ஹர்த்தால் அனுஷ்டித்த என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்தது சட்ட ரீதியானதா? இது தொடர்பாக சட்டம் கூறுவது என்ன?


ஹர்த்தால் அனுஷ்டித்த என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்தது சட்ட ரீதியானதா? இது தொடர்பாக சட்டம் கூறுவது என்ன?இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அசாதரான நிலமை காரணமாக எமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் இன்று வாழ்வதற்கே பீதி அடைந்துள்ள ஒரு நிலை காணப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீது நடாத்தப்பட்டுவரும் இனவாத தாக்குதல் காரணமாக உயிர், உடமைகள் என பலவாறான இழப்புகளை இன்று முஸ்லிம் மக்கள் இழந்து நிர்க்கதியாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத தாக்குதலை கண்டித்தும் அதனை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தும் முகமாகவும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 06.03.2018 அன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டித்த பொழுது எமது பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்து இழுத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு கைது செய்து இழுத்துச்செல்ல முடியுமா? இவ்வாறு கைது செய்ய அதிகாரம் உள்ளதா? என்பதை சட்டத்தின் வாயிலாக நோக்குவோம்.

கலவரம் அல்லது ஆர்ப்பட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் அதில் எம்மவர் ஒருவர் பங்குபற்ற சென்றால் அவர் அது தொடர்பான சட்டத்தை அறிந்து இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இது தொடர்பாக தொடர்ச்சியாக நோக்குவோம் ஆயின்

இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை சட்டம் பிரிவு 95 சட்ட விரோதமான கூட்டத்தை கலைத்தல் பற்றிய ஏற்பாடுகளை கொண்டு காணப்படுகின்றது. அதன் படி

பிரிவு 95 (1) - எவரேனும் நீதவான் அல்லது பொலிஸ் பரிசோதகர் (Inspector Of Police ) பதவிக்கு குறையாத பதவியை உடைய எவரேனும் பொலிஸ் அலுவலர் ஏதேனும் சட்ட விரோத கூட்டத்தை அல்லது பொதுமக்கள் சமாதானத்தை குழப்பக்கூடிய சாத்தியம் உள்ள ஐந்து அல்லது ஐந்து க்கும் அதிகமான ஆட்களைக் கொண்ட ஏதேனும் கூட்டத்தை கலைந்து செல்லும் படி ஆணையிடலாம் என்பதுடன் அவ்வாறு ஆணையிட்டால் உடனடியாக கலைந்து செல்ல வேண்டியது அக் கூட்டத்தின் கடமையாதல் வேண்டும்.

எனவே மேற்சொன்ன சட்ட பிரிவின் பிரகாரம் நோக்கும் போது எமக்கு பல விடயங்கள் தென்படுகிறது. இங்கு கூட்டத்தை கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும். பிறப்பிக்கப்பட்ட உடனயே கட்டாயம் கலைந்து செல்ல வேண்டும். அவ்வாறு கலைந்து செல்லாவிடின் என்ன நிலைமை என பிரிவு 95 (2) ஏற்பாடு செய்கின்றது.

பிரிவு 95 (2) - இவ்வாறு ஆணையிடப்பட்டதன் மேல் அத்தகைய கூட்டம் எதுவும் கலைந்து செல்லாவிடின் அல்லது அவ்வாறு ஆணையிடப்படாமலிருந்தும் கலைந்து செல்லாதிருப்பது போல் அக்கூட்டம் நடந்து கொண்டால் நீதவான் அல்லது பொலிஸ் அலுவலர் அக்கூட்டத்தை கலைக்க நியாயமான அளவு அவசியமாக கூடியவாறான பலப்பிரயோகத்தை மேற்கொள்ளலாம் இதனூடாக அத்தகைய கூட்டத்தை கலைக்க முற்படலாம். அத்துடன் இத்தகைய கூட்டத்தை கலைக்கும் நோக்கத்திற்காகவும் சட்டத்துக்கு இணங்க அவர்களை தண்டிக்கும் முகமாகவும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியினராக உள்ள ஆட்களை கைது செய்து தடுத்து வைக்கும் நோக்கிற்காகவும் Army, Navy, Airforce போன்ற ஆட்கள் அல்லாத வேறு ஆட்களின் உதவியைக் கோரலாம்.

