நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவின் பின் இன்று முதல் உள்ள நிலைமை என்ன...


நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவின் பின் உள்ள நிலைமை தொடர்பாக அரசியல் ஆய்வாளர்,
சட்டமுதுமானி வை. எல். எஸ். ஹமீட்  வழங்கிய ஊடக அறிக்கை
(எஸ்.அஷ்ரப்கான்)
ஜனாதிபதியின் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி தடைஉத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது. இதன்பொருள் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்குமுன் இருந்தநிலைமைக்கு பாராளுமன்றம் திரும்பியுள்ளது.

இன்ஷாஅல்லாஹ், இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது. உத்தியோகபூர்வ பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களே.

இன்று பாராளுமன்றில் என்ன நடைபெறும்?
——————————————————
சபாநாயகர் யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றதோ அவரை பிரதமராக ஏற்பேன்; என்று கூறியிருக்கிறார். இருவருக்கும் ஒரே நேரத்தில் வாக்களிக்கவைத்து யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என பரிசோதிப்பாரா? அதற்கு பாராளுமன்ற நிலையியற்கட்டளை இடங்கொடுக்குமா? என்பது வேறுவிடயம். அது சபாநாயகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடைப்பட்ட விடயம். பாராளுமன்ற உள்ளக நடவடிக்கைகளை எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அவ்வாறு ரணிலுக்குப் பெரும்பான்மை இருந்தாலும் மஹிந்த பதவியிழக்கமாட்டார்.


ஒன்றில்  மகிந்த  ராஜினாமா செய்யவேண்டும் அல்லது ஜனாதிபதி நீக்கவேண்டும் அல்லது அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து வெற்றிபெற வேண்டும்.

ஏற்கனவே, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது ஒருங்குப்பத்திரத்தில் இடம்பெறவேண்டும். அதன்பின் விவாதத்திற்கு நாட்குறிப்பிடப்படவேண்டும். இதற்கு ஒரு சில தினங்கள் எடுக்கலாம்.

சிலவேளை இன்றே சபாநாயகர் அதனை வாக்கெடுப்பிற்கு விடலாம். இவ்விடயத்தில் ஒரேநாளில் எல்லாவற்றையும் முடிப்பதற்கு நிலையியல் கட்டளை இடம்கொடுத்ததா? என்று நீதிமன்றில் கேள்வியெழுப்ப முடியாது. அவ்வாறு இன்றே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அரசு தோல்வியடைந்தால் பிரதமரும் அமைச்சர்களும் பதவியிழந்து விடுவார்கள். ஆனால் பிரமருக்கெதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து வெற்றிபெற்றாலும் மஹிந்த பதவியிழக்க மாட்டார்.

அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசுக்கெதிராக இருக்கவேண்டுமே தவிர பிரதமருகெதிராக மாத்திரம் இருந்தால் பதவி பறிபோகாது. சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மஹிந்தவுக்கெதிராக மாத்திரமா? அரசுக்கெதிராகவா? என்பது தெரியவில்லை.

மறுபுறம் இன்று பாராளுமன்றில் குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டு பாராளுமன்றம் மீண்டும் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படுமா? வெளிப்படை சட்டத்தில் ( Rule by Law)அவ்வாறு செய்யமுடியும். ஆனால் சட்டத்தின் ஆட்சியென்றால் ( Rule of Law) முடியாது.

ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைக்கமுடியும் என்றுதான் அரசியல்யாப்பு கூறுகின்றதே தவிர எவ்வளவு காலத்திற்கொருதடவை? என்று கூறவில்லை. எனவே வழக்கு முடியும்வரை பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி முற்படுவாரா? ஒரு தடவையில் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கமுடியும்.

 மகிந்த தோற்றால் ரணிலை பிரதமராக நியமிப்பாரா? ரணிலை நியமிக்காமல் அவர் ராஜினாமா செய்வாரா? இவ்வாறு பலகேள்விகள் இருக்கின்றன. இவற்றில் அதிகமான கேள்விகளுக்கு எனது முன்னைய ஆக்கங்களில் பதில் இருக்கின்றது.

இன்றைய நிலைமையை அவதானித்ததன்பின் மிகுதியைத் தொடருவோம்.
நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவின் பின் இன்று முதல் உள்ள நிலைமை என்ன... நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவின் பின் இன்று முதல் உள்ள நிலைமை என்ன... Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.