உரிமைகளை மீறும் குப்பைத் திணிப்பு !


புத்தளம் கரையோர பள்ளிவாசலில் மாலைநேர அல்குர்ஆன்
மத்ரஸாவுக்கு வந்திருந்த
சிறுவர்கள், அவர்களின் பாட ஆசிரியர், முஅல்லிம் வரும் வரை, வேண்டாம்! வேண்டாம்! குப்பை வேண்டாம்! என்று கோசமிட்டுக்கொண்டிருந்தனர்.


புத்தளம் அறுவைக்காட்டு குப்பைப் பிரச்சினை
சிறுவர்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அதன்போது புரிந்துகொண்டேன்.

உண்மையில் குறித்த பிரச்சினை தொடர்பாக அறிக்கையிடவே நான்  புத்தளம் சென்றிருந்தேன்.

அறுவைக்காடு குப்பை முகாமைத்துவ திட்டம்
சுற்றுச் சூழல் நேச அமைப்பில், சுற்றாடல் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத விதத்திலே முன்னெடுக்கப்பட்டு
வருவதாக மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரனவக்க
மற்றும் அரசாங்க தரப்பு தெரிவிக்கும் கருத்துக்களில் ஒருவித நம்பிக்கையுடன் புத்தளம்
சென்றேன். இவ்விடயம் குறித்து ஊடகங்களில் அரச சார்பாக வரும் விடயங்களை மாத்திரம் பார்ப்போரின்
மனப் பதிவும் அதுவே.


புத்தளத்தில் இருந்து மன்னார் வீதியில்
35 கிலோ மீட்டர் தொலைவில் 64 ஏக்கர் பரப்பில் அறுவைக்காடு குப்பை முகாமைத்துவ திட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு மாநகர சபை, தெஹிவலை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர
மாநகர சபை மற்றும் கோட்டே நகர சபை ஆகிய நான்கு சபைகளில் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும்
1200 மெட்ரிக் தொன் குப்பைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


1200 மெட்ரிக் டொன் குப்பைகளையும் களனியில்
26 கொள்கலன்களில் புகையிரதம் மூலம் புத்தளத்திற்கு கொண்டுவந்து, அங்கிருந்து பிரத்தியேக
போக்குவரத்து ஏற்பாட்டில் அறுவைக்காட்டுக்கு கொண்டுசெல்வதே மாநகர மற்றும் மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சின் ஆரம்ப திட்டமாக இருந்தது. இப்போது குப்பைகளை டிரக் வண்டிகளில்
கொண்டுவரப்போவதாக கூறுகின்றனர். அவ்வாறாயின் ஒவ்வொரு நாளும் 120 டிரக் வண்டிகளில் குப்பைகளை
கொண்டுவர வேண்டியேற்படும்.  

அறுவைக்காடு குப்பைத் திட்டத்திற்கு பொது
மக்கள் எதிர்ப்பு வலுத்து வருகின்றதைக் காணலாம். மக்கள் எதிர்ப்பு நியாயமானதே. மீதொட்டமுல்லை
திட்டம் ஆரம்பிக்கப்படும் போது, அங்கு பெரியதோர் குப்பை மலை உருவாக்குவதாக யாரும் கூறவில்லை.
அங்கு முறையான குப்பை முகாமைத்துவ திட்டமொன்று உருவாக்குவதாகவே கூறினர். அங்கு உருவாக்கப்பட்ட
குப்பை முகாமைத்துவ திட்டமொன்றும் இல்லை. இறுதியாக அங்கு பெரியதோர் குப்பை மலையே எஞ்சியது.
நாற்பதுக்கு மேற்பட்ட மனித உயிர்களை பலியெடுத்தது. மீதொட்டமுல்லை போன்ற இன்னொரு அனர்த்தம்
எமக்கு வேண்டாம் என்பதே புத்தளம் மக்களின் கோரிக்கையாகும்.

அறுவைக்காட்டு விவகாரத்துக்கான பொது மக்கள்
எதிர்ப்புப் போராட்டம் 20 நாட்களைத் தாண்டுகின்றன. ‘கொழும்பின் குப்பைகள் புத்தளத்துக்கு’
என்ற விடயம் நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது. அதற்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளிவருகின்றன. எனினும் நாட்டின்
குப்பைப் பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வு காண முயற்சிக்கும்போது, புத்தளம்
மக்கள் இதனை எதிர்ப்பது ஏன்? என்ற

கேள்விக்கு அதிகமானோர் விடை தெரியாத நிலையிலேயே
இருக்கின்றனர். இதனால் இப்போராட்டத்தின் முக்கியத்துவம் அதிகமானோருக்கு விளங்காமலும்
இருக்கலாம்.

