19ம் நூற்றாண்டில் காத்தான்குடி !


19ம் நூற்றாண்டில் காத்தான்குடி
++++++++++++++++++++++++++
Mohamed Nizous
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பாதி காலம் கழிந்த நிலை

சுத்தமான காற்றையும்
சுகாதார வாழ்வையும்
பொத்திப் பாதுகாத்த
புண்ணிய ஊர் அது

கடற் கரையில் இருந்து
காட்டு வீதி வரைக்கும்(மெய்ன் ரோட்)
அடர்ந்த காடு
படர்ந்து கிடக்கும்.

ஓலைக் குடிசைகளும்
ஒன்றிரண்டு வீடுகளும்
ஊர் வீதிப் பக்கம்
சீராக இருக்கும்.

சூரியன் மறைய
சுற்றி வர இருட்டும்
ஏறிய பேய் மரத்தில்
இருந்து மிரட்டும்

குடிசைகள் உள்ளே
குப்பி லாம்பு எரியும்
இடைக்கிடை வீடுகளில்
அரிக்கனும் தெரியும்

இருட்டு ஏறு முன்னே
இருப்பதை உண்டு விட்டு
சுருட்டி வைத்த பாயை
உருட்டி விரித்து
களிமண் தரையில்
கண்ணயர்ந்து தூங்குவார்.
சற்று வசதியுள்ளோர்
சப்பிரமஞ்சக் கட்டிலிலே
கற்பன் பாய் விரித்து
கற்பனையில் சிறகடிப்பார்.

தூரத்தில் நரி கத்தும்
தொடர்ந்து நாய் ஊளையிடும்
சாரல் மழைகொட்டும்
சாமத்தில் பேய் கத்தும்.

பாங்கு ஒலி கேட்காது
பாங்கான குருவி ஒலியில்
தங்களாவே எழுந்து
தண்ணீரில் முகங் கழுக
கிணற்றடிக்கு சென்று
கிடுகு வேலிக்குள்
திலாந்தில் நீர் அள்ளி
தென்னை மரம் பின்னாலே
உட்கார்ந்து எழுந்து
ஒளூவும் எடுத்து
நிலாவின் வெளிச்சத்தில்
களாவின்றித் தொழ செல்வார்.

ஏழைகள் தம் வீட்டை
ஓலைகள் கொண்டமைத்தார்
வாழ வசதிகள் உள்ளோர்
வாழ்ந்தார் களிமண் வீட்டில்.

ஆலூடு உள்ளூடு என்றும்
அடுப்படி சாப்பறை என்றும்
நாலு பகுதிகள் இருக்கும்
நடுவில் உஞ்சில் பறக்கும்.

முன்னுள்ள சாப்பறை ஒட்டி
முற்றத்தில் குருத்து மண் கொட்டி
தென்னங் குற்றிகள் வெட்டி-மண்
சரியாமல் போடுவார் சுற்றி.

மாவும் தென்னையும் கமுகமும் -அதில்
கூவும் குயிலும் சேவலும்
தாவும் அணிலும் பூனையும்
யாவும் ஊரின் இயற்கைகள்.

கிணற்றுக்குள் மதுரக் கொட்டு -அதில்
கிடைக்கும் நீர் அமுதம் கொட்டும்
சாம்பலால் பல்லை விளக்கி
சோம்பல் முறித்து  அள்ளி
ஆம்பிளை குளிக்கும் வேளை
அது காத்தான் குடியின் காலை.

பெரிசாக ஆகும் முன்னே
பெண்கள் திருமணம் முடித்து
கரிசணையாய் குடும்பம் காத்தார்.
புருசனை நம்பி வாழ்ந்தார்
வரிசையாய் பிள்ளைப் பெற்றார்
அறுசுவை உணவு சமைத்தார்.
விரிசல்கள் குறைந்த வாழ்க்கை.

புருசன்மார் குளித்த பின்னால்
அரிசி மா ரொட்டி உண்டு
தீர்வை சந்தை சென்று
கோர்வை மீன்கள் பார்ப்பார்.
ஆறேழு மீன்கள் சேர்த்து
சீராக ஈர்க்கிலில் கோர்த்து
இரண்டு சதத்துக்கு வாங்குவார்
இதிலும்  குறைக்க ஏங்குவார்

அம்மியில் கொச்சிக்காய் அரைத்து
அண்டாவில் தண்ணீர் நிறைத்து
பண்ட பாத்திரமெல்லாம்
நன்றாய் சாம்பலில் தேய்த்து
கொண்டு வந்த மீனை
துண்டு துண்டாய் வெட்டி
பொரியல் பாலானம் உறைப்பென-பெண்கள்
பெரிய சமையல் செய்வார்

ஆயிரதெண்ணூற்றி ஐம்பதுகளில்
நோய்க்கு வைத்தியம் என்பதில்
பேய்க்கு பார்த்தலும் உண்டு.
வாய்க்குள் மந்திரம் ஓதி
ஏய்க்கும் முறையும் இருந்தது.

நாடியைப் பிடித்துப் பார்த்து
நாடி வந்த நோயினை
ஓட விரட்டும் திறனுடன்
கூடிய பரிசாரியும் இருந்தனர்.

பரவலாய் இருந்த பாதைகள்
பாதம் புதையும் ஒழுங்கைகள்.
கிறவல் பரப்பிய சாலையும்
குறைவாய் ஆங்காங்கிருந்தது.

கரத்தையும் காலையும் நம்பியே
வரத்தும் போக்கும் இருந்தது.
கரத்தையில் போவார் ஊரிலே
பெருத்த பணக்கார ஆட்கள்.
வருத்தம் வாதை வந்தால்
மருத்துவ வண்டி கரத்தையே.

