ரணிலின் ஆட்சியில் பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டபோது ஏன் மௌனிகளாக இருந்தீர்கள்.?ஒரு சட்டம் இயற்றப்படுவதாக இருந்தால் ஒரு கிழமைக்கு முன் வர்த்தமானி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி,  மக்கள் அதன் மீது அதிருப்பி அடைந்தால், அந்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லுவதற்கான சந்தர்ப்பம் சட்டத்தில் இருந்தும், மாகாணசபை தேர்தல் திருத்த சட்டத்தை காலையில் கொண்டுவந்து மாலையில் நிறைவேற்றிய விடயமானது ஜனநாயக உரிமை மீறலாகும் என்பதை அன்று யாரும் கண்டிக்காதது ஏன்?

மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலம் இரண்டு கிழமைக்கு முன் மக்களுக்கு கிடைத்திருந்தால் அதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்தை நாடியிருந்தால் அந்தச்சட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது எனலாம். ஆனால் இதனை அன்று யாரும் ஜனநாயக மீறல் என்று கூறவில்லை.

அதேநேரம் மாகாணசபைகள்  20வது அரசியல்யாப்பு திருத்தச்சட்டம் வந்தபோது அதனை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதனால் நீதிமன்றம் அதனை தடைசெய்ததையும் நாம் அறிவோம். இந்த நிலையில் சட்டத்துக்கு மாறாக மா.சபை.தேர்தல் திருத்தச் சட்டத்தைக் அதிரடியாக கொண்டுவந்து சபாநாயகர் அன்றே கையொப்பம் இட்டு சட்டமாக்கிய விடயமானது ஜனநாயக மீறல் என்று யாரும் அன்று வாய்திறந்து கண்டிக்கவில்லை.

இதற்கெல்லாம் சட்ட மேதை சுமேந்திரன் ஐயா அவர்கள் சொன்ன விளக்கம் வினோதமானது எனலாம். அவர் கூறிய கருத்து என்னவென்றால், இந்தச்சட்டம் அவசரமாக இயற்றப்படாது விட்டால் மாகாணசபை தேர்தலைச் சந்திக்கவேண்டிவரும் என்றும், அப்படி தேர்தல் நடந்தால் மஹிந்த வெற்றியடைந்து விடுவார் என்றும், அது கூட்டாச்சிக்கு ஆபத்தாக வந்துமுடியும் என்றும், அதனால் எங்களது தீர்வு காணாமல் போய்விடும் என்றும் காரணம் கூறியிருந்தார். இத்தக் கூற்றின் மூலம் அவர் ஜனநாயக படுகொலையை நாங்கள் செய்தது உண்மைதான் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருந்தார். அன்று இதனை யாரும் ஜனநாயக படுகொலையென்று கூற முன் வரவில்லை.

அப்படியென்றால் இந்தச் செயல்பாடானது அப்பட்டமான சட்ட மீறல் இல்லையா? என்று கேள்வி கேட்பதற்கும் யாரும் அன்று முன்வரவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இந்த சட்ட ஏற்பாடானது சிறுபாண்மை சமூகத்துக்கு பாதுகாப்பான சட்டமாகும். இந்த சட்டத்துக்காக நமது முன்னோர்கள் கடுமையாக பாடுபட்டுள்ளார்கள்.  இப்படியான சட்ட உரிமையைச்  சோல்பரிக் ஆணைக்குழு சட்டத்தில் 29வது சட்டப் பிரிவொன்றை ஏற்படுத்தி சிறுபாண்மை மக்களுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தி தந்திருந்தார்கள்.

அதனை 1972ம் ஆண்டைய அரசியலமைப்பில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தாங்கள் கொண்டுவரும் ஏதாவது ஒரு சட்டத்தை, யாராவது அரசியலமைப்பு நீதிமன்றில் கேள்விக்கு உட்படுத்தி, அந்தச்சட்டம் பிழையானது என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும், அதனை மீண்டும் பாராளுமன்றம் கொண்டுவந்து  2/3 பெரும்பாண்மை மூலம் சட்டம் ஆக்கலாம் என்று கூறிய விடயம் அன்று கடுமையாகவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில்  1978ம் ஆண்டய அரசியல் யாப்பில் அது இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது. ஒரு சட்டம் ஏற்றப்படுவதற்கு இரண்டுவாரங்களுக்கு முன் வர்த்தமானி மூலம் மக்களுக்கு தெரியபடுத்தி, அவர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.அந்த வாய்ப்புக்களை மக்களுக்கு வழங்காமல், தங்களுடைய நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தினை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அப்பட்டமான முறையில் மீறியிருந்தார்கள்.

ரணில் அரசு தேர்தல் ஒன்றை சந்திக்க முடியாது என்ற காரணத்தினால்தான் நீதிமன்றத்துக்கு யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்தச் சட்டத்தை காலையில் கொண்டுவந்து மாலையில் நிறைவேற்றியது மட்டுமல்ல, சபாநாயகரும் உடனே கையொப்பமிட்டு சட்டமாக ஆக்கிக் கொண்டார்கள் இது அப்பட்டமான சட்ட மீறல் என்பதை உலகமேயறியும்.

இப்படியான முன்னுதாரணங்கள் எதிர்காலத்தில் சிறுபாண்மை மக்களுக்கு எதிராக ஏதாவது ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, காலையில் கொண்டுவந்து மாலையில் நிறைவேற்றினால் நிலைமை என்னவாகும் என்பது நமது அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருந்தும், ஏன் அவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் முறை பிழையானது அதனை நாங்கள் படித்துப்பார்த்து அதில் பிழையில்லை என்றால்தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று ரிசாட் பதியுதீன் போன்றோர் வாதாடியபோது, ராஜித போன்றவர்களால் அவர்கள் மிரட்டப்பட்டு வாக்களிக்க வைக்கப்பட்டோம் என்று கூறி அழுத கதைகளும் நமக்கு தெரியாதது அல்ல.

இப்படியான ஜனநாயக படுகொலைகள் நிகழும்போது யாரும் வாய்திறக்கவில்லை. இப்போது பாராளுமன்றம் கலைத்தது ஜனநாயக மீறல் என்று கூக்குரலிடுகின்றார்கள் அது ஏன் என்றுதான் புரியவில்லை.

ஆகவே எது ஜனநாயக மீறல்?  

தங்களுக்கு எதிராக வந்தால்
ஜனநாயக மீறல் என்றும், தங்களுக்கு சார்பாக வந்தால் அதுதான் ஜனநாயகம் என்றும் கூறுவதில்  என்ன  நியாயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் சரிதான்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ரணிலின் ஆட்சியில் பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டபோது ஏன் மௌனிகளாக இருந்தீர்கள்.? ரணிலின் ஆட்சியில் பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டபோது ஏன் மௌனிகளாக இருந்தீர்கள்.? Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.