அறுவைக்காட்டு குப்பை திட்டத்தின் பாதகங்களை
உணர்ந்து, அதற்கு பிரதேசத்திலும் நாட்டிலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டத்தை
சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எஸ்.எம்.முபாரக் ஆசிரியர் பிரதேசத்தின் பல்வேறு தரப்பினரதும்
ஆதரவுடன் முன்னெடுத்து வருகின்றார்.

நவமணி சார்பாக முபாரக் ஆசிரியரைச் சந்தித்து,
மேற்படி குப்பைத் திட்டம் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் எவ்வாறான பாதிப்புகளை
ஏற்படுத்துகின்றன என்பதைக்

கேட்டறிந்தேன். முபாரக் ஆசிரியருடனான கலந்துரையாடலின்
தொகுப்பே இந்த கட்டுரை.  

இப்போது குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கான
தளம் அமைக்கப்பட்டு வருகின்றது. குப்பைகள் கொழும்பிலிருந்து ஈரலிப்பான விதத்திலே கொண்டுவரப்படும்.

நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
மழை நீருடன் வடிந்தோடக்கூடிய குப்பைகளில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பதார்த்தங்களை வடிகட்டி
வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு குப்பைகள் கொட்டுவதே திட்டம்
என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, எழுத்துமூலமுள்ள திட்டங்கள் அழகாகவே இருக்கின்றன. இவை
சரிவர மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வி புத்தளம் மக்களிடையே ஏற்பட்டுள்ளன. இவ்வாறுதான்
அனல் மின்சார திட்டத்திலும் அழகான வாக்குறுதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்வைக்கப்பட்டாலும்,
அவை எதுவுமே நிறைவேற்றப்படாமை மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அனல் மின்சார திட்டத்தில் மரம் நடல், நிலத்தடி
நீர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இன்றளவில் மக்களின் விவசாய,
குடிநீர் வசதிகள் பாதிப்படைந்து குடிநீரை பணம் செலுத்தி வாங்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இன்னும், அனல் மின் நிலையத்தி லிருந்து எரி
சாம்பல் பறக்கின்றது. இதனால் மரங்கள், விவசாயம் பாதிப்பு. விவசாயத்துக்கு நீர்ப்பாய்ச்சும்
போது அவை நிலத்தோடு கலந்து, மண் வளமும் நீரும் பாதிப்பு. இதன் பாதிப்பு காரணமாக குழந்தைகள்
மந்தகுணமுள்ளதாக பிறக்கும்

அவதானம் ஏற்பட்டுள்ளது. எந்த பாதிப்பும்
வராதென்று வாக்களித்த அனல் மின்சார நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இப்போதும்
திருத்தியமைக்கப்படாத நிலையே தொடர்கின்றது. அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியேறும்
எரி சாம்பல் என்பது கண்ணுக்கு புலப்படாத நச்சுப் பதார்த்தமாகும். அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதென்றே
விஞ்ஞானம் கூறுகின்றது. இன்று இப்பிரதேசத்தில் அவ்வாறான புற்றுநோயால் மக்கள் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, அதிகமானோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அறுவக்காடு குப்பை முகாமைத்துவ திட்டத்தில்
உள்ள சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததாகவே கூறப்படுகின்றது.
அது அவ்வாறு சரிந்து அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. குப்பையில் மீதேன் வாயு
வெளிவரும். வாயு வெளியேறல் தடைப்படும் போது வெடிப்புகள் ஏற்படும். மீதொட்டமுல்லையிலும்
அவ்வாறானதொரு பெரிய வெடிப்பு சம்பவமே ஏற்பட்டுள்ளது. அறுவைக்காடு தளத்திலும் அவ்வாறான
வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மீதேன் வாயு வெளியேறுவதற்கான சரியான
வழிமுறைகள் முன்மொழியப்படவில்லை. கோடை காலங்களில்

மீதேன் வெடிப்புகள் ஏற்பட்டால் தீ பரவ வாய்ப்புள்ளது.
அவ்வாறான தீயில் இருந்தும் நச்சுத் தன்மை கொண்ட எரி சாம்பலே வெளியாகும். அதேபோன்று,
எரி சாம்பலும் மழை நீரும் கலக்கும் போது ஏற்படும் மாற்றத்தால் அமில மழை ஏற்பட்டு தாவரங்களை
அழித்துவிடும்.

