இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள்.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள
ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் நமது நாட்டிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் கொவிட் -19 வைரஸ் தொற்று நோயும் ஏனைய பிரச்சினைகளும் நீங்கி சகல மக்களும் நலமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அருள் புரிய வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்திப்போமாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மூன்று மாதங்களாக கொவிட் - 19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதன் விளைவாக இலங்கையிலும் அநேக உலக நாடுகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும், இதர செயல்பாடுகளும் பெரிதும், பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நாம் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைச் சந்திக்கின்றோம். 

இவ்வாண்டு புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டும் உள்ள நிலையில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியமும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 

ஒவ்வொரு குடும்பத்தினரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். வறியமக்கள் மட்டுமல்லாது வறுமைக் கோட்டிற்கு மேல் வாழக்கூடிய மத்திய தர வர்க்கத்தினரும்கூட பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். 

நாங்கள் பலவிதமான சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றோம். அவற்றுக்கு மத்தியிலும் சகல இன மக்களிடத்திலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கும் அத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இந் நன்னாளில் அல்லாஹ்வைப் பிரார்ததிப்போமாக.

-ஊடகப் பிரிவு- 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி...

‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’


புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


“ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


“கொவிட் – 19 கொரோனாவின் பீதி, நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களின் போக்கு, தொடர்ச்சியாக சுற்றிவளைக்கும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் ஒரு மாதம் நோன்பிருக்க "அல்லாஹ்" எமக்கு அருள்புரிந்தான். அல்லாஹ்வின் இந்த அருட்பார்வைகள் ஆட்சியாளர்களுக்கும் நாட்டுக்கும் கிடைக்க வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும். இன்று ஈத் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களும் என்னுடைய இப்பிரார்த்தனையில் இணைந்துகொள்ள வேண்டும்.


மக்களின் நாளாந்த வாழ்க்கைகள் முடக்கப்பட்டு, உலகமே இயல்பு நிலையை இழந்துள்ளதால், எமது வரலாற்றில் விசித்திரமான ஒரு  சூழலில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.


மத நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் அதேவேளை, நாட்டின் சட்ட திட்டங்களையும் மதித்தே, நாம் பெருநாளைக் கொண்டாட வேண்டியுள்ளது. இதுவே, முஸ்லிம்கள் கூட்டுப் பொறுப்புக்களுக்கு உடன்படாதோரெனக் காட்டமுனையும் கெடுதல் சக்திகளை தனிமைப்படுத்தி, அவர்களைத் தோற்கடிக்க உதவும். எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு எமக்கு எதிராக முத்திரை குத்த சில தீய சக்திகள் தருணம் பார்த்திருப்பதை  மனதிற்கொண்டு செயற்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலைமை, எமது எந்தத் தேவைகளையும் பொதுநோக்கிற்கு குந்தகம் ஏற்படாது முஸ்லிம்கள் செயற்படுவதை காலத் தேவையாக்கிவிட்டது. எனினும், பொதுத் தேவைகளுக்கு அறவே குந்தகம் ஏற்படுத்தாத எமது இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி செயற்படவும், முஸ்லிம்களாகிய நாம் தடுக்கப்பட்டமை எமக்கு பெருங் கவலையளிக்கிறது.


இதேபோன்று எமது தனிப்பட்ட சில செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், அவற்றைப் பொது உடமைகளில் குறுக்கிடுவதாக முடிச்சுக்கள் போடப்படும் கபட செயற்பாடுகளையும் நாம் கண்டுகொள்ளாமலில்லை. மாற்று அரசியல் கருத்துடைய தலைமைகளை சங்கடத்தில் மாட்டிவிடவும், அத் தலைமைகளை ஆதரிக்கும் சமூகத்தவரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தவும் இன்றைய நாட்களில் வெளியிடப்பட்ட ஒருதலைப்பட்சமான அரச வர்த்தமானிகள், ஓரவஞ்சனையான அரசியல் கைதுகள் எல்லாம் எமக்கெதிரான கெடுதல் சக்திகளின் மறைமுகத் தூண்டுதல்களாகவே உள்ளன.


இந்த அநீதிகள் இல்லாதொழிய இந்நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். கெடுதல்காரர்களின் நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டு மக்கள், மத நலன்களுக்கு முதலிடம் வழங்கும் மனோநிலைகளை ஆட்சியாளர்களுக்கு ஆண்டவன் வழங்குவானாக. சோதனை ஏற்படும் பொழுதெல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் தொழுகை, பொறுமையைக் கொண்டே அல்லாஹ்விடம் உதவி தேடுவர். மட்டுமன்றி, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம் இவ்வநீதிகளுக்கு எதிராக நாடியுள்ள சட்ட நடவடிக்கைகள் வெற்றிபெறச் செயற்படுவதுடன், எல்லாவற்றுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை நம்பியுள்ளதாகவும் அவர் தனது பெருநாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு–

இன்றைய சூழ்நிலையை அக்கறையோடும் உணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம்
- ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா

( ஐ. ஏ. காதிர் கான் )

