இனவாத உணர்வுகளை வளர்ப்பதனாலும், ஹர்த்தால்களினாலும் எதனையும் சாதிக்க முடியாது!



(எம்.ஜே.எம்.சஜீத்)
வட – கிழக்கு மாகாணங்களில் வாழும் மூவின சமூகங்ளின் மத்தியில் உள்ள பிரச்சினைகளுக்கு
புரிந்துணர்வோடும், விட்டுகொடுப்போடும் செயல்பட்டு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வுகளைக் காணவேண்டும். கிழக்கு மாகாண ஆளுனராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் நியமனம் செய்யப்பட்டமைக்கு ஹர்த்தால் நடாத்துவதாலும், இனவாத உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் வளர்ப்பதாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது  தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் முடியாத நிலமையும் உருவாகிவருகிறது என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

வட – கிழக்கு மாகாணங்களில் கடந்த 03 தசாப்த காலமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் மூவின மக்கள் மத்தியில் அச்சம், சந்தேகம் ஏற்பட்டு இனஉறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின் பெரும் அர்ப்பனிப்போடும், தியாகத்தோடும மூவின மக்கள் மத்தியில் அறுந்து போயிருந்த இனஉறவுகளை கட்டி வளர்த்தோம்.


இந்த நிலையில் மீண்டும் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நலனை மட்டும் முன்னெடுத்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக இனவாதம் பேசினால் தமிழ் மக்கள் தேர்தல்களில் வாக்குகள் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களை தவறான வழியில் நடாத்தி இனஉறவுகளைப் பாதிக்கக் கூடிய வகையில் செயற்படுவது குறித்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் இன உறவு , ஐக்கியம் , புரிந்துணர்வு வளர்வதற்கு அர்ப்பணிப்போடு செயற்படுபவர்களுக்கு பாரிய கவலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


நமது கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் பின்னிப்பிணைந்து ஒரு சமூகத்தில் இன்னொரு சமூகம் தங்கி வாழும் நிலமைதான் உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்நதவர்கள் ஜனாதிபதி பதவியினையும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டிருந்தனர். தமிழ் சமூகம் ஆயுதப்போராட்டத்தினை நடாத்தி கொண்டிருந்தனர். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலபேர் அமைச்சர் பதவிகளிலும் இருந்தனர். வட – கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் மூன்று சமூகங்களும் பாரிய நஸ்டங்களை அடைந்தன. நமது நாட்டில் சமாதானம் இல்லை என்றால் எந்த சமூகமும் நிம்மதியாக வாழமுடியாது என்பது யதார்த்தமான நிலைமை.


 எனவே, தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பொறுமையாகவும், நிதானத்துடனும் செயல்பட்டு தமிழ் , முஸ்லிம் உறவுகளை வளர்த்து நம் மத்தியில் அச்சமில்லாத நிலையில் இரண்டு சமூகங்களும் வாழ்வதற்கான வழிவகைகளை படிப்படியாக முன்னெடுத்து செய்ய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இனவாதச் செயற்பாடுகளையும் , ஹர்த்தால்களையும்  தமிழ் - முஸ்லிம் சமூகம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.


வட – கிழக்கு மாகாணங்களில் தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிராக ஹர்த்தால்களை நடாத்தி தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை காட்டாமல் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வீனான சந்தேகங்களை உருவாக்கி வருவது தவறான செயற்பாடாகும்.


தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மை தொடருமானால் இரண்டு சமூகங்களும் எதிர் காலத்தில் பாரிய பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய நிலைமை வரும் என்பதனை இரண்டு சமூகங்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

சென்ற 08.01.2019ம் திகதியிடப்பட்டு எமது தேசத்தின் விடிவுக்காக மீண்டும் ஒரு சுதந்திரம் படைப்போம்! என்ற தலையங்கத்தில் வெளியிடப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பிதழில் கிழக்கு மாகாண ஆளுனரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் 11.01.2019ல் ஹர்த்தால் நடைபெறவுள்ளதால் இவ் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு கோரி வட – கிழக்கு எப்போதும் எம்மோடு எனக் குறிப்பிடப்பட்டிருந்த இவ்ஹர்த்தாலுக்கான அழைப்பிதழினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் பேரவை, முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சிகள் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக துன்டுப்பிரசுரம் ஊடாக அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டன.

இந்த விடயங்களில் இணையதளங்;கள் ஊடாக செய்திகள் வெளிவந்த உடனே நல்லாட்சிக்கான தேசிய முன்னனி 11ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கும் எமது கட்சிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளது. அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய கட்சிகள் இதுவரை எதுவித மறுப்பறிக்கையினை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றது. இதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இந்த விடயத்தில் எவ்விதமான மறுப்பறிக்கைகளையும் இதுவரையும் வெளியிடமால் மௌனம் காத்து வருவது குறித்து முஸ்லிம் சமூகம் பாரிய கவலை அடைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட விடயத்தில் முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தங்களின் சுயநல அரசியல் இலாபத்திற்காக சமூக ரீதியிலான விடயத்தில் மறைமுக ஆதரவு வழங்கி உள்ளனர் என முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.


நமது முஸ்லிம் சமூகத்தின் பொதுவான நலனை மறந்து தங்களின் அரசியல் காரணங்களுக்காக இதுவரையும் எதுவித மறுப்பறிக்கை தெரிவிக்காமல் இருப்பது குறித்து முஸ்லிம் மக்கள் பெரும் வேதனைப்பட்டவர்களாக உள்ளனர். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நமது நாட்டில் வாழும் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழியமைத்தது. ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் 1வது முஸ்லிம் ஆளுனர் நியமன விடயத்தில் மௌனமாக செயற்பட்டது குறித்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

இனவாத உணர்வுகளை வளர்ப்பதனாலும், ஹர்த்தால்களினாலும் எதனையும் சாதிக்க முடியாது! இனவாத உணர்வுகளை வளர்ப்பதனாலும், ஹர்த்தால்களினாலும் எதனையும் சாதிக்க முடியாது! Reviewed by Madawala News on January 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.