நடையிலே வெய்யிலில் செல்வார்.
இடையிலே நிழலிலே நிற்பார்.
போடிமார் மக்கள் சைக்கிளில்
ஓடுவதை கூடிப் பார்ப்பார்.

கல்லடியில் உள்ள பாலம்
கட்டப் படாத காலம்
வள்ளமும் தோணியும் வழியே
செல்ல வேண்டும் வெளியே.

கொழும்புக்கு செல்வதென்றால்
கூடி மெளலூது ஓதி
புளியந்தீவு சென்று
புகையிரதம் மூலம் செல்வார்
ஊருக்கு மீண்டும் வந்தபின்
ஆரத்தி எடுப்பார் சொந்தங்கள்.

வாடியும் வயலும் மாடும்
கூடிய பணமும் கொண்ட
போடிமார் ஊரின் தலைமை
பொதுவாக இருந்த வழமை.

பள்ளிக்கு மரைக்கார் பதவி
பணமில்லா ஏழைக்கு உதவி
செல்வாக்கு உள்ள போடி
சொல்வாக்கு மீறா ஆண்டார்

ஒவ்வொரு குடிகள் பெயரால்
ஓதுவார் மெளலூது ஊரில்
அவ்வாறு ஓதும் போது
ஆக்கிக் கொடுப்பார் சோறு

அண்டாவில் சோறு ஆக்கி
வண்டியில் அதனை ஏற்றி
பைத்துக்கள் பலவும் பாடி
பவனிகள் வருவார் கூடி.

கல்யாணம் என்பது அன்று
கலையோடு இருந்தது நன்றாய்
பலகார வகைகள் செய்வார்
பல வர்ணப் பாய்கள் நெய்வார்

அழகான பிடவைகள் சுற்றி
அதற்குள் குருத்தோலை கட்டி
பந்தல்கள் ஆண்கள் அமைப்பார்
பசிக்கு பெண்கள் சமைப்பார்

பெற்றோமக்ஸ் வெளிச்சம் வீசும்
பெண்களின் குரவை பேசும்
கடுகு, மாடா வண்ணம்
காரைக்கால் ரெட்டைக் கொழுக்கி
பிடவைகள் பளபள ஜொலிக்கும்
பெண் வீட்டில் மகிழ்ச்சி கொழிக்கும்.

காலுக்கு தண்டை கொலுசு
காதுக்கு அல்லுக் குத்து
மேலுக்கு கொண்ட மாலை
மேனியில் பூ மணி மாலை
பொன்னும் வெள்ளியுமாக
பெண்ணின் வீட்டில் நிறைவார்.

பத்து மணிக்குப் பிறகு
படுத்த ஆண்கள் எழுந்து
அத்தரில் வாசம் வீசும்
அரையடுக்கு சாரண் உடுத்து
தோலினால் வாரை அணிந்து
தோள் பூட்டு பெனியன் உடுத்து
குட்டாபட்டி நெமிளி நூலில்
குஞ்சச் சால்வை எடுத்து
ஓலைப் பந்தம்  ஏந்தி
உற்சாகமாக்ச் செல்வார்.

நடுச்சாமம் மாப்பிள்ளை செல்வார்.
நாற்திசை பைத்கள் ஒலிக்கும்.
குடைக்குள்ளே நடக்கும் போது
இடையே வெடிகள் வெடிக்கும்.
பெண்ணின் வீடு அடைய
பெண் வீட்டு சிறுவன் ஒருவன்
தண்ணீரும் தேங்காய்ப்பாலும்
நன்றாக காலில் ஊற்ற
பின்னர் உள்ளே சென்று
பெரிய பாயில் அமர்வார்.

தென்னம் பாளை பூவுடன்
வண்ணமாய் இருக்கும் குடத்தில்.
குத்து விளக்கு மூலையில்
பற்றும் ஏழு திரியுடன்.
சின்ன வயது பெண்ணுடன்
சேர்ந்து சிலரும் இருக்க
முன்னே இருந்த மாப்பிள்ளை
உள்ளே வந்து கழுத்தில்
மெல்லத் தாலி கட்ட
வரிசையாய் அமர்ந்து இருந்தோர்
அரிசிமா ரொட்டி உண்ண
சுபஹுக்கு பாங்கு சொல்ல
சுவையாய் திருமணம் முடியும்.

பழைய காத்தான் குடியை
இளைய தலைமுறை அறிய
கலையுடன் நாவல் எழுதும்
கதாசிரியர் ஜுனைதா ஷரீபின்
சின்ன மரைக்காயர்
பெரிய மரைக்காயர்
என்னும் நூலில் இருந்து
எடுத்து எழுதினேன் கொஞ்சம்
இன்னும் நூறு விடயங்கள்
இருக்கு அந்த நூலில்
நன்றி தாய் மாமாக்கு
என்று கூறி முடிக்கிறேன்.

பல சாகித்ய ,சர்வதேச இலக்கிய விருதுகளை வென்ற நாடறிந்த எழுத்தாளரும் எனது தாய் மாமாவுமாகிய ஜுனைதா ஷெரீப் அவர்களைக் கெளரவிக்கும் விழா 'ஒத்தாப்பு இலக்கியப் பெரு வெளி அமைப்பால் 19/10/2019 அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதையொட்டி ஜுனைதா ஷெரீப் அவர்களின்  'சின்ன மரைக்காயர் பெரிய மரைக்காயர்' நாவலில் வரும் 19ம் நூற்றாண்டின் காத்தான்குடியில் காணப்பட்ட கலாச்சார வடிவங்களை கவிதை வடிவில் எழுத முயற்சித்து உள்ளேன் -நிஷவ்ஸ்
19ம் நூற்றாண்டில் காத்தான்குடி ! 19ம் நூற்றாண்டில் காத்தான்குடி ! Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.