   கொரோனா தொற்றின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையை, அக்கறையோடும் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்தித்துச் செயற்படுவோம். உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில் வருமானங்களை இழந்திருக்கும்  இன்றைய நிலையில், புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா தொற்று,  உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, நாட்டில் ஏற்படுத்தியுள்ள  கொடூரம், சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புக்கள் என இன்றைய சூழலில் நாம் நோன்புப்  பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.  
   கொரோனா  தொற்றினால் கடந்த நாட்களில் நமது நாட்டில் ஒன்பது உயிர்களை இழந்துள்ளோம்.
இத்தொற்றினால்  மரணித்த நான்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றது.
இதில், இரண்டு முஸ்லிம்களின் சடலங்கள் கொரோனா என்பது உறுதிப்படுத்தப்படாமலேயே எரிக்கப்பட்டது மிக வேதனையான விடயமாகும்.
எமது முஸ்லிம் பெண் சகோதரி ஒருவரின் ஜனாஸா கூட எரித்து சாம்பலாக்கப்பட்டமை எனக்கு கவலையைத் தருகிறது.  
ஆக, இவ்வாறான துக்ககரமான ஒரு சூழ் நிலையிலேயே இப்பெருநாளை நாம் இம்முறை கொண்டாடுகின்றோம் என்பதையும், அனைவரும் மனதில் நிறுத்தி இவர்களுக்காகவும் இப்பெருநாளில் பிரார்த்தனை புரிய வேண்டும்.
    இந்தத் தொற்றுத் தாக்கத்திலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் உறவுகளையும், நம் நாட்டையும்  பாதுகாத்துக் கொள்ளும்  
கட்டாயத்  தேவைப்பாட்டிலும் ஒவ்வொரு முஸ்லிமும் இருப்பது அவசியமாக இருப்பதுடன், இத்தொற்று நாட்டிலிருந்து விரைவில்  நீங்கவும் இத்திருநாளில் பிரார்த்திக்க வேண்டும்.  
   முஸ்லிம்கள்  இந்நாட்டுக்கும் இந்த உலகுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். நாம் எம்மை ஒருபோதும்  காட்டிக்கொடுக்கக் கூடாது. 
இதனை நாம் ஒவ்வொருவரும் சிந்திந்துச் செயற்படுவோமாக இருந்தால், கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்தும் நிச்சயம் எமக்கு வெற்றி கொள்ள முடியும் என்பதையும் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
   எமது  உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில், வருமானங்களை இழந்திருக்கின்ற இன்றைய நிலையில்,  இந்தப் பெருநாளை கடந்த காலங்களில் கொண்டாடியதைப் போன்று இம்முறை பெரும்பாலானோர்  கொண்டாடுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.
   என்றாலும், புனித ரமழான் முடிவடைந்த கையோடு, நோன்புப் பெருநாளை அடைந்துள்ள  ஒவ்வொரு முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை குறித்து, மிகுந்த அக்கறையோடும், உணர்வுபூர்வமாகவும், இதய சுத்தியோடும்  சிந்திக்க வேண்டும்.
   கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக புனித  கஃபதுல்லாஹ், புனித மஸ்ஜிதுன் நபவி, நபி (ஸல்) அவர்களின் புனித "ரவ்ழா ஷரீப்" என்பன  மூடப்பட்டுக் கிடக்கின்றன. அத்துடன், உலகிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக  இலங்கையிலும் முழு உலகிலுமுள்ள முஸ்லிம்கள் ஜமாஅத் தொழுகை இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி, பள்ளிவாசல்களுக்குச் சென்று கூட்டாகத் தொழுத மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கின்றார்கள்.
இன்றைய நிலையில்,  இலங்கையில் பத்து  ஜும்ஆக்களை இழந்த நிலையில், ரமழான் வந்தால் முஸ்லிம்கள் வாழும்  பிரதேசங்கள் ஆன்மீகச் சூழலில் பூத்துக் குலுங்கும். அக  மகிழ்ச்சியாக இருக்கும். பள்ளிவாசல்கள் வணக்க  வழிபாடுகளாலும் நல்லமல்களில்  ஈடுபடுகின்ற ஈமானிய உள்ளங்களாலும் நிறைந்து வழியும்.
ஆனால், இன்று அவையெல்லாம் இழந்து ஒரே சோகமாக எல்லாப் பிரதேசங்களும் வீடுகளும் கவலை தேய்ந்த முகத்துடன்  காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலேயே, நோன்புப் பெருநாள் நம்மத்தியில் பிறந்துள்ளது. 
   இன்றைய சூழ் நிலையில், பெருநாளைக் கொண்டாடும் மனோ நிலையில் நாமில்லை என்றாலும், பெருநாளைக்  கொண்டாடத்தான்  வேண்டுமென்ற நிலை இருக்குமானால், புத்தாடை அணிந்து தான் பெருநாள் கொண்டாட வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் கட்டாயமும் மார்க்கத்தில் இல்லையென்பதை நாம் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின் போதனைகளின் பிரகாரம், இருக்கின்ற நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு, பெருநாள் தொழுகைக்குச் செல்ல வேண்டுமென்பதேயொழிய, புத்தாடை தான் வாங்கி உடுக்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் நமக்கு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டு நாம் செயற்பட வேண்டும்.
   இம்முறை நாம் "பெருநாள் தொழுகைக்கே பள்ளிவாசலுக்கு அல்லது  வெளியே போக முடியாது" என்ற நிலையிலுள்ள போது, பெருநாள் தினத்தன்று அல்லது அதற்குப் பின்னரான தினங்களில் வெளியே சென்று, வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல், மிகக் கவனமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள வேண்டும். 
   இக்கட்டான இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெருநாள் தினத்தில் யாரும் வீண் செலவுகள் செய்யக் கூடாது.    தங்களது தேவைக்கு மேலதிகமான பணத்தைச்  சேமித்து, உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதே, இச்சந்தர்ப்பத்தில் நாம் செய்யும் மிகச் சிறந்த கைங்கரியமாகும்.
    நிச்சயமாக ஒரு முஸ்லிம் செய்கின்ற காரியங்களிலே, மிகச்சிறந்த காரியமாக அது இருக்குமென்பதைப் புரிந்து, இந்தப் பெருநாளை நாம் மிகவும் அமைதியான, கண்ணியமான முறையில் கழிப்பதற்கு திட சங்கற்பம் பூணுவோமாக...!

( ஐ. ஏ. காதிர் கான் )

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் இறை ஆசிகளை யாசிப்போம். 
கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பெருநாள்  செய்தி. 
******************************
வரலாற்றில் ஒரு வித்தியாசமான காலமொன்றில் எம்மை வந்தடைந்துள்ள இந்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை மிகவும் அமைதியான முறையில் ஆரவாரமின்றி அமைதியாக அனுஷ்டிக்குமாறு முன்னாள்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ  காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது. 
இன்றைய காலகட்டத்தில்  கொரோணா தொற்று நோயின் பரவலையும் அதன் தாக்கத்தையும் குறைப்பதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியிருக்கும்   அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் இயன்றளவு பின்பற்றுமாறும் கூடியளவு சமூக இடைவெளிகளை பேணி நடப்பதுடன் பெருநாள் விளையாட்டுக்களை முற்றாக தவிர்ப்பதுடன் வீடுகளில் தரித்திருந்து நல் அமல்களில் ஈடுபடுமாறும் உங்களை நான் அன்பாக வேண்டிக் கொள்கிறேன். 

மேலும் புனித இஸ்லாமானது அமைதி,இரக்கம்,ஒற்றுமை மனித நேயம் என்பனவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் திட்டமாகவும் உறுதியாகவும் அறிந்து வைத்துள்ளோம்.

இல்லாவிட்டால் இஸ்லாம் உலகளாவிய ரீதியாக இவ்வாறு வளர்ந்திருக்க முடியாது. 

இன்று எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில்  நாம் பொறுமை, ஜீவகாருண்யம், பரஸ்பர அன்பு ஆகிய குணவியல்புகள் மூலம் எமது ஒற்றுமை மிக்க தாய் நாட்டை கட்டியெழுப்ப திடசங்கம் பூணுமாறு உங்களை அன்பாக  கேட்டுக்கொள்வதோடு

பொறுமையின் மாதமாகிய இந்த புனித ரமழானில் நாம் எடுத்துக் கொண்ட பயிற்சிகளை செய்துவந்த இபாதத்துகளை தொடர்ந்து செய்வதுடன் வசதியற்றிருக்கும் எம் சகோதரர்களை இனங்கண்டு தானதர்மங்களை செய்து அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறுவோமாக!!!


அன்புடன் 
கெளரவ காதர் மஸ்தான் அவர்கள். 

"சமூகப் பின்புலத்தை இணைத்தே
இஸ்லாம் கடமைகளை விதித்தது" - அஷாத் சாலி! 

புனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

"இஸ்லாத்தின் உயரிய பார்வைகளை சரியாகப் புரிந்து செயற்படின், பல பிரச்சினைளுக்கு இலகுவாகத் தீர்வு கிடைக்கும். கடமைகள் அனைத்திலும் இஸ்லாம் சமூகப் பின்புலத்தையே பிணைத்துள்ளது. ஏழை, எளியோரின் பசி, பட்டினி, அன்றாட, அடிப்படை தேவைகளை உணர்வதற்கே புனித நோன்பும் எம்மீது கடமையாக்கப்பட்டது. இவற்றை உணர்ந்த மறுகணம் சமூகத்திலுள்ளோரின் தேவைகள் முறையாகப் பூர்த்தி செய்யப்படல் அவசியம்.

இதற்காகத்தான் "ஈதுல் பித்ர்" - "ஈகைப் பெருநாள்" என, இப்பெருநாள் பெயர் பெற்றது. ஸகாத், ஸதகா போன்ற கடமைகளும், சமூகத்திலுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை இல்லாதொழிப்பதையே வலியுறுத்துகிறது. இவ்விடயத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் இனிமேலாவது கவனம் செலுத்துதல் அவசியம். 

அதுமட்டுமன்றி அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், ஆர்வமுள்ளோரை ஒன்றிணைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இக்கூட்டுக் கடமைகளை அமுல்படுத்தின், 'மாளிகாவத்தை' போன்ற சோக சம்பவங்களை இனிமேலாவது  தவிர்க்க முடியும். 

அடிப்படைத் தேவைகளுக்காகவே இவ்வாறு மக்கள்  உயிரிழக்கையில், அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேவைகளும் இன்று எழுந்துள்ளன. அரசியல் ரீதியான ஓரங்கட்டல்கள் முஸ்லிம்களின் மத உணர்வு, உரிமைகளிலும் கை வைக்குமளவுக்கு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இவ்விடயத்தைக் கண்டுகொள்ளாத அரசின் போக்கினால், முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இறுதிக் கிரியைகளையே கொச்சைப்படுத்தும் இந்த அரசு, வேறெந்தத் தேவைகளை தரப்போகின்றது? என்பதே இன்றைய ஆச்சர்யங்களாக உள்ளன. 

