தரம் பிரிக்கப்படாத குப்பைகளுக்கு பள்ளக்காட்டில் தடை; பல உள்ளூராட்சி மன்றங்கள் திண்டாட்டம்; கல்முனையில் புதிய நடைமுறை அமுல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

தரம் பிரிக்கப்படாத குப்பைகளுக்கு பள்ளக்காட்டில் தடை; பல உள்ளூராட்சி மன்றங்கள் திண்டாட்டம்; கல்முனையில் புதிய நடைமுறை அமுல்.


(அஸ்லம் எஸ்.மௌலானா)

அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவததற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற

தடை காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்கள், திண்மக்கழிவகற்றல் சேவையை வழமைபோல் முன்னெடுக்க முடியாமல், திண்டாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், கல்முனை மாநகர சபை எல்லையினுள் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் எனவும் தரம்பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்கப்படாது எனவும் அம்மாநகர சபை அறிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கென இடமொன்று (Dumping Place) எமது கல்முனை மாநகர எல்லையினுள் இல்லாமையினால், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலபரப்பிலேயே அவை கொட்டப்பட்டு வருகின்றன.


எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தேசிய கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நில நிரப்புகை நிலையத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அட்டாளைச்சேனை பிரதேச சபை எமது மாநகர சபைக்கு அறிவித்திருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டத் தடை விதித்துள்ளது.


இதனால் கடந்த சில நாட்களாக கல்முனை மாநகர பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதில் எமது மாநகர சபை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது.


ஆகையினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை ஒரு பையிலும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்படுகின்ற உக்க முடியாத பொருட்களை மற்றொரு பையிலும் வெவ்வேறாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.


இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்- என கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளும் பள்ளக்காடு பகுதியிலேயே குப்பைகளைக் கொட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தற்போது, அங்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவததற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த உள்ளூராட்சி மன்றங்களும் திண்மக்கழிவகற்றல் சேவையை வழமைபோன்று முன்னெடுக்க முடியாமல் திண்டாடி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Aslam S.Moulana

தரம் பிரிக்கப்படாத குப்பைகளுக்கு பள்ளக்காட்டில் தடை; பல உள்ளூராட்சி மன்றங்கள் திண்டாட்டம்; கல்முனையில் புதிய நடைமுறை அமுல்.  தரம் பிரிக்கப்படாத குப்பைகளுக்கு பள்ளக்காட்டில் தடை; பல உள்ளூராட்சி மன்றங்கள் திண்டாட்டம்; கல்முனையில் புதிய நடைமுறை அமுல். Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5