தவிர்க்கப்படுமா ஆடம்பர இப்தார்?


-எம்.எம்.ஏ.ஸமட்-
மனிதனை இறையச்சமுடையவனாக மாற்றி அவனை மறுமை வாழ்வின்  சுபீட்சத்திற்காக
தயார்படுத்துவதற்காகவும், ஏனையவர்களுக்கு பயனளிக்கின்ற விதத்தில் மனிநேயம்;  கொண்டவனாக வாழ வைப்பதற்காகவும் பல்வேறு கடமைகளையும், விதிமுறைகளையும் வல்ல இறைவன் வழங்கியிருக்கிறான்.

வல்ல அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்டுள்ள ஐம்பெரும் கடமைகளில் புனித நோன்பும் ஒன்று. உலகில் வாழும் ஏறக்குறைய 160 கோடி முஸ்லிம்கள் அவர்கள்; எந்நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களில் நோன்பு  நோற்பதற்கு தகைமை பெற்றவர்கள் அந்நோன்பை நோற்பது அவர்கள் மீது கடமையானது. அக்கடமையை வரம்பு மீறாமல் கடைபிடிப்பதும் அவர்களின் பொறுப்பாகும்.

பல கலாசார விழும்பியங்களை கொண்ட பல்லின சமூகங்கள்; மத்தியில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகி நாம், ரமழானின் கடமைகளை நிறைவேற்றுகின்றபோது,  ரமழானின் புனிதத்தை பாதிக்காத வகையிலும், சகோதர இன மக்கள் மத்தியில் புனித ரமழான்; பற்றியும், இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இறைவழிபாடுகள் குறித்தும் அவர்கள் தப்பபிப்பிராயம் கொள்ளாத வகையிலும், மேற்கொள்வது அதி முக்கியமென்பதை  உணர்வது காலத்தின் அவசியமாகவுள்ளது.



இவற்றை முஸ்லிம்கள் மத்தியில் உணரச் செய்வதற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உட்பட சில அமைப்புக்களும்.  எழுத்தாளர்களும் அறிக்கைகளினூடாகவும், கட்டுரைகள் வாயிலாகவும் விழிப்புணர்வூட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில், சமகால நிலைமைகள் தொடர்பிலும், இஸ்லாத்தின் வாழ்க்கை வழிகாட்டல் குறித்தான பூரண அறிவைப் பெற்றுக்கொள்ளாமலும் முஸ்லிம் என்ற லேபலுடன் வாழும்; சிலர்; புரியும் சமயோசனையற்ற செயற்பாடுகள் நோன்பின் மாண்பை மாசுபடுத்திவிடுவதோடு வன்சொல்களுக்கும், ;வன்முறைகளுக்கும் இந்நாட்டு முஸ்லிம்களை முகமகொடுக்கச் செய்த வரலாறுகளும், அதன் வடுக்கலும் நம்மை விட்டு அகலவில்லை.





நோன்பும் முஸ்லிம்களும்;



உலக முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றும் இஸ்லாமிய மாதமாக விளங்குவது இப்புனித  ரமழான் மாதம்தான். ரமழான் என்ற அரபுச் சொல் பல அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும், சுட்டெரித்தல் என்ற அர்த்தம் பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களினால் பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில், பாவங்களிலிருந்து உணர்வுகளையும், செயற்பாடுகளையும் தடுக்கும் ஆற்றலை நோன்பு கொண்டிருக்கிறது.



அதனால்தான் உள்ளத்தையும், உடலையும் ஒன்றுசேரச் செய்யும் ஆற்றல் இந்நோன்புக்கு உண்டென மருத்துவமும், உளவியலும் குறிப்பிடுவதாக அறிஞர்களும், ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இறைவன் கடமையாக்கிய நோன்பின் மாண்பையும் நபி (ஸல்) அவர்கள் கடைபிடிந்து வந்த நோன்பின் பக்குவத்தையும் இன்று உலகம் ஆராய்ந்து உணர்ந்துள்ள நிலையில,; இனவாத, மதவாத சிந்தனையற்ற மாற்று மதத்தினரும் அதன் மாண்புக்கு மதிப்பளித்து வருகின்றனர்.

இம்மாதத்தின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி பள்ளிவாசல் மிம்பர்களிலும், ஊடகங்களினூடாகவும் இன்னும் சிறப்புச் நிகழ்ச்சிகளினூடாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், சொல்பவர்களும், அவற்றைக் கேள்வியுறுபவர்களும் அவர்களின் அன்றாட செயற்பாடுகளினூடாக இம்மாதத்தின் புனிதத்தை எவ்வளவுக்குப் பேணுகிறார்கள் என்பதை அவரவர் மீள்வாசிப்புக்கு உட்படுத்தினால்; விடை கிடைத்துவிடும்;.