எனினும், இவற்றை வென்றெடுக்கும் வரை நிதானமிழக்காது செயற்பட வேண்டும். ஒருவருக்கொருவர் உரையாடல், பழகுதல் விடயங்களில் இடைவெளி பேணி, ஊரடங்குச் சட்டம், "மாஸ்க்" (முகக் கவசம்) அணிதல் உள்ளிட்ட அரசின் உத்தரவுகளையும் மதித்து நடப்பது அவசியம்.

இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைவரும், எமக்கெதிரான சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்வைப் பிரார்த்தியுங்கள்."

-"ஈத் முபாரக்"-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் பெருநாள் வாழ்த்துச்செய்தி

இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆத்மார்த்தமாக புனித ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு என் உளமார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள் 
ஈத் முபாரக் 
குல்லு ஆமின் வஅன்தும் பிகைர் 
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால் 

கடந்த வருட நோன்பு மற்றும் பெருநாளை ஒருவகையான அச்ச சூழலில் கடந்தோம். இம்முறை இன்னொரு வகையான அச்ச சூழ்நிலையில் கழிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.

எம்மைப் பொறுத்தவரை ரமழான் என்பது மிகப்பெரும் அருள்களை சுமந்த மாதம். அது, உலகமே கொரோனா அச்சத்தால் அடங்கிப் போன சூழ்நிலையில்  அதை எப்படி நாம் முகம்  கொடுக்கவேண்டுமென்று நமக்கு பயிற்றுவித்து விடைபெறுவதாகவே நான் உணர்கின்றேன். 
நம் உள்ளங்களில் அது விதைத்த பொறுமையும், கட்டுப்பாடும், ஈகைப் பண்பும், இறைவன் மேல் பொறுப்பு சாட்டும் தவக்குல் பண்பும், இறையில்லம் செல்ல முடியாமல் இருப்பிடத்தில் தொழுகை எனும் கடமையை கடைப்பிடித்த கடமையுணர்வும்...... இந்த பூலோக சவாலை சமாளிக்க புனித ரமழான் நமக்கு தந்த உயர் பயிற்சி என்று உணர்ந்து கொள்வோம்.
பெற்ற பயிற்சிக்கு முரணாக செயற்படாமல் பெருநாள் தினத்தை ஆத்மார்த்தமாக அமைதியாக கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய உறவுகளுக்காக இறைவனிடம்  இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

எம்மைவிட்டும் விடைபெற்ற ரமழான் நாட்களில் நாம் அனைவரும் மட்டுமன்றி உலகளாவிய இஸ்லாமிய உம்மத்தும் இரு கரம் ஏந்தி ஏக வல்லவனிடம் கேட்ட பிரார்த்தனைகள் வீண்போகாது என்று நான் ஆழமாக விசுவாசிக்கின்றேன். 
இனிவரும் தினங்கள் இன்ஷா அல்லாஹ் எம்மை விட்டும் இந்த கொரோனா நீங்கும் காலமாக அமையும் என்று உறுதியாக நம்புகின்றேன். கொரோனாவுக்கு பிந்திய புதிய உலகு, அமைதியும் சமாதானமும் நீதியும் சுபீட்சமும் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். 

எனவே இந்த புனித பெருநாள் தினத்தில் நோய் நொடிகள் நீங்கிய, அநீதி அடக்குமுறைகள் அகன்ற  புதிய உலகம் பிறக்கவும் நம் நாட்டில் நீதியும் நேர்மையும் பலம்பெற்று இனவாதம், ஊழல் , அடக்குமுறை இல்லாத சுபீட்சமிக்க சமூக வாழ்வு மலரவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திகின்றேன். 

அனைவருக்கும் என் இனிய ஈத் முபாரக்.

தக்பீர் முழக்கத்துடன் பெருநாளை வீடுகளிலேயே குடும்ப உறவுகளுடன் அமைதியாகவும் சுகாதார வழி முறைகளைப் பேணியும் கொண்டாடுவோம்
- வை.எம்.எம்.ஏ. பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி

( ஐ. ஏ. காதிர் கான் )

தக்பீர் முழக்கத்துடன் நோன்புப் பெருநாளை, வீடுகளிலேயே குடும்ப உறவுகளுடன் அமைதியாகவும் சுகாதார வழி முறைகளைப் பேணியும் கொண்டாடுவோம். அத்துடன்,  கொரோனாவுடன் இணைந்து பயணம் செய்து சவால்களை வெற்றிகொள்ளவும், அந்தச்  சவால்களின் பின்னணியில்  எமது அன்றாட செயற்பாடுகளை  வெற்றியோடு முன்னெடுத்துச் செல்லவும், புனித நோன்புப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமாக. இதேவேளை,  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கெல்லாம்  அப்பால் நின்று, 
முன்னைய ரமழான் காலங்களை விட இம்முறை ரமழானில் தனவந்தர்களாலும் சமூக அமைப்பு உறுப்பினர்களாலும் பெரிய அளவில் மிகச் சிறப்பாக வறுமையில் வாழும்  சகோதரர்களுக்கு ஸக்காத் மற்றும் தான தர்மங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்காகவும் இத்திருநாளில் இறைஞ்சுவோமாக என, வை.எம்.எம்.ஏ. யின் தேசிய பதில் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி, தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   வை.எம்.எம்.ஏ. மற்றும் கிளைகளின்  யின் ஊடாக நாட்டின் பல பிரதேசங்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட செயற்திட்டங்கள் இம்முறை ரமழானில் விசேடமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வறுமையில் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இம்முறை தாராளமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நமது நாட்டைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவிலுள்ள வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும்,  நூற்றுக்கும் மேற்பட்ட செயற்திட்டங்களுக்கு முன்நின்று, தமது உதவி ஒத்தாசைகளை இம்முறை விசேடமாக  வழங்கியுள்ளமை குறித்தும் எமது இயக்கம் சார்பாக  நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதோடு, இன்றைய பெருநாள் தினத்தில் இவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  
   அவர் பெருநாள் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,  
   நமக்கு நாம் தீங்கிழைத்துக்கொள்வதும், பிறருக்கு நாம் தீங்கிழைப்பதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாவச்செயல் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் இந்தப் பெருநாளை மிகவும் அடக்கமாக புத்தாடை, குடும்ப தரிசனங்களைத் தவிர்த்து வீடுகளிலேயே  அனுஷ்டிக்க முயற்சிக்க வேண்டும்.
குடும்பத்தலைவர்கள் இந்த விடயத்தில்  பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.  
   இதேநேரம், வர்த்தக சமூகமும் இந்த கொரோனா  தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக தமது தொழிலை இழந்திருக்கின்றார்கள். தமது வர்த்தக நிலையங்களை மூடி பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமக்குக் கீழ் பணிபுரிகின்றவர்களின் வேதனங்களைக்கூட வழங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மிக முக்கியமான உண்மை. 
இதனை யாரும் மறுக்க முடியாது.  இவர்கள் சந்தித்த இழப்போடு ஒரு இழப்பாக இதனையும் ஆக்கிக்கொண்டு, பொறுமையுடன் இறைவனிடம்  பிரார்த்தனை புரியவேண்டும்.     கொரோனா தொற்றின் இத்தகைய நிலை, நிச்சயமாக எக்காலமும் நீடிக்கமாட்டாது.
அது மாறும். உலக நியதியும்  அது தான்.  இந்நிலைமை மாறி சந்தோஷமான ஒரு சூழல் நம்மத்தியில் நிச்சயம் வரும். இவ்வாறு  வருகின்ற போது, ஹஜ்ஜுப் பெருநாளைக் கூட சந்தோஷமாகக் கொண்டாடலாம். அந்த வாய்ப்பை இறைவன் நம் எல்லோருக்கும் தருவான் என்ற நம்பிக்கையோடு, இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் அரசின் கட்டுப்பாடுகள்,  சுகாதாரப்பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப முஸ்லிம் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.
   இன்றைய சூழலில் இலங்கை ஒரு அச்சுறுத்தலான கால கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 
இந்நோய் பரவலாக்கம் அதிகரித்து வரும் காரணமாக, உலகமே மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில், இக்கொடிய கொரோனா மிக வேகமாகப் பரவி, பல இலட்சம் உயிர்களைப் பலி கொண்டுள்ள நிலையில்,  அதிலிருந்து பாதுகாப்புப் பெற்று மீள்வதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். 
   கடந்த இரு வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்த நாட்டிலே வாழ்கின்ற எந்தவொரு சமூகமும் தமது பெருநாட்களை மிக விமர்சையாகக் கொண்டாடவில்லை என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.
    இந்த வருடம் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா  தொற்று  காரணமாக கிறிஸ்தவ சமூகம் உயிர்த்த ஞாயிறு தினக்கொண்டாட்டங்களையும், அவர்களது மிகப்பெரிய நிகழ்வுகளையெல்லாம் நிறுத்தி விட்டு, தங்களின் ஆலயங்களில் ஓரிரு மதப் போதகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்தக் கொண்டாட்டங்களையும் விழாக்களையும் இடைநிறுத்தியிருக்கின்ற அல்லது விமர்சையாகக் கொண்டாடாமல் தவிர்த்திருக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.
அத்துடன், இவ்வருட தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கூட கொண்டாடப்படாமல், மக்கள் வீதிகளுக்கோ, கடைத்தெருக்களுக்கோ வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில், ஊரடங்குச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தங்களது பெருநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். சித்திரைப் புத்தாண்டு  வந்ததா? சென்றதா? என்று தெரியாத நிலையில் கழிந்து சென்றது.
   ஆன்மீகத் தலைவர்கள், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய பெளத்த சமூகத்தினுடைய மிகப்பெரிய வெசாக் கொண்டாட்டங்கள் இடை நிறுத்தப்பட்டு, தங்களது நிகழ்வுகளை வீடுகளுக்குள்ளேயே நடாத்தி முடித்திருக்கின்ற இவ்வாறன நிலையில் தான், நாமும்  நோன்புப் பெருநாளைச் சந்தித்திருக்கின்றோம்.


