வருங்கால சந்ததியின் முகவு நிலையங்களான பாடசாலையை உங்கள் அஜென்டாக்களை நிறைவேற்றும் தளமாக ஆக்க வேண்டாம்.


·
‘முதலாம் வகுப்புக்கு மாணவரை அனுமதிப்பதில் பாரிய முறைகேடுகள்!’

‘உயர்தர வகுப்புகளுக்கு வெளி மாகாண மாணவர்களை அனுமதித்த அதிபர் இடைநிறுத்தம்!’
‘ஆறாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள முறையற்ற விதத்தில் நிதி சேர்த்த பிரதி அதிபர்  கைது!’

— அண்மைக்காலமாக கல்விப்புலம் சார்ந்து நாம் கேள்விப்படும் செய்தித் தலைப்புகள் இவை.

இத்தகைய சம்பவங்கள் பேசுபொருளாகும் சந்தர்ப்பங்களில் ஆளாளுக்கு உணர்ச்சிவசப்பட்டு தன்முனைப்புடன் கருத்துக் கந்தசாமிகளாகக் களமிறங்கி விடுகிறோமேயொழிய, இந் நிலைக்கான காரண காரியங்கள் குறித்தோ, இதற்கான தீர்வுகளுக்கான சாத்தியப்பாடுகள் குறித்தோ தெளிவான பிம்பம் எதுவும் இல்லாதவர்களாகவே இருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை.

இந்த செய்திகளின் பின்னணியில் உள்ள அரசியல்/பொருளாதார/சமூகவியல் காரணிகளை அலசினாலேயன்றி பிரச்சினைகளின் மூலவேர் எது என்பது குறித்து தெளிவு பெற இயலாது என்பதே உண்மை.

பொத்தாம் பொதுவாக ‘அவங்க அப்பிடி, இவங்க இப்பிடி’ என்று blame-game ஜல்லியடி செய்வதை விடுத்து, இந்த சமூக அவலத்துக்குக் காரணம் நாம் எங்கேயோ விட்ட தவறுகள்தாம் என்ற புரிதலுடன் அவற்றை எவ்வாறு களைவது என்பது குறித்து சிந்திப்பதே காலத்தின் தேவை.

அதிபர்களாகட்டும், ஆசிரியர்களாகட்டும், தாம் பேணியொழுக வேண்டிய வாண்மைத்துவ அறங்கள் தொடர்பிலும், தாம் வகைக்கூற வேண்டியது யாருக்கு என்பது தொடர்பிலும் சற்றே மீளாய்வு செய்து கொள்வது நல்லது.

அனைத்து நிறுவனத் தலைவர்களது நாற்காலிகளிலும் துருத்திக் கொண்டிருக்கும் வல்லிய ஆப்பு ஒன்றுளது. அதுதான் நிதி நிர்வாகம்.
நிதி நிர்வாகத்தில் நெறி பிறழாது, நீதமாக நடப்பது ஒரு நிறுவனத்தலைவருக்கு இருக்க வேண்டிய  கட்டாயமான பண்பு.

SDEC உறுப்பினர்களுக்கு சுற்றுநிருபம் தொடர்பிலும், அவரவர் எல்லைகள்  தொடர்பிலும் தடித்த எழுத்தில் நினைவூட்டுங்கள்.
எப்பொழுதும் decision maker என்கிற பிரதான வகிபாகம் உங்களுடையதாகவே இருக்கட்டும்.

உங்களது கதையில் நீங்களே கதாநாயகர்களாக இருங்கள். இன்னொருவர் திரைக்கதைக்கேற்ப உங்கள் கதாபாத்திரத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். ‘அது தருகிறோம், இது தருகிறோம்’ என டீல் பேசி வரும் பண முதலைகளிடமும், அரசியல் அல்லக்கைகளிடமும்  விலை போவதால் வரும் வினை இது. 

