சூடு பிடித்துள்ள துருக்கிய ஜனாதிபதித் தேர்தல்: மீண்டும் அரியணை ஏறுவாரா சாதனை நாயகன் அர்துகான்?

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
(மூலம்: Middle East Monitor)
துருக்கியில் ஜனாதிபதி தேர்தல்
மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  24 ஆம் திகதி துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துருக்கிய தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


அரசின் கூட்டணியும் வலதுசாரிக் கட்சியுமான தேசிய முன்னணி கட்சியின் தலைவர் தெவ்லத் பசீலியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்திற்கு முன்னதாக நடாத்த இணக்கம் தெரிவித்திருந்தமை சகலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தது. சமகாலத்தில் துருக்கி எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் துருக்கிக்கு எதிராக சர்வதேச ஆதிக்க சக்திகள் குறிப்பாக அமெரிக்கா தீட்டி வரும் சதித் திட்டங்கள் என்பவற்றை வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு இவ்விரு கட்சிகளும் முன்னின்று உழைத்து வருகின்றன. இதில் அர்துகான் ஆதிக்க சக்திகளினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.  


துருக்கியானது நேட்டோவில் அங்கத்துவ நாடாகவும் மேற்குலகின் நட்பு நாடாகவும் இருந்து வரும் நிலையிலும் கூட அதற்கு எதிராக சதியாலோசனைகள் சர்வதேச ரீதியில் ஏன் தீட்டப்பட்டு வருகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு 1924 இல் உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சியடைந்த காலகட்ட வரலாற்றை புரட்டியாக வேண்டும்.


உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சியும் மேற்குலகின் எழுச்சியும்:
முதலாம் உலகப் போரில் வெற்றி வாகை சூடிய நாடுகள் துருக்கியின் இஸ்லாமிய அடையாளங்களை களைந்து துருக்கியை மதச்சார்பற்ற நாடாக வெளிக்காட்டின. முஸ்லிம் நாடுகளின் கிலாபத்தாக விளங்கிய, 95 சதவீத ஸுன்னி முஸ்லிம்களை கொண்ட நாடான துருக்கியின் இஸ்லாமிய அடையாளங்களை பறித்து ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு முன்மாதிரியாக மதச்சார்பற்ற நாடாக துருக்கி திகழ வேண்டும் என்பதையே மேற்குலக நாடுகள் விரும்பின.

மீண்டுமொரு முறை கிலாபத் தோன்றிவிடக் கூடாது என்பதில் மேற்குலக நாடுகள் கொண்டிருந்த கரிசனையே அதுவாகும்.


மேற்குலகின் கெடுநோக்கிற்கு துருக்கியின் அப்போதைய இராணுவத் தளபதியும் முதலாவது ஜனாதிபதியுமான முஸ்தபா கமால் அதாதுர்க் தனது மறைவுக் காலம் (1938) வரை ஒத்துழைப்பாக இருந்தார். அவருக்குப் பின்னர் வந்த அத்தனை ஜனாதிபதிகளும் இராணுவத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களும் இஸ்லாமிய அடையாளங்களைத் துறந்த, மேற்கிற்கு வால் பிடிக்கும் முஸ்தபா கமால் அதாதுர்க்கின் பாதையையே பின்பற்றினர். இஸ்லாமிய மாண்புகளைப் பேணும் எந்தவோர் அரசியல்வாதியும் தெரிவு செய்யப்படுவதற்கு மேற்குலக அனுமதிக்கவில்லை.


இந்நிலையில் பிரதமராகத் தெரிவான நக்மத்தின் அர்பகான் துருக்கியை இயக்கி வந்த மேற்குலக நாடுகளின் மறைகரங்களை அகற்ற முனைந்தார். துருக்கியை பொருளாதார ரீதியில் மேற்குலகை சாராத தன்னிறைவு மிக்க நாடாக இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்டதாக மாற்றியமைக்க முயற்சித்தார். விழித்துக் கொண்ட மேற்குலக ஆதிக்க சக்திகள் நாட்டில் இராணுவப் புரட்சியை தோற்றுவித்து கட்சியைக் கலைத்து, பிரதமரை சிறையில் தள்ளுவதில் வெற்றி கண்டது.


