குறுகிய மனப்பான்மையுள்ள சில இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்னெடுக்கப் பட்டு வருகிற ஒரு விஷமப் பிரச்சாரத்தின் விளைபொருளே...


சகல இன மக்களும் சற்றேறக்குறைய சமவிகிதத்தில் வாழும் ஓர் ஊராகவே திருகோணமலை
அறியப்படுகிறது. நானறிந்த வகையிலும் சகவாழ்வுக்குப் பேர்போன ஒரு நகராகத்தான் இருந்தது.

இந்நிலையில், அபாயாவை முன்வைத்து சண்முகா இந்துக் கல்லூரியின் முன்னால் நேற்று அரங்கேற்றப்பட்ட ஆர்ப்பாட்ட நாடகம் குறுகிய மனப்பான்மையுள்ள சில இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்கமைய முன்னெடுக்கப் பட்டு வருகிற ஒரு விஷமப் பிரச்சாரத்தின் விளைபொருளாகவே தோன்றுகிறது.


இலங்கை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற பல்வகைமைத்துவ கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு. (கவனிக்க: இங்கு நான் குறிப்பிடுவது அவரவர் அடையாளத்தைப் பேணி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழும் சகவாழ்வை. ஒஸ்தாதுமாரின் அடிப்பொடிகள் கூறும் இரண்டறக் கலந்து கரைந்து போகும் பன்மைத்துவத்தை அல்ல.)


சமூகமயமாக்கல் முகவு நிறுவனங்களில் முக்கியமானது பாடசாலை. இலங்கை போன்ற ஒரு நாட்டில் கலாசார பல்வகைமையைக் கற்பதற்கான ஒரு வாய்ப்பு பாடசாலை ஊடாகக் கிட்டுகிறது. பாடசாலைச் சூழலில் அவரவர் சமய கலாசாரத்தைப் பேணியொழுகுவதற்கான உரிமையை வழங்குவதன் மூலம் இளவயதிலேயே இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை இலகுவாக ஊட்டலாம்.


உண்மையில் இன நல்லிணக்கத்தை இவ்வாறான மறைமுக கலைத்திட்டத்தினூடாக ஊட்டுவதுதான் சாத்தியமேயொழிய பாடப்புத்தகத்தில் படம் வரைந்து குறிப்பதாலும், பண்டிகைக் காலத்தில் முகஸ்துதிக்காக வாழ்த்துகளும், பலகாரமும் பரிமாறிக் கொள்வதாலும் மட்டும் அது சாத்தியமாவதில்லை.


கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தாய்மார் எவ்வாறான ஆடை அணிந்து வர வேண்டுமென்பதை வரையறுத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவுறுத்தல் குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னர் அவ்வாறு ஆடைத்தெரிவைக் கட்டுப்படுத்துவதை தடைசெய்து ஒரு விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.


பாடசாலை வளவுக்குள் பிரவேசிப்பவர்கள் அரைகுறை ஆடைகள் அணிந்து வருவதையே தடுப்பதற்கு அதிகாரமில்லை என்கிறபோது, முஸ்லிம் ஆசிரியைகளின் மற்றும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி சகோதரிகளின் கண்ணியமான ஆடைத்தெரிவை தடுப்பதை சட்ட ரீதியாகவும் சரி, அற ரீதியாகவும் சரி, எந்தக் கொம்பனாலும் நியாயப்படுத்த முடியாது.


இதை ‘இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே’ என்று இனவாதம் கக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், ‘அதானே?’ என்று அந்த கோத்திரவாத கோஷங்களை சரிகண்டு, கமுக்கமாக கட்டைவிரல் உயர்த்தும் ஸ்லீப்பர் செல்களுக்கும், சந்தடி சாக்கில் கருத்து கந்தசாமிகளாய் கிளம்பி ‘அடிப்படை, அடையாளம், இருப்பு, இலக்கு’ என்று சிக்கிமுக்கி வாசகங்களுடன் ஆலோசனை கூற வெளிக்கிடும் ஆஃப்பாயில் அறிவுஜீவிகளுக்கும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு விஷயத்தைக் கூறி முடித்துக் கொள்கிறேன்.

வாய்க்கு வாய் மனித உரிமை, அடிப்படை உரிமை என்று ஓயாது அரற்றும் NGO காரர்கள் இது தொடர்பில் இன்னும் கள்ள மௌனம் சாதிப்பதை கவனித்தீர்களா?

- அஜ்னபி -
குறுகிய மனப்பான்மையுள்ள சில இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்னெடுக்கப் பட்டு வருகிற ஒரு விஷமப் பிரச்சாரத்தின் விளைபொருளே... குறுகிய மனப்பான்மையுள்ள சில இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்னெடுக்கப் பட்டு வருகிற ஒரு விஷமப் பிரச்சாரத்தின் விளைபொருளே... Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.