எது பயங்கரவாதம் ?


கடந்த முப்பது வருடங்களாக  ஊடகங்கள் அதிகம் உபயோகித்த சொல் என்றால் அது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பதாகவே இருக்கும். ஆனாலும் தீவிரவாதம் (Extremism) அல்லது பயங்கவாத்திற்கு(Terrorism) உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான வரைவிலக்கணம் (Definition) இதுவரை இல்லை. 

ஐநாவுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக அவர்களது அறிக்கையில் அல்லது ஊடக வெளியீடுகளில் பாவிக்கப்படும் குறியீட்டு சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்றால் அதற்கு திடமான வரைவிலக்கணம் இருத்தல் அவசியம். 

எனவே 90 களின் நடுப்பதியிலும் 2005ஆம் ஆண்டிலும் தீவிரவாதம்/பயங்கவாதம் தொடர்பான மாநாடுகளில்  இதற்குரிய வரைவிலக்கணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எனினும் உறுப்பு நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தை எட்டமுடியவில்லை.  

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 

ஒன்று - தார்மீக உரிமை போராட்டங்கள் (Legitimate struggle) அல்லது சுயநிர்ணய போராட்டங்களில் (Self Determining struggle) ஈடுபடும் ஆயுத குழுக்களின் ஆயுத போராட்டங்கள் பயங்கரவாதமாகுமா இல்லையா என்ற நிலைப்பாட்டுக்கு ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இதில் பாலஸ்தீன போராட்டம் தொடர்பாக நீண்ட விவாதங்களில் இதை பயங்கவாதமாக கருதமுடியாது என்ற நிலைப்பாட்டில் பல நாடுகள் இருந்த போதிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்றவை இதற்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்தமை இதற்கு காரணமாகியது.  இதைப்போல இலங்கை, காஷ்மீர் , தென் சூடான் போன்றவையும் விவாதற்கு எடுக்கப்பட்டன. சுருக்கமாக சொன்னால் ஒருவனின் பார்வையில் போராளி இன்னுமொருவனின் பார்வையில் பயங்கவாதியாகிறான். 

இரண்டாவது விடயம் - வரைவிலக்கணத்தை பிழையாக பயன்படுத்தும் ஆபத்து (Mis-use of terminology). தமக்கு எதிரான அரசியல், இன, மத குழுக்களை /தனிநபர்களை பயங்கரவாதியாக சித்தரித்து அவர்களின் மீது அரசாங்கம் அல்லது பெரும்பான்மையினர்  பலப்பிரயோகத்தை பாவிக்கும் சாத்தியம். 

சர்வதேச ரீதியான ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் இன்மை சர்வதேச ரீதியிலான தண்டனை கோவைகளை உருவாக்குவதில் தடங்களை ஏற்படுத்தியிருந்தாலும்,  ஆயுதமற்ற அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களும் பயங்கரவாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 
சுயநிர்ணய உரிமை போராட்டங்களில் ஈடுபடும் ஆயுத குழுக்களாக இருந்தாலும் , அவை பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் போது அவை பயங்கவாத தாக்குதலாக கருதப்படும் அதேவேளை அவை இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போது இடையில் பொதுமக்கள் அகப்பட்டால் அவை collateral damage ( Google translation இணை-சேதம் ) ஆக கருதப்படும். 

இவற்றை அவதானித்தால் தாக்குதல்தாரியின் நோக்கமே பயங்கவாதமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. ஆனாலும் சமீபத்திய உலக மற்றும் ஊடக நடப்புக்களையும்  அவதானிக்கும் போது "பாதிக்கப்பட்டவர்கள்" யார் என்பதை பொறுத்து அது பயங்கவாதமா இல்லையா என்பதை தீர்மானிக்க எத்தனிக்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுப்பப்படுகிறது. 

சமீபத்திய மூன்று வெவ்வேறு சமீபத்திய சம்பங்களை அவதானித்தால்..

பாரிஸில் அல்லது லண்டனில் பொதுமக்கள் தாக்கப்பட்ட போது அதை பயங்கவாதமாக பார்க்கப்பட்டது. இதில் இலக்கு பொதுமக்கள் என்பதால் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை,  உலக முஸ்லிம்கள் கூட இதை செய்தது முஸ்லிம் பெயர்தாங்கி என்பதற்காக அதை நியாயப்படுத்தவும்வில்லை. 

காஷ்மீரில் இந்திய இராணுவத்தை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதல் இலக்கு இராணுவம் என்பதால் அவை பயங்கவாதம் என்ற வரையரைக்குள் உள்ளடங்காது என்றாலும் இந்திய மற்றும் ஒருசில சர்வதேச ஊடகங்களும் இதை பயங்கரவாத தாக்குதலாக பிரகடனப்படுத்தின.  இதே இந்திய இராணுவம் அப்பாவி காஷ்மீரிகளை கொலை செய்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. 

நியூசிலாந்து பள்ளிவாசல் மீதான தாக்குதல் : தாக்குதல் இலக்கு பொதுமக்கள். எனவே இதுவொரு பயங்கரவாத தாக்குதல்.  அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் இதை ஒத்துக்கொள்வதற்கு சில ஊடகங்களுக்கு இருக்கும் தயக்கம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும். 

அதுபோக இஸ்ரேலில் டெல் அவிவில் , கொழும்பில் , புது டில்லியில், மேற்கு நாட்டு நகரம் ஒன்றில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் பயங்கரவாத தாக்குதலாகவும் அதுவோ காசாவாக, வன்னியாக, காஷ்மீராக,  யெமன் மற்றும் சிரியாவாக இருந்தால் வெறும் எண்ணிக்கையாகவும் முடிவடைகிறது. 

இவ்வாறான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி இடும்வரை பயங்கவாதத்திற்கும் அதன் வரைவிலக்கணத்திற்கும் முடிவு வரப்போவதில்லை.
– தில்ஷான் முகம்மத் –
எது பயங்கரவாதம் ? எது பயங்கரவாதம் ? Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.