ரமழான் மாதம் நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்ளும் மாதம் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இம்மாதத்தில் தர்மம் செய்வதில் நபி (ஸல்) அவர்கள் வேகமாக வீசும் காற்றைப் போன்று செயற்படுவார்கள் என ஹதிஸ்கள் மூலம் அறிய முடிகிறது. அதிகளவில் தர்மம் செய்து அதிகளவிலான பலன்களை இம்மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தனது உம்மத்துக்கு வழிகாட்டுவதற்காக நபி அவர்கள் அவ்வாறு தர்மம் செய்வதில் ஆர்வமாகச் செயற்பட்டார்கள் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அத்தோடு, வலது கரத்தினால் கொடுக்கும் தர்மம் இடது கரத்திற்கு தெரியக் கூடாது. அந்தளவு அந்தரங்கமாகச் செய்யப்படும் தர்மமே மிகச் சிறந்தது என்றும் தர்மம் கொடுப்பது தொடர்பில் விபரிக்கப்படுகிறது. இறைவனுக்கு பயந்து நபி வழியில் பலர் நல்ல பல விடயங்களுக்காக தமது செல்வத்தை தர்மம் செய்கையில்,  நம்மில் சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக தர்மம் செய்கிறார்கள். வணக்க வழிபாடுகளைக் கூட விளம்பரங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இப்தார் என்ற வணக்கமானது கடந்த காலங்களில்  சில முஸ்லிம்கள் மத்தியில் விளம்பரத்திற்காகச் செய்யும் ஒரு நிகழ்வாக மாத்திரமின்றி அது ஆடம்பர உணவு வகைகளைக் கொண்டதாகவும் மாற்றப்படுகிறது.

அத்தோடு, இப்தாரின் மூலம் வீண்விரையம் செய்யப்படுவதையும் சில சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தமை கவலையளிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக பணமும், உணவும் வீண்விரையம் செய்யப்படுகிறது அல்லது வீண்வரையம் செய்யப்படுவதற்காக விளம்பரம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடுவதில் தவறிருக்காது. 'உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரையம் செய்யாதீர்கள்' என இறைகட்டளை எச்சரித்துக்கொண்டிருக்கையில், இப்தாருக்கு வௌ;வேறு வியாக்கியாணங்கள் கொடுக்கப்பட்டு பல அறுசுவை உணவுகளோடு ஒரு விழாவிக்கு ஒப்பான நிகழ்வு போன்று வசதி படைத்தவர்கள், உயர் பதவிகள் வகிப்பவர்கள், அரசியல் பிரமுவர்கள் என இப்தார் செய்வதற்கான அத்தனை வசதிகளும் உடையவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும.; வரவேற்று மண்டபங்களிலும் இன்னும் பல்வேறு தளங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் இப்தாருக்காக அழைக்கப்படுவதையும் காண முடிகிறது.

இப்தார் என்பது ஒரு வணக்கம் என்பது மறக்கடிக்கப்பட்டு விளரம்பரமும் ஆடம்பரமும் இதில் மேலோங்கி நிற்பதை கடந்த காலங்களில் மேல்மட்டதினரினால் நடாத்தப்பட்ட இப்தார்களின்போது கண்ட கசப்பான அனுபவப் பகிர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

