மனோ அரசியல் நகர்வுக்காக ஞானசார தேரரை சந்திக்க, அவர் எந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்..?



ஞானசார என்ற நாமம் முஸ்லிம்களுக்கு கிஞ்சித்தேனும் பிடிக்காத ஒரு நாமம் என்றால் பிழையாகாது.
அவரோடு யாராவது ஒட்டு உறவு வைத்தாலே, அவரை முஸ்லிம்கள் மாற்று கண்கொண்டு பார்க்கும் நிலையும் உள்ளது. இவ்வாறான நிலையில், சில நாட்கள் முன்பு அமைச்சர் மனோ கணேசன் உள்ளடங்கிய குழுவொன்று ஞானசார தேரரை சந்தித்துள்ளது. இது முஸ்லிம்களிடையே பாரிய விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது. இவ் விமர்சனத்தை நியாயப்படுத்தி அமைச்சர் மனோ கணேசன் ஒரு பதிவையும் இட்டுள்ளார்.

ஞானசார தேரர் பாரிய அரசியல் நகர்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இராது. மஹிந்தவின் ஆட்சியை புரட்டுவதில் பிரதான கதாபாத்திரம் வகித்திருந்தார். அது நேரிய வழியில் இடம்பெற்றிருந்தால், அதில் விமர்சிக்க ஏதுமில்லை. முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையை திணித்து, தங்களது அரசியல் நகர்வை மேற்கொண்டிருந்தனர். இவரை நேரிய அரசியல் நகர்வுக்கு பயன்படுத்த, இவர் எந்த அரசியல் கட்சியினதும் தலைவரோ அல்லது முக்கியஸ்தரோ அல்ல. அதாவது நேரிய அரசியல் நகர்வு குறித்து பேச இவரிடம் அரசியல்வாதிகளுக்கு எந்த தேவையுமில்லை. இப்படியான நிலையில், இவரை அரசியல் நகர்வுக்கு அமைச்சர் மனோ உள்ளிட்ட குழுவினர் சந்தித்துள்ளமையானது, மீண்டும் முஸ்லிம்களை மையப்படுத்திய ஏதோ ஒரு அரசியல் நகர்வு இடம்பெறப் போகிறதா என்றே சிந்திக்க தோன்றுகிறது.

தனது நியாயப்படுத்தல் பதிவில், ஞானசார தேரரை, தான் சந்தித்த விடயத்தை மறைக்க விரும்பவில்லை என்ற வகையிலான மக்கள் சிந்தனையை தூண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அது தானே! இவர், தனது முகநூலிலேயே பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். அவ்வாறானால், அச் சந்திப்பில் சிறந்த நோக்கமிருக்கும் என மக்கள் சிந்திக்கவும் வாய்ப்புள்ளது. இவர் அதனை வெளிப்படுத்தாவிட்டால், அது மறைந்துவிடும் விடயமல்ல. அது எப்படியோ வெளிப்பட்டேயாகும். அவர் வெளிப்படுத்தாமல் வேறு யாராவது வெளிப்படுத்தியிருந்தால், இவ்விடயம் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டிருக்கும். குறித்த சந்திப்பு தொடர்பான, அவர் வெளிப்படுத்தாத பல வகை புகைப்படங்கள் முக நூலில் உலா வருவது நாமறிந்ததே! கடுமையான விமர்சனங்களை தவிர்க்க, குறித்த விடயத்தை தானே வெளிப்படுத்தும் உத்தியை இங்கு அமைச்சர் மனோ கணேசன் கையாண்டுள்ளார் என்றும் சிந்திக்கலாம்.

இன்று அரசியல் நகர்வுக்காக ஞானசார தேரரை சந்திக்க சென்ற ஞானசார தேரர், ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறைகளை எல்லை மீறி கட்டவிழ்த்துகொண்டிருந்த போது எத்தனை தடவை பேச்சு நடாத்தியுள்ளார். ஒரு தடவையாவது எதிர்த்து பேசியிருப்பாரா? இவரின் அமைச்சுக்குள் புகுந்து ஞானசார தேரர் அட்டாகாசம் செய்த போது பூனை போன்று பதிலளித்த இவர், தன் மானமுள்ளவராக இருந்தால் அரசியல் நகர்வுக்காக பேச சென்றிருப்பாரா?

தற்போதைய அரசு ஞானசார தேரரின் விடுதலை மறுப்பால் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடும்போக்கு சிங்கள மக்களின் சிறிய எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இது தொடர்பான அரசியல் நகர்வுக்காகவும் இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம். அதற்காக என்றே பெரும்பலும் நம்பப்படுகிறது. உப்பு திண்டவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும். இவரின் விடுதலை தொடர்பில் பேசும் தகுதி, அவர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட போது, எதிர்த்து பேசும் திராணியற்று கிடந்த அமைச்சர் மனோ கணேசன் போன்றவருக்கில்லை.

இவரின் சிறைவாசம் நீதிமன்றத்தை அவமதிப்போருக்கும், தான் நினைத்ததை செய்வேன் என்ற அகம்பாவ போக்கு கொண்டோருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். இதனை விடுத்து, நீதியை அவமதித்த ஒருவரிடம் சென்று அரசியல் நகர்வு குறித்து பேசும் தரகர்களாக இன்று எமது மக்கள் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடும் அரசியல் வாதிகள் உள்ளனர். இதுவே எமக்கு கிடைத்த சாபமெனலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
மனோ அரசியல் நகர்வுக்காக ஞானசார தேரரை சந்திக்க, அவர் எந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்..? மனோ அரசியல் நகர்வுக்காக ஞானசார தேரரை சந்திக்க, அவர் எந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்..? Reviewed by Madawala News on February 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.