இவ்வகையில் முஸ்லிம்களின் கிலாபத்தாக முன்னர் விளங்கிய துருக்கியானது அதன் முன்னைய நிலைக்கு மீளவும் உருப்பெற்று விடக் கூடாது என்பதில் மேற்குலக மறைகரங்கள் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தன. மேற்குலகுக்கு ஆதரவாக செயற்பட்ட முதலாவது துருக்கிய ஜனாதிபதி அதாதுர்க் காட்டிய வழியில் இருந்தும் மாற்றமாக செல்லும், இஸ்லாமிய அடிப்படைகளை நிறுவ முயற்சிக்கும் அரசியல் ஆதிக்கத்தை இராணுவ கவிழ்ப்பு மூலமாக அழித்து வருவதற்கு இராணுவத் தளபதிகளை மேற்குலகு நன்கு பயன்படுத்திக் கொண்டன.

சாதனை நாயகன் அர்துகானின் சாதுரியம்:


இஸ்லாமிய அடிப்படைகளை நிறுவ முயன்ற முன்னாள் பிரதமர் அர்பகானின் கட்சியை அடியொட்டிய வகையில் 2002 இல் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (Justice and Development Party) அர்துகான் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டமை துருக்கிய அரசியலில் மாபெரும் மைல்கல்லாக அமைந்து போனது. அர்பகானின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்த பலர் ஆட்சி அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். பொருளாதார ரீதியில் உலகில் 111 ஆவது நாடாக துருக்கி காணப்பட்ட நிலையில், ஊழல் மோசடிகள் என அரசின் அனைத்துப் பாகங்களும் உருக்குலைந்திருந்த காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி அதிகாரபீடமேறினர்.


நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி துருக்கியை உலகளவில் வேறொரு மட்டத்திற்கு எடுத்துச் சென்றது. பொருளாதார வல்லுநர்களின் எதிர்வுகூறல்களை பொய்ப்பிக்கும் வகையில் பொருளாதார துறையில் சர்வதேச ரீதியில் மாபெரும் அடைவுகளை நோக்கிப் பயணித்தது. பொருளாதார ரீதியில் உலகளவில் 16 ஆவது நிலைக்கும் ஐரோப்பாவில் 6 ஆவது நிலைக்கும் துருக்கி சடுதியில் முன்னேற்றம் கண்டது. முஸ்லிம் நாடுகளிலே துருக்கியின் பொருளாதாரம் முதல் நிலை அடைந்தது. உலக வங்கியில் கடன் பெற்ற முஸ்லிம் நாடுகள் துருக்கியிடம் கடன் பெறும் நிலைக்கு துருக்கிய பொருளாதாரம் உயர்வடைந்தது.


அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது எதுவெனில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி துருக்கிய அரசியலை தன்னிச்சையானதாக, ஸ்திரமானதாக மாற்றியமைத்தமையாகும். துருக்கிய அரசியலில் மேற்குலகின் மறைகரம் பிடுங்கப்பட்டது.


ஈராக் மீதான அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்களின்போது துருக்கியின் நிலைப்பாடு அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை வெளிக்காட்ட போதுமானதாக இருந்தது. ஈராக் மீதான அமெரிக்க அத்துமீறலுக்கு வளைகுடா நாடுகள் தமது நிலப்பரப்பையும் வான் பரப்பையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அமெரிக்காவுக்கு அடிபணிந்து நின்ற தருணத்தில் துருக்கிய வான்பரப்பை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க முடியாது என நெஞ்சுறுதியுடன் அறிவித்திருந்தமை துருக்கியின் துணிச்சலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

பொருளாதாரத்தில் வீறுநடை போடும் துருக்கி:

அரபு வசந்தத்தை கண்கூடாக கண்ட அரபுலக இளம் சமுதாயத்தினருக்கு துருக்கியானது இஸ்லாமிய முன்மாதிரி நாடாக தோற்றம் பெற்றது. அரபு நாடுகளின் மக்கள் தத்தமது நாடுகளிலும் இவர் போன்றதோர் ஆளுமை மிக்க தலைவர் தோன்றிவிட மாட்டாரா என ஏங்கும் அளவுக்கு துருக்கிய ஜனாதிபதி அர்துகான் அனைவரது உள்ளங்களிலும் தலைவர்களுக்கான வரைவிலக்கணமாக, உதாரண புருஷராக உருவெடுத்துள்ளார்.


