மத்திய கிழக்கின் முடிக்குரிய இளவரசர்களும் முடிவில்லாத நெருக்கடிகளும் .


ஆய்வுக் கட்டுரை  ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
(மூலம்: அல்ஜஸீரா)
சவூதி ஊடகவியலாளர் ஜமால்
கசோக்கி படுகொலையானது 33 வயது நிரம்பிய சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் பல்வேறான எதிர்வுகூறல்களை அவதானிகள் முன்வைத்து வருகின்ற இவ்வேளையில் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சயீத் பற்றிய கருத்தாடல்களும் சர்வதேச அவதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இதற்கு இரு இளவரசர்களுக்குமான ஒப்புமைகள் காரணமாக இருக்கக் கூடும்.
யெமனில் இடம்பெற்று வரும் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் கட்டார் மீது பொருளாதார முற்றுகைகளை விதித்தமை உள்ளிட்ட பல்வேறு மத்திய கிழக்கு நெருக்கடிகளில் இவ்விரு இளவரசர்களும் இணைந்தே முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.


எனினும், மேற்குறித்த இரு முன்னெடுப்புகளிலும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போயின எனலாம். யெமனில் இவர்கள் ஆரம்பித்த யுத்தமானது முடிவில்லாது இழுபறியான நிலையில் நான்காண்டுகளாக தொடர்கிறது.
ஒரு சில நாட்களிலேயே கட்டார் தமது காலடியில் வீழ்ந்து மண்டியிட்டு நிற்கும் எனும் பகல் கனவுடன் இவர்கள் ஆரம்பித்த பொருளாதாரத் தடையானது புஷ்வாணமாகிப் போனமை உலகறிந்த விடயம். மாறாக, சவூதியினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோது இருந்ததை விட தற்போது கட்டாரின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.



மேற்குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் அபுதாபி அடைந்த சாதக அடைவு யாதெனில், யெமனின் தெற்கு பகுதிகளில் பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்து முக்கிய வர்த்தக துறைமுகமான ஏதெனை கைப்பற்றிக் கொண்டமையாகும். இதன் மூலம் எமிரேட்ஸ் தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட மாநிலமாக தெற்கு யெமனை மாற்றிக் கொண்டது.
கட்டார் முற்றுகையைக் கைவிடுமாறு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டமை சவூதியினதும் எமிரேட்சினதும் சாதக அடைவுகள் எனலாம்.


கடந்த வருடம் டிசம்பரில் பூர்வாங்க முயற்சிகளின் ஊடாக சவூதியுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை அபுதாபி புதுப்பித்துக் கொண்டது. வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சவூதியுடன் அபுதாபி இணைந்து பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டன.


இதனை வரலாற்று வாய்ப்பு என வர்ணித்த அபுதாபியின் முடிக்குரிய இளவரசர், சவூதி மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து மத்திய கிழக்கிலேயே மாபெரும் சக்தி வாய்ந்த நவீன இராணுவ பலத்தையும் பொருளாதாரத்தையும் உருவாக்கி வருவதாக கூறிக் கொண்டார்.
சவூதியின் தற்போதைய மன்னர் சல்மான் தான் ரியாதின் ஆளுநராக இருந்த காலப்பகுதியில் 2009 இல் தனது மகனை சிறப்பு ஆலோசகராக நியமித்தார். அன்று தொடக்கமே தனது மகன் மொஹம்மத் பின் சல்மானை ஆட்சி அதிகாரத்துக்கு உரிய ஆளுமையாக வளர்த்தெடுக்க கங்கணம் கட்டிக் கொண்டார்.


இதற்காக சவூதியின் இளவரசர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை இணங்கச் செய்து தனக்கு பின் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள தனது மகனை தயார் செய்து வந்தார். இதற்காக சில அரசியல் மாற்றங்களை செய்தார்.


இளவரசர்கள் சவூதியின் முக்கிய அமைச்சுக்களை பொறுப்பேற்று நடாத்தி வந்த தருணம் அமைச்சரவையை கலைத்து அமைச்சுப் பதவிகளை தான் விரும்பிய நபர்களுக்கு வழங்கினார். 2015 தொடக்கம் தனது மகன் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானின் அதிகாரங்களை அதிகரிக்கச் செய்தார். பாதுகாப்புத் துறையை மகனிடம் கையளித்தார்.


