சமூகப் பொறுப்பிலிருந்து தெ.கி. பல்கலைக்கழக கல்விச் சமூகம் விலகிச் செல்கின்றதா?


எஸ்.ஆப்தீன், தெ.கி.பல்கலைக்கழக பழைய மாணவன், பாலமுனை

ஒரு பல்கலைக்கழகத்தின் அமைவில் பல நோக்கங்கள் காணப்படும். குறிப்பாக, அப்பல்கலையை அண்டியுள்ள சமூகத்தின் பிரச்சினைகளை அடையாளங்கண்டு தீர்ப்பதிலும்,  அதற்கான வழிப்படுத்தல்களையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதிலும், அப்பிராந்தியத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதிலும் முன்னோடியான பங்களிப்பினை அப்பல்கலைக்கழகம் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அந்தவகையில், நமது தென் கிழக்குப் பல்கலைக்கழகமானது இவ்வாறான நோக்கத்தை அடைவதில் பங்களிக்கின்றதா? குறிப்பாக இங்குள்ள பேராசிரியர்கள், கலாநிதிகள், முதுமானிகள், இளமானிகள் ஆகிய தரங்களில் உள்ள விரிவுரையாளர்கள் பங்களிக்கின்றார்களா? என ஆராய்ந்து பார்த்தால், விடை கவலையானதாகவே காணப்படுகின்றது.

இங்குள்ள பெரும்பாலான கல்வியியலாளர்கள் தானும் தன்னுடைய பாடும், தனது உழைப்பும் தனது வருமானமும், தனது குடும்பத்தின் நலனும் சொகுசும், தனக்கான சலுகைகளும் என்ற அடிப்படையில் இவர்கள் வாழ்கின்றனரே ஒழிய,  நமது சமூகத்தின் விடயத்தில் அக்கரை செலுத்துவதில் இவர்களது பங்களிப்பானது மிகக் குறைவானதாகவே இருந்து வருகின்றது.

உண்மையில் இந்தப்பல்கலையின் அமைவிற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த மு.கா.தலைவர் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள், இந்தப்பல்கலைக் கழகத்தை இங்கு அமைத்ததற்கு பல சமூக, அரசியல், பொருளாதார, மற்றும் கல்வியியல் ரீதியிலான பின்புலக் காரணங்கள் அடிப்படையாக அமைந்ததனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை, மறக்கவும் முடியாது.

அவ்வாறான ஒரு பல்கலைக்கழகம் இன்று தன்னை சார்ந்துள்ள சமூகத்திற்கான மற்றும் அமைந்துள்ள பிராந்தியத்திற்கான பங்களிப்பினை மறந்ததாக, புறக்கணித்ததாக, அலட்சியம் செய்ததாக இயங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கும் போது, மிக மிக கவலையானதாக காணப்படுகின்றது.

இப்பல்கலையை அண்டியுள்ள சமூகத்தில், இப்பிராந்தியத்தில் இன்றும் ஏறாழமான அரசியல், சமூகப், பொருளாதார பிரச்சினைகள் மலிந்து காணப்படுகின்றன.

குறிப்பாக இன்று நமது சமூகம், அதன் இருப்பு, காணி, வளப்பகிர்வுகள், அதிகாரப் பகிர்வுகள், இனமுரண்பாட்டிற்க்கான தீர்வுகள், சர்வதேசப் பின்புலத்துடனான இனவாத தீவிரவாதக் கெடுபிடிகள், சூழல் மாசடைதல்கள், பொருளாதார ரீதியிலான நெருக்குதல்கள், தொல் பொருளியல் மற்றும் வனவிலாகா போன்ற திணைக்களங்களின் கெடுபிடிகள், வட்டாரப் பிரிப்பு முறைகள், எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினைகள், தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கள், யாப்பு மாற்றத்திற்கான முன்மொழிவுகள், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான முன்மொழிவுகள், சமயக் கடமைகளுக்கெதிரான எதிர்ப்புவாதங்கள், சமய நிறுவனங்களுக்கெதிரான தாக்குதல்கள், உணவு மற்றும் உடை, வரட்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீர் வினியோகமும் விவசாயமும், உயர் மட்ட நியமனங்கள் போன்ற பல சவால்களையும் பிரச்சினைகளையும் நாளாந்தம் இந்த நாட்டில் சந்தித்துக் கொண்டு வருகின்றது.