பிற சமூக நோக்கும் இப்தாரும்

இப்தார் ஒரு வணக்க வழிபாடு என்பது நம்மில் பலருக்கு மறக்கப்பட்டுவிட்டது. சகவாழ்வு என்ற அடிப்படையில் நோன்பு நோற்காதாவர்களையும் ஒன்றிணைத்து இடம்பெறும் நோன்பு திறத்தல், நோன்பு திறக்க வைத்தல் என்பது ஒரு கலாசார நிகழ்வு என்றதொரு தோற்றப்பாட்டை இந்நாட்டில் வாழும் சகோதர இன மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக நம்மாட்டில் நோன்பு திறக்க வைத்தல் என்பது ஒரு போட்டிக்குரிய விடயமாகவும்   சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நோக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. எவ்வளவக்கு எவ்வளவு ஆடம்பர உணவுகளைக் கொண்டு நோன்பு திறக்கச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரமாண்டமாக இப்தாரை நடாத்த வேண்டும். அதன் மூலம் நமது அமைப்பும், நிறுவனமும், நாமும் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் புரியப்படும் ஒரு நிகழ்வாக இப்தார் மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதுடன் அவ்வாறானதொரு நோக்கத்துடன்  இப்தார் ஏற்பாடு செய்யப்படுமாயின் இச்செயற்பாடானது  எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்காது என்பதையும் உரியவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகவுள்ளது. ஏனெனில், எண்ணத்திற்கே இறைவனிடம் கூலியுள்ளது.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் இப்தார் ;மூலம்; சுய விளம்பரமும் வீண்விரையமுமே அரங்கேற்றப்படுகிறது. இவ்வாறான விளம்பரத்தினாலும், வீண்விரையத்தினாலும் இறை கட்டளையே மறக்கப்படும் நிலை காணப்படுகிறது. இப்தார் என்ற வணக்கத்தின் நோக்கம்; மாசுபடுத்தப்படுவதையும்; பொதுவாக அவதானிக்க முடிகிறது.

'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழத்தால் நோன்பு திறக்கட்டும். அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபி அவர்களின் இக்கூற்றானது நோன்பு திறக்கும்; போது எளிமையான உணவைக் கொண்டு நோன்பு திறக்க வேண்டுமென்பதையும் நோன்பைத் திறக்க வைக்க வேண்டும் என்பதையும் வழியுறுத்துவதை நாம் உணர்;ந்து கொள்ள முடிகிறது.

ஆனால், நம்மர்வர்களில் சிலர்; நோன்பு திறப்பதற்காகவும் திறக்க வைப்பதற்காகவும் பரிமாறும் உணவானது நபி அவர்களின் கூற்றை உதாசீனம் செய்வாதாகவே அமைகிறது. நோன்பு திறக்க வைப்பது நன்மையானது. அதன் பெறுமதி அளவிட முடியாதது. என்றாலும் நோன்பு திறக்க வைக்கப்பதற்காக மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் அதன் நன்மையை இல்லாமல் செய்துவிடுமா? எனச் சிந்திக்கச் செய்கிறது. குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொள்ளும் நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

அமைப்புக்களும், நிறுவனங்களும், தூரக ஆலயங்களும், அரசியல் பிரமுவர்களும் என பல்வேறு தரப்பினர்களினால் நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்வதற்காக வைக்கப்படும் உணவுகள் ஒரு பெரும் விருந்தாகவே அமைந்து விடுகிறது. இந்த இப்தார்களில்; நோன்பு திறக்க வசதியற்ற ஏழை எளியவர்கள் எத்தனை பேருக்கு உண்மையில் அழைப்பு விடுக்கப்படுகிறது. எத்தனையோ ஏழைகள் நோன்பு நோற்பதற்கும் திறப்பதற்கும் பல சிரமங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

நோன்பு திறக்கச் செய்யும் ஒவ்வொரு தரப்பினரும் அவரவர் தரத்திற்கு ஏற்றவர்களுக்கே அழைப்பு விடுக்கின்றனர். அவ்வாறு அவரவர் தரங்களுக்கு ஏற்ப அழைப்பு விடுத்து நோன்பு திறக்கச் செய்வதால் இப்தாரின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறதா அல்லது இல்லையாக என்பதற்கு அப்பால் பலரின் பல இலக்குகள் நிறைவேற்றப்படுகிறது என்பதே உண்மை.

நோன்பு நோற்பதற்கு வசதியுள்ளவர்கள் அழைக்கப்பட்டு பிரமாண்;டமான முறையில் உணவுகளைப் பரிமாறி அவற்றை அவர்கள் உண்ண முடியாது வீசுகின்ற நிலையும் காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி, ஆடம்பர உணவுகளைப் பரிமாறி இப்தாரை நடாத்திவிட்டு, தாங்கள் நடாத்திய இப்தார் பிரமாண்டமாக நடைபெற்றது என ஒரு சில அமைப்புக்கள் சென்ற ஆண்டுகளில் ஊடகங்களுக்கு செய்தி வழங்கி தங்களை விளம்பரப்டுத்தியமை இன்னும் ஞாபமாகவேவுள்ளன.

