முஸ்லிம்கள்- இனவன்முறை- சவால்கள்!!! (அன்று தொடக்கம் இன்றுவரை)


- ஸக்கி இஸ்மாயில்-
சிங்கள-பெளத்த தேசிவாதம் இனவாத நோயை நாட்டில் பல விசமக் கருத்துக்களால் 2012 ஆண்டுக்கு
பின்னர் சாராமாரியாக தூவத்தொடங்கின. 

திடீரென எழுந்த இத்தகைய அசம்பாவித நிலைகளுக்கு ஈடுகொடுக்கவோ, பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ எவ்வித தொடர்புகளோ, தொடர்பாடல்களோ இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்பதனையும் பேரினவாதம் நன்கு அறிந்து வைத்திருந்தது.


இந்நிலையில், முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்படவை யாவும் வெறும் அவசர நடவடிக்கையாகவே இன்றி திட்டமிடப்பட்டு ஒழுங்கமைந்து மேற்கொள்ளப்பட்டவையாக காணப்படவில்லை. இந்நிலையில் முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளை அவ்வப்போது துணைக்கு அழைப்பதாயும், அவர்களின் வேண்டுகோள்களுக்கு அவர்கள் காட்டும் திசையில் செல்வோராகவும் முஸ்லிம்களின் சிவில் தலமைகள் மாறிக்கிடந்தனர். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தமது பதவி, தொழில், பெயர், புகழ், வெறிநாட்டு பயணங்கள் என்பவற்றிற்கு இந்த அரசியல் தலமைகளில் தங்கிக் கிடந்தவர்கள்.


மறுபுறம், முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைவர்கள் மேற்கொண்டிருந்த ஊழல்கள், மோசடிகள், ஏமாற்றுக்கள், குற்றச்செயல்கள் என்பன தொடர்பிலும் பேரினவாதம் நன்கு அறிந்து அவை பற்றி தகவல்களை திரட்டி வைத்திருந்தது. மேலும், பல முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைவர்களுடன் மேலதிக பேரம் பேசல்களையும், சலுகைகளையும் தருவதாகவும் திரைமறைவில் உடன்பாடுகள் பரிமாறப்பட்டிருந்தன. இதற்கு அகில இலங்கை ஜம்இய்துல் உலமா சபையோ, முஸ்லிம் கவுன்சிலோ, தேசிய சூறா கவுன்சிலோ, முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியோ இவ்வாறான யாரும் இதற்கு விதிவிலக்கல்லர். இவை யாவற்றின் பின்னணியிலும் இருந்தவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையினரே.


முஸ்லிம்களின் இத்தகைய கூட்டத்தினர்கள் மத்தியில் ஒரு நியாயமான, முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடும் ஒரு சிறுகூட்டமும் இருந்தது. இவர்கள் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசியல் ஆதரவுகள் கிடைத்திருந்த போதும் தமது நடவடிக்கைகளில் சுதந்திரமான முறையில் அரசியல் தலையீடு ஏற்பட முடியாதளவில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு அவர்கள் சுதந்திரமாக தொழிற்பட காரணம் அவர்கள் எவருக்கும் விலைபோகாதவர்களாக இருந்தனர். இக்குழு குறிப்பாக சட்டத்தரணிகள் பலரையும் தன்னகத்தே கொண்டிருந்த RRT அமைப்பின் வழியில் தொழிற்பட்டது. இவர்களுக்கு உந்துதல் அளிக்கவும், அனைத்து ஆதரவினையும் வழங்குவதற்கும் நடுத்தர வர்க்க வர்த்தகர்கள் குழுவொன்றும் பக்கபலமாக இருந்தது. இத்தகைய வர்த்தகர்கள் தேவைக்கேற்றாற் போன்று உதவிகளை செய்தனரே அன்றி சட்டத்தரணிகளின் நடவடிக்கைகளில் எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. 


ஆரம்பகாலத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற இனவாத வன்முறைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததன் காரணமாக எதிர்கொண்ட சவால்களும் குறைவாக இருந்தன. அளுத்கமை வன்முறையின் பின்னர் தொடராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் அதிகரிப்பு பல கோணங்களில் கெடுபிடிகளை உருவாக்கி நின்றது. ஒரே நாளில் பல பிரதேசங்களில், பல நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் பலர் முழுநேரமாக இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவேண்டிய கட்டாயத்தில் நிலமை இருந்தது. மறுபுறம், சிங்கள சகோதர சட்டத்தரணிகளையும் சில வழக்குகளில் முற்படுத்தப்பட வேண்டிய தேவைகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் சவால்கள் அதிகரித்தன.