அதேபோன்று, இப்பிராந்தியத்தின் மனிதவளம், சமூகக் கலாசாரம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றாடல், சமூக நிறுவனங்கள், கடற்றொழில், விவசாயம், மிருக வளர்ப்பு, குடிசைக் கைத்தொழில் துறை மற்றும் அரசியல் போன்ற துறைகளில் இன்னும் மேம்படுத்தப் படவேண்டிய பல அம்சங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான விடயங்களை மைய்யப்படுத்தி ஆராய்வதிலும், ஆய்வுப் பட்டறைகளை நடாத்துவதிலும், அதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதிலும், அவை தொடர்பிலான கொள்கைசார்ந்த விடயங்களை உருவாக்குவதிலும், அதனைப் பரிந்துரை செய்வதிலும், அதனை சமூக மயப்படுத்துவதிலும், எதிர்வு கூறல்களை முன்மொழிவதிலும், இவ்விடயங்கள் தொடர்பில் துறைசார்ந்த சமூகத் தலைமைகளை சிவிலமைப்புக்களை அணிதிரட்டி அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, கருத்தொருமைப்படுத்துவதிலும் விழிப்பூட்டுவதிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் சமூகம் பாரிய பங்களிப்பினை வழங்க வேண்டும், வழங்கியிருக்க வேண்டும்.

அத்தோடு, இவ்வாறான விடயங்களை நோக்கி தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை உயிரோட்டமான முறையில் சமர்ப்பிப்பதற்கும், அவ்விடயங்களின்பால் தங்களது கவனங்களைக் குவித்து ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கு, இளமானிகளை வழிப்படுத்துகின்ற பங்களிப்பினைக்கூட இந்தப் பல்கலைக் கழகத்தின் கல்விச் சமூகம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில், இப்பல்கலையில் கடமையாற்றுகின்ற சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர், அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் போன்ற இளமையான கல்வியியலாளர்கள், தங்களாலான பங்களிப்புக்களை சமூக மட்டத்தில் வழங்கிவருவதில் ஏனையவர்களை விட விதிவிலக்கானவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
இவ்வாறானவர்களையே இன்றைய நமது சமூகம் வேண்டி நிற்கின்றது. இவர்கள் வாழும் போதும் மறைவின் போதும் நமது சமூகத்தில் வாழ்த்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐய்யமில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த கல்வி முதுசம் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புள்ளாஹ் அவர்கள் முன்னுதாரண புரிசராகத் திகழ்கின்றார். நமது சமூகத்தின் பிரச்சினைகளை குறிப்பாக வட மாகாண முஸ்லிம்களின் இடப்பெயர்வையும் அகதி வாழ்வையும் தனது ஆற்றலாலும் ஆளுமையினாலும் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி அவைகளை தேசிய சர்வதேச மயப்படுத்தியதில் அவரது பங்களிப்பானது அளப்பெரியதாகும். இவ்வாறானவர்களை தங்களது முன்மாதிரிகளாகக் கொண்டு, தெ.கி.பல்கலைக்கழக கல்விச் சமூகம் தங்களது சமூகப் பொறுப்பினை அதற்கான பங்களிப்பினை மேற்க்கொள்ள ஆயத்தமாதல் வேண்டும்.

