வெற்றிவாய்ப்பின் அங்கலாய்ப்பு!



-சுஐப் எம். காசிம்-
சர்வகட்சி மாநாடு, ஜெனீவா மாநாடு, தேசிய
 அரசாங்கம் இவைகள்தான் இன்றைய நடப்பு விவகாரங்கள். இவைகள், ஏதோவொரு சாயலில் அரசாங்கத்தின் ஆற்றாமையைக் காட்டுவதாகவே சிலரால் கருதப்படுகிறது.


 அரசாங்கத்தின் நடப்பு விவகாரங்கள் நம்பிக்கையளிக்காத பட்சத்தில், ஏனைய கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கும் நோக்கிற்காகவே இம் மாநாடு கூட்டப்படுவதுண்டு.


அவ்வாறு இது கூட்டப்பட்டால் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் அரசாங்கத்துக்கு அவசியப்படுகிறது என்பதே அர்த்தம்.


ஆனால், இம்மாநாடு பற்றி அரசாங்கம் அறிவிக்கவில்லை. பங்காளிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிதான் சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு கோரியிருக்கிறது.


மேலும், 14 அம்சங்கள் அடங்கிய ஆலோசனைகளையும் அக்கட்சி சமர்ப்பித்து, பெரும்பாலும் இம்மாதம் 25இல் இது கூட்டப்படலாம் எனவும் நம்புகிறது இக்கட்சி. எனவே, ஸ்ரீ.சு.கவின் கருத்துக்களை உள்வாங்காமல் அரசு இயங்குகிறதா என்ற ஐயம் ஏற்படவும் இங்கு இடமிருக்கிறதுதான்.


மேலும், தேசிய நெருக்கடிகளில் ஒரு தீர்வை எட்டுவதற்கு, பாராளுமன்ற அங்கத்துவமுள்ள கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இப்படி சர்வகட்சி மாநாடு கூட்டப்படலாம்.


 அப்படியென்ன தேசிய நெருக்கடி? என்ற சந்தேகம் எழுமளவில் நாட்டு நிலவரங்களில்லையே! டொலர் தட்டுப்பாடு, ஜெனீவா வாக்கெடுப்புக்கள் எல்லாம் எதிர்பார்க்கப்படும் சிக்கல்களாக சிலரால் சித்தரிக்கப்படுகிறதுதான். எனினும், "கருவறைக் குழந்தை போன்று" கட்டியங்கூற இயலாதுள்ள சமாச்சாரம்தானிது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதும், இதற்கு கூட்டமைப்பு பதிலளித்திருப்பதும், ஜெனீவா களநிலவரங்களை கண்முன் கொண்டுவராமலில்லை. இந்த ஆரூடங்களைத்தான் தமிழ் ஊடகங்கள் தூக்கியும் பிடிக்கின்றன.



ஏற்பட்டிருக்கிற சங்கடங்களைப் போக்க சந்தர்ப்பம் வழங்கப்படுவது சமயோசித அரசியலுக்கு அத்துப்படி.

ஜெனீவா களத்தில் ஏற்படவுள்ள வெற்றி, தோல்விகள் எந்தத் தரப்புக்கும் அவசர ஆதாயத்தை அள்ளித்தரப்போவதில்லை. ஆனால், இது பற்றிய எண்ணங்களை யதார்த்தமாக்கும் எழுத்துக்கள் இதுவரைக்கும் உணர்ச்சி அரசியலாகவே இருக்கிறது. இதுதான் சிறுபான்மை அரசியலுக்கு ஏற்பட்டுள்ள கவலை. 

வெளிநாட்டுப்பிடிகள், டொலர் நெருக்கடிகளிலிருந்து மீள அரசு முயற்சிப்பதை வைத்து, சிலர் ஆட்டத்துக்கான ஆரம்பமென ஆனந்தப்படுவதிருக்கிறதே இதுதான் இவர்களது பலவீனம். பங்காளிக் கட்சிகள் பொறுமையிழக்குமளவுக்கு அரசாங்கம் நடந்துகொள்வதாக இருந்தால் பின்புலத்தில் ஏதோயிருக்கிறது. அதனால்தான், அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தயங்குகிறது. எதிர்பாராத நெருக்குவாரங்கள் ஜெனீவாவில் ஏற்பட நேர்ந்தால், தேசத்தைக் காட்டிக் கொடுத்த பழியைப் பொறுப்பெடுக்க நேரிடுமோ? வெளியேறப் புறப்பட்டு பலவீனம் வெளிப்பட்டுவிடுமோ?என்றெல்லாம் ஸ்ரீ.சு.க. சிந்திக்காமலா இருக்கும். மறுபுறம், தேசிய அரசாங்கம் அமைவதும் ஸ்ரீ.சு.கட்சிக்கே அச்சுறுத்தலாக அமையலாம். சகல கட்சிகளது பலமும் ஒன்றிக்கையில், இக்கட்சிக்கு மட்டும் மவுசா மிஞ்சப்போகிறது. 

இவ்விடத்தில்தான் சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதியின் அழைப்பை அர்த்தப்படுத்தும் சந்திப்புக்களில் ஈடுபடுவதுதான் இப்போதைக்கு ஆரோக்கியம். தென்னிலங்கை கட்சிகளின் ஒன்றுகூடலுடன் நடாத்தப்படும் சர்வகட்சி மாநாடு அல்லது சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் தேசிய அரசாங்கம் இவ்வாறானவற்றிலாவது, சிறுபான்மையினரின் உரிமைகளை ஆக்கபூர்வமாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் முயற்சிக்க வேண்டும். விழலாமென எதிர்பார்த்து, 'இந்த அரசாங்கத்துடன் என்ன பேச்சு  வேண்டிக்கிடக்கிறது' என வீறாப்பு பேசுவது யதார்த்த அரசியலாகாது.

வெற்றிவாய்ப்பின் அங்கலாய்ப்பு!  வெற்றிவாய்ப்பின் அங்கலாய்ப்பு! Reviewed by Madawala News on March 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.