    இந்நிலையில், ரமழான் முடிவடைந்த  கையோடு, அல்லாஹ்  அடியார்களாகிய எங்களுக்கு  நோன்புப் பெருநாளை பரிசாக அளித்துள்ளான்.    இப்பெருநாள் தினத்தை அல்லாஹ் மகிழ்ச்சிக்காகத்தான் நமக்கு  அளித்துள்ளான்.    ஆனாலும், நம் சமூகம் இச்சந்தர்ப்பத்தில் குழப்பம் அடைய வேண்டிய அவசியமில்லை.   பெருநாள் தினம் ஊரடங்காக இருப்பதால்,  அதற்குரித்தான விதத்தில் நாம் நடந்துகொள்வதே புத்திசாலித்தனமாகும்.
 மன நிறைவாக வீடுகளில் இருந்தவாறே குடும்ப உறவுகளுடன்  நோன்புப் பெருநாளைச்  சிறப்பிக்க நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், பெருநாளை  வீட்டில் கொண்டாடுவதே, நம் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமானதும் மிகப் பொறுப்பு வாய்ந்த கடப்பாடுமாகும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அனைவருக்கும் "ஈத் முபாறக்"

கொரோனா தொற்றிலிருந்து எமது உறவுகளையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கப்  பிரார்த்திப்போம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் - தேசியத் தலைவர்  லுக்மான் சஹாப்தீன்

( ஐ. ஏ. காதிர் கான் )

   இக்கட்டான சூழ்நிலையில் புனித ரமழான், இம்முறை நம்மிடமிருந்து விடைபெற்றுள்ள நிலையில், புனித "ஈதுல் பித்ர்" நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். இன்றைய பெருநாளில்,  கொரோனா தொற்று இலங்கையிலிருந்து நீங்கவும், எமது உறவுகளையும் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும்,  எல்லாம் வல்ல இறைவனிடம்  பிரார்த்திப்போமாக என, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் லுக்மான் சஹாப்தீன்,
தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
   ரமழான் நோன்பு காலங்களை இம்முறை  மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கழித்தோம். ஏழை, பணக்காரன் என்றில்லாமல், எல்லோரும் ஒரே மன நிலையில் நோன்பை அனுஷ்டித்தோம். இறைவன் நியதிப்படி, இம்முறை மன அமைதியோடு, மிகப்பொறுமையாக இருந்து நோன்பிருந்தோம்.
    இது, இறைவனுக்கு நாம் வழங்கிய மகத்துவம் மிக்க கண்ணியமும் கடப்பாடுமாகும். புனித ரமழான் காலம், வேதனையாகவும் சோதனையாகவும் இருந்தாலும், நோன்பின் மூலம் நாம் திருப்தியடைந்தோம். இறைவனுக்காகப் பொறுமையாக இருந்தோம்.  அத்துடன்,  இதன்மூலம் பல படிப்பினைகளையும் பெற்றோம். இந்தப் பொறுமையும், படிப்பினைகளும் நமது வாழ்க்கையில் தொடர்ந்தும் வரவேண்டும். இதுவே, இன்றைய பெருநாளில் நமது எதிர்பார்ப்பாக இருக்கவும் வேண்டும். இதேவேளை, எல்லாம் வல்ல இறைவனிடத்தில் முஸ்லிம்களின் ஈடேற்றத்திற்காகவும் நாம்  இந்தப் பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க வேண்டும். எமது பெற்றோர், குடும்ப உறவுகளுக்காகவும்  நாம் துஆச் செய்ய வேண்டும்.  இன்றைய பெருநாளில் நாம் மேற்கொள்ளும் மிகப் பெரிய நன்மையான கைங்கரியம் இதுவாகும்.
   எம்மையும், எம் உறவுகளையும், நாட்டு மக்கள் அனைவரையும் இக் கொடிய கொரோனா  தொற்றிலிருந்து பாதுகாக்கவும், இத்தொற்றிலிருந்து  பாதிக்கப்பட்டோரை விடுவிக்கவும்  எல்லாம் வல்ல இறைவனிடம் இன்றைய பெருநாளில்  கையேந்திப் பிரார்த்திப்போம்...!

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்யின் ஈகைதின பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்யின் ஈகைதின பெருநாள் வாழ்த்துச் செய்தி

இந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முடிந்து விட்டது வியப்பாக இருக்கிறது என்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் ஈகைதின பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,
உண்மையைச்சொல்லப்போனால் மக்களின் நாளாந்த வாழ்க்கைகள் முடக்கப்பட்டு, உலகமே இயல்பு நிலையை இழந்துள்ளதால், எமது வரலாற்றில் விசித்திரமான ஒரு  சூழலில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.  தொடர்ச்சியாக சுற்றிவளைக்கும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் ஒரு மாதம் நோன்பிருக்க "அல்லாஹ்" எமக்கு அருள்புரிந்தான். 

மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் நமது நாட்டிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் கொவிட் -19 வைரஸ் தொற்று நோயும் ஏனைய பிரச்சினைகளும் நீங்கி சகல மக்களும் நலமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அருள் புரிய வேண்டுமெனவும் இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் பாதுகாப்பகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

முஸ்லிம் தேசத்திற்குரிய அரசியல் கட்டமைப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் - பெருநாள் வாழ்த்துச் செய்தில் எம்.ரி.ஹஸன்அலி தெரிவிப்பு
(எம்.சஹாப்தீன்)
இன்று நாம் பெரிதும் வேதனைக்கு மத்தியில் நமது ஈதுல் பித்ர் தினத்தை அடைந்திருக்கிறோம். சோதனைகளும், வேதனைகளும் எம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில் இன்றைய நாளினை மிகவும் கவனமாகவும், கொண்டாட்ட மனவுணர்வுக்கும், செய்றபாட்டிற்கும் அப்பால் நின்று இறை தியானத்தில் கழித்து தக்பீர்களை முழங்கி அல்லாஹ்வை புகழ்ந்து இருப்போம்.
இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹஸன்அலி தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை முஸ்லிம்கள் இன்று கோவிட் 19 அச்சுறுத்தில் குறித்து சிந்திப்பதை விடவும், நமது நாட்டில் எமது இருப்புக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து சிந்திக்காது இன்று வாழும் நமது பிற்போக்குத்தனமானது எதிர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ற வரலாற்றை எழுதிவிடுவதற்கு வழியமைத்து கொடுத்து விடலாம்.
உண்மையில் நமது இருப்பியலின் உறுதித் தன்மையை நிலைபேறாக்கி வைப்பதற்கு தேவையான முஸ்லிம் தேசம் பற்றி சிந்திப்பதற்கும், அதற்கான அரசியல் கட்டமைப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை உணர தலைப்படாதவர்களாக நாமின்று வாழ்ந்துவிட்டு சென்றால், நமது எதிர்கால சந்ததிகள் மிகுந்த உக்கிரமான அடக்கு முறைமைக்குள் அகப்பட்டு அழிந்துவிடும்.