எனவே மேற்சொன்ன பிரிவின் படி நோக்கினால் சட்ட விரோத கூட்டத்தை கலைக்க இயன்ற அளவு பலம் பொலிசினால் பிரயோகிக்கப்படலாம் என்பது புலனாகின்றது. அதனூடாக பலரை கைது செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கலைந்து செல்ல மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும். இங்கு இராணுவ பலம் பிரயோகிக்க முடியாது. அவ்வாறு பிரயோகித்தால் அது பொலிஸார் சட்டத்தை மீறியதாக கருதப்படும்.

எனவே எப்போது இராணுவ பலத்தை பிரயோகித்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கலாம் என்று நோக்கும் போது இது தொடர்பில் பிரிவு 95 (3) ஏற்பாடுகளை கொண்டுள்ளது.

பிரிவு 95 (3) - அத்தகைய கூட்டம் எதுவும் வேறு விதத்தில் கலைக்கப்பட முடியாததாகவும், அத்துடன் பொது மக்கள் பாதுகாப்புக்கு அது கலைக்கப்பட வேண்டியது அவசியமாகவும் இருப்பின் ஒரு நீதவான் அல்லது அந்த மாவட்டத்துக்கான அரசாங்க அதிபர் அல்லது பொலிஸ் கண்காணிப்பாளர் (SP) பதவிக்கு குறையாத பதவி உடைய எவரும் Army , Navy , Airforce எவரேனும் வீரரை சட்டத்தின் அடிப்படையில் ஆணை பெற்ற அதிகாரியை கட்டளை இட்டு கூறுவதன் பெயரில் இராணுவ வலுவைப் பயன்படுத்தி அக்கூட்டத்தை கலைக்கலாம். மேலும் இத்தகைய கூட்டத்தை கலைக்கும் நோக்கத்திற்காகவும் சட்டத்துக்கு இணங்க அவர்களை தண்டிக்கும் முகமாகவும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியினராக உள்ள ஆட்களை கைது செய்து தடுத்து வைக்கவும் முடியும். இதற்கு இணங்க தேவையான அளவு பலப்பிரயோகம் மேற்கொள்ள முடியும். ஆனால் இயன்றளவு தாக்கத்தை குறைக்கும் முகமாகவே செயற்பட வேண்டும்.

முக்கியாமாக இங்கு பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த இயன்றளவு பலத்தை பொலிஸ் பிரயோகிக்கும் என்பது முக்கியமான விடயம் ஆகும்.

எனவே மேற்சொன்ன விடயத்தை நோக்கும் போது சட்ட விரோத கூட்டம் ஒன்றை எவ்வாறு அரசாங்கம் கலைக்கலாம் என்பது தெளிவாகிறது. எனவே அதன் அடிப்படையில் பலரை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அதிகாரம் பொலிஸுக்கு காணப்படுகின்றது.
எனவே இனிமேல் கலக பிரதேசங்களுக்கு செல்லும் போது இச்சட்டத்தை அறிந்து செல்வது எமக்கான ஒரு சுய பாதுகாப்பாக அமையும் என நான் கருதுகின்றேன்.

Iyasdeen M Ithrees 
LL.B (Hons) Col.
ஹர்த்தால் அனுஷ்டித்த என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்தது சட்ட ரீதியானதா? இது தொடர்பாக சட்டம் கூறுவது என்ன? ஹர்த்தால் அனுஷ்டித்த என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்தது சட்ட ரீதியானதா? இது தொடர்பாக சட்டம் கூறுவது என்ன? Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5