகள் எவற்றைப் பற்றியும் கவனத்தில் கொள்ளவில்லை. மாலை 3 மணிக்கு பின்னர் பதிவான காணொளிகளை மாத்திரமே பொலிஸார் கண்காணித்துள்ளனர்.

காலையில் தேவாலயத்திற்கு வருகை தந்து குண்டினை வைத்துச் சென்ற நபர் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல் , தேவாலயத்தில் தூய்மைப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது சட்டைப்பையில் தீப்பெட்டி காணப்பட்டதாகவும் , அதில் தீக்குச்சிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இது உண்மைகளை கண்டறிவதை விடுத்து போலியான கதைகளை உருவாக்குவதும் , நாடகமொன்றை அரங்கேற்றும் செயற்பாடுமாகும்.

பொலிஸாரின் இந்த அசமந்த செயற்பாட்டினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பில் உண்மையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தினை மறைப்பதற்கு அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் செயற்பட்டுள்ள விதத்தின் அடிப்படையில் அவதானிக்கும் போது , இந்த சம்பவத்தின் பின்னணியிலும் சதித்திட்டம் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறினார்.

VIDEO இணைப்பு : பையொன்றுடன் தேவாலயத்திற்குள் நுழையும் நபரை விட்டு விட்டு, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். VIDEO இணைப்பு :  பையொன்றுடன் தேவாலயத்திற்குள் நுழையும் நபரை விட்டு விட்டு, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.