இப்தாரின் நோக்கம் மறக்கப்பட்டு சுய விளம்பரத்திற்காகவும் தனிநபர் மற்றும் அமைப்புக்களின் செல்வாக்குகளை பிரபல்யப்படுத்துவதற்;காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் என பல உள்நோக்கங்களைக் கொண்டு நடைபெறும் இப்தார்களுக்காகச் செலவளிக்கப்படும் இலட்சக் கணக்கான பணத்தினை அண்மையில் அம்பாறையிலும், கண்டியிலும் கடும்போக்காளர்களின் வன்முறைகளினால் சொத்து, செல்வங்களை  இழந்து வாழ வழியின்றி வாழ்வாரத்தைக் கட்டியெழுப்புதவதற்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும், வரட்சியாலும், மழை வெள்ளத்தினாலும்;; பாதிக்கப்பட்டுள்ளவர்களும் வழங்குவதற்கு முன்வருவது காலத்தின் கட்டாயமாகும்.

வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காலம்காலமாக வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இந்த ஆடம்பரமான, பிரமாண்டமான  இப்தார்களுக்காகச் செலவிடப்படும் பணத்தை ஏன் கொடுத்துதவ  முடியாது? இப்தார் எனும் வணக்கம், அதற்கான சிறப்புமிக்க நேரம் இத்தகையவர்களின் சுய  விளம்பரத்தின் முதலீட்டுத்தளமாக இவ்வாண்டிலும் பயன்படுத்தப்படுமா? நோன்பு நோற்றவர்களைத்தான்  நோன்பு திறக்கச் செய்ய வேண்டும். நோன்பு நோக்காதவர்களையும் நோன்பு திறக்கச் செய்வதும் அதற்காக பெரும் தொகைப் பணம் செலவழிக்கப்படுவதும் அறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியுமானதா? விளம்பரப்படுத்தியும் வீண்விரையம் செய்தும்தான் சகவாழ்வiயும,; சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்த வேண்டுமா? என்ற பல கேள்விகள் இப்தார் வணக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்; தொடர்பில் நடுநிலையாகச் சிந்திக்கின்றவர்கள் மத்தியில் எழுவது நியாயமாகத் தோன்றுகிறது.

'நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள';. இந்த நபி மொழி பல ஆதாரக் கிரந்தங்களில் பதிவாகியிருக்கிறது. ஆனால,; நட்சத்திர ஹோட்டல்களிலும், வரவேற்பு மண்டபவங்களிலும் நடைபெறுகின்ற இப்தாரின் போது பிரார்த்தனையில் ஈடுபடுவதற்குப் பதிலாக பலர் வீணான பேச்சுக்களில் ஈடுவதை அவதானிக்க கடந்த காலங்களில் காண முடிந்தது. இப்புனித நேரத்தில் இப்பேச்சுக்கள் பாவத்தின் பக்கமும் இழுத்துச் செல்லும் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர்.

இப்தார் என்பது சுய விளம்பரத்திற்கும், வீண்விரையத்திற்குமான  நிகழ்வாக மாற்றப்படாது எந்நோக்கத்திற்காக இப்தார் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்று இஸ்லாம் கூறிப்பிடுகிறதோ, எவ்வாறு இப்தார் நடைபெற வேண்டும் என நபி வழி சுட்டிக்காட்டுகிறதோ அந்த அடிப்படையில் இப்தார் வணக்கம் அமையப் பெற வேண்டும். சுய விளம்பரத்திற்காகவும,; புகழுக்குமாக இப்தாரை மேற்கொண்டு மாற்று மதத்தினர்; நினைப்பது போன்று இப்தார் ஒரு சடங்கு என்ற தோற்றப்பாடு வளர்க்கப்படுவது இவ்வாண்டிலிருந்தாவது தவிர்க்கப்பட வேண்டும்.

இப்தாரின் நோக்கத்தை கலாசார நிகழ்வாக ஒரு சாரார் கடந்த காலங்களில் மாற்றியிருக்கும் நிலையில், மற்றுமொரு சாரார் ஊடகங்கள் வாயிலாக இப்தார், ஸஹர் நேரங்களை தங்களது பொருளாதார, உழைப்பின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வர்த்தக விளம்பர நேரங்களாக கடந்த பல வருட காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்; என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ரமழானின் புனிததத்தைத் தகர்கும் ஊடக விளம்பரங்கள்;;

புனித ரமழானைக் கௌரவிக்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது ஊடக நிகழ்ச்சி நிரல்களில் ரமழான் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்புச் செய்வதற்கு நேரம் ஒதுக்கியிருக்கின்றமை வரவேற்றக்கத்தக்கது. ஒரு சமூகத்தைக் கௌரவிக்கக் கூடிய நடவடிக்கையாகும்.

