பாராளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானியில் முக்கியமான சரத்து குறிப்பிடப்படவில்லை... சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவிப்பு.


(எஸ்.அஷ்ரப்கான்)
ஜனாதிபதியின் பாராளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானி அறிவித்தலில்  முக்கியமான
சரத்து குறிப்பிடப்படாமல் ஏனைய சரத்துக்களேகுறிப்பிடப்பட்டுள்ளன என்று சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் மக்கள் அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சாதக பாதக நிலைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசியலமைப்பின் சரத்துக்கள் 70(5), 33(2)(c), 62(2) ஆகியவற்றினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமையவும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 10 இற்கு  அமையவுமே குறித்த பிரகடனம் வெளியிடப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு மிகப்பிரதானமான சரத்து 70(1) ஒன்று குறிப்பிடப்படாமல் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

இந்தச்சரத்துக்களை முதலில் சற்றுக் கண்ணோட்டம் விடுவோம்

சரத்து 70(5): இது பாராளுமன்றம் கலைப்பிற்கான பிரகடனம் வெளியிடும்போது அப்பிரகடனத்தில் அடுத்த தேர்தல் மற்றும் பாராளுமன்றம் கூடுவதற்கான திகதிகளைக் குறிப்பிட வேண்டுமெனத் தெரிவிக்கின்றது.

சரத்து 33(2)(c): இது பாரளுன்றத்தைக் கூட்டுவதற்கு, ஒத்திவைப்பதற்கு, கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கிறது; எனத் தெரிவிக்கின்றது.

சரத்து 62(2): இது பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டாலேயொழிய அதன் ஆயுட்காலம் ஐந்து வருடமெனவும் ஐந்தவருடமுடிவில் பாராளுமன்றம் கலைந்ததாக கொள்ளப்படவேண்டுமெனவும் குறிப்பிடுகின்றது.

பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 10 பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தில் வேட்புமனு கையளிக்கப்படும் காலப்பகுதி மற்றும் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கின்றது.

இங்கு இரண்டு சரத்துக்கள் substantive law  உடனும் ஒரு சரத்தும் ஒரு பிரிவும் procedural law வுடனும் சம்பந்தப்பட்டது.

அதாவது 33(2)(c) யும் 62(2) உம் ஜனாதிபதியின் பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிகாரத்தைப் பற்றியும் அடுத்த இரண்டும் திகதிகள் மற்றும் நியமனப்பத்திரத்தாக்கல் சம்பந்தமாகவும் கூறுகின்றது.

இதில் 33(2)(c) பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கிறது; என்கின்றது. 62(2) பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தாலேயொழிய பதவிக்காலம் ஐந்து வருடம் என்கின்றது.

முதலாவது அதிகாரமிருக்கின்றது; என்கின்றது. அடுத்தது “ முன்கூட்டியே கலைத்தாலேயொழிய” என்பதன் மூலம் ஐந்துவருடம் முடிவதற்குமுன் கலைக்கமுடியும் என்கிறது.

எனவே, பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது; என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. இந்த சரத்துக்களைத்தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனாதிபதிக்கு மேற்படி சரத்துக்களின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரத்தின்கீழ் தான் இந்தப்பிரகடனத்தை வெளியிடுவதாக ஜனாதிபதி வர்த்தமானியில் தெரிவிக்கின்றார்.

 பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற ஜனாதிபதியின் அதிகாரத்தை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. இந்த அதிகாரத்தை எப்பொழுதுலிருந்து ஜனாதிபதிக்குப் பாவிக்கமுடியும்? என்பதுதான் இங்கு கேள்வி.


19வது திருத்தத்திற்கு முன் முதல் ஒரு வருடத்திற்குள் கலைக்க முடியாது. அவ்வாறு கலைத்திருந்தால் யாராவது ஏற்றுக்கொண்டிருப்பார்களா? அவ்வாறு எப்போதாவது கலைக்கப்பட்டதா? இல்லை.

இப்பொழுது சரத்து 70(1) இல்,  முதல் 41/2 வருடங்களுக்குள் 2/3 பெரும்பான்மையால் வேண்டுகோள் விடுத்தாலேயொழிய கலைக்கமுடியாது; என்று தெட்டத்தெளிவாக சந்தேகங்களுக்கப்பால் சொல்லியிருக்கும்போது அவ்வாறு சொன்ன சரத்தை வர்த்தமானியில் குறிப்பிடாமல் மூடிமறைத்தது ஏன்?

அதாவது உங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அதிகாரம் இருக்கின்றது. ஆனால் முதல் ஒரு வருடத்திற்குள் கலைக்க முடியாது என்று 19முன் கட்டுப்பாடு இருந்தது. இப்போது உங்களுக்கு கலைக்கமுடியும் ஆனால் முதல் நான்கரை வருடங்களுக்கு கலைக்க முடியாது; என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்லும்போது அவ்வாறு தன்னைக் கட்டுப்படுத்துகின்ற சரத்தை மூடிமறைத்து அதிகாரம் வழங்குகின்ற சரத்துக்களை மட்டும் குறிப்பிட்டு ஜனாதிபதி சட்டவிரோதமாக பாராளுமன்றத்தைக் கலைத்திருக்கின்றார் என சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானியில் முக்கியமான சரத்து குறிப்பிடப்படவில்லை... சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவிப்பு. பாராளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானியில் முக்கியமான சரத்து குறிப்பிடப்படவில்லை... சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவிப்பு. Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.