இது காலவரை நாம் இணக்க அரசியல் செயற்பாட்டில் மிகுந்த நம்பிக்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்திருக்கின்றோம். இதன் ஊடாக நாமும், நமது சமூகமும் உரிய பயன்பாட்டை அடைந்து கொள்வதிலிருந்து தவறி இருக்கிறோம். 

இணக்க அரசியல் இன்னுமின்னும் கட்டுண்டு நிற்காது. நமது தேசத்தை நிறுவுவது பற்றிய சிந்தனையிலும், அதன் செயற்பாட்டிலும் தொடர்ந்து பயணிப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் முஸ்லிம் தேசியம் என்கின்ற ஒற்றை இலக்கை நோக்கி திரட்சியடைந்து வெற்றி பெறுவதற்கு திடசங்கற்பம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாடலை இன்றைய எனது பெருநாள் வாழ்த்தாகவும், சிந்தனையாகவும் முன் வைக்கின்றேன்.

பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன : சட்டத்தை மதித்து பெருநாள் கொண்டாடுவோம் - எச்.எம்.எம். ஹரீஸ். 
================================

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்ற நாம் தியாகத்தை உணர்ந்து இம்முறை நோன்புப் பெருநாளை நாட்டு மக்களின் நன்மை கருதி, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து எமது வீடுகளிலேயே எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தொடர்ந்தும்,

சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று தாக்கமானது எமது நாட்டிலும் இதுவரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலையே காணப்படுகிறது. கொரோனாவின் தாக்காத்தினால் ஐவேளை தொழுகைகள் கூட இடம்பெறாத வண்ணம் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு அதான் ஒலிக்க மாத்திரமே பள்ளிவாசல்கள் திறக்கப்படுகிறது.

கடமையான ஐவேளை தொழுகைகளை பள்ளிவாசல்களுக்கு சென்று இமாம் ஜமாத்துடன் தொழுது கொள்ள முடியாமல் கவலையடைகின்றோம். அது மாத்திரமல்லாமல் ரமழானில் கூட்டாக நிறைவேற்றுகின்ற தராவீஹ், கியாமுல் லைல் போன்ற தொழுகைகளையும் தொழ முடியாமல் தவிக்கும் நிலைக்கும் ஆளாகியும் உள்ளோம்.

தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகளை எளிமையான முறையில் பெரும்பான்மை இன சமூகம் கொண்டாடியதை ஊடகங்கள் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக்கியிருந்தன. நாட்டின் சட்டதிட்டங்களிற்கு மதித்து தம் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடியிருந்ததாக செய்திகளையும் அவ் ஊடகங்கள் வெளியிட்டது.

பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. நாம் புத்தாடைகளை கொள்வனவு செய்து சட்டத்தை மீறி பெருநாள் கொண்டாடுவதாக  இனவாத ஊடகங்கள் பெரும்பான்மை மக்களிடையே விமர்சனமாக கொண்டு சேர்த்து விடுவார்கள். அது மேலும் எமது சமூகத்தின் மீது பழி போடும் செயலாக மாறிவிடும்.என்பதை நாம் அறிந்து நடக்க வேண்டும். 

நமது நாட்டில் சுகாதார தரப்பினால் கொரோனா வைரஸினை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பங்களில் நாமும் அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு முஸ்லிங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார்கள் என்ற பழி சொல்லை சுமக்க கூடியவர்களாக நாம் மாறிவிடக் கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.

ஊடரங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் கெளரவமாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிங்கள் ஏனைய சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதுவே எமது மார்க்கமும் கற்றுத் தந்திருக்கிறது. பெருநாள் தினத்தன்று நாட்டின் நிலை, நம் சக சகோதரர்களின் வறுமையை கவனத்தில் கொண்டு பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்  என அவ்வறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

பெருநாள் வாழ்த்து - அகில இலங்கை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக்
இக்பால் அலி
இம்முறை ஒர் இக்கெட்மான கால கட்டத்தில் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும்  என் உள்ளம் கனிந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன் என்று அகில இலங்கை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் தெரிவித்தார்.
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு அகில இலங்கை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் பிரதித் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கொரோனா வைரஸ் தொற்றினால் முழு உலகமே ஆட்டம் கண்டுள்ளது. எமது நாட்டு சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு இணங்க நாங்கள் நோன்புகளை நோற்று எமது வீடுகளைப் பள்ளிசால்களாய் மாற்றி மிக எளிய முறையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தோம். அவை போன்று   மிகவும் அமைதியான முறையில் பெருநாளைக் கொண்டாடும் இச் சூழ்நிலையில்  அதிகளவுக்கு விழிப்புடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ளவது மிக அவசியமாகும்.
புனித நோன்பு எப்பொழுதும் முஸ்லிம் மக்களது உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவதாக மட்டுமன்றி ஏழை எளியவர்களின் வயிற்றுப் பசியை அறிவதற்காகவும் இல்லாதவர்களுக்கு கட்டாயம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட பரிசுப் பொதியாகும்.  இத்தகைய நல்ல செயல்கள், பண்புகள்  அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து  இரண்டறக் கலந்து சமூகத்திற்குப் பொருத்தமான நற்பிரஜைகளாக  மாற்றக் கூடிய படிப்பினைகள் நோன்பு மாதத்தில் பொதிந்துள்ளன.  
அந்த வகையில் முஸ்லிம்கள் ஒரு முன்மாதரியான சமூகமாக உருவாவதற்கு நோன்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எனவே இந் நன்நாளில்  சகலரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனும் பரஸ்பரம் நல்லெண்ணத்துடனும் ஏக வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்பதுடன் மீண்டும் ஒரு முறை ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்  என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி

சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளிப்போம்;
-பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்தல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற இன்றைய இக்கட்டான சூழ்நிலையில்  எமது புனித மார்க்கமான இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அனைவரும் சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுவோம் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அறைகூவல் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

முஸ்லிம்கள் மீதான இனவாத நெருக்குவாரங்கள் காலத்திற்குக் காலம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இப்போது அந்த இனவாதம் உச்ச நிலையில் தலைவிரித்தாடுவதானது இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது. இன்றைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையிலும் கூட முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாத அடக்குமுறை தொடரவே செய்கிறது.

ஆனால், எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நிதானத்தை இழந்து செயற்பட முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எமது சன்மார்க்கம் காட்டிய வழியில் பொறுமை, சகிப்புத்தன்மையுடன் முற்போக்கான செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
வல்ல இறைவன் மாத்திரமே எமது பாதுகாவலன் என்கிற நம்பிக்கையில் இருந்து நாம் ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறையச்சம் பெற்றுள்ள நாம் இந்த நம்பிக்கையுடன் சமூக ஒற்றுமையைப் பேணி, மாற்று சமூகத்தினருடன் ஐக்கியமாக வாழ்ந்து எமது தாய் நாட்டுக்கு உழைக்கின்ற சமூகமாக எம்மை அடையாளப்படுத்துவதற்கு இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம்.

இன்று உலகைப் புரட்டிப் போட்டிருக்கின்ற கொவிட்-19 எனும் கொடிய நோயிலிருந்து முழு மனித சமூகத்தினரையும் பாதுகாக்குமாறு இன்றைய ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். 
ஈத்முபாரக்.

