வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - அரசு தீர்மானம்..நாட்டின்  அமைதியை  பேணுவதற்காக   முக்கிய சட்டவிதிகளை  அரசாங்கம்  அமுல்படுத்தியுள்ளது.
  இந்த  சட்ட விதிமுறைகளுக்கு  அமைவாக  நாட்டின்  அமைதியை  சீர்குலைத்தல்  ,  வதந்திகளை  பரப்புதல்  மற்றும்   வன்முறைகளை தூண்டுதல்   போன்ற  செயற்பாடுகளுக்கு  எதிராக  கடும்  சட்ட நடவடிக்கைகளை  அமுல்படுத்த அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. 

அவ்வாறு  இந்த  சட்டவிதிகளை  மீறுபவர்களுக்கு   சிறைத்தண்டனை அல்லது  கடூளிய  சிறைத்தண்டனை  வழங்கப்படும் என்றும்  அரசாங்கம்  அறிவித்துள்ளது. 

இன்று  வெள்ளிகிழமை அரசாங்க  தகவல் திணைக்களத்தினால்  வெளியிடப்பட்ட  விசேட  ஊடக  அறிக்கையிலே  மேற்குறிப்பிட்ட சட்டவிதிகள் தொடர்பாக  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்களிடத்தில் அமைதியை  குலைக்கும்  வகையில்  அல்லது  ,  மக்களை  அச்சுறுத்தும்  வகையிலான  பொய்யான  வதந்திகளை  வாய்மொழி மூலமாகவோ அல்லது  வேறுவழிகளிலோ   தெரிவித்தல்  ,  பரப்புதல்  மற்றும்  பரவச்செய்தல் என்பன   2019 ஆம்  ஆண்டின்  1ஆம்  இலக்க  அவசரகால  ( நானாவித   ஏற்பாடுகளும்  தத்துவங்கள் )  ஒழுங்கு  விதி  32 இற்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.  இத்தகைய செயல்களை புரிந்தால் மேல் நீதிமன்றிலோ அல்லது  நீதவான் நீதிமன்றிலோ ஆஜர்படுத்தப்படுவதுடன்,  மூன்று மாதங்களுக்கு குறையாததும், 5 வருடங்களுக்கு அதிகரிக்காததுமாக சிறைத்தண்டனை வழங்கப்படும்.  

அத்துடன், இன, மதங்களுக்கிடையில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்படல்  மற்றும்   அவ்வாறான  செயல்களுக்கு  ஆதரவு  வழங்கல் என்பன 2007 ஆம், ஆண்டின் 56 ஆம்  இலக்க, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்  மீதான சர்வதேச சாசனத்தின் பிரிவு 03 (1) இன் பிரகாரம்  தண்டனைக்குரிய  குற்றமாகும். 

ஆகவே, இத்தகைய  குற்றத்தை  புரியும்  நபர்  மேல் நீதிமன்றில்  ஆஜர்ப்படுத்தப்படுவதுடன், முறையான  விசாரணை களுக்கு பின்னர் அத்தகைய குற்றசெயல் புரிந்துள்ளார் என நிருபணமாகும் பட்சத்தில் 10 வருடங்களுக்கு  குறையாத  கடூளிய சிறைத்தணைடனைக்கு  உள்ளாக்கப்படுவார். 

மேலும்,  நபரொருவர்  வாய்மொழிச்சொற்களின்  மூலம்  அல்லது   சொற்பொழிவுகள்,  சைகைகள், கட்புலக்காட்சிகள்  மூலமோ, அல்லது வேறுவகையாக வெவ்வேறு  சமூகத்தவர்கள் மற்றும் மதத்தவர்களிடையே  அல்லது  குழுக்களிடையே  வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டால், அல்லது வன்முறை செயல்களை  புரியவேண்டும் என்ற  மன நிலையை கொண்டாலோ அல்லது  சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டாலோ அது 1979 ஆம்  ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்தடுப்பு  (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு  02(1) (ஏ) பிரிவின் படி  தண்டனைக்குரிய  குற்றமாகும்  .  

இத்தகைய   செயற்பாடுகளில்  ஈடுபடும் நபர்  மேல் நீதிமன்றில்  ஆஜர்ப்டத்தப்படுவதுடன்,  தகுந்த விசாரணைகளுக்கு  பின்னர்   5ஆண்டுகளுக்கு  குறையாததும்  ,   இருபது  ஆண்டுகளுக்கு  அதிகரிக்காததுமான  சிறைத்தண்டனைக்கு  உள்ளாக்கப்படுவார்.    
வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - அரசு தீர்மானம்.. வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - அரசு தீர்மானம்.. Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5