இருப்பினும,; இப்தார், மற்றும் ஸஹர் நேரங்களில்; ஊடகங்களில் இடம்பெறுகின்ற ரமழான் நிகழ்ச்சிகளின் இடையிடையே ஒலி, ஒளிபரப்பப்படுகின்ற வர்த்தக விளம்பரங்கள் இந்நேரங்களின் புனிதத்தில் தடங்களை ஏற்படுத்துவதாக அமைகிறது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகவுள்ளது.

இற்றைக்கு இரண்டு அல்லது மூன்று தசாப்பதங்களுக்கு முன்னர் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் இலங்கையில் செயற்படவில்லை. குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தின் நிகழ்ச்சிகளையே மக்கள் கேட்கக் கூடியவர்களாக இருந்தனர்.

அக்காலங்களில் ரமழான் கால நிகழ்ச்சிகள் குறிப்பாக ஸஹர் நேர நிகழ்ச்சிகள் எந்தவொரு வர்த்தக விளம்பரமுமின்றியே ஒலிபரப்புச் செய்யப்பட்டது. தனித்துவமான நிகழ்ச்சியாக அவை அமைந்தன. ஆனால், பணத்தின் மீது ஆசைப்பட்டு, பணத்தை உழைத்துக் கொள்வதற்கு வழிதேடிய விளம்பர முகவர்களின் ஊடுருவலானது தனித்துவமிக்க அந்த நிகழ்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.


அதாவது, எவ்வித வர்த்தக விளம்பரமுமின்றி ஒலிபரப்புச் செய்யப்பட்ட ரமழான் கால நிகழ்ச்சிகள் வர்த்த விளம்பரங்களின்றி ஒலிபரப்புச் செய்ய முடியாத அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், 30 நிமிடம் அல்லது ஒரு மணித்தியாலம் வரை ஒலிபரப்புச் செய்யப்படும் விஷேட இப்தார் மற்றும் ஸஹர் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படும் நேரத்தில் அதிக நேரங்கள் விளரம்பரங்கள் ஒளி ஒலிபரப்புச் செய்யப்படுவதற்கு கட்ந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

அரச ஊடகத்தின் நிலை இவ்வாறு இருக்கையில், தனியார் ஊடகங்கள் ஒலி, ஒளிப்பரப்புச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கிடையே விரும்பத்தகாத இசைகள் கலந்த விளம்பரங்களைக் கேட்கவும் பார்க்கவும் வலிந்து தூண்டப்படுகிறது. புனிதமிக்க ரமழானின் நேரங்களையும ஒரு சில விளம்பர முகவர்களின் பண ஆசை மாசுபடுத்தி விட்டதா? இதற்கும் பல நியாயங்கள் முன்வைக்கப்படுமா? இவ்வாறான செயற்பாடுகளினால் தனித்துவத்தை இழப்பதும் பின்னர் அவற்றைக் கோருவதும்; நாங்களாகவே இருக்கிறோமல்லவா? ஏன்ற கேள்விகள் கடந்த காலங்களில் எழுந்த நிலையில் சமூகத்திற்காக பேசுகின்றவர்கள் சமூகத்திலுள்ள தவறுகளையும் தகர்ததெரிவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டித்;தான் ஆக வேண்டும். அப்போததான் நமது செயற்பாடுகள் அர்த்தமுள்ளாக மாற்றப்படும்.

மாற்றத்தின் தேவை

அந்தவகையில், ரமழான் மாதத்தின் மாண்பும் அதன் புனிதமும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இம்மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகள் குறிப்பாக இப்தார் ஏற்பாடுகள் மூலம் சுய விளம்பரம் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படுவதுடன் வீண்விரையமும் தவிர்க்கப்படுவது அவசியமாகும். இவ்வாறனா மாற்றம் எம்மால் ஏற்படுத்தப்படும்போதுதான் நமது செயற்பாடுகளின்; உண்மையான நோக்கம் அடையப்பெறும்.

இறை கட்டளையின் பிரகாரமும் நபி காட்டிய வழி முறையிலும் ஆடம்பர உணவுகளும், வீண்விரையமுமின்றி ரமழான் கால இப்தார்களை ஏற்பாடு செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றபோதுதான் அதன் முழுமையான பயனை அடைந்துகொள்ள முடியும். இறைவன் நமது எண்ணங்களையும், செயற்பாடுகளையும் அவனுக்குப் பொறுத்தமானதாக ஆக்கி வைப்பானாக!

18.05.2018 விடிவெள்ளி

தவிர்க்கப்படுமா ஆடம்பர இப்தார்? தவிர்க்கப்படுமா ஆடம்பர இப்தார்? Reviewed by Madawala News on May 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.