இவ்வாறான சமூகப் பொறுப்புக்களையெல்லாம் புறக்கணித்தவகையில், அவற்றையெல்லாம் ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு, இங்குள்ள கல்வியியலாளர்களில் சிலர், இப்பல்கலை விடயத்தில் இந்த நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்தினை உதாசீனம் செய்யும் முகமாக, பல்கலைக்கழக நிருவாக ரீதியிலான விடயங்களில் தேவையில்லாத தலையீடுகளை மேற்கொண்டு, அதன்பால் மாணவர்களில் சிலரையும் பிழையாக வழிப்படுத்தி, பிரச்சினைகளை ஏற்படுத்தி மூக்குடைபட்டுப் போகின்ற வேலைகளைச் செய்வதை தவிர்ந்து கொள்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2015ம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால், ஒரு திறமையான தேசப்பற்றுள்ள, சமூகப் பற்றுள்ள நிருவாகியாக பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவரது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்து  இரண்டாவது பதவிக்காலத்திற்கு வருவதற்கான நடைமுறைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நேரத்தில்,

இங்குள்ள சில விரிவுரையாளர்கள், அவர் மீண்டும் நிருவாகத்தை பொறுப்பெடுக்கக் கூடாது என்ற நோக்கில், அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிட்ட பொய்யான அவதூறான கட்டுக் கதைகளையும், பரப்புரைகளையும், அவருக்கெதிராக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்களையும் அவதானித்தபோது, அவர்கள் உண்மையில் கல்வியியலாளர்கள்தானா? நமது இளந்தலைமுறையினரை வழிப்படுத்தவும் வளப்படுத்தவும் இவர்கள் பொருத்தமானவர்கள்தானா? என்ற சந்தேகம் இன்றும் தொடர்ந்ததாகவே உள்ளது.

இப்பல்கலையின் தலைமைத்துவத்தை அவர் மீண்டும் பொறுப்பெடுக்கக் கூடாது என்பதற்காக, இவ்வாறானவர்கள் கையாண்ட திட்டங்களும் உத்திகளும் வழிமுறைகளும், அதற்காக அவர்களது உணவு, தூக்கம், ஓய்வு என்பன இல்லாமல், அவர்கள் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளும் பிரயத்தனங்களும், நமது சமூகத்தின் பிரச்சினைகளை கையாழ்கின்ற விடயத்தில், அதன் நலனில், இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்கின்ற விடயத்தில் காண்பித்திருப்பார்களாயின் நமது சமூகமும் இப்பிராந்தியமும் வளம் பெற்றிருக்கும்.
எனவே, இப்பல்கலையின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கின்ற பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள், ஒரு சிறந்த கல்விமான், ஒறு துறைசார்ந்த பேராசிரியர், ஆய்வு விடயத்தில் அனுபவமும் முதிர்ச்சியும் உடையவர், ஒரு திறமையான துணிச்சலான இளமையான நிருவாகி, இப்பல்கலையை அபிவிருத்தி செய்து சர்வதேச தரத்தில் முதன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்ற இலக்கினை உடையவர், இப்பல்கலையின் மூலமாக இப்பிராந்தியமும் சமூகமும் நன்மையடைதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டவர், இந்தப்பல்கலையின் அமைவிற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த மு.கா.தலைவர் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள், இப்பல்கலை விடயத்தில் கொண்டிருந்த எதிர்பார்ப்பினையும் ஆசையினையும் நன்கறிந்தவர்.

இவருடைய தலைமையின் கீPPழ் இங்குள்ள கல்வியிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இனிவரும் காலங்களிலாவது இப்பல்கலையை சர்வதேச மட்டத்தில் இன்னும் தரமுயர்த்துவதற்காக பாடுபடுவதுடன், நமது சமூகத்தினதும் இப்பல்கலையை அண்டியுள்ள  பிராந்தியத்தினதும் மேம்பாட்டிற்காக தங்களது முழுமையான சமூகம்சார் உழைப்பினையும் பங்களிப்பினையும் செலுத்த முன்வரல் வேண்டும்.

சமூகப் பொறுப்பிலிருந்து தெ.கி. பல்கலைக்கழக கல்விச் சமூகம் விலகிச் செல்கின்றதா? சமூகப் பொறுப்பிலிருந்து தெ.கி. பல்கலைக்கழக கல்விச் சமூகம் விலகிச் செல்கின்றதா? Reviewed by Madawala News on September 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.