நியூஸிலாந்து Vs இலங்கை .


நியூஸிலாந்து மண்ணுக்கே சொந்தமில்லாத 
ஒரு பரதேசி பயங்கரவாதி
செய்த கொடூரச்செயலுக்காக 
அந்த தேசமும், மக்களும் , அரசும் 
மாய்ந்து மன்றாடி 
இழந்தோர்களின் துயரங்களில் கலந்துருகிப்போகிற காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


நியூஸிலாந்து எவ்வளவு அழகான, 
அமைதியான, பாதுகாப்பான தேசம் 
அங்கேயா இப்பெருங்கொடூரம் நிகழ்ந்தது! 
என்று ஆற்றாமையில் இருந்த போது அந்த நாட்டின் பிரதமரும், மக்களும் நடந்து கொள்ளும் விதம் துயரங்களை மறக்கச்செய்து விடுகிறது!


இறந்த குடும்பங்களுக்கு பெருந்தொகை நஷ்ட ஈடு , தொடர்ச்சியான குடும்ப பராமரிப்பு, மரணச்செலவு என அத்தனையும் அரசால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.


இந்த துயர சம்பவத்தின் பின் கூடிய பாரளுமன்றம் திருக்குர்ஆன் வசனங்களோடு தொடங்கியது.

நாளைய வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கான அழைப்பை அங்குள்ள தொலைகாட்சி, வானொலிகள் ஒலி, ஒளி பரப்பவிருக்கின்றன.

ஜும்ஆ தொழுகையின் பிறகு பிரதமர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றுகின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக நியூஸிலாந்தில் தனியாருக்கான ஆயுத விற்பனை தொடர்பில் உடனடி தடை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

____________________________________

இலங்கையில் .......

இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு பத்து வருடங்களாக போகிறது! 
அதற்கான நீதி விசாரணை கோரி ஐநாவில் அவ்வப்போது நடக்கும் அமர்வுகள் எல்லாத்தரப்பிற்கும் வெறும் அரசியல் நாடக மேடையாக மாறியிருக்கும் துயரம்!


போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த முடிவுமில்லை.
அதன் பெயரால் ஒரு செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
செயலணியில் நிறையப்பேருக்கு வேலை கிடைக்கப்போகிறது.
ஆனால் காணாமல் போன ஒருவரும் கிடைக்கமாட்டார்!


அரச அனுசரணையில் அழுத்கமையில் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான இனக்குரோத சம்ஹாரத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகளுக்கு இதுவரை உரிய விசாரணையோ, தண்டனையோ இல்லை!


திகனையில் அரங்கேறிய இனவெறியை கைகட்டி பார்த்துக்கொண்டிருந்த ஆட்சியில் உள்ள குருட்டு அரசாங்கம் வாக்களித்த படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்ட ஈட்டுத்தொகையினை சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் வழங்கவில்லை!


சாராயத்தவரணைக்கு சொந்த வீட்டில் லைசன்ஸ் கொடுத்து விட்டு போதைப்பொருள் ஒழிக்க புறப்பட்டிருக்கும் ஜனாதிபதி தாத்தாமார்!


ஒவ்வொரு தேர்தலுக்கும் அவிழ்த்து விடப்படும், இனக்குரோதமும், வெறுப்பும், வன்மமும்!


வன்முறைகளும், பயங்கரவாதச்செயல்களும், இனவெறுப்பும் உலகெங்கும் நடக்கும் விடயங்களாகிப்போன இந்த காலத்தில் அவற்றின் வடுக்களை துடைத்தெறிவதில் நியூஸிலாந்தின் முன்மாதிரியை பார்க்கிற போது....

நாம் வாழும் தேசத்தின் நிலை ஞாபகம் வராமலா போகும்?
- முஜீப் இப்ராஹீம் -
நியூஸிலாந்து Vs இலங்கை . நியூஸிலாந்து  Vs  இலங்கை . Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.