தனித்துவங்களின் தயவின்றி தனிவழி வியூகம் முஸ்லிம்களை தனிமைப்படுத்துமா?


-சுஐப்.எம்.காசிம்.-
தனித்துவ சமூகங்களின் அரசியல் பலத்தை பரீட்சிக்கும் மற்றுமொரு உபாயமாக சிறுபான்மைச்
சமூகத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதித் தேர்தலில், களமிறங்குவது முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலே அறிமுகமாகி விட்டது.1982 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, குமார் பொன்னம்பலம் 173964 வாக்குகளைப் பெற்று தமிழர் தனித்துவத்தை தேவைக்கேற்ப ஒன்று திரட்டியிருந்தார்.ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலமாக இருந்ததால் சமூகமொன்றின் தனித்துவ அரசியல் திரட்சியின் தேவைகளில் இக்காலப் பகுதிகளில் மக்களுக்கு போதியளவு தௌிவில்லாது மிருந்தது. மேலும் அன்றிருந்த நிலைமைகளில் ஆட்சியில் பங்கு கோராது, தமிழ் அரசியல் ஆள்புல எல்லைகளுக்கு அங்கீகாரம் கோரும் வௌ்ளோட்டமாகவே அந்தத் தேர்தற்களம் பரீட்சிக்கப்பட்டது. இந்தக்கால நகர்வுகள் இலங்கை அரசியலில் வேறு திருப்பு முனையைக் கொண்டு வந்ததால் தமிழர் தரப்பு இவ்வாறான தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்ந்து கொண்டது.


ஜெயவர்தனவின் நிறைவேற்று அதிகாரத்தின் பாய்ச்சல் பாராளுமன்றத்தின் ஆயுளையே தேர்தலின்றி நீட்டிக் கொண்டதால், ஜனநாயக நடை முறைகளும் இக்காலத்தில் தளம்பித்திரிந்தன. இந்தத் தளம்பலின் நீட்சியில் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் சிலர் அறிந்தோ,அறியாமலோ விழுந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முனைந்தனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் கட்சி சார்பாக 1999 ஆம் ஆண்டு போட்டியிட்ட அப்துர்ரசூல்17,359 வாக்குகளைப் பெற்றதால் சமூக அங்கீகாரத்துக்கான அந்தஸ்த்தை இழக்க நேரிட்டது.


இருபது இலட்சம் முஸ்லிம் வாக்காளர்களில் ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெற்றிருந்தால், சமூக அங்கீகாரத்தைப் பெறும் முதல் முயற்சியை இச்சமூகம் வெறுக்கவில்லை என்ற முடிவுக்காவது வந்திருக்கலாம்.இக்காலத்தில் முஸ்லிம்களின் ஏக குரலாக அங்கீகரிக்கப்பட்டிருந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சந்திரிக்கா அம்மையாரை ஆதரித்தமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்துப் பழகிப்போன தென்னிலங்கை முஸ்லிம்கள் ரணிலை ஆதரித்ததாலும் ஶ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தனித்துவ அடையாளத்துக்கான முயற்சியை முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர். சந்திரிக்கா அம்மையார் பெற்றிருந்த 4312157 வாக்குகளில் முஸ்லிம் வாக்குகள் எத்தனை?


,ரணிலுக்கு கிடைத்த 3602748 வாக்குகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு எத்தனை வீதம்? என்பதிலிருந்துதான் அப்துர் ரசூல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும்.கிழக்கின் கோட்டைக்குள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், விரிந்து அகன்று கிடந்த தென்னிலங்கைத் தளத்தில், முஸ்லிம்களை உணர்ச்சியூட்டிய தனித்துவ,தேசிய கட்சிகளின் தனிப்பட்ட தலைமைகளுக்கிடையிலும் ஶ்ரீலங்கா முஸ்லிம் கட்சி மூச்சுத் திணறியிருந்தது. எனவே தனித்துவங்களின் திரட்சியை ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் சாதிக்க முடியாதென்ற நிலைப்பாட்டுக்கே வரமுடிகிறது. இதற்குப் பிற்பாடும் மையோன் முஸ்தபா,டொக்டர் இல்யாஸ், மிப்ழார் ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலில் குதித்ததை நோக்குகையில் வெற்றி பெறுவதற்காக இவர்கள் போட்டியிடவில்லை என்பது வௌ்ளிடை மலை. தனிப்பட்ட பழிவாங்கல்கள், எதிரிகளின் வாக்குகளைச் சிதறடித்தல்,பிரபல்யம் பெறல், மறைமுகமாக எந்தக் கட்சிக்காவது ஆதரவளித்தல்,தமக்கு நேர்ந்த கதிக்கு சமூகச்சாயம் பூசல் உள்ளிட்ட நோக்கங்களுக்காகவே இவர்கள் போட்டியிட்டிருப்பர்.



