மர்ஹும் (புத்தளம் நகர பிதா) கே.ஏ பாயிஸ் அவர்களால் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? - Madawala News Number 1 Tamil website from Srilanka

மர்ஹும் (புத்தளம் நகர பிதா) கே.ஏ பாயிஸ் அவர்களால் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?அன்பான புத்தளம் நகர் வாழ் எனது இஸ்லாமிய உறவுகளே!
கடந்த 2018 ஆம் ஆண்டு நகர சபை தேர்தலில் மறைந்த நகர சபை தலைவர் கெளரவ. பாயிஸ் அவர்களின் தலைமையில் SLMC கட்சியில் இனைந்து போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் நான் உட்பட இன்னும் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் அதிகமான சிங்கள வாக்காளர்களைக் கொண்ட 8, 9, 10 ஆகிய மூன்று வட்டாரங்களில் போட்டியிட்டதையும், அந்த மூன்று தமிழ் வேட்பாளர்களில் ஒருவர்கூட வெற்றிபெற முடியாமல் போனதையும். அதற்கான காரணத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் துரதிஷ்டவசமாக கட்சிக்கு போனஸ் ஆசனம் கிடைக்காததால் ஒரு தமிழ் உறுப்பினருக்கான சந்தர்ப்பமும் கைநழுகிப் போனது. 

தமிழ் வேட்பாளர்களினால் வெற்றி பெற முடியாமல் போனாலும்கூட வேட்பாளர்களும் ஏராளமான தமிழ் மக்களும் பாயிஸ் அவர்களையும், கட்சியையும் மதித்து, முஸ்லிம் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து சுமார் 1000 க்கும் அதிகமான வாக்குகளை அந்த வட்டாரங்களிலும், அந்த வட்டாரங்கள் தவிர்ந்த ஏனைய வட்டாரங்களில் இருந்தும் கட்சிக்கு பெற்றுக் கொடுத்ததன் மூலமாக SLMC கட்சி நகர சபையை கைப்பற்றுவதற்கும் பாயிஸ் அவர்கள் நகர சபை தலைவராக வருவதற்கும் பக்கபலமாக இருந்தனர் என்பதை நான் பெருமையுடனும், அன்புடனும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

அதே நேரம் கெளரவ. பாயிஸ் அவர்களுடன் இரு தசாப்தங்களாக அரசியலில் மிக நெருக்கமான உறவையும் அவரது வெற்றி தோழ்விகளில் மட்டுமன்றி அவரது தனிப்பட்ட சுக துக்கங்களிலும் நான் அவரின் சகோதரனாக, உற்ற நண்பனாக பங்கெடுத்தும் வந்துள்ளேன் என்பதை இங்கு சுட்டிக் காட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

கெளரவ. பாயிஸ் அவர்கள் நகர சபை தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் வெற்றி பெற்ற 7 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் கடைசி வருடத்தில் தனது பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அந்த வெற்றிடத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் வரவேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். 

அந்த சந்தர்ப்பத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து நகர பிதா சொல்லும் ஒரு வேட்பாளருக்கு தனது பதவியை கொடுக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக
5 ஆம் வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினரான கெளரவ பர்வீன் ராஜா என்பவர் முன் வந்ததையும் இங்கு சுட்டிக்காட்டுவதுடன் அவரது பெருந்தன்மையையும் மனதார பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் (23 - 05 - 2021) வேதனைக்குரிய ஒரு சம்பவமாக நகர சபை தலைவர் கெளரவ. பாயிஸ் அவர்கள் விபத்தொன்றில் சிக்கி மரணித்த விடயம் இந்த மண்ணில் வாழும் முஸ்லிம்களை மட்டுமன்றி முஸ்லிம்களுடன் இணைந்து வாழும் தமிழ் சமூகத்தையும் பெரிதும் மன வேதனைக்குட்படுத்தியது.
(அவரது பிரகாசமான மறுமை வாழ்க்கைக்காக நான் வணங்கும் கடவுளை தினமும் பிரார்த்திக்கின்றேன் இறைவன் அவரது குற்றங்களை மன்னிப்பானாக!)

அவரின் மறைவை அடுத்து அவரின் இழப்பினால் ஏற்பட்ட நகர சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்ற வாதப் பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் கட்சிக்குள்ளும் பொது மக்களுக்கிடையிலும் நடந்து வருவதை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

கெளரவ. நகர சபை தலைவர் அவர்களின் மறைவினால் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்திற்கு அந்த பதவியை தாருங்கள் என்று தமிழ் மக்கள் சார்பாக, அவரின் ஒரு உற்ற நண்பனாக கேட்டுப் பெற்றுக்கொள்ள அல்லது பறித்தெடுக்க மனதளவில் நான் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து இந்த மண்ணில் இணைந்து வாழும் இரு சமூகங்களையும் இணைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த பதவி முக்கியத்துவம் பெரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இருந்த போதிலும் நாம் இணைந்து வாழும் சகோதர சமூகமான இஸ்லாமிய சமூகத்துடன் முரண்பட்டுக்கொண்டு அந்த பதவியை பலாத்காரமாகவோ அல்லது நிர்பந்தித்தோ பெற்றுக்கொள்ள நாம் தயார் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நகர சபை தலைவரின் மறைவினால் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்திற்கு தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதே நியாயமானதும், நம்பிக்கைக்குரியதும் என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதுடன் 

ஒரு சொற்ப காலத்திற்கு மிகுதியாக இருக்கும் அந்த பதவியை ஒரு தமிழ் வேட்பாளருக்கு வழங்கி கெளரவித்தால் அந்த பதவியை பெருந்தன்மையுடன் பெற்றுக்கொள்ள தமிழ் மசமூகத்தினர் தயாராக இருக்கின்றனர் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த விடயத்தை ஒரு தனி நபராக அல்லாமல் பல நூறு வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணில் இஸ்லாமிய சமூகத்துடன் இரண்டறக் கலந்து வாழும் ஒரு சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தின் குரலாக நான் இதனை சமர்பிக்கின்றேன்.

நன்றி 
ரூபன் ( N.k.Nagarasa)
09 ஆம் வட்டார வேட்பாளர்
மர்ஹும் (புத்தளம் நகர பிதா) கே.ஏ பாயிஸ் அவர்களால் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? மர்ஹும் (புத்தளம் நகர பிதா) கே.ஏ பாயிஸ் அவர்களால் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5