கொழும்பு குப்பைகளை அகற்ற 24 மணி நேர அவகாசம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிகாரிகளுக்கு பணிப்பு


( மினுவாங்கொடை நிருபர் ) 
அகொழும்பு மா நகர எல்லை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இதுவரை
பல வீதியோரங்களில்  அகற்றப்படாமல் குவிந்திருக்கும்  குப்பைக் கூளங்களை, இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள், அவ்விடங்களிலிருந்து அகற்றுமாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு மா நகர சபை ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அத்துடன், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டும் பொதுமக்களைக் கைது செய்யுமாறும் அமைச்சர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில், நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அமைச்சர் இவ்வாறு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு  பணிப்புரை விடுத்தார். 

இக்கலந்துரையாடலில், மா நகர சபை அதிகாரிகள், ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்  மற்றும் பொலிஸ்  அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

வீதி ஓரங்களில் இன்னும் அகற்றப்படாமல் உள்ள குப்பைக்கூளங்களை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறும், இதற்கு இன்று காலை தொடக்கம் 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே மா நகர அதிகாரிகள் மா நகர ஊழியர்களின் ஒத்துழைப்போடு இது தொடர்பில் கவனமெடுத்து விரைந்து செயற்படுமாறும், அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார். அத்துடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் அரச மற்றும் தனியார் நிறுவனப் பணிப்பாளர்கள்,  அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

இக்கலந்துரையாடலின் பின் அமைச்சர் உடனடியாக செயலில் இறங்கி,  கொழும்பு மாளிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குறித்த அதிகாரிகள், ஊழியர்கள் சகிதம் நேரில் சென்று, குப்பைக்கூளங்கள் அகற்றப்படாமல் உள்ள இடங்களையும் பார்வையிட்டார். 

அவற்றை உடனடியாக அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அத்தோடு  உக்கக்கூடிய  மற்றும் உக்காத கழிவுகளை, தரம் பிரித்து, உரிய முறையில் முன்னெடுக்குமாறும், அமைச்சர் அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டார். 
( ஐ. ஏ. காதிர் கான் )
கொழும்பு குப்பைகளை அகற்ற 24 மணி நேர அவகாசம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிகாரிகளுக்கு பணிப்பு  கொழும்பு குப்பைகளை அகற்ற 24 மணி நேர அவகாசம்  - அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிகாரிகளுக்கு பணிப்பு Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5