யார் என்ன சொன்னாலும், வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினதும் தலைவர் அதிபரே. ஆகவே உங்களை மீறி எந்த விதமான நிதி சேகரிப்பு நிகழ்வதற்கும் இடமளிக்காதீர்கள்.

எவ்வெந்த வேலைத் தலைப்புகளின் கீழ் நிதி திரட்ட உத்தேசித்துள்ளீர்களோ அவற்றை வருடாந்த திட்டமிடலிலும், வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்குங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடசாலையின் மனிதவளம், பௌதிக வளம் எவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகப்போகிறது என்பதையும் தர்க்கரீதியாக எதிர்வுகூறல் செய்து பாடசாலையின் ஐந்தாண்டுத் திட்டத்தை வருடாந்தம் இற்றைப்படுத்துங்கள். முறையான protocolsஐ பின்பற்றி வலயக் கல்விப்பணிமனை ஊடாக மாகாண கல்வித்திணைக்களம்/கல்வி அமைச்சு அங்கீகாரத்துக்காக முன்வையுங்கள்.

கவனிக்க: திட்டமிடல் என்பது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் விடுமுறையில் நோகாமல் நுங்கு தின்னும் பாங்கில் அயல் பாடசாலைகளின் திட்டங்களைப் படியெடுத்து திகதிகள், தொகைகளை மாத்திரம் மாற்றியெழுதி அதையும் சாவகாசமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை ஜவ்வாக இழுப்பதல்ல. (இந்த திட்டமிடலிலான ஆயத்தமின்மை குறித்து நம்ம ஊர்ப்பக்கம் பிரசுரிக்க முடியாத வார்த்தைகளுடன் கூடிய ‘பிட்டனி தேடுதல்’ என்கிற சொலவடை ஏகப் பிரசித்தம் 😏)

நிர்வாக ஒழுங்குகள், நிதிப்பிரமாணங்கள், சுற்றுநிருபங்கள் போன்ற மூலாதாரங்களை மீறி கருமமாற்றி தாமாகவே ஏழரையை ஏற்றிவிட்டு, அப்புறம் சமூகத்துக்காக செய்தோம், சாம்பிராணிக்காக செய்தோம் என்று புலம்புவது தொழின்முறை அதிபர்களுக்கு அழகல்ல.

அதே போன்று பிரதேசத்து அரசியல்வாதியரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், பழைய மாணாக்கரும்,
சமூக அக்கறை மிக்க ஆர்வலர்களும், இன்னும் நலன்விரும்பிகளும், உண்மைவிளம்பிகளும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: 

நீங்கள் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும்,   கல்வித்துறைசார் நிர்வாகக் கட்டமைப்பையும், சட்டப் பின்னணியையும் குறித்த சரியான புரிதல் இன்றி கருமமாற்றுவது எதிர்மறை விளைவுகளுக்கே இட்டுச்செல்லும்.

நீங்கள் நிஜமான அக்கறையுள்ளவர்களாக இருப்பின் பாடசாலையை தத்தமது அஜென்டாக்களை நிறைவேற்றும் தளமாகக் கொள்ளாமல், தத்தமது வகிபாகத்துக்குரிய எல்லைகளை மீறாமல் இதய சுத்தியுடன் பங்கேற்பு/பங்களிப்பு/ஒத்துழைப்பு நல்கினாலேயொழிய வருங்கால சந்ததியை சமூகமயமாக்குவதில் இன்றியமையாத முகவு நிலையங்களான பாடசாலைகளை கொண்டு நடாத்த முடியாது.

BY:   A.M. Rimzan (SLEAS)
வருங்கால சந்ததியின் முகவு நிலையங்களான பாடசாலையை உங்கள் அஜென்டாக்களை நிறைவேற்றும் தளமாக ஆக்க வேண்டாம்.  வருங்கால சந்ததியின் முகவு நிலையங்களான பாடசாலையை உங்கள்  அஜென்டாக்களை நிறைவேற்றும் தளமாக ஆக்க வேண்டாம். Reviewed by Madawala News on January 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.