ஐ.தே.க. பிளவுபட்டிருப்பதால் இலகுவாக ஆட்சியைப் பிடிக்கலாம் என அரசு தப்புக்கணக்கு போடுகின்றது




“இப்போது நாட்டு மக்கள் பல விடயங்களில் தெளிவு பெற்றுள்ளனர். ஆட்சியை கைப்பற்றுவதற்காக
என்னென்ன சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்க கூடிய மக்களுக்கு விளங்குகின்றது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கம்பளை, இல்லவத்துரயில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

“ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளதால் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமா என்ற சஞ்சலமொன்று எங்களில் பலருக்கு இருக்கலாம். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பொதுவாக நாட்டில் பெரும்பாலான மக்கள் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்காது இருக்கின்றனர்.

அரச ஊழியர்களை பொறுத்தமட்டில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிப்பது அவர்களின் வழமையான போக்காகும். ஆனால், இம்முறை தபால் மூல வாக்கெடுப்பில் பதிவு செய்துவிட்டவர்களில் 55சதவீதமானோர் வாக்களிக்கவே இல்லை. அரச ஊழியர்களின் மத்தியில் காணப்படும் விரக்தியின் வெளிப்பாடே இந்நிராகரிப்புக்கு காரணமாகும். வாக்களிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வாக்களிப்பதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை அளித்துள்ளார்.

இந்நிலைமைக்கு கொரோனா பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்தாலும் அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகத்தான் மக்கள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடவில்லை என்ற அதிர்ச்சி ஆட்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது விகிதாசார தேர்தல் முறைமையில் சாத்தியமற்றதாகும். அதனை இப்போது அவர்கள் உணர்கின்றனர்;.

இதனை பிரதிபலிப்பதாகவே தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி எவரும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்று கூறியிருந்த ஜனாதிபதி அதற்கு மாற்றமாக இப்பொழுது தேர்தல் மேடைகளில் தோன்றி தனது முகத்தை காட்டிவருகின்ற விவகாரம் நோக்கப்படுகின்றது.

இப்போது ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு இருப்பதனால் இலகுவாக ஆட்சியாளர்களால் பெரும்பான்மையை அடைந்த விடலாமென ஒரு சாரார் தப்புக் கணக்குப் போடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியில் சிலர் மாத்திரம் எஞ்சியிருக்கத்தக்கதாக பெரும்பாலானோர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியிலேயே இணைந்துள்ளனர்

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சில ஆசனங்களை மட்டுமே பெறுவார்கள். அது பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது நாட்டு மக்கள் பல விடயங்களில் தெளிவு பெற்றுள்ளனர். ஆட்சியை கைப்பற்றுவதற்காக என்னென்ன சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்க கூடிய பொது மக்களுக்கு நன்றாக விளங்குகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற நாள் தொடக்கம் முஸ்லிம்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். இத்தாக்குதல் எதற்காக, ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற விசாரணை தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆனால், அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போது வெவ்வேறு விதமான கதையாடல்களை புனைகின்றனர். மீண்டும் ஆபத்து ஏற்படலாமென்ற பீதியில்; மக்களை வைத்திருப்பதற்கே அந்தக் கும்பல் திட்டங்களை தீட்டிவருகின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் இருவரையும் ஆளுநர் ஒருவரையும் பதவி விலக கோரி கண்டியில் பௌத்த மக்கள் புனிதமாக மதிக்கின்ற இடத்தில் மதகுரு ஒருவர் உண்ணாவிரதம் இருந்த போது அங்கு வந்த அவரை விடவும் சர்ச்சைக்குரிய மற்றைய மதகுரு பிரச்சினையை மேலும் பூதாகரமாக்கிவிட்டார். முன்னையவர் 48 மணிநேர காலக்கேடு விதித்தார்.

மற்றவர் 24 மணிநேரத்திற்குள் என அறிவித்தார். ஒருவர் நாலடி பாயும்போது மற்றவர் எட்டடி பாய்ந்தார். இவ்வாறு நிலைமை மோசமானபோது வேறு வழியின்றி எல்லா முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக இராஜினாமா செய்ததன் மூலம் சமூகத்திற்கு ஏற்பட இருந்த பாரிய அழிவொன்றை தவிர்ப்பதற்கு உதவினோம்;.

இவர்கள் எமது சமூகத்தை பயன்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை அடைந்துகொள்வதற்கே திட்டம் தீட்டுகின்றார்கள். பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வை களையும் நோக்கத்தில் இம்மாத இறுதியில் நான் அரிய பல தகவல்கள் அடங்கிய நூலொன்றை வெளியிடவிருக்கின்றேன் என்றார்.
ஐ.தே.க. பிளவுபட்டிருப்பதால் இலகுவாக ஆட்சியைப் பிடிக்கலாம் என அரசு தப்புக்கணக்கு போடுகின்றது ஐ.தே.க. பிளவுபட்டிருப்பதால் இலகுவாக ஆட்சியைப் பிடிக்கலாம் என அரசு தப்புக்கணக்கு போடுகின்றது Reviewed by Madawala News on July 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.