இந்நிலையில், அளுத்கமை வன்முறைக்கு பின்னர் அளுத்கமை மக்களின் நலன்காப்பதாக சில அமைப்புக்கள் தோற்றம்பெற்றன. அதனை ஏற்கனவே குறிப்பிட்டது போன்ற அரசியல் தலமைகளுக்கு சோரம்போன சிலர் அரசாங்கத்திற்கு சார்பாக மேற்கொண்டு முடித்தனர். இவர்கள் நிவாரண உதவிகள் ஆயினும், சட்ட உதவிகள் ஆயினும் ஒருமித்து செயற்படவோம், நிவாரண செயற்பாட்டிலும் ஒருமித்து தொழிற்படுவோம் என்ற கோசத்தை எழுப்பினர். 


இந்நிலையில் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருந்த சட்டத்தரணிகளுக்கும் அவர்கள் சார்ந்த குழுவுக்கும் ஒற்றுமை கோசம் ஏற்றதாக தென்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் அரசியல் தலமைகளுக்கு விலைபோன முஸ்லிம் வியாபார முதலைகள் இன்று இந்த வழக்கில் முற்பட்டால் போதும், இந்த வழக்கை நாம் செய்வோம், இந்த வழக்கை பொலிஸ் பார்த்துக்கொள்ளும், இந்த வழக்கிற்கு நாம் செல்வதனால் பலனில்லை, இந்த வழக்கில் அது எமது பிழை, இந்த வழக்கிற்கு உள்ளூர் சட்டத்தரணிகளை நியமித்து விடுவோம் என்றெல்லாம் காரணம் கற்பித்து சட்த்தரணிகளின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை மேற்கொண்டனர். இவ்வாறு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள காரணம் அவர்களின் திரைமறைவில் இருந்த திட்டங்களும், அரசியல் பின்னணிகளுமாகும்.


இதனால் சட்டத்தரணிகளினதும், அவர்கள் சார்ந்தோர்களினதும் நியாயமான போராட்டத்தில் தடங்கல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் அநாவசியமாக இணக்ப்ப்பாட்டிற்கு கொண்டு செல்லும் நிலமை கண்டும் பயந்தனர். இத்தகைய சம்பவங்களும், கட்டுப்பாடுகளும் அளுத்கமை வன்முறை தொடர்பான வழக்கு நிலமைகளிலேயே இடம்பெற்றன. இதனால் சட்டத்தரணிகள் மத்தியில் அதிருப்தி நிலை ஆங்காங்கே உருவானது. 


இதனால் அதிருப்தியுற்ற சட்டத்தரணிகளும் அவர்களது குழுவும் மீண்டும் தனித்து சுதந்திரமாக முஸ்லிம்களின் பிரச்சினையை எதிர்கொள்ளும் நோக்கில் பயணிக்க துவங்கினர். தமது தேவைகளை தமக்குள் பகிர்ந்துகொண்டு சுதந்திரமாக பொதுபலசேனாவுக்கும், ஞானசாரவுக்கும் எதிராக மிகவும் கடுமையான வழக்குகளை 
பதிவு செய்தனர். 


ஞானசாரவுக்கும், பொதுபலசேனாவுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த முறைப்பாடுகளும், நடவடிக்கைகளும் அவர்களின் சட்டாம்பித்தனத்தை குறைக்க செய்தது. இந்நிலை இந்த இனவாத வியாதியை பரப்புகின்ற பின்னணியிலிருந்து தொழிற்பட்ட அரசியல் பின்புலன்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் அவர்கள் தமது ஏஜன்டுகளான ஏற்கனவே குறிப்பிட்ட முஸ்லிம் வியாபார முதலைகளுக்கு பல நெருக்குவாரங்களை ஏற்படுத்தினர்.


இத்தகைய நெருக்கடிக்கு தகுந்த பாடத்தை புகட்ட சிங்கள-பெளத்த தேசியவாதம் ஒரு திட்டம் தீட்டியது. அதாவது நிலமையை கட்டப்படுத்த முடியாத தமது முஸ்லிம் ஏஜன்டுகளுக்கு அதிர்ச்சியையும், பயத்தையும் உண்டுபண்ண திட்டம் தீட்டியது. அதனை நடாத்தியும் காட்டியது. அதாவது, பாணந்துறை நோலிமிட், கொழும்பில் பெசன்பக், ஹார்கோட்ஸ் என்பன தர்க்கப்படன, எரியூட்டப்பட்டன.


இதன்பின்னர் நடந்த கதை நாம் விலை போன கதை. அடுத்த தொடரில் நீங்கள் வாசிக்கலாம்.
முஸ்லிம்கள்- இனவன்முறை- சவால்கள்!!! (அன்று தொடக்கம் இன்றுவரை) முஸ்லிம்கள்- இனவன்முறை- சவால்கள்!!! (அன்று தொடக்கம் இன்றுவரை) Reviewed by Euro Fashions on March 04, 2018 Rating: 5