அரசின் சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து நடப்போம்
புரவலர் ஹாஷிம் உமர்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின்
சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து தமது இல்லங்களிலேயே
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்
இஸ்லாமிய சகோதரர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டில்லா உவகையடைகிறேன் என்று தெரிவித்துள்ள டவர் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர், முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாகவும் அமையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புனித மிகு ரமழான் மாதம் எங்களுக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்து விட்டு எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளது.
இந்நிலையில் புனித ரமழான் கற்றுத்தந்த சகிப்புத் தன்மை,விட்டுக்கொடுப்பு,வாரிவழங்கும் பண்பு மற்றும் இதர நற்காரியங்களை எமது வாழ்வில்
தொடர்ந்தும் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
இன்று புனித நோன்புப் பெருநாளை மிகவும் இக்கட்டான ஒருசூழ்நிலையில் நாம் வீடுகளில்
கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம். எனவே இன்றைய தினத்தில்
களியாட்டங்களில் ஈடுபடாது வீடுகளில் இருந்த வாறே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன்
அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் வழங்கியுள்ள ஆலோசனைகளையும் தவறாது பின்பற்றி நடக்க வேண்டும்
. அதாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது இஸ்லாமியர்களின் கடமையாகும்.

பாதுகாப்பான சூழலில் ஒன்றுபட்ட வாழ்வுக்காய் பிரார்த்திப்போம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னால் பிரதியமைச்சர்
அப்துல்லா மஃறூப்

_ஹஸ்பர் ஏ ஹலீம்_

 உலக வாழ் முஸ்லிம்கள் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு துயரங்களுக்கு மத்தியில்   தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று முழு இறை திருப்தியோடு பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் என திருகோணமலை மாவட்ட 
 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவ் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாட்டில்   கொவிட் 19 தொற்று முஸ்லிம்களால் பரப்பப்படுவதாக இனத்தினாலான காழ்புணர்ச்சியில் எம்மீது பல இலத்திரனியல் சமூக  ஊடகங்கள் வாயிலாக  பழிசுமத்தினார்கள் அதனை தொடர்ந்து கொரோனா    தாக்கத்தினால் ஏட்பட்ட  மரணங்கள்   முஸ்லீம் ஜனாஸாக்கள் சர்வதேச சமவாயத்தை மீறி 178 நாடுகளில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்கையில் இலங்கையில் எரிப்பு செய்தார்கள் எங்களது உள்ளங்கள் வேதனையால் கொதித்தது. நாங்கள் நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடியுள்ள நிலையில்,    இந்த    அசாதாரண சூழ் நிலையிலும் அதனை தொடர்ந்து உருவான இன ரீதியான முஸ்லிம்கள் மீது வலிதொடுக்கும்    பெரும் வக்கிர தனத்துக்கு   மத்தியில்  உடல் உளரீதியான துன்புருத்தல்களுக்கு முகங் கொடுத்து நோன்புகளை நோற்று இன்றைய நோன்புப் பெருநாளை இறை வழிகாட்டலில் கொண்டாடுகிறோம்.

நாட்டின் பல்லின ஒற்றுமையை வலியுறுத்தி சகல இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வாழ்வதற்கு இந்நாள் அனைவருக்கும் துணை புரிய எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

இந் நாட்டின் தற்போதைய நிலையில் 1000 வருடங்களுக்கு மேல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாகவும் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்த முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக  அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கட்சி பேதமற்ற முறையில் இன்றைய சூழ் நிலையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அல்குர் ஆன் அருள் பெற்ற மாதம் , பத்ர் யுத்த தியாக வெற்றி போன்றவற்றை ஞாபகபடுதுகின்ர இம்மாதத்தில் நாம் செய்கின்ற நற்செயல்களுக்கு பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் எமக்கு அளிக்கின்றான் அத்தோடு நாம் செய்த தவறான விடயங்களுக்கு இம்மாதத்தில் பாவமன்னிப்பை பெறுவதற்கான சந்தர்பத்தை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தியிருக்கிறான் அந்த வகையில்

அல்லாஹ்வின் இறை கட்டளைக்கு அஞ்சி முகம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்கலின் அடிப்படையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும் அமைத்து கொள்ளவேண்டும். இதிலேதான் இன்றைய காலகட்டத்தில் உலக வாழ் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளை பெறமுடியும்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களுடைய இருப்பை உறுதிப்படுத்தும் தீர்மானமிக்க காலப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம் பல்லின சமூகமாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து கொண்டு வரும் முஸ்லிம்கள்; ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நீடித்து நிலைப்பதற்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் சிறந்த எதிர்காலதிற்கும் பங்களிக்கும் வகையில் உறுதி கொள்வோம்.

அத்தோடு நம்மை கடந்து சென்ற ரமழான் மாதத்தில் நாம் பெற்ற அனுபவங்களை எமது வாழ்கையில் கடைபிடித்து நல்ல சிந்தனைகளுக்கும் , நல்ல வாழ்க்கை முறைக்கும் துணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

------

சமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.: தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா

நூருல் ஹுதா உமர்

நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது ;என்றுமில்லாதவாறு புனித கஹ்பா மூடப்பட்டு, பள்ளிவாசல்களிலும் நல்லமல்கள் நிறுத்தப்பட்டதால் வீடுகளைப் பள்ளிவாசல்களாகவும் குடும்பத்தினரை ஜமாஅத்தினராகவும் கொண்டு நாம் புனித ரமழானில் நல்லமல்களில் ஈடுபட்டிருந்தோம்.இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் பெருங்கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாம் புரிந்த நல்லமல்களை ,நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்வான்.

தாய்மார்கள், சகோதரிகள்,குறிப்பாக இளைஞர்கள் பொறுமை பேணி ரமழான் மாத நல்லமல்களில் ஈடுபட்டு, எமது சமூகம் சார்பான சிறந்த செய்திகளைச் சொல்லியுள்ளனர்.இதே போலவே இப் பெருநாளையும் சமூக இடைவெளிகள், ஊரடங்கச் சட்ட திட்டங்களைப் பேணிக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

கடந்த காலங்களிலும் எமது நாட்டில் புனித ரமழான் காலங்களில் நாம் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தோம்.இந்நிலையில், இம்முறை வரலாற்றிலே கண்டிராத கடும் சோதனைகள், இன்னல்களால் மனித சமூகமே பெரும் துன்பங்களுக்குள் உழலும் சூழ்நிலையில் முஸ்லிம்களும் இம்முறை ரமழானை எதிர் கொண்டனர்.

எனினும் இந்நிலைமைகள் நீண்ட கால யுத்த கெடுபிடிகளால் பல நோன்பு காலங்களில் திணறித் திண்டாடிக் கொண்டிருந்த பலஸ்தீன் போன்ற நாடுகளில் அமைதியையும் நிம்மதியான ரமழான் சூழலையையும் ஏற்படுத்தியுள்ளமை எமக்கு ஆறுதலளிக்கிறது.மேலும் இக்காலமானது பெரும் பெரும் வல்லரச நாடுகளின் பன்முக சக்திகளையும் ஆட்டங்காணச் செய்திருக்கிறது. இவை சர்வ வல்லமையும் ஆண்டவனுக்கே உரித்தானதென்பதை மேலும் நிரூபித்திருக்கிறது.இதையுணர்ந்து அந்த வல்ல நாயனைப் பிரார்த்திப்போமாக.

எமது பிரார்த்தனைகள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமானதன்றி முழு மனித சமூதாயத்துக்குமானதாக அமையட்டும்.மேலும் இப்பெருநாள் தினத்தில் சகலருக்கும் "ஸகீனத்"என்ற அமைதி கிட்டப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது பெருநாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தி

(ஆதிப் அஹமட்)

உலகம் பூராக ஈதுல் ஃபித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள பெருநாள் விசேட வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புனித நோன்பையும் பெருநாளினையும் ஒரு வித்தியாசமான சூழ்நிலையிலே நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கின்றோம்.ஆயுட்காலத்திலே சந்தித்திராத ஒரு விஷேடமான சூழ்நிலையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.கொரோனா நோய் அச்சம் உலகெங்கிலும் ஆட்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் உலகம் மீண்டும் ஒரு மீழ்வாசிப்பு சூழ்நிலையினை நோக்கி நகர்ந்திருக்கின்றது.இந்த சூழ்நிலை  நம் ஒவ்வொருவருக்கும் நம் ஒவ்வொருவரின் செயற்பாடுகளையும் மீள்பரிசீலனை  செய்துகொள்வதற்கான நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.இம்முறை புனித றமழான் காலத்தில் பள்ளிவாயல்களில் அமல்கள் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும் நம் குடும்பங்களோடு வீடுகளிலே நல்லமல்கள் செய்யக்கூடிய பெறுமதியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதுபோலவே குடும்பங்களோடும் மிக நெருக்கமான முறையில் இந்த பெருநாளையும் கொண்டாட பெறுமதியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே வீடுகளில் சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி சட்டங்களையும் மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் என யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகையும் நாட்டையும் பீடித்துள்ள அவலம் நீங்க நாம் எல்லோரும் பிரார்த்தித்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற வேண்டுகிறேன் : அக்கரைப்பற்று மாநகர முதல்வர்.