முன்னர் அல்சஊத் மன்னராட்சி முறையில் முடிக்குரிய இளவரசர்கள் மத்தியில் நடுநிலையானதும் சமநிலையானதுமான அதிகாரங்கள் பேணப்பட்டு வந்த நிலையில் மன்னர் சல்மான் இவ்விழுமியங்களை தகர்த்தெறிந்தார். இதன் மூலம் சவூதியின் மறைமுக ஆட்சியாளராக மொஹம்மத் பின் சல்மான் பொறுப்பேற்றுக் கொண்டார்.


போட்டியாக இருந்த இளவரசர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கியமை மூலமே இதனை சாதித்துக் கொண்டார். முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் இன்னும் அரசியல் ரீதியாக ஸ்திரமாக இருப்பதற்கு அவரது தந்தையாகிய மன்னர் சல்மான் உயிரோடு இருப்பதே முக்கிய காரணம்.
மன்னர் சல்மானின் மறைவுக்கு பின்னர் சவூதியில் மற்றும் வெளிநாடுகளில் தங்கியுள்ள அல்சஊத் இளவரசர்கள் அரசியல் கவிழ்ப்புக்களை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையான திடீர் திருப்பங்களில் இருந்து இளவரசர் பின் சல்மான் தப்பித்துக் கொண்டாலும் ஜமால் கசோகி படுகொலையானது அவரது அரசியல் வாழ்வில் நீக்க முடியாத பெரும் கறையாகவே திகழும் என்பதில் சந்தேகமில்லை.


ஜமால் கசோகியை தனது ஆட்சி அதிகார நிலைநிறுத்தல் பாதையிலுள்ள பாரிய தடைக்கல்லாக இளவரசர் பின் சல்மான் நோக்கியதற்கு பல காரணங்கள் உண்டு. ஜமால் கசோகி எனும் ஊடகவியலாளர் வெளிநாட்டு பிரஜை அல்ல. அவ்வாறு இருந்திருப்பின் சேறு பூசும் வெளிநாட்டு சதிவேலை என கூறி மழுப்பிக் கொள்ளலாம். மாறாக, ஜமால் கசோகி சவூதியில் பிறந்து பல வருடங்களாக சவூதியின் பிரபல பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியவர்.


அத்துடன் சவூதியினால் நாடு கடத்தப்பட்ட யாரோ ஒரு நபருமல்ல. மாறாக, சவூதியின் அரச குடும்பத்துடன் பல வருடங்களாக நெருங்கிப் பணியாற்றி அரச ஆலோசகராக திகழ்ந்த ஒருவர் என்பதுடன் அவர் தானாக விரும்பியே கடந்த வருடம் அமெரிக்காவில் குடிபுகுந்த ஒருவர். ஆக, சவூதி பிரஜைகளின் பார்வையில் ஜமால் கசோகி என்பவர் அரச மட்டத்தை சேர்ந்த ஆலோசகர் மற்றும் நாட்டுப் பற்றாளர்.


எனவே, இவரது எழுத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கைக்குப் பாத்திரமானவையாக பெயர் பெற்றிருந்தன. தனக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு வரும் முடிக்குரிய இளவரசர் பின் சல்மான், ஜமால் கசோகியை எதிரியாக கருதி வந்தமை வெளிப்படையான ஒன்றுதான்.


ஜமால் கசோகி அமெரிக்காவில் பிரபல நாளிதழான வொஷிங்க்டன் போஸ்டில் சவூதியில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்புக்களின் மறுபக்கத்தை தெள்ளத் தெளிவான ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்தமை மற்றும் தற்போதைய சவூதி அரசின் கொள்கை சிக்கல்கள் தொடர்பில் விளக்கமான கருத்துக்களை முன்வைத்தமை சவூதியின் சீற்றத்தை பெரிதும் தூண்டியது.