இவ்வாறாக, இஸ்லாமிய நாடுகள் மீது செல்வாக்கையும் அரசியல் தலையீடுகளையும் மேற்கொண்டு வரும் மேற்குலக நாடுகளின் கெடுகனவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் அர்துகான் எனும் ஆளுமையை மேற்குலகு வெறுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்.
அரபுலகில் ஸ்திரம் வாய்ந்ததும் ஜனநாயகம் மிகுந்ததுமான நாடாக துருக்கி விளங்கி வருவது மேற்குலகுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. மேற்குலகுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வரும் ஏனைய அரபு நாடுகளும் துருக்கியைப் பின்பற்றி தன்னிச்சையான நாடாக மாறி விடுமோ என்பதிலும், நூற்றாண்டு காலமாக அரபுலகின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் தமது மறைகரங்கள் தம்மை விட்டும் நீங்கி விடுமோ என்பதிலும் மேற்குலகு பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. இவ்வாறான தோற்றப்பாடு ஏற்படுவதற்கு மேற்குலகு ஒருபோதும் அனுமதிக்காது என்பது நிதர்சனம்.


அத்துடன், அரபு நாடுகளின் மன்னர்கள் (குறிப்பாக வளைகுடா) தமது அரியாசனங்கள் ஆட்டம் கண்டுவிடுமோ எனும் அச்சத்துடனேயே அப்போதும் இப்போதும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக அரபு வசந்தத்தை வலிந்து அடக்குவதற்கும் அர்துகானுக்கு எதிராக சூழ்ச்சிகளை வகுப்பதற்கும் அவர்கள் இயல்பாகவே தள்ளப்பட்டுள்ளனர்.

தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள்:

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அனுமதியுடனும் ஆசிகளுடனும் இயங்கி வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வசந்தங்களை ஒடுக்கும் மத்திய கேந்திர நிலையமாக தொழிற்பட்டு வருகின்றது. 2016 இல் துருக்கியில் அர்துகானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கான சதித் திட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் அனுசரணையுடன் எமிரேட்ஸ்ஸிலேயே தீட்டப்பட்டன. குறித்த தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட பத்துல்லாஹ் கூலன் அமெரிக்காவிலேயே அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருகின்றமை இதனை மேலும் விளக்குவதாக அமைந்துள்ளது.  


தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அடுத்தபடியாக எவ்வகையிலேனும் அர்துகானை பதவியிறக்கியாக வேண்டும் என்பதில் மேற்குலகு அதிசிரத்தை கொண்டு இயங்குகிறது. அதன் ஓரங்கமாகவே சிரிய எல்லையில் போராடி வரும் குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளையும் எமிரேட்ஸ் நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது.
குர்திஷ் படைகளின் முதன்மை இலக்கு தெற்கு துருக்கியை சுயாட்சி உடையதாக மாற்றி துருக்கியின் அரசியல் உறுதிப்பாட்டை நிலைகுலையச் செய்வதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  விளங்குவதுமாகும். எனினும், அப்ரின் பிரதேசத்தில் அதிரடியாக ‘ஒலிவ் கிளை’ எனும் பெயரில் தாக்குதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வெற்றிகரமாக அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அர்துகான் வெற்றி கண்டு அமெரிக்க சதிகளுக்கு சேற்றை வாரி இறைத்தார்.