நூருல் ஹுதா உமர்

மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் புனித ரமழான் மாதத்தின் மாண்புகளையும், நன்மைகளையும்  குறைவில்லாது பெற கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்து இனிய பெருநாளை அடையவைத்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். அல்-ஹம்துல்லாஹ் !

உலகையும், எம்மையும் அச்சுறுத்தி காலாதிகாலமாக நாம் இன்பமாய் அனுபவித்த பெருநாளை இம்முறை மிகவும் கவனமாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அர்பணிப்புடன் கொண்டாடி, ஏனைய மதத்தினர் கடந்த காலங்களில் கொண்டாட முடியாமல் போன உற்சவங்களை மனதில் கொண்டு, எப்போதும் முன்னுதாரணமான சமூகமாக நாம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

பெருநாள் என்பது புத்தாடை அணிந்து, உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, பயணங்கள் மேற்கொண்டு, சிறுவர்கள், குழந்தைகள் மகிழ்வோடு கொண்டாடி, ஏழைகளுக்கு உணவளித்து, மனதிற்கு இதமாக கடந்து செல்லும், இறைவனின் பறக்கத் பொருந்திய புனிதமான நாள் அது. இப் பெருநாள் தினத்தில் வீடுகளில் இருந்தபடியே பொருநாள் தொழுகையினை தொழுது, உலகையும் நாட்டையும் பீடித்துள்ள அவலம் நீங்க நாம் எல்லோரும் பிரார்த்தித்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற வேண்டுகிறேன் !

மலர்ந்திருக்கும் இப்புனித மிகு நோன்புப் பெருநாளினை அடையும் பாக்கியத்தினை கிடைக்கப்பெற்ற உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகிறேன் என மேலும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி.
கொரோனா எனும் வைரஸ் முழு உலகையும் ஆட்டிப்படைத்து நிற்கும் இந்த வேளையில் இந்த புனித ரமழான் மாதத்தினை தராவீஹ் தொழுகைகள் இல்லாமலும், ஜூம்மா தொழுகைகள் இல்லாமலும், இறுதி பத்து இஹ்திகாப் இருப்பை இருக்க முடியாமலும் பாரிய தியாகத்தோடும் மன உளைச்சலோடும் கழித்து விட்டோம். நமது நாட்டு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தும், இந்த கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் நாம் செய்த இந்த தியாகத்தை புனித நோன்புப்பெருநாள் தினத்தன்று யாரும் வீணடித்து விடக்கூடியாது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், எமது நாட்டு அரசாங்கத்தின் அறிவுரைகளை கருத்திற்கொண்டும் இந்த வருடத்திற்கான புனித நோன்பு பெருநாளை எமது வீடுகளிலேயே கொண்டாடி எமது நாட்டின் பாதுகாப்பிற்கும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவோம்.

உங்கள் அனைவருக்கும் இந்த புனித நோன்புப்பெருநாள் தினத்தன்று ஏக இறைவனின் திருப்பொருத்தம் கிடைப்பதற்காகவும், இந்த கொடிய நோயிலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாத்திடவும்  அல்லாஹ்விடம் உளத்தூய்மையாய் பிரார்த்திகின்றேன்.

வாழ்வொழுங்குகளை கடைப்பிடித்து முன்மாதிரியான சமூகமாக திகழ்வோம்;
கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் பெருநாள் வாழ்த்து

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இத்தேசத்தின் ஓர் அங்கமான முஸ்லிம்கள், வாழ்வொழுங்குகளை பேணி நடப்பதன் மூலம் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வோம் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பு எமக்கு கற்றுத்தந்துள்ள அனைத்து நற்பண்புகளையும் இறையச்சத்தையும் முழு வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதன் மூலமே இறைவன் விரும்புகின்ற நல்லடியார்களாக எம்மால் மாற முடியும். மேலும், நோன்பு நோற்று, ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் வீண் செலவுகளை தவிர்த்து, சமூகத்தின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பயனுள்ள விடயங்களுக்கும் வாரி வழங்குபவர்களாகவும் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் சதி நாசகார சக்திகளின் வலைக்குள் சிக்குண்ட எம்மில் ஒரு கும்பல், ஏப்ரல்-21 அன்று மேற்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, வன்முறைமுகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையால், எமது கடந்த ரமழான் நோன்பு பெரும் அச்ச சூழ்நிலையில் கடந்து சென்றது.

அவ்வாறே தற்போது கொவிட்-19 எனும் கொடிய நோய்க்கு மத்தியிலும் முஸ்லிம்கள் மீது இனவாத வெறித்தனமொன்று அரங்கேற்றப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வருட ரமழானை நிறைவு செய்திருக்கிறோம். கொவிட்-19 காரணமாக உயிரிழந்த எமது சகோதரர்கள் சிலரும் அத்தொற்று ஏற்படாமல் இயற்கை மரணமடைந்த இன்னும் சிலரும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமல், எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் நெஞ்சங்களையும் எரித்து விட்டிருக்கின்றன.  

எவ்வாறாயினும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தாம் எதிர்கொள்கின்ற துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து, எவரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டி, தேசிய ஐக்கியத்தை உறுதி செய்திடுவோம்.

மேலும், கொவிட்-19 தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலப்பகுதியில் தேச நலன் சார்ந்த விடயங்களில் முஸ்லிம்கள் மிகக் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இம்முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை தமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம்  கொவிட்-19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து, எமது முன்மாதிரியை முழு உலகுக்கும் பறைசாற்றுவோம். அத்துடன் உலகைப் பீடித்துள்ள இக்கொடிய நோய் இல்லாதொழிய இத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.  

------------------------------------------------------------------------------------------------
வல்ல இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவுமே இல்லை அவன் விதித்த நியதிகளின் படியே நாம் இயங்குகிறோம் என்பது எமது வாழ்க்கையின் அடிப்படை தத்துவமாகும். சோதனைகள் நிறைந்ததே எமது வாழ்க்கை அந்த வகையில் இன்றைய சவால் நிறைந்த உலகை வெற்றிகொள்ள முழுமையான "தீன்"தாரிகளாக மாற நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியிலேயே முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் இஸ்லாமிய அடிப்படையில் இஸ்லாத்தை வாழ வைப்பதற்காக வாழுதலாகும். 

அந்த வகையில் நம்மை மாற்று சமூகத்தவர்கள் எதிரியாக நோக்கினாலும் நாம் நற்பண்புகளோடு உறவாடுதலே நமது மார்க்கத்தை அவர்களிடம் கொண்டு செல்ல வழிவகுக்கும். 

இஸ்லாத்தின் வளர்ச்சி, பண்பாட்டின் வளர்ச்சியும் எடுத்துக் காட்டுகளுமே அன்றி வெறும் மார்க்க கடமைகள் மாத்திரம் அல்ல.

பல்லின சமூகத்தின் மத்தியில் நமது உயர் தரமான பண்புகளை வெளிப்படுத்துகிற போது புனித இஸ்லாத்தை இலகுவாக கொண்டு செல்ல முடியும். 

எனவே நமது நற்பண்புகளை வெளிபடுத்துவதனுடாக இனபேதம் கடந்து ஒற்றுமையாக பயணிக்க முயற்சிப்போமென தாழ்மையாக வேண்டுகிறேன்.