 குப்பைகளை கொட்டுவதற்காக தயாரிக்கப்படும் தளத்தின்
சுமை தாங்கும் திறன் திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அது குறித்து அமைச்சர்,
செயலாளர் மற்றும் அமைச்சருடன் வருகை தந்த பேராசிரியரிடமும் பிரதேச மக்கள் கேட்டபோது, அவர்களிடம் பதில்
எதுவும் இருக்கவில்லை. அதிக சுமையால் தளத்தில் வெடிப்புகள் நிகழ வாய்ப்புள்ளது. அவ்வாறு
வெடிக்காவிட்டாலும் அறுவைக்காட்டு திட்டத்திற்கு 1கிலோ மீட்டர் தொலைவில் சுண்ணாம்புக்
கல் அகழ்வு இடம்பெறுகின்றது. சுண்ணாம்புக் கல் அகழ்வுக்காக டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் ஏற்கனவே கரைத்தீவு கிராமத்தில் வீட்டு சுவர்களில் வெடிப்புகள் சென்றுள்ளன.

குப்பைத் தளம் வெடிக்கும் போது

கசிவுகள் நிலத்தடி நீருருடன் ஒன்றுசேரும்.
பொதுமக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்துக்காகவும் பயன்படுத்தும் 300க்கு அதிகமான குழாய்க்
கிணறுகள் அப்பிரதேசத்தில் இருக்கின்றன. அவற்றுடன் நச்சுத் தன்மையுடன் கூடிய கசிவுகள்
கலந்துவிடும். இதனால் 1800 குடும்பங்கள் பாதிக்கப்படவுள்ளது.

அறுவைக்காட்டு குப்பை தளத்திலிருந்து
200 மீட்டர்களில் கடற்பரப்புள்ளது. நச்சுத் தன்மைகொண்ட கசிவுகள் கடலுடன் கலந்துவிடும்.
பல்வேறு வகையான இரசாயன பதார்த்தங்கள் குப்பையிலிருந்து உருவாகும் நச்சு வகையின் 1 சொட்டு
கசிவு 6000 லீட்டர் தூய நீரை மாசுபடுத்திவிடக்

கூடியது. இவ்வாறான கசிவு கடல் வளத்தையும்,
கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கக்கூடியது.

இதனால், கடல் தொழிலில் ஈடுபடும் 6000க்கு
மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். இலங்கையில் அதிகமாக இறால் வளர்ப்பு
நடைபெறுவதும் புத்தளம் மாவட்டத்திலேயாகும். இத்துறையுடன் 5000 பேர் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
2800 ஏக்கர்கள் அளவிலான உப்பளங்கள் இருக்கின்றன. இவற்றில் 5200 நேரடி தொழிலாளர்கள்
உள்ளனர். மறைமுகமாக அதிகமானோர் இத்துறைகளுடன் தொடர்புபடுகின்றனர். உப்பளங்களுக்கு பெறப்படும்
கடல் நீரும் நச்சுத் தன்மை கலந்தவையாகவே இருக்கும். இதனால் உப்பு உற்பத்தி, உற்பத்தி
துறையுடன் தொடர்புபட்டவர்கள் என பெரும்பாலானோர் பாதிப்படைவர்.

120 டிரக்களில் குப்பைகளை கொழும்பிலிருந்து
பிரதான பாதை வழியே அறுவைக்காட்டிற்கு கொண்டுவரும் போது, அதற்கிடைப்பட்ட முழு பிரதேசத்தையுமே
மாசுபடுத்திவிடும். வளி மாசடைவதால், கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
வரும் வழியில் ஏதாவதொரு டிரக் பழுதடைந்துவிட்டால் அதன் விபரீதமோ கொடுமையானது.

குப்பைகள் ஈரத் தன்மையுடனேயே கொண்டுவந்து
கொட்டப்படுகின்றன. குப்பைகளை கொட்டிய பின்னர் பருவக் காற்றுகள் துர்நாற்றத்தை 6 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள வில்பத்து வரை எடுத்துச் செல்லும். யானைகள்

கோடை காலங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள நீரை அடையாளம் காணக்கூடியது.