ஏனெனில், மாற்று வழிமுறைகளில் தந்திரமாக அதிகாரத்துக்கு வந்துள்ள இளவரசர் பின் சல்மானுக்கு அமெரிக்காவின் உறவுகளை பேணிக் கொள்வது கட்டாயமான ஒன்றாகும். தான் மிக சிறந்த மறுசீரமைப்பாளர் எனும் போலி பிம்பத்தை அமெரிக்க மக்களின் மனதில் ஏற்படுத்திக் கொண்டுள்ள காலம் வரை, இப்பதவிக்கு வருவதற்கு அவர் செய்திருந்த திருகுதாளங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என இளவரசர் பின் சல்மான் நம்பினார்.


இதற்கென தனது சொந்த செலவில் பிரபல அமெரிக்க ஊடகவியலாளர்களை தனது மாளிகைக்கு அழைத்து விருந்தளித்து கௌரவித்து இன்னும் பல்வேறு சித்துவேலைகள் செய்து அமெரிக்க ஊடகங்களில் தான் மாற்றங்களை கொண்டு வந்த ஹீரோவாக காட்டிக் கொள்ள பகீரத பிரயத்தனங்களை இளவரசர் சல்மான் மேற்கொண்டு வந்தார். இந்நிலையிலேயே ஜமாலின் தோலுரிப்புக்கள் அவரை நிலைகுலையச் செய்தன.


தனது இளைய சகோதரன் காலித் பின் சல்மானை அமெரிக்காவில் சவூதியின் தூதுவராக நியமித்து தன்னைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் எப்போதும் புகழ் பாடித் திரிய வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தினார். இவை அத்தனை முயற்சிகளும் ஒரே ஒரு தெளிவான நோக்கை கொண்டவை.


தான்  நீதமான  முறையில் ஆட்சிக்கு வந்தவர் என்றும் அதற்கான சர்வதேச ஆதரவை திரட்டுவதுமே இதன் நோக்கமாகும். இவை அத்தனையும் ஜமால் கசோகி என்ற செல்வாக்கு மிகுந்த ஊடகவியலாளரால் தவிடு பொடியாக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்திலேயே தக்க சமயம் பார்த்து அவரை படுகொலை செய்துள்ளது சவூதி அரசு.


இது இவ்வாறிருக்க, சவூதியுடன் இணைந்து கூட்டுச் சதிகளில் அபுதாபி ஈடுபட்டு வந்தாலும் சர்வதேச அளவில் சவூதிக்கு எதிராக ஏற்பட்டு வரும் அவப்பெயரில் நியாயமான பங்கை ஏற்றுக்கொள்ள அபுதாபி மறுத்தே வருகிறது. யெமனில் இடம்பெற்று வரும் யுத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இடம்பெற்று வரும் மனித பேரழிவுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக சவூதியை நிந்திப்பவர்கள் அபுதாபியை மறந்தே விடுகின்றனர். இத்தனைக்கும் தெற்கு யெமனில் எமிரேட்ஸின் கூலிப்படைகளே பாரிய மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி வருகின்றன.
யெமனில் மூவழி முற்றுகைகளையும் ஏற்படுத்தி அப்பாவிப் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நிவாரண உதவிகளை தடுத்தமை தொடர்பில் சவூதியே சர்வதேச அளவில் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது.


ஜமால் கசோக்கியின் படுகொலையை அடுத்து எழுந்துள்ள சர்வதேச அவதானத்தின் பின்னர் யெமனில் இடம்பெற்று வரும் குண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சவூதியை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


அடுத்த 30 நாட்களுக்குள் யெமனில் இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு காரணமான அனைத்துப் பிரிவுகளும் போர் நிறுத்தமொன்றுக்கு இணங்க வேண்டும் என கடந்த மாத இறுதியில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேத்திஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அழைப்பு விடுத்தனர்.


இவ்வளவு காலமும் யெமனிய உள்நாட்டு போர் தொடர்பில் சவூதிக்கு ஆதரவை வழங்கி வந்த அமெரிக்கா திடீரென்று கொள்கையை மாற்றிக் கொள்வதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.


