அப்பட்டமான இனவாதிகள் தான் ரணிலைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் இந்த தயாகமகே



ஐ.தே.க பலவீனமடைவதற்கு தயாகமகே போன்றவர்களின் தவறான செயற்பாடுகளே காரணமென
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்ல மாவட்டத்தில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழப்பதற்கான காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாடுகளே என முன்னாள் அமைச்சர் தயாகமகே தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதில் கருத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கொழும்புக்கு ஒளிந்தோடியவர் இன்று முஸ்லிம் காங்கிரஸ் மீது பழியை போட முனைகின்றார். இவரை நேர்மையான அரசியல் வாதியாக பார்க்க முடியாதுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் தொனியில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப்பார்க்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அன்று கூட்டுப்பொறுப்புடனேயே செயற்பட்டது. அதன் காரணமாக எம்மால் அரசுக்கு வலுச்சேர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தேர்தல்களின்போது முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் பிரதிநிதித்துவங்களை இழக்கும் நிலை கூட ஏற்பட்டது. எனினும் கூட்டுப்பொறுப்பை பேண வேண்டியதன் காரணமாக நாம் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நண்பர் தயாகமகே, தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில் இன்று எம்மீது பழியைப் போட முனைகின்றார். 

திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு சேவை செய்திருந்தால், மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் அந்த மக்களின் ஆதரவை தொடர்ந்து பேணிக் கொண்டிருக்க முடியும். அப்படி நடந்து கொள்வதை விடுத்து எதிர்ப்பு அரசியல் வாதங்களும், குழிபறிக்கும் செயற்பாடுகளுமே அந்த மக்களிடமிருந்து அவர் தூரமாகக் காரணமாகும். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் இருப்பைத் தக்க வைக்கும் முயற்சிகளையே என்றும் முன்னெடுத்து வருகின்றது.

எமது மறைந்த தலைவர் அஷ்ரப் தூரநோக்குடனேயே இதனை ஆரம்பித்தார். அந்தப் பாதையிலிருந்து நாம் ஒருபோதும் விலகிச் செயற்பட முடியாது என்பதை கூறவிரும்புகின்றேன். அன்று வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்த முணைந்த போதும் கூட எம்முடன் கலந்துரையாடப்படவில்லை. பல தடவைகள் சந்தர்ப்பம் கேட்டும் அது கைகூடவில்லை. எனினும் நாம் பொறுத்துக் கொண்டோம்.

இன்றும் கூட ரணிலின் பின்னால் இருப்பவர்கள் யாரென்பதை வெளிப்படையாக பார்க்க முடியும். மாயக்கல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்பட்டமான இனவாதிகள் தான் ரணிலைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் இந்த தயாகமகே என்பவர். அவர்களது செயற்பாடுகளே ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப்பாதைக்கு பிரதான காரணமாகும் எனவும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்
அப்பட்டமான இனவாதிகள் தான் ரணிலைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் இந்த தயாகமகே அப்பட்டமான இனவாதிகள் தான் ரணிலைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் இந்த தயாகமகே Reviewed by Madawala News on June 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.