ஈரத் தன்மைகளுடன் கொட்டப்பட்டுள்ள குப்பைகளைத்
தேடி யானைகள் படையெடுக்கும். வில்பத்துவில் இருந்து 5 கிராமங்களைத் தாண்டி யானைகள்
வரவேண்டியுள்ளது. குறித்த 5 கிராமங்களின் மக்களும் பாதிக்கப்படவுள்ளனர். இக்கிராமங்களின்
நிலை என்னவாகுமென்ற கேள்விக்கும் அமைச்சர் சம்பிக்கவிடம் பதிலில்லை.


அறுவைக்காட்டு குப்பைத் தளம் கடல் மட்டத்திலிருந்து
4 மீட்டர் உயரத்திலே அமைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம்
காரணமாக அப்பிரதேசத்தில் 6 மீட்டர் வரையாக வெள்ளம் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வெள்ளமேற்பட்ட
வரலாறும் உள்ளது. இவ்வாறான நிலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை வெள்ளம் கடலுக்கு
இழுத்துச் செல்லும். இதனை அமைச்சர் சம்பிக்கவுக்கு தெளிவுபடுத்தியபோது, ‘பிரச்சினைகள்
இருப்பின் ஊரை விட்டுச் செல்லவேண்டியதுதான் திட்டத்தை எதற்காகவும் நிறுத்த முடியாதென்று
பதிலளித்துள்ளார்.’


அறுவைக்காட்டு குப்பைத் திட்டத்திற்கு
274 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ் நிலங்களில் இருந்து
250 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும், நீர் நிலைகளுக்கு அருகே இருக்கக் கூடாது, பருவக்காற்று
அடிக்கக்கூடிய இடங்களில் இருக்கக் கூடாது, சுண்ணாம்பு அகழ்வு பிரதேசத்தில் இருக்கக்
கூடாது போன்ற நிபந்தனைகளை இத்திட்டம் மீறுவனவாக உள்ளது. எனவே, இத்திட்டத்திற்காக உலக
வங்கியில் இருந்து உதவியாக கோரிய 115 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மறுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அனைத்து வகையான சர்வதேச சட்டங்களையும் மீறுவனவாக உள்ளது ஊர்ஜிதமாகின்றது.


அத்தோடு, இத்திட்டத்தை முன்னெடுத்து வரும்
சீன நிறுவனம் உலக வங்கியால் தடைசெய்யப்பட்ட, இவ்வாறான திட்டங்களில் முன்னனுபவமில்லாத
ஒன்றாகும்.


அனல் மின்சார உற்பத்தி நிலையம், சீமெந்து
தொழிற்சாலை, இராணுவ குண்டு வீச்சு தளம், குப்பை என புத்தளத்துக்கு கொண்டுவரும் அனைத்துமே
மனித நிலவுகைக்கு ஆபத்தான திட்டங்களாகும்.


அரசாங்கம் இப்பிரதேசத்துக்கு கொண்டுவந்த
திட்டங்கள் அனைத்துமே மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாகும்.


இப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மையின தமிழ்,
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் மறைமுகமாக அழித்து,
ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் என்பதே இப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின்
கருத்தாகும். இதனை சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எஸ்.எம். முபாரக் ஆசிரியரின் வார்த்தைகளில்
கூறுவதென்றால், ‘இது வேறுமாதிரியான இனச் சுத்தி


கரிப்பாகும்.’


இன்று சுற்றுச் சூழல் நேச குப்பை முகாமைத்துவமென்று
கூறும் அமைச்சர் சம்பிக நாளை வேறு அமைச்சொன்றுக்கு மாற்றப்படலாம். ஏன்? எதிர்க்கட்சியில்
அமரவேண்டிய நிலைமைகூட ஏற்படலாம். முறையான திட்டங்கள் அற்ற மேற்படி அறுவக்காடு குப்பை
முகாமைத்துவ திட்டம்  குப்பைகள் கொட்டப்பட்டு,
செயலிழந்துபோகும். புத்தளத்தில் உள்ள ஏனைய பாதிப்பு தரும் திட்டங்களுடன் இதுவும் மனிதத்தை
கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழித்து, அங்கு குப்பை மலை மாத்திரமே எஞ்சும்.

-ஆதில் அலி சப்ரி - ( நவமணி )
உரிமைகளை மீறும் குப்பைத் திணிப்பு ! உரிமைகளை மீறும் குப்பைத் திணிப்பு ! Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.