இடைக்கால தேர்தலை எதிர்நோக்கியுள்ள அமெரிக்கா எதிர்கட்சிகளின் பிரசாரங்களில் பேசுபொருளாகி விடக் கூடாது என்பதற்காக கசோகி மற்றும் யெமன் விவகாரம் தொடர்பில் அவதானமாக செயற்பட்டு அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


யெமன் விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதேவேளை இளவரசர் சல்மானின் நிழலில் அபுதாபி இளவரசர் மொஹம்மத் பின் சயீத் அத்தனை நாசகாரியங்களையும் யெமனில் புரிந்து வருகிறார்.
எனினும், அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவில் திளைத்துக் கொண்டிருந்த சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஜமால் கசோகியின் படுகொலைக்கு பின்னர் சர்வதேச அளவில் வெறுப்புணர்வை சம்பாதித்துக் கொண்டார்.


மூர்க்கத்தனம் மிகுந்த கொலை, மூடி மறைக்கும் முயற்சியில் தோல்வி என்பவற்றுடன் இளவரசர் சல்மானின் கட்டளைக்கு ஏற்பவே ஜமால் கசோகி கொல்லப்பட்டார் என சர்வதேசம் உறுதியாக நம்பி வருகின்றமை தொடர்பில் சேற்றை வாரி இறைத்துக் கொண்டுள்ளார்.


இதனால் சவூதியின் எதிர்கால மன்னர் என கருதப்பட்டு வந்த இளவரசர் சல்மானின் ஆட்சி பறிபோகுமோ எனும் கேள்வி தற்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது.


சவூதி மன்னர் சல்மானின் இளைய சகோதரர் அஹ்மத் பின் அப்துல் அஸீஸ் இதுவரை காலமும் லண்டனில் வசித்து வந்த நிலையில் அண்மையில் ரியாத் வந்திறங்கியுள்ளார். முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஆட்சியுரிமை 75 வயது நிரம்பிய அப்துல் அஸீஸுக்கு கைமாற்றப்படக் கூடுமா எனும் கேள்வி அவதானிகள் மத்தியில் மேலெழுந்துள்ள நிலையில் அதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு எனலாம்.


இருப்பினும், இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் தப்பிப் பிழைப்பாரா என்பது வாதத்துக்குரியது. தப்பிப் பிழைத்தாலும் சர்வதேசத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் நன்மதிப்பும் அவருக்கு இருக்குமா என்பதும் சந்தேகத்துக்குரியது.
இந்த இக்கட்டான நிலைமை அபுதாபியின் இளவரசர் மொஹம்மத் பின் சயீதுக்கு கவலையளிப்பதாகவே அமைந்துள்ளது. யெமனிய கனவுகளை இளவரசர் சல்மானின் தயவிலேயே நிறைவேற்றிக் கொள்ள அபுதாபி துடிக்கின்றது.  யெமனிய விவகாரம் தொடர்பில் இளவரசர் சல்மான் மீதே ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அபுதாபி முதலீடு செய்துள்ளது என்றால் மிகையாகாது.


சர்வதேச கேள்வி கணக்குகளின் போது இளவரசர் சல்மானை முன்னிறுத்தி இதுவரை காலமும் அபுதாபி தப்பித்துக் கொண்டது. இளவரசர் சல்மானின் அதிகாரம் பறிக்கப்படுமானால் அல்லது குறைக்கப்படுமானால் அதனால் நேரடியாக தாம் பாதிக்கப்படப் போகின்றோம் என்பதனை அபுதாபி நன்குணர்ந்துள்ளது.


அபுதாபியின் சர்வதேச பாதுகாவலர் என வர்ணிக்கப்படும் இளவரசர் பின் சல்மான் தற்போது கேவலமான காரியத்தின் கதாநாயகன் என சர்வதேசத்தினால் முத்திரை குத்தப்பட்டு நன்மதிப்பை இழந்துள்ள இந்நிலையில், அபுதாபியும் சுயநலம் கருதி இளவரசர் சல்மானை கைவிடுமா? என்பது எதிர்வரும் காலங்களில் ஆவலாக எதிர்நோக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

- நன்றி நவமனி -
மத்திய கிழக்கின் முடிக்குரிய இளவரசர்களும் முடிவில்லாத நெருக்கடிகளும் . மத்திய கிழக்கின் முடிக்குரிய இளவரசர்களும் முடிவில்லாத நெருக்கடிகளும் . Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.