குறைந்தபட்சம் முஸ்லிம் சமூகத்தை அவர்களின் எதிரிகளாக, குற்றவாளிகளாக, நேர்மையற்றவர்களாக பார்ப்பதில் இருந்து விடுபடுவோம். பாமர அப்பாவி மாற்று மத மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இனவாத தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம்.

மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்

நமது செயற்பாடுகள் முன்மாதிரியாக அமையட்டும் : தே.கா கொள்கை அமுலாக்கள் சட்டவிவகார செயலாளர்  சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்.

நூருல் ஹுதா உமர்

அல்லாஹ்வை பயந்து, அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, றமழான் மாதம் முழுவதும் நோன்பை நிறைவேற்றி இறுதியில் பெருநாளை கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் தூய்மைமிக்க ஒரு சமூகமாக மாறி, ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

என தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கள் சட்டவிவகார செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை பயந்து, அவனது உண்மையான அடியானாக மாற வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவார்த்தத்தின் பேரிலேயே நம்மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்".

ஒரு தூய்மையான திசைக்கு திரும்பி, அதன் ஊடாக பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் இலக்காகக் கொண்டு பயணிக்கும் நாம் மாற்று சமூகத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பிழையான- தப்பபிப்பிராயங்களை களைந்து, நல்லபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழியேற்படுத்தும்.

அதன் மூலம் மாற்று சமூகத்தவர்களுடன் பரஸ்பரம் நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளையும் நெருக்கடிகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றேன். நாடு எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம், நிம்மதி, சமாதானத்திற்கு முஸ்லிம்களாகிய நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப பிராத்திக்கிறேன் : ஏ.எல்.எம்.சலீம்

நூருல் ஹுதா உமர்

நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தேசிய காங்கிரஸின் பொதுத்தேர்தல் வேட்பாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் , கொரோனா பரவல் நிலையால் வழமைக்கு மாறாக வீட்டிலிருந்தே அமல்களைச் செய்து புனித ரமழானை அமல்களால் அலங்கரித்து பெருநாளைக் கொண்டாடும்  அனைவருக்கும் உங்கள் சகோதரனாக, நண்பனாக எனது உளம்கனிந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஈத் முபாறக் என தெரிவித்துள்ளார்.

தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றையநாளில் திடசங்கற்பம் பூணுவோம் : தே.கா. தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என்.ஹுதா.

முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பையும்,உரிமைகளையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும், அல் மீஸான் பௌண்டசனின் தவிசாளருமான யூ.எல்.என்.ஹுதா விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

"முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் இன்னும் முற்றுப் பெறாமல் அங்கும் இங்குமாக தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனையுடைய அரசியல் சக்தியின் தேவை உணரப்படுவதனால் அத்தகைய சக்தியொன்றை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமது சுகபோகங்களுக்காக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ளாத வரையில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தனது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சமய, மத, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, பொருளாதார துறைகளுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் காணிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள், சமூகம் வேண்டி நிற்கின்ற இத்தகைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

--

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி! 
ஏ.ஜே.எம். முஸம்மில்.
வடமேல் மாகாண ஆளுநர் 
இம்முறை புனித நோன்புப் பெருநாளை புதியதொரு சூழலில் கொண்டாடும் எமது  இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்குப் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக எமது சகோதர சிங்கள, தமிழ் மக்கள் தங்களுடைய பண்டிகைகளை தமது வீடுகளிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடியதைப் போன்று, இலங்கை வாழ் முஸ்லிம் மக்களும் சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பேணி, சமூக இடைவெளிகளைப் கடைப்பிடித்து, முகக்கவசங்கள் அணிந்து அமைதியான முறையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அதே போன்று ரமழான் மாதத்தில் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளையும், இறையச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் எடுத்து நடக்க உறுதி பூண வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று முழு உலகையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இன்று பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு, வீடுகள் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டுள்ளது. ஐங்காலத் தொழுகைகள்,  குர்ஆன் ஓதுதல், தராவிஹ் தொழுகை போன்ற நற்காரியங்களை குடும்பமாக நிறைவேற்ற எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. இந்த நற்காரியங்களை தொடர்ந்து மேற்கொள்வதன் ஊடாக இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக எம்மால் மாறமுடியும்.

அதேபோன்று வைரஸ் தொற்றுக்கு எதிராக இன மத வேறுபாடுகளின்றி  போராடும் ஜனாதிபதி, பிரதமர் சுகாதாரத் துறையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து துறைசார் ஊழியர்களுக்கும் இந்த புனிதப் பெருநாள் தினத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும்,  இதுபோன்ற கொடிய நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்து, ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்தவர்களாக வாழக்கூடிய ஓர் மனித சமூகமாக எம்மை ஆக்கியருள்வாயாக என்றும் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்  "ஈத் முபாரக்".

நோன்புப் பெருநாள் வாழ்த்து -அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன
மாவத்தகம நிருபர்
இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
முழு உலகமும் முடக்கப்பட்ட நிலையிலும் எமது நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தலுக்கு இணங்க அந்த ஒழுங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப புனித ரமழான் நோன்பை நோற்றோம். அதே போன்று இந்த நோன்புப் பெருநாளை அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எமது வீடுகளில் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுனால் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு எமது நாட்டின் சிங்கள தமிழ் சகோதரர்கள் தங்களுடைய சித்திரைப் புத்தாண்டை மிக எளிமையான முறையில் கொண்டாடினர்.  கிறிஸ்த சமய சகோதரர்கள் தங்களுடைய உயிர்த்த ஞாயிறு தினத்தை மிக எளிமையான முறையில் கொண்டாடினர்.   பௌத்த சமயத்தவர்கள் புனித வெசாக் நோன்மதி தினத்தை மிக அமைதியாகக் கொண்டாடினர்.

இம்முறை நாங்களும்  புனித நோன்புப் பெருநாளை தங்களுடைய வீடுகளில் இருந்தவாறு மிக எளிமையுடன்  கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளன.
எனவே மார்க்கத்தில் இல்லாத செயல் முறைகளைச் செய்தோ அல்லது பட்டாசிகள் கொளுத்தியோ எமது சமூகத்திற்கு இழிவான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடாமல்  இந்த இக்கெட்டான காலத்தை உணர்ந்து நாம் அனைவரும் மிக அமைதியுடன் கொண்டாட வேண்டும். 

எனவே இந்த நாட்டின் சட்டத்தையும் சுகாதார துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தலை மதித்து  மிகவும் அமைதியான முறையில் கொண்டாடும் அனைத்து உள்ளங்களும் என் நெஞ்சம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்பால் அலி
23-05-2020

பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகின்றது - கல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு.

(சுஆத் அப்துல்லாஹ்)

ஒரு மாத காலம் புனித நோன்பினை நோற்று, நல்லமல்கள் செய்து அல்லாஹ்வின் திருப்தியினை எதிர்பார்த்த நிலையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற சகல முஸ்லிம்களுக்கும் குறிப்பாக கல்குடா பிரதேச மக்களுக்கும் கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகின்றது.

இவ் வருட புனித ரமழான் நோன்பானது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சோதனை மிகுந்ததொரு கால கட்டத்தில் வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே புனித நோன்புப் பெருநாளையும் நாம் கொண்டாட வேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
பல சிரமங்களுக்கு மத்தியில் பொறுமையுடன் புனித ரமழான் நோன்பினை நோற்று, பள்ளிவாயல்கள் பூட்டப்பட்ட நிலையிலும் தங்கள் வீடுகளில் குடும்ப சகிதம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நோன்புப் பெருநாள் தொழுகையினையும் தங்கள் வீடுகளில் நிறைவேற்றிய நிலையில் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

நோன்பானது ஏழைகளின் பசியினை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான மனப்பாங்கினை ஏற்படுத்துவதுடன் பொறுமை,. சகிப்புத் தன்மை, தலைமைத்துவக் கட்டுப்பாடு, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற இன்னோரன்ன மனித வாழ்விற்கான மனித விழுமியங்களையும் கற்றுத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் காலப்பகுதியில் கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பன இப் பிரதேச மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வழங்கிய அறிவுறுத்தல்களையும், சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடித்து கட்டுப்பாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொண்டமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு.


இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள். இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள். Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.