மேலும் ஒரு படி மேலே சென்று மன்பிஜ், அப்யாத், கஸ்மலி போன்ற சிரிய பிரதேசங்களிலும் தாக்குதல்களை நிகழ்த்தி எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்ற வகையில் தீவிரவாதக் குழுக்களை அழித்தொழித்தார் அர்துகான். இது அமெரிக்காவின் ஆணவத்துக்கு பெருத்த அடியாகிப் போனது.

மேற்குலகுக்கு சவால் விடும் துருக்கியின் ஆயுத தளவாடங்கள்:
சிரிய புரட்சி மற்றும் நேட்டோ தனது ஏவுகணை முறியடிப்பு தொகுதியை துருக்கியிலிருந்து அகற்றிக் கொண்ட பின்னர் அர்துகான் அதிரடியாக ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார். அதன் பலனாக இன்று துருக்கி தனது ஆயுத தளவாடங்களில் 65 சதவீதமானவற்றை மேற்குலகின் தரத்துக்கு நிகராக தாமே உற்பத்தி செய்து கொள்ளும் வல்லமையை பெற்றுள்ளன. நூற்றாண்டு காலமாக ஆயுத தளவாட தேவைப்பாடுகளுக்கு மேற்குலகை முற்றிலும் சார்ந்திருந்த நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றியமைத்த பெருமை அர்துகானையே சாரும். ஆயுத விற்பனையில் ஏகாதிபத்திய ருசியை சுவைத்துக் கொண்டிருந்த மேற்குலகுக்கு இந்நிலைப்பாடு பாரிய அதிர்ச்சியைக் கொடுக்காமலில்லை.



முன்னொரு காலத்தில் மேற்குலக அடிவருடியாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அதாதுர்க் மற்றும் அவரது வழிவந்த இராணுவ தளபதிகளின் கீழிருந்த துருக்கி வேறு, இன்று அர்துகானின் ஆட்சி வல்லமையில் மிளிரும் துருக்கி வேறு. ஏனைய அரபு நாடுகளைப் போன்று ஆதிக்க சக்திகளின் கைப்பொம்மையாக துருக்கியை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டு வர இயலாதுள்ளமை தெளிவு. எனினும், துருக்கியின் சுயாதீனத்தை தன் கடிவாளத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை. துருக்கியின் அசைக்க முடியாத அரணாகத் திகழ்ந்து வரும் அர்துகானை துருக்கிய அரசியல் களத்திலிருந்து அகற்றாத வரை இது துளியளவும் சாத்தியமில்லை என்பதனை அமெரிக்கா நன்குணர்ந்து கொண்டுள்ளது.


துருக்கியின் சுயாதீனமான, யாருக்கும் அடிபணியாத தன்மை மற்றும் அதற்கெதிரான சதித் திட்டங்களின் வெற்றிகரமான முறியடிப்புக்கள் என்பன அமெரிக்காவுக்கு பெருத்த ஏமாற்றங்களைக் கொடுத்துள்ள அதேவேளை புதுவிதமான தந்திரோபாயங்களை வகுப்பதற்கும் அமெரிக்கா முனைந்துள்ளது.


துருக்கியின் வளர்ச்சியும் அமெரிக்காவின் திருகுதாளங்களும்:

துருக்கியை முன்னைய காலங்களைப் போன்று சீர்குலைக்கும் நோக்குடன் களமிறங்கியுள்ள அமெரிக்கா துருக்கிய பொருளாதாரத்துடனும் நாணய மதிப்புடனும் போட்டியிட்டு வருகிறது. துருக்கியின் நாணய மதிப்பிறக்கதிற்கு மறைமுகமாக அமெரிக்கா பாரிய திட்டங்களை வகுத்து வருகின்றது.

அமெரிக்காவின் இத்திட்டங்களுக்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் எமிரேட்ஸ், சவூதி, லெபனான் போன்ற நாடுகள் துருக்கியிலிருந்து விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திகளை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கியுள்ளன.  ஜோர்தானும் அண்மையில் துருக்கியுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.

எனினும், துருக்கியின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு அவை காத்திரமானதாக அமையவில்லை. ஆக, இறுதி முயற்சியாக தேர்தலில் அர்துகானையும் அவரது கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை தோல்வியுறச் செய்வதற்கு அந்நாடுகள் சதித் திட்டங்களை வகுத்து வருகின்றன.

தன்னிகரற்ற தலைவனுக்கு எதிராக கூட்டிணைந்துள்ள கயவர் கூட்டம்:
அமெரிக்கா மற்றும் அதனுடன் கூட்டிணைந்து செயற்படும் அரபு நாடுகள் எதிர்பார்க்கும் வகையில் தன்னிகரற்ற தலைவன் அர்துகானை ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தும் காத்திரமான வேட்பாளர் இதுவரை தோற்றம் பெறவில்லை என்று கூறினால் மிகையாகாது. நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் அர்துகானை வீழ்த்துவது என்பது சாத்தியமானதல்ல.


தேர்தல் களத்தில் அர்துகானுக்கு குறிப்பிடத்தக்களவு போட்டித் தன்மையை ஏற்படுத்தக்கூடிய வல்லமையைக் கொண்டவர்கள் என கருதப்படும் முன்னாள் பிரதமர் அஹ்மத் தாவுதொக்ளு மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் ஆகியோர்கள் கூட தாம் அர்துகானை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என்றும், மாறாக அர்துகான் ஜனாதிபதியாக மீளவும் பதவியேற்பதையே தாம் விரும்புவதாகவும் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.  


சவூதி மற்றும் எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கி அர்துகானுக்கு எதிராகப் போட்டியிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் கூட அவர்கள் அம்முன்மொழிவை ஏற்க மறுத்து அர்துகானுக்கு சார்பான அறிக்கையையே விடுத்துள்ளனர். இதன் மூலம் அர்துகானுக்கு எதிரான சக்திகளின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான அவமானமாகும்.

அர்துகானின் தன்னம்பிக்கையில் மிரண்டு போயுள்ள மேற்குலகு:
இஸ்லாமிய அடிப்படைகளுடன் பெருமளவுக்கு ஒத்துப் போகும் அல்லது இஸ்லாமிய சார்புக் கொள்கைகளுடன் வெற்றிகரமாக துருக்கியை வழிநடாத்தி வரும் அர்துகான் மீதான காழ்ப்புணர்வுகள் மேற்குலகில் அதிகரித்து வருகின்றன என்பது தெளிவு. மீண்டுமொரு முறை இஸ்லாமிய நாடுகளை வழிநடாத்தும் கிலாபத் பொறுப்பை துருக்கி மீண்டும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் அரபு நாடுகளும் மேற்குலகும் காத்திரமாக உழைத்து வருகின்றன.


ஸுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய நாடொன்று  முன்னேற்றகர பாதையில் பயணிப்பதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. ஸுன்னி பெரும்பான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் யுத்தங்கள் அனைத்தும் உலகளாவிய இஸ்லாமிய தலைமைத்துவம் ஒன்று உருவாகிவிடக் கூடாது என்று எண்ணிய அரபு நாடுகளின் ஆதரவில் இடம்பெற்றவை என்பது கசப்பான உண்மையாகும். ‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் போர்வையில் நிகழ்த்தப்பட்டவை உண்மையில் ‘இஸ்லாத்திற்கு எதிரான யுத்தமே’ ஆகும்.  


தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 16 மாதங்கள் மீதமிருக்கின்ற நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகிறார் என்பது அர்துகான் தன் மக்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, தன்னால் ஆற்றப்பட்டுள்ள சேவைகள், அடைவுகள் மீதுள்ள தன்னம்பிக்கை என்பவற்றை உலகுக்கு வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

நன்றி: நவமணி 
சூடு பிடித்துள்ள துருக்கிய ஜனாதிபதித் தேர்தல்: மீண்டும் அரியணை ஏறுவாரா சாதனை நாயகன் அர்துகான்? சூடு பிடித்துள்ள துருக்கிய ஜனாதிபதித் தேர்தல்: மீண்டும் அரியணை ஏறுவாரா சாதனை நாயகன் அர்துகான்? Reviewed by Madawala News on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.