இப்போதைய சூழலில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதன் பின்னணிகள் என்ன? மேற் சொன்ன எந்தக் காரணங்களுக்காக இவர் களமிறங்கவுள்ளார். ஜனாதிபதித் தேர்தல்களில் இதுவரை போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களை விடவும் ஹிஸ்புல்லா மிகப் பிரதானமானவர்.அண்மையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களும் இவரைப் பெரிதளவு பிரபலப்படுத்தியுள்ளன.பிரபலம் என்பதைவிடவும் சர்ச்சைக்குள் மாட்டியுள்ளதென்பதே பொருத்தமானது. இஸ்லாமிய மரபுகளை அடிபிசகாது பின்பற்றும் இவரின் அரசியல் பார்வைகள் பலரையும் விந்தைகளுக்குள்ளாக்கியதை மறக்க முடியாது.2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ வை ஆதரித்த இவரின் நிலைப்பாடு சமூகத்துக்கு எதிரானதாகவே நோக்கப்பட்டது. தென்னிலங்கைச் சமூகங்கள் ஹிஸ்புல்லாவை இஸ்லாமிய அடிப்படை வாதியாகப் பார்க்கையில்,பௌத்த அடிப்படைவாதம், கடும்போக்குவாதிகள் இவரைக் கைது செய்யுமாறு கோருகையில்,இவரது ஷரிஆ பல்கலைக் கழகத்தை மூடுமாறு இனவாதிகள் தலையெடுக்கையில் ஹிஸ்புல்லா போட்டியிடுவது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.


இதுதான் முஸ்லிம்களுக்கு இன்றுள்ள அச்சம்.ஐக்கிய தேசிய கட்சியை வழமையாக ஆதரிக்கும் தென்னிலங்கை முஸ்லிம்களே இம்முறை வாக்களிக்க அஞ்சுகையில் ஹிஸ்புல்லாவை ஆதரிப்பார்களா?இவ்வாதரவு சகல முஸ்லிம்களையும் பிற சமூகத்தவர் மத்தியில் அடிப்படைவாதம், மதவாதிகளாக் காட்டிவிடுமா?

இன்றைய நிலையில் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்காவிட்டால் கடும் போக்கர்களின் காடைத்தனத்துக்கு உள்ளாக நேரிடுமோ என அஞ்சும் தென்னிலங்கை முஸ்லிம்கள், பௌத்த கடும்போக்கர்களால் அடிப்படைவாதமாகச் சந்தேகிக் கப்படும் ஹிஸ்புல்லாவுக்கு வாக்களிப்பது அறிவுடைமையாகுமா? இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சிக்கும் இல்லாது, ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்குமில்லாது முஸ்லிம்கள் ஓரமாக ஒதுங்குவது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தாதா?

பரவாயில்லை சமூகத்துக்காக ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளரை ஆதரித்தால் அவரால் வெல்ல முடியுமா? குறைந்தது பாராளுமன்றத் தேர்தல் வரையாவது முஸ்லிம்களைக் கட்டுக்கலையாது தக்க வைக்க இவரால் இயலுமா? இந்தக் கேள்விகளுக்கும் முஸ்லிம்களின் அச்சத்துக்கும் ஹிஸ்புல்லா அளிக்கப் போகும் பதில்களிலே அவருக்கான அங்கீகாரம் வௌிப்படப்போகிறது.இரண்டு பிரதான கட்சிகளும் ஐம்பது வீதத்தைப் பெறாத சந்தர்ப்பத்தில் இரண்டாம் சுற்றுத் தெரிவில்,தமது வாக்குகளை யாருக்காவது வழங்கிப் பேரம்பேசலாம் என்ற நியாயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.இரண்டாம் தெரிவில் யாருக்கு ஹிஸ்புல்லா வாக்களிக்கச் சொல்வார்.


ஐக்கிய தேசிய கட்சியுடன் துளியளவும் உறவில்லாத இவர் ஶ்ரீலங்கா பொதுஜனமுன்னணிக்கு அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்கச் சொல்ல வேண்டி நேரிடும்.தற்போதைய அரசியல் கள நிலவரங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமபலத்துக்கு வரமுடியாது. அவ்வாறானால் ராஜபக்ஷ அணிக்கு இரண்டாவது விருப்பு வாக்குகளைக் கோருவாரா? உண்மையில் இவ்வாறு கோருவது முஸ்லிம்களுக்கு குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பளிக்குமா?. இவ்வாறு செய்வது இவர்மீதான பௌத்த கடும் போக்கர்களின் பழிவாங்கல் முயற்சிகளையும் தணிக்கச் செய்யுமா? இந்த வியூகங்களிலா இவரின் களமிறங்கல் மறைந்துள்ளது


எனவே ஒட்டு மொத்தக் கணிப்பீடுகளின் சாராம்சம்,ஜனாதிபதித் தேர்தலில் பேரம்பேசுவதை விடவும் பாராளுமன்றப் பலத்தை தொங்கு நிலைக்காக்கி,அரசுக்கு முட்டுக் கொடுக்கும் சக்தியாகத் திகழ்வதற்கான வியூகங்களை வகுப்பதே !
தனித்துவங்களின் தயவின்றி தனிவழி வியூகம் முஸ்லிம்களை தனிமைப்படுத்துமா? தனித்துவங்களின் தயவின்றி தனிவழி வியூகம் முஸ்லிம்களை தனிமைப்படுத்துமா? Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.