பிள்ளையான் ஆரம்பித்தது பொதுநலத்திற்கா? சுயநலத்திற்கா? ஆனால் தோற்றுப்போனது பொதுநலமே!!!


எத்தனை நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் அடிப்படை அறியப்படாமல் எதையும்
சாதிக்க முடியாது அது ஏட்டில் இருந்துதான் ஆரம்பமாகின்றது.

1990 காலப்பகுதிகளில் உயர்தரம் கல்வி கற்றவர்கள் மட்டக்களப்பிலோ அல்லது கல்முனையிலோ உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் செல்வதென்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத சூழல். பாடசாலையும் காத்தான்குடி பொது நூலகமுமே அக்கால கல்வித்தாகத்தை தீர்க்கின்ற இரண்டு நிலையங்கள்.


நான் உயர்தரம் கற்கின்ற காலகட்டத்தில் தற்போது கலாச்சார மண்டபம் அமைந்துள்ள இடத்தில் மிக அழகான அனைத்து வசதிகளையும் கொண்ட ஓர் நூலகம் இருந்தது மிக அமைதியான சூழல் ஓர் குண்டூசி விழுந்தால்கூட கனீர் என்று கேட்கும் அளவிலான மயான அமைதி.


அந்த காலகட்டத்தில் பலருடைய கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட மர்ஹூம் மீராசாஹிப் நாநா நூலக பொறுப்பாளர் படிக்கின்ற பிள்ளைகளுக்கு கொடுக்கின்ற ஆதரவை இவ்வளவு என்று மட்டிட முடியாது. இதே போண்று மர்ஹூம் சுபைர் ஆசிரியர் அவர்களுடைய மனைவி சகோதரி ஹமீதா அவர்களும் அக்காலகட்டத்தில் மாணவர்களுக்காக செய்த உதவிகளை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.


பிரச்சினை காலத்திலும் பிற்பகல் 5.00 மணியுடன் மூடவேண்டிய நூலகத்தை மாணவர்கள் பரீட்சை காலம் நெருங்கிவிட்டால் வீதியில் வாகனக்குண்டுகளோ அல்லது பைசிக்கிள் குண்டோ வெடிக்கலாம் என்ற அச்ச சூழலிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 6.00 மணி பிந்தியும் நூலகத்தை திறந்து பணி புரிந்தவர்கள்.



என்னைப்போன்ற பல எந்திரிகளையும், வைத்தியர்களையும், இன்னும் பல துறை சார்ந்தவர்களையும் ஓர்குறிகிய அளவிலான வழங்களை கொண்டிருந்த நூலகம் அல்லாஹ்வின் உதவியால் உருவாக்கியது. ஓர் சிறியளவிலான இப்படியான நூலகம் பல சாதனைகளை புரிய முடியுமென்றால்!

தெற்காசியாவில் உள்ள நூலகங்களில் மிகச்சிறந்ததாக விழங்கிய யாழ்ப்பாண நூலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகின்றது. ஆரம்பகால சுவடுகள் ஓலைவடிவிலான ஆவணங்கள், வானவியல், புவியியல், விஞ்ஞானம் மெய்ஞானம் என்று இன்னும் எத்தனையோ!


அன்று யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டது அங்கிருந்த நூல்களையல்ல, பாதுகாக்கப்பட்ட ஆவணங்களையல்ல ஆயிரக்கணக்கான கல்விமான்களையும், விஞ்ஞானிகளையும், வைத்திய நிபனர்களையும், சமாதான புருசர்களாக வரக்கூடிய மெய்ஞானிகளையும், இன்னும் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நல்லவர்களைக்கொண்ட பல நூறு பரம்பரைகளை உயிருடன் எரித்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாண நூலகம் என்பது தமிழ்பேசும் மக்களுடைய சொத்ததல்ல அறிவைத்தேடி அலையும் இனம் மதம் என்ற பேதத்திற்கப்பால் முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகத்தையும் தாண்டி சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருடையதுமான சொத்து இதனை மீண்டும் அதன் பழையநிலைக்கு கட்டி எழுப்ப முடியாதளவிலான இந்த ஒட்டுமொத்த தேசத்தின் பேரிழப்பு.



அறிவு, ஞானம், நல்ல சிந்தனை என்பதெல்லாம் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கின்ற இலகுபொருளல்ல ஆனால் அதை அடைய முயற்சிப்பவர்களுக்கு அதுகிடைக்காமல் போகின்ற ஒன்றுமல்ல.



இந்தவகையில் அரசியலுக்கப்பால், கொள்கைகளுக்கப்பால் நான் பார்க்கின்ற ஓர் நல்லசெயல் மட்டக்களப்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனால் (பிள்ளையான்) உருவாக்கப்பட்டு அரை குறையாக கைவிடப்பட்டுருக்கும் நூலகம் ஆகும். அது மிகப்பிரமாண்டமாக கட்டி எழுப்பப்படவேண்டிய ஓர் நூலகம் அது பிள்ளையானால் அடிக்கல் இடப்பட்டதால் என்னவோ எட்டு வருடத்திற்கு மேலாக அதன் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டு அழிவுறும் நிலையில் உள்ளது.



உண்மையில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பதவிகளில் இருந்த இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பாராளுமண்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் எல்லோரும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும் இதனை கட்டிமுடித்து திறக்கப்படடால் எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மாணவர்கள் நன்மை அடைவார்கள் என்ற மிக உயரிய எண்ணத்திற்கு முன்னால் இது கட்டித்திறக்கப்படால் பிள்ளையானுக்கு நல்ல பெயர் கிட்டும் என்ற மிக அடிமட்ட எண்ணத்தைதவிர இந்த நூலகம் கட்டப்படாமல் இருப்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணத்தையும் எந்த அரசியல்வாதியும் கூற முடியாது. அரசியல்வாதிகளிடத்தில் பொதுநலனா? சுயநலமா? என்ற போராட்டத்தில் எப்போதும் தோற்றுப்போவது பொதுநலம் என்பது இதற்கும்கூட விதிவிலக்கல்ல.



இந்த கட்டிடம் அமைந்திருக்கும் சுற்றுச்சூழல் குழிர்ந்த காற்றை அள்ளிவீசும் ஆற்றோரம் மிக அமைதியான சூழல் எல்லோராலும் இலகுவாக சென்று வரக்கூடிய இலகு வழி என்று இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டு செல்லலாம்.



இனம், மதம், கொள்கை, அரசியல் கோட்பாடு என்பதற்கெல்லாம் அப்பால் இந்த மாவட்டத்தில் பிறந்த அத்தனைபேருக்கும் இதற்குண்டான பொருப்புள்ளது இந்த அரை குறை கட்டுமானத்தை எதிர்கால எமது அறிவுச்சமூகத்தின் கல்வி ஊற்றாக கனவு காண்போம் ஒன்றுபட்டு அதை வென்றெடுப்போம் நமது எதிர்கால கல்விச்சமூகத்திற்காக.



பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்
பிள்ளையான் ஆரம்பித்தது பொதுநலத்திற்கா? சுயநலத்திற்கா? ஆனால் தோற்றுப்போனது பொதுநலமே!!! பிள்ளையான் ஆரம்பித்தது பொதுநலத்திற்கா? சுயநலத்திற்கா? ஆனால் தோற்றுப்போனது பொதுநலமே!